மனிதர்கள் | தமிழ்தான் அடையாளம்!

By சமஸ்

தன்முதலில் முத்து நெடுமாறனைச் சந்திக்க வேண்டும் என்ற உந்துதலை உண்டாக்கியது மூத்த பத்திரிகையாளர் மாலன் எழுதியிருந்த ஒரு கட்டுரை. ‘முரசு அஞ்சல்: தமிழின் பெருமிதம்’ எனும் அந்தக் கட்டுரையில், “தினமும் கணினியில் என் பணிகளைத் தொடங்கும்போது நான் மானசீகமாக நன்றி செலுத்தும் ஒரு நபர் முத்து நெடுமாறன்” என்று குறிப்பிட்டிருந்தார் மாலன்.

புதிதாக வந்திருக்கும் ‘ஐபோன் 6’-ல் தமிழில் தட்டுவது நமக்கு இன்றைக்கெல்லாம் சர்வ சாதாரணமாக இருக்கிறது. ஆனால், 30 வருடங்களுக்கு முன் கணினிக்குள் தமிழைக் கொண்டுவரும் கனவு சாத்தியமாவது அத்தனை எளிதாக நடக்கவில்லை. உலகின் வெவ்வேறு மூலைகளில் இருந்த, விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்கள் சிலர் அதற்கான முயற்சியில் இறங்கியிருந்தனர். அர்ப்பணிப்பு மிக்க அசாதாரணமான உழைப்பினால் இறுதியில் அதைச் சாத்தியமாக்கினர்; ‘யூனிகோடு' வரை கூட்டிவந்தனர். அவர்களில் ஒருவர் முத்து நெடுமாறன். கணினிக்குத் தமிழ் எழுத்துரு தந்த முன்னோடிகளில் முதன்மையானவர். மலேசியத் தமிழர்.

“ரொம்பக் கீழேருந்துதான் வந்திருக்கேன்னு சொல்லணும். பூர்வீகம் உத்திரமேரூர். எங்க தாத்தா சுப்புராயன் தோட்ட வேலைக்காக மலேசியா வந்தவர். கங்காணி வேலை. ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கார். அப்பா முரசு நெடுமாறன் நல்லாப் படிச்சார். தமிழ் வாத்தியார் ஆனார். அதுக்கு முன்னமே கவிஞராயிட்டார். அம்மாவும் மலேசியாவுலயே பிறந்து வளர்ந்தவங்க. தமிழை ஒரு சாமிபோல என் ரத்தத்துல ஏத்திவிட்டவர் அப்பா.

எனக்கு இன்னைக்கும் ஞாபகம் இருக்கு. மொத வகுப்புல கொண்டுபோய் விடுறார் அப்பா. வாத்தியார் திருக்குறள் எழுதிப்போடறார். எந்திருச்சு, ‘நீங்க எழுதின குறள்ல தப்பு இருக்கு’ன்னு சொல்லிட்டேன். உண்மையாவே அதுல தப்பு இருந்துச்சு. மூணாவது வரைக்கும் என்னென்ன தமிழ்ப் பாடங்களோ அது எல்லாத்தையும் வீட்டுலயே அப்பா சொல்லிக்கொடுத்துட்டார். பள்ளிக்கூடம் போயி அனா, ஆவன்னா எழுதிப் பழகுற சூழல்ல நான் இல்ல. தமிழ்ப் பத்திரிகை வரும். நான் பாட்டுக்கு எடுத்துப் படிப்பேன். நாங்க இருந்த கேரித்தீவு முழுக்கத் தமிழர்கள்னாலும், தமிழை நல்லாப் படிச்சா அது தனிப் பெருமைங்கிற மாதிரி மனசுல பட்டுப்போச்சு.

எங்க தீவை விட்டு டவுன் ஸ்கூல்ல படிக்கிறதுக்காக வெளியே வந்தப்போதான் ஆங்கிலம்னு ஒரு மொழி இருக்குறதே தெரியும். கண்ணைக் கட்டிக் காட்டுல விட்ட மாதிரி இருக்கும். ஆனா, தாய்மொழி வழியா படிக்கிறப்போ நமக்கு ஒரு தெளிவு கிடைக்குது பாருங்க, அது நம்மளை எல்லாத்தையும் அடிச்சி சாய்க்கவெச்சிடும். அப்படித்தான் அடிச்சிட்டு வந்தேன்.

படிக்குற காலத்துலயே தமிழ் மன்றப் பணிகளோட ஒரு பகுதியா பதாகை எழுதுற பழக்கம் உண்டு. தமிழ் இதழ் கொண்டுவருவோம். அச்சகங்கங்கள்ல இங்கிலீஷ், மலாய் மாதிரி தமிழ்ல அடிக்குறது சுலபமா இருக்காது. கூலியும் கிட்டத்தட்ட அஞ்சு மடங்கு அப்போ அதிகம். ஏன் அப்படின்னா, ‘அச்சுக்கோப்பு கஷ்டம், ஆள் பற்றாக்குறை, பிழைகள் இல்லாமப் பண்றதுல இருக்குற சிரமங்கள்’னு நெறையக் காரணம் சொல்வாங்க. மலாய் நண்பர்களுக்கு முன்னாடி நாங்க தேங்கி நிப்போம். இதெல்லாம் மாத்த எதாவது பண்ணணும்னு தோணும். கணினி முன்னாடி இதுதான் நம்ம எதிர்காலம்னு போய் உட்கார்ந்தப்போ, ‘என்னடா, இங்கெ நம்ம மொழிக்கு இடம் இல்லாம இருக்கே’ன்னு உதைச்சுச்சு. இப்படித்தான் வேலைய ஆரம்பிச்சேன்.

இப்போ நெனைச்சாக்கூட அழுகை வரும். இன்னைக்கு ‘ஆப்பிள்’லேர்ந்து கூப்பிடுறாங்க, ‘மைக்ரோசாஃப்ட்’லேர்ந்து கூப்பிடுறாங்க, ஒரு வேலை செய்றேன்னா அதுக்குப் பின்னாடி இருக்குற வசதிகள் பெரிசு. அன்னைக்கு அப்படி இல்ல; அம்மா ஒரு நாளைக்கு ரெண்டு வெள்ளி கொடுப்பாங்க. சாப்பாட்டுல, போக்குவரத்துலனு மிச்சம் பிடிச்சு அதைச் சிறுகச் சிறுக சேர்த்து, ‘ஈப்பிராம் சிப்’ வாங்கி, நிறைய தோத்து… இப்படியெல்லாம் அடிவாங்கித்தான் ‘முரசு அஞ்சல்’ எழுத்துரு வெளிவந்துச்சு.

கணினில தமிழை மொத முறை ‘முரசு அஞ்சல்’ மூலமா தட்டிப் பார்க்கும்போது ஒவ்வொரு தமிழர்கிட்டேயும் வரும் பாருங்க, ஒரு பெருமிதம். அதைக் கண்ணால பார்க்கும்போது பட்ட கஷ்டம் எல்லாமே காணாமப் போயிடும். நான் மட்டும் இல்ல; அன்னைக்கு என்ன மாதிரி இப்படி எங்கெங்கெயோ உட்கார்ந்து தமிழ் கணினியம் தொடர்பா யோசிச்சுக்கிட்டிருந்த எல்லாருமே இப்படியான ஒரு பெருமிதத்தைப் பார்க்கத்தான் உழைச்சுக்கிட்டிருந்தோம்.

அதுக்கு அப்புறம் வாழ்க்கையே இதுவாயிடுச்சு. எந்த சாதனத்தைப் பார்த்தாலும் அதுல எழுத்துகள் தோன்றினா, அதில் தமிழும் தோன்றுமான்னு செஞ்சு பார்க்குறதுதான் என் வேலை. அது கணினி, செல்பேசி, விமான நிலையங்கள்ல உள்ள விளம்பரத் திரை, இதோ கையில் கட்டிக்கொண்டிருக்கிற மின்னணு கடிகாரம் எதுவானாலும் சரி. எதிலெல்லாம் ஆங்கில எழுத்தைப் பார்க்கிறேனோ, அதிலெல்லாம் தமிழ் எழுத்தும் இருக்கான்னு கேட்பேன். இல்லைன்னு சொன்னா, அதற்கான வழி தேட இறங்கிடுவேன். இதுதான் என்னோட தமிழ் இணையப் பயணம். அந்தப் பயணம்தான் இன்னைக்குக் கோடிகள்ல எனக்குச் சம்பாதிச்சும் கொடுக்குது.

இந்தப் பயணத்துல என்னோட அணுகுமுறைல எதாவது வித்தியாசம் உண்டான்னு கேட்டா, உண்டு. பொதுவா, தமிழ்ல எழுத்துருக்கள், மென்பொருட்களைக் கொண்டுவரும்போது, மற்றவர்கள் அதைத் தனியா கொடுப்பதையே விரும்பினாங்க. உதாரணமா, நீங்க ஒரு செல்பேசி வாங்குறீங்கன்னா தமிழ்ல அடிக்கத் தனியா ஒரு ‘ஆப்’ தர்றது வேற; அந்த செல்பேசியோட ஒரு பகுதியாவே அந்த வசதியை இணைச்சுத் தர்றது வேற. நான் இரண்டாவது வழியை யோசிச்சேன். இன்னைக்கு, ‘ஆப்பிள்’ நிறுவனத்தோட கைக்கருவி ஒண்ணு நீங்க வாங்கினா, அதன் அடிப்படையிலயே நாம தமிழைக் கொண்டுவந்திருக்கோம்” - உற்சாகம் கொப்பளிக்கப் பேசுகிறார் முத்து நெடுமாறன்.

“பொதுவா, ‘ஆப்பிள்’ நிறுவனம் தன்னுடைய இயக்க முறைமைகள்ல வெளி நிறுவனங்களோட படைப்புகளை இணைச்சுக்காதுன்னு சொல்வாங்க. எப்படி உங்க ‘முரசு அஞ்சல்’, ‘செல்லினம்’ மென்பொருட்களை அவங்க ஏத்துக்கிட்டாங்க?”

“இது சந்தை உலகம். தமிழ்ங்கிறது இன்னைக்கு 9 கோடி மக்கள் பேசும் மொழி. நீ கொடுக்கும் சாதனத்தில் என் மொழி இருந்துச்சுன்னாதான் வாங்குவேன்னா, நிச்சயம் எந்த நிறுவனமா இருந்தாலும் இறங்கித்தான் வரணும். ‘ஆப்பிள்’க்குத் தமிழ் தேவைப்பட்டுச்சு; அவங்க என்கிட்ட வந்தாங்க. அவ்ளோதான்.

தமிழகத்தில் உள்ள நிலைமை எனக்குத் தெரியலை. ஆனா, வெளிநாடுகள்ல இருக்குற எங்களுக்குத் தமிழ்தான் அடையாளம். பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பேர்கள்தான். அவங்க தமிழ்லதான் படிச்சாங்க. இங்கெ பாருங்க, என்னோட செல்பேசில எல்லார் பேரையும் நான் தமிழ்லதான் அடிச்சுவெச்சிருக்கேன். பாடல்கள் வரிசை தமிழ்லதான் இருக்கு. ஒரு தமிழர்கிட்ட பேசும்போது, இடையில எங்கேயோ நாலு வார்த்தை ஆங்கிலம் விழுந்துட்டா, நிச்சயம் நான் வெட்கப்படுவேன்.

கொஞ்ச நாள் முன்னாடி ‘வால்வோ’ கார் வாங்கப் போனேன். எல்லாம் பிடிச்சிருந்துச்சு. ஆனா, டேஷ்போர்டுல உள்ள இசைக் கருவியோடு என்னோட செல்பேசியைப் பொருத்தினா, அந்தக் கருவியில தமிழ் எழுத்துருக்கள் வரலை. என்ன செஞ்சேன் தெரியுமா? ‘கார்ல தமிழ் தெரியலையே?’னு கேட்கலை; மாறா, ‘உன்னோட கார்ல கோளாறு’ன்னேன். அதுவும் எப்படி? கையில காசோலையை வெச்சுக்கிட்டு. பயன் என்ன தெரியுமா? இப்போ நான் எந்த ரக காரில் கோளாறுன்னு சொன்னேனோ, அந்த ரக கார் அத்தனையிலும் தமிழ் மென்பொருளைப் பொருத்தியிருக்காங்க.”

“அயல்வாழ் தமிழர்கள்கிட்ட தமிழ்ப் பயன்பாடு எப்படி இருக்கு?”

“நாட்டுக்கு நாடு இதுல வேறுபாடுகள் உண்டு. மலேசியாவைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 25 லட்சம் பேர் இருக்கோம். இங்கே மலாய் ஆட்சிமொழி. தமிழ் அங்கீகரிக்கப்பட்ட மொழி. ஆட்சியாளர்கள் போதிய முக்கியத்துவம் தர்றாங்கன்னுதான் தோணுது. தவிர, இங்கே ஆட்சியைத் தீர்மானிக்கும் இடத்துல தமிழ்ச் சமூகத்தோடு ஓட்டுகள் இருக்கு. இதுக்கெல்லாம் அப்பாற்பட்டு, நமக்குள்ள உணர்விருந்தா அண்டார்டிகாவுக்குப் போனாகூடத் தமிழைப் பரப்ப முடியும். தமிழோட பெருமைங்கிறது அதோட தொன்மையில மட்டும் இல்ல; தொடர்ச்சியிலேயும் இருக்கு.”

“கணினித் தமிழ் அந்தத் தொடர்ச்சியில முக்கியமான கண்ணிங்கிறது புரியுது. ஆனா, அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டுப்போறதுல அரசாங்கத்தோட பங்கு திருப்தியா இருக்கிறதா நெனைக்கிறீங்களா?”

“மலேசியால ஒவ்வொரு பள்ளிக்கூடமா போய் கணினில ‘முரசு அஞ்சல்’ எழுத்துரு போட்டோம். சிங்கப்பூர் அரசாங்கம் இதைத் தவிர வேறு மென்பொருட்களைப் பயன்படுத்தக் கூடாதுன்னே சொல்லி, எல்லாப் பள்ளிக்கூடங்களுக்கும் கொடுத்திருக்கு. கணினித் தமிழ்ங்குறது எழுத்துரு சார்ந்த அக்கறை மட்டும் இல்ல. அவங்களோட அக்கறைக்கு இது ஒரு குறியீடு. நீங்க சிங்கப்பூர் தேசிய நூலகம் போனீங்கன்னா, போன மாசம் தமிழ்நாட்டுல வெளியான புத்தகத்தைக்கூட வாங்கி வெச்சிருப்பாங்க. அவ்ளோ பெரிய, நவீன நூலகம். இந்தியால என்ன நடக்குதுங்குறதை நான் பேசக் கூடாது. ஆனா, மக்களாட்சியில மக்கள் எவ்வழியோ, மன்னன் அவ்வழினு சொல்வாங்க இல்லையா?”

ரொம்பவும் நாசூக்காகத்தான் கேட்டார் முத்து நெடுமாறன். ஆனாலும், நம் சூழல் தரும் வெட்கத்திலிருந்து இன்னும் வெளியே வர முடியவில்லை!

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

(அடுத்த மனிதர்… அடுத்த வெள்ளி…)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்