நடைமுறையில் பயன்படாத கல்வி உண்மையான கல்வி அல்ல!- சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பேட்டி

By முகம்மது ரியாஸ்

சோஹோ நிறுவனத்தைச் சிலர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஒப்பிடுகின்றனர். சோஹோவின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் வளர்ச்சியைச் சிலர் ஸ்டீவ் ஜாப்ஸுடன் ஒப்பிடுகின்றனர். ஆனால், ஸ்ரீதர் வேம்பு இந்த ஒப்பீடுகளில் ஆர்வமற்றவர். அவரது உலகம் தனித்தது. அங்கு போட்டி இல்லை, லாப வேட்கை இல்லை, வெற்றி ஒரு இலக்காக இல்லை. நிதானம், எளிமை, சுதந்திரம், சமூக மேம்பாடு என்பதை ஒரு கலாச்சாரமாகக் கொண்டிருக்கிறது சோஹோ. சென்னை கூடுவாஞ்சேரி மற்றும் தென்காசி மத்தளம்பாறையில் இருக்கும் சோஹோவின் அலுவலக வளாகத்தில் ‘சோஹோ ஸ்கூல்’ இயங்கிவருகிறது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்து மேற்படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்கு மென்பொருள் எழுதக் கற்றுத்தந்து அவர்களைப் பணியில் சேர்த்துக்கொள்கிறது சோஹோ. அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், ஜப்பான் உட்பட எட்டு நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டிருக்கும் சோஹோ, ஒரு மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் என்பதற்கு மேலாக, அதன் மாற்றுச் செயல்பாடுகள் காரணமாகவே பெரிதும் கவனம் ஈர்க்கிறது. காரணகர்த்தா ஸ்ரீதர் வேம்புவிடம் பேசியதிலிருந்து…

எந்தப் புள்ளியில் தொழில் தொடங்கும் முடிவுக்கு வந்தீர்கள்?

அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பில் ஆய்வு முடிவுகளைத் தயாரித்துக்கொண்டிருந்தபோது சில கேள்விகள் எழுந்தன. ‘இதெல்லாம் எதற்காக? இந்தக் காகிதங்களை வைத்து என்ன செய்யப்போகிறோம்?’ கல்விப்புல ஆய்வுச் செயல்பாடுகள் மீது ஆர்வம் இழந்து பெரும் விரக்திக்கு உள்ளானேன். மறுபுறம், இந்தியா ஏன் இவ்வளவு ஏழ்மையாக இருக்கிறது, இந்தியாவில் ஏன் தயாரிப்புகளே இல்லை போன்ற கேள்விகள் என்னைத் துளைத்தெடுத்தபடி இருந்தன. எனவே, காகிதங்களோடு சுருங்கிவிடக்கூடிய ஆய்வுப் படிப்புகளை, பொறியியலைச் செயல்வடிவத்துக்கு எடுத்துச் செல்லத் தோன்றியது. என் வாழ்க்கையின் திசையை மாற்றியமைத்த கணம் அது. அதுவரை ஒரு அறிவியலாளராகவோ பேராசிரியராகவோ ஆகப்போகிறேன் என்றுதான் நினைத்திருந்தேன். நிறுவனம் தொடங்குவேன் என்று கற்பனையிலும் நினைத்ததில்லை. தொழில் செய்வதற்கு நிறைய தந்திரங்கள் வேண்டும், சூட்சுமம் வேண்டும் என்று நமக்குத் தெரியாதது குறித்து யோசிப்போம் அல்லவா, அப்படித்தான் எனக்கும் தொழிலுக்குமான உறவு இருந்தது. நண்பர்களிடம் நகைச்சுவையாகக் கூறுவதுண்டு: “ஜப்பானில் பிறந்திருந்தால் கல்லூரிப் பேராசிரியர் ஆகியிருப்பேன்; இந்தியாவில் பிறந்ததால்தான் தொழில்முனைவோனாக ஆகியிருக்கிறேன்.”

உங்கள் குடும்பப் பின்புலம் குறித்துச் சொல்லுங்கள்...

தஞ்சாவூரிலுள்ள உமையாள்புரம் கிராமத்தில் பிறந்தேன். என் அப்பா சென்னை உயர் நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக இருந்தார். தீர்ப்புகளை ஆவணப்படுத்தும் வேலை. கீழ் நடுத்தர வர்க்கம். பள்ளிப் படிப்பைத் தமிழ்வழிக் கல்வியில்தான் கற்றுக்கொண்டேன். என் குடும்பம் எனக்கு எளிமையைக் கற்றுத்தந்தது. இன்றும் என் சகோதரி, சகோதரர்கள் எல்லோரும் எளிமையான வாழ்முறையையே கடைப்பிடிக்கிறோம். நான் சென்னையில் வளர்ந்தாலும் கிராமம் என்னுள் ஊடுருவியிருந்தது. அதன் காரணமாகவே, தென்காசியைத் தேர்ந்தெடுத்து, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வசிக்கிறேன்.

‘சோஹோ ஸ்கூல்’ எப்படி உருவானது?

அப்போது சோஹோ மிகச் சிறிய நிறுவனம். கல்லூரிப் படிப்பு முடிக்கும் மாணவர்களெல்லாம் மைக்ரோசாஃப்ட், கூகுள், டிசிஎஸ், இன்போசிஸ் என்று பெரிய நிறுவனங்களில் சேரவே ஆர்வம் காட்டினார்கள். இந்தச் சூழலில், சோஹோவுக்குத் தேவையான பணியாளர்களை நாமே உருவாக்குவோம் என்ற முடிவுக்கு வந்தோம். இந்தத் திட்டத்துக்கு ஆரம்ப விதை போட்டதில் என் சகோதரர்களுக்கு முக்கியப் பங்குண்டு. கல்லூரிப் பேராசிரியர் ஒருவரைப் பணிக்கு அமர்த்தி, சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பேசினோம். மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம் என்றோம். சில மாணவர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். அவர்களுக்கான நவீனப் பாடத்திட்டத்தை உருவாக்கி, அடிப்படையான சில பயிற்சிகள் வழங்கினோம். படிப்படியாக மென்பொருள் எழுதக் கற்றுத்தந்தோம். ஒருசில மாதங்களிலேயே அவர்கள் மென்பொருள் எழுதுவதில் நன்கு தேர்ச்சி கண்டனர். இவ்வாறுதான் ஆறு மாணவர்களுடன் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ‘சோஹோ ஸ்கூல்’ உதயமானது. இன்று சோஹோ பணியாளர்களில் 20% இத்தகைய மாணவர்கள்தான். படிப்புக்கும் அறிதலுக்கும் தொடர்பில்லை என்பதை ‘சோஹோ ஸ்கூல்’ ஆழமாக உணர்த்தியிருக்கிறது. உண்மையில், பட்டப் படிப்பு முடித்தும் வேலையில்லாமல் இருக்கும் இந்திய இளைஞர்களுக்குத் தேவையானது திறன் மேம்பாடுதான்.

பெரிய மென்பொருள் நிறுவனத்தில் மென்பொருள் உருவாக்கப் பணிகளுக்கே பன்னிரண்டாம் வகுப்பு கல்வித் தகுதி போதும் என்கிறீர்கள். ஆனால், இந்திய யதார்த்தம் வேறொன்றாக இருக்கிறது. இந்த இடைவெளியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தியாவில் பாடத்திட்டங்களானவை நடைமுறை வாழ்வில் பயன்படாதவையாக இருக்கின்றன. இங்கு இருக்கும் கணிதப் பாடங்களைப் பாருங்கள். அவ்வளவு சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது. சோஹோவில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு அளவிலான கணிதமே பயன்பாட்டில் இருக்கிறது. நடைமுறை வாழ்வில் பயன்படாத கல்வி, உண்மையான கல்வி அல்ல. செயல்முறைக் கல்வியே நமக்குத் தேவை. பிரச்சினை என்னவென்றால், இந்தியக் கல்வியமைப்பானது வெற்றி என்பதை இலக்காகக் கொண்டிருக்கிறது. கல்வி ஒருபோதும் வெற்றியை நோக்கியதாக, போட்டி மனப்பான்மையை உண்டாக்குவதாக இருக்கக் கூடாது. நிறுவனங்களுக்கிடையே போட்டி இருக்கலாம். ஆனால், குழந்தைகளுக்கிடையே போட்டி இருப்பது தவறானது. அது அவர்களது தனித்தன்மையை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும். பாரதிக்குக் கணக்கு வரவில்லை. கணித மேதை ராமானுஜனுக்கு ஆங்கிலம் வரவில்லை. இந்தியக் கல்வி முறைப்படி, இன்று அந்த இருவரை மக்கு என்று சொல்லிவிடுவோம், இல்லையா? ‘நீட்’ தேர்வுக்குப் படி படி என்று கொடுமைப்படுத்தி, கற்பனைவளம் இழந்து ஜடமாக நிற்கும் மாணவர்களைப் பார்க்கிறேன். நம் நாட்டிலுள்ள தேர்வுகளுக்கான வழிமுறையானது மாணவர்களின் இயல்பையே குலைத்துவிடுவதாக இருக்கிறது. ஐஐடியிலும் இதுதான் நிகழ்கிறது.

உங்களது பொருளாதாரப் பார்வையை காந்தியின் பார்வையோடு தொடர்புபடுத்த இடமுண்டா?

காந்தியைவிடவும் அப்துல் காலம் பார்வை எனக்கு நெருக்கமானது. அப்துல் கலாம், ‘கிராமப்புறங்களுக்கு நகர்ப்புற வசதிகளை வழங்குதல்’ (PURA) என்றொரு திட்டம் கொண்டுவந்தார். தொழில்நுட்பங்களைக் கிராமங்களுக்கு எடுத்துச் செல்வதன் மூலமே கிராமங்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என்று அவர் நம்பினார். எனக்கும் அதில் பெரிய ஆர்வம் இருந்தது. நாம் கிராமம் என்றால் வேளாண் உற்பத்தியோடு மட்டுப்படுத்திவிடுகிறோம். அறுவடைக்குத் தேவையான இயந்திரங்களை யார் உற்பத்திசெய்வது? இன்று ஸ்மார்ட்போன், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் என நவீனத் தொழில்நுட்பங்கள் அனைத்து இடங்களிலும் ஊடுருவியிருக்கின்றன. எனில், பலவிதமான தொழில்நுட்பக் கலைகளை உள்ளூர் மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும். அதன் வழியே மட்டுமே நாம் சமத்துவப் பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.

உங்கள் சிந்தனையைக் கட்டமைத்ததில் யாரெல்லாம் முக்கியமானவர்கள்?

சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ என்னுள் தாக்கம் செலுத்திய ஆளுமைகளில் ஒருவர். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் ஒரு பின்தங்கிய மூன்றாம் நாடு. வெவ்வேறு நாட்டவர்கள், வெவ்வேறு மதங்கள், வெவ்வேறு மொழிகள் எனப் பலதரப்பட்ட பண்பாட்டுக் கலாச்சாரங்கள் கொண்ட வறிய நாடாக அது இருந்தது. பல கலவரங்கள் நடந்திருக்கின்றன. லீ குவான் இந்த வேறுபாடுகள் அனைத்தையும் உள்ளடக்கியபடியே சிங்கப்பூரை உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாற்றிக்காட்டினார். அதேபோல், ஹோண்டா என்னுள் பெரும் தாக்கம் செலுத்தினார். ஜப்பானில் ஒரு கிராமத்தில் சைக்கிள் மெக்கானிக்காக இருந்து, தனது உழைப்பால், மாற்றுச் சிந்தனையால் உலகின் முதன்மையான கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டாவைக் கட்டியெழுப்பினார். இவர்கள் பற்றிய புத்தகங்களை ஒன்றுவிடாமல் இளம் வயதில் தேடித்தேடிப் படித்திருக்கிறேன். இவர்கள் வழியே நான் எனக்கான பாதையை உருவாக்கினேன்.

சமூக அக்கறை கொண்ட ஒரு தொழில்முனைவோர் என்ற வகையில் இந்தியா செல்ல வேண்டிய பாதை என்ன என்று நினைக்கிறீர்கள்?

தொழில்நுட்பம்தான் ஒரு நாட்டினுடைய பொருளாதாரத்தின் வலிமையைத் தீர்மானிக்கிறது. இன்று ஸ்மார்ட்போன் சந்தையில் இந்தியா முக்கிய இடம் வகிக்கிறது. ஆனால், நம்மால் ஒரு சின்ன சிப்பைக்கூட உருவாக்க முடியாது. எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கிறோம். ஆனால், அந்தக் கருவியை நம்மால் உருவாக்க முடியவில்லை. மெட்ரோ ரயிலில் போகிறோம். ஆனால், அதன் ஒவ்வொரு பாகமும் வெளிநாடுகளிலிருந்து வருகிறது. இந்தியாவின் பொருளாதாரச் சிக்கல் என்னவென்றால் நாம் நமக்குத் தேவையான எல்லாவற்றையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துவிட்டு, குடிமக்களை வெளிநாடுகளுக்குச் சேவை செய்ய வைக்கிறோம். இந்தப் பொருளாதாரம் சரியானது அல்ல. இந்தியா அதற்குத் தேவையான பொருட்களை உற்பத்திசெய்ய வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியைக் கிராமங்களை நோக்கி விரிக்க வேண்டும். கிராமப்புறங்கள் உற்பத்தித் துறைக்கு ஏற்றதல்ல என்று கூறுகிறோம். ஆனால் சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் கிராமப்புற உற்பத்தியில் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. நம்மாலும் முடியும். நாம் எதையும் தொடங்குவதற்கு முன்பே கைவிட்டுவிடுகிறோம். நான் ஐஐடியில் படித்துக்கொண்டிருக்கும்போது அங்கு வருகைதந்த ஜப்பானைச் சேர்ந்த பேராசிரியர் ஒருமுறை கூறினார், “இன்று நீங்கள் பயன்படுத்தும் பென்சில் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது. எங்கள் நாட்டில் நாங்கள் இவ்வாறு பிற நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்த வெட்கப்படுவோம். அந்த வெட்க உணர்வே எங்கள் நாட்டை உற்பத்தியில் வளரச் செய்தது. இந்தியாவும் அப்படி மாற வேண்டும்.”

இந்தியாவில் சாதி, மதம், இனம், மொழி எனப் பல முகங்களைக் கொண்ட ஏற்றத்தாழ்வுகளைத் தொழில்நுட்ப வளர்ச்சி மாற்றி அமைக்கும் என்று நம்பப்பட்டது. ஒரு தொழில் முனைவோராக, தொழில்நுட்பங்களை உருவாக்குபவராக இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

வெவ்வேறு சாதி, மதம், மொழியைச் சேர்ந்த பலதரப்பட்ட மக்கள் ஒரு பணியிடத்தில் இணைந்து வேலை செய்யும்போது மற்றவர்களைப் பற்றி நமக்குப் புரிய ஆரம்பிக்கிறது. அதுவரையில் நாம் அவர்கள் குறித்து வைத்திருந்த பிம்பம் மாறத் தொடங்குகிறது. நமக்குள் இருக்கும் பாகுபாடு மறந்து நட்பு உருவாகிறது. ஒரு மனிதனின் மனக்கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்றால் அவனது சூழலை மாற்ற வேண்டும். இதைப் படிப்படியாகத்தான் செய்ய முடியும். அதற்கு இப்படியான பணிச் சூழல் உருவாவது அவசியம். இப்படியான வேலைவாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்க வேண்டும்.

நிறைய இளைஞர்கள் உங்களை முன்னுதாரணமாகக் கொண்டிருக்கிறார்கள். நாட்கள் நகர நகர உங்களது உள்ளாற்றல் புதிய சாத்தியங்களை நிகழ்த்தியபடி இருக்கிறது. வாழ்நாள் முழுவதும் நீங்கள் இதே ஊக்கத்துடன் இருந்திருக்கிறீர்களா? எது உங்களை முன்னகர்த்திச் செல்கிறது?

பணம் என்னுடைய இலக்கு இல்லை. நான் செய்யக்கூடிய வேலையில் எவ்வளவு முழுமையாக, உணர்வுபூர்வமாக என்னை ஈடுபடுத்திக்கொள்கிறேன் என்பதே எனக்கு முக்கியமானதாக இருக்கிறது. இன்று வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சோஹோ ஒரே நாளில் வளர்ந்ததுபோல் தோன்றக்கூடும். ஆனால், சோஹோவின் இருபத்தைந்து ஆண்டுகாலப் பயணத்தின் பின்னால் மிகப் பெரும் பொறுமை இருக்கிறது. நாம் நினைத்தபடியே எல்லாம் நடந்துவிடாது. வாழ்வில் பிரச்சினைகள், தோல்விகள், ஏமாற்றங்கள் இருந்துகொண்டேதான் இருக்கும். அதை நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பதே முக்கியம். ‘வலி என்பது தவிர்க்க முடியாத ஒன்று; ஆனால், அதற்கு வருந்துவதோ, வருந்தாமல் கடப்பதோ நம் கையில்தான் இருக்கிறது’ என்று ஒரு பெளத்தத் தத்துவம் உண்டு. என் வாழ்க்கையில் சில விஷயங்கள் சரியாகப் போகவில்லை. அதற்காக நான் முடங்கி உட்காரவில்லை.

- முகம்மது ரியாஸ்,

தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்