இது ஐக்கிய நாடுகள் அவையை நிறுவியதன் 75-ம் ஆண்டு. இத்தருணம், இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதோடு பொதுநலன்களை வளர்த்தெடுப்பது தொடர்பிலான ஐநாவின் முக்கியமான போக்குகள், பாங்குகள் மற்றும் எதிர்காலச் சவால்கள் ஆகியவற்றைத் திரும்பிப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறது. டிசம்பர் 20, 1956 அன்று ஐநா பொது அவையில் பேசும்போது பிரதமர் ஜவாஹர்லால் நேரு குறிப்பிட்டதுபோல, “ஐநாவால் அற்புதங்கள் எதையும் நிகழ்த்திவிட முடியாது என்றாலுமேகூட, ஐநா என்கிற அமைப்பே உலகின் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயங்களில் ஒன்றாக இருக்கும் என்பது நிச்சயம்”.
வளர்ச்சிப் படிநிலைகள்
ஐநாவில் இந்தியா உறுப்பினராக இருந்துவரும் 75 ஆண்டுகளையும் பொதுவாக மூன்று காலகட்டங்களாகப் பார்க்கலாம். பனிப் போர் முடிவுக்கு வந்த 1989 வரையிலான முதலாவது காலகட்டத்தில், வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியிலிருந்து விலகி நின்றதன் மூலம், ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் ஆயுதம்தாங்கிய சண்டைகளைத் தணியச் செய்யும் சக்தியாக விளங்கிய இந்தியா தனது ராஜதந்திர செல்வாக்கைப் பற்றி ஆராயவும் மேம்படுத்தவும் வழிமுறைகளைக் கற்றுக்கொண்டது. அதைப் போலவே, ஜம்மு-காஷ்மீர் போன்ற மிகவும் முக்கியமான பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகளை ஐநாவால் பாரபட்சமின்றித் தீர்த்துவைக்கும் என்று நம்பியிருக்க முடியாது என்பதையும் இந்தியத் தலைவர்கள் அனுபவரீதியாகப் புரிந்துகொண்டார்கள்.
காலனிய எதிர்ப்பு, இனவெறி எதிர்ப்பு, அணு ஆயுத ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பொது விஷயங்களைக் கவனப்படுத்துவதில் மட்டுமே இந்தியா ஐநாவைப் பயன்படுத்திக்கொள்ளக் கடுமையாக முயன்றிருக்கிறது. 1962-ல் சீனாவுக்கு எதிரான எல்லைச் சண்டையில் இந்தியா அவமதிப்பைச் சந்திக்க நேரிட்டதால் நாட்டின் ராஜதந்திர அணுகுமுறை முழுமையான மறுவரையறைக்கு ஆளானது, ஐநாவை மூன்றாம் தரப்பாகக் கொண்டு இருதரப்பு உடன்பாடுகளை மேற்கொள்ளும் வாய்ப்புகள் உருவாயின.
சவால்கள் நிறைந்த தசாப்தம்
1990கள் உலக அமைப்பில் இந்தியாவுக்கு மிகவும் சிக்கலான தசாப்தமாக அமைந்தது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றமானது ஐநாவில் வாக்களிக்கும் முறையிலும் பிரதிபலித்தது. யூத இனவாதம் குறித்த தனது நிலைப்பாட்டிலிருந்து இந்தியா தலைகீழாக மாறியதை உதாரணமாகக் காட்டலாம். அதே நேரத்தில், 1990களின் தொடக்கத்தில் காஷ்மீரில் பயங்கரவாதம் வளரத் தொடங்கியபோது, இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் நடக்கிறது என்ற குற்றச்சாட்டுகளுடன் இந்தப் பிரச்சினையை சர்வதேசப் பிரச்சினையாக முன்வைத்தது பாகிஸ்தான். மனித உரிமை ஆணையத்தின் முன்னால் பாகிஸ்தானை எதிர்கொள்வதற்காக ஈரான், சீனா ஆகிய நாடுகளின் ஆதரவைப் பெற வேண்டி இந்தியா கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. 1995-ல் அணு ஆயுதங்களுக்கு எதிரான உடன்படிக்கையைக் காலவரையின்றி நீட்டிப்பதை இந்தியா உறுதிபட எதிர்த்து நின்றது, 1996-ல் ஒருங்கிணைந்த சோதனைத் தடை உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்காக அது பின்வாசல் வழியாக அறிமுகப்படுத்தப்பட்டபோதும் இந்தியா உறுதியாக அதை நிராகரித்தது. ஐநாவில் மேற்கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கை, அணு ஆயுத நாடுகளின் எதிர்நடவடிக்கைகள் போன்றவற்றை அலட்சியம் செய்துவிட்டு இந்தியா 1998-ல் பொக்ரான் அணு ஆயுதச் சோதனை நடத்தியது.
மாற்றத்தின் வருகை
ஐநாவில் இந்தியா மிளிர்வதற்குப் பல புதிய வாய்ப்புகளை 21-ம் நூற்றாண்டு வழங்கியுள்ளது. முதலாவது தசாப்தத்தில் வியக்கத்தக்க பொருளாதார நடவடிக்கைகளுக்காக, தாராளமய மற்றும் உலகமயக் கொள்கை முடிவுகளுக்குத்தான் நன்றிகூற வேண்டும். இந்தியா தன்னை விரிந்து பரந்த அளவில் வலுப்படுத்திக்கொள்ள அவை உதவியிருக்கின்றன. மேம்பாடு, மனிதநேய அமைப்புகளுக்கான தனது பங்களிப்புகளையும் இந்தியா உயர்த்திக்கொண்டது, ஐநாவின் வரவுசெலவு மதிப்பீட்டில் இந்தியாவின் பங்களிப்பு 0.34%-லிருந்து 0.83% ஆக அதிகரித்தது. இறுதியாக, ஐநா பாதுகாப்பு அவை, மனித உரிமை கவுன்சில், உலக நீதிமன்றம், பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் செயல் ஆணையங்கள் ஆகியவற்றின் வெவ்வேறு மதிப்புக்குரிய பொறுப்புகளுக்கு நடக்கும் தேர்தல்களில் சீனாவாலும் பிரிட்டனாலும் பரிந்துரைக்கப்படுபவர்களைத் தோற்கடித்து வெற்றிபெறுவதால் இந்தியாவின் வளர்ந்துவரும் பிரபல்யத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது.
பாதுகாப்பு அவை விரிவாக்கம்
இந்தியாவைப் போன்றே நிரந்தர உறுப்பினராக விரும்பும் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த மற்ற நாடுகளையும் சேர்த்து ஐநா பாதுகாப்பு அவையை விரிவுபடுத்தினால், சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. பிராந்திய அளவில் ஒருங்கிணைப்பு இல்லாததன் காரணமாக இந்த முயற்சிகள் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பலனளிக்கவில்லை. பாதுகாப்பு அவையில் கூடுதலாக நிரந்தர உறுப்பினர்களைச் சேர்ப்பதால், தங்களது பிராந்திய எதிரிகளிடம் பலவீனப்பட வேண்டியிருக்கும் என்று கவலைகொள்ளும் இத்தாலி, பாகிஸ்தான் போன்ற நடுத்தர சக்தி வாய்ந்த 30 நாடுகள் இந்த முயற்சியை எதிர்க்கின்றன. ஒருசில நிரந்தர உறுப்பு நாடுகளும் இந்தச் சூழ்ச்சிக்குப் பின்னால் இருக்கின்றன. இந்தியாவுக்கு இதுவரையில் மிகப் பெரிய ஆதரவு இருந்தாலும்கூட, சமரசப் பேச்சுவார்த்தைகளின் வழியாக மட்டுமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும். தற்போதுள்ள வீட்டோ அதிகாரம் இல்லாத நிரந்தரமல்லாத உறுப்பினர்களைக் காட்டிலும் நீண்ட கால அளவுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் ஒரு புதிய வகைப்பாட்டை உருவாக்குவதாக அந்த சமரச முயற்சி அமைய வேண்டும்.
இந்தியா தற்போது எதிர்கொண்டிருக்கும் மிகவும் கடுமையான பொருளாதார மந்தநிலை, சீனாவுடனான சிக்கலான உறவு போன்ற பல்வேறு பிரச்சினைகளை அது எப்படி சமாளிக்கப்போகிறது என்பதன் அடிப்படையில்தான் பெரும்பாலும் ஐநாவில் இந்தியாவின் எதிர்காலம் அமைந்திருக்கும். ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தரமில்லாத உறுப்பு நாடாக இரண்டாண்டு காலத்துக்கு இந்தியா மிக விரைவில் (ஜனவரி 1, 2021) பொறுப்பேற்கவுள்ளதும் இதனுடன் தொடர்புடையதே. ஐநா சாசனத்தின் கோட்பாடுகளை நிலைநிறுத்துவது, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்பவர்களுக்கும் ஆதரிப்பவர்களுக்கும் எதிராகக் கடுமையாக நடவடிக்கைகளை எடுப்பது உள்ளிட்ட அதன் முன்னுரிமைகள் தொடரும். மேலும், அமைதி நடவடிக்கைகளுக்காக, படைகளை அனுப்பிவைக்கவும் வேண்டியிருக்கும். முந்தைய கால அனுபவங்களைப் போலவே, இந்தியா சாத்தியமான அனைத்து முக்கிய விஷயங்கள் குறித்தும் ஒருமித்த கருத்தோடு சேர்ந்தியங்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆனாலும், ஒன்று அல்லது இரண்டு நிரந்தர உறுப்பினர்கள் உள்ளிட்ட மற்ற உறுப்பினர்களிடமிருந்து அது விலகியிருக்கும் வழிமுறையையே தேர்ந்தெடுக்கக்கூடும்.
ட்ரம்ப் நிர்வாகம் பல்தரப்பு நிறுவனங்களின் மீது காட்டிய வெறுப்பு, மாறிவரும் அமெரிக்க-சீன சமன்பாடு, கரோனா தொற்றுப் பரவலின் காரணமாக சீனாவை அரசியல்ரீதியாகத் தனிமைப்படுத்தும் போக்கு அதிகரிப்பு, கிழக்கு லடாக்கிலும் தென்சீனக் கடல் பகுதியிரும் சீனா நடத்திவரும் எல்லைத் தாக்குதல்கள் என்று தொடரும் தற்போதைய நிலையற்ற சூழலுக்கு நடுவே, ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா சவால்கள், வாய்ப்புகள் இரண்டையுமே சந்திக்க வேண்டியிருக்கும். சச்சரவுகளில் ஒரு தரப்பினராக இருக்கும் நிலையில் அது குறித்து வாக்களிக்காமல் இருப்பது அல்லது தமக்கு விருப்பமில்லாத முன்மொழிவுகள் வைக்கப்படும்போது அதற்கு எதிராக வாக்களிப்பது என்ற இரண்டு தேர்வுகளில் ஒன்றை இந்தியா தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இரண்டாவது தேர்வை நடைமுறைப்படுத்துவது என்பது அவ்வகையில் ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியாவின் வாக்களிப்பு வரலாற்றில் முதலாவதாக இருக்கும். அதே வேளையில், அமெரிக்காவுடன் அதிகரித்துவரும் நெருக்கம், சீனாவுடன் சமநிலையைக் கடைப்பிடிக்கும் நடுநிலையிலிருந்து பிறழவும் செய்யலாம்.
- சி.எஸ்.ஆர்.மூர்த்தி, ஜேஎன்யூ முன்னாள் பேராசிரியர்
‘தி இந்து’ தமிழில்: புவி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago