தமிழின் துல்லியர்

By இ.அண்ணாமலை

தான் தமிழ்ப் பணி செய்வதாக ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன் என்றும் சொன்னதில்லை; நினைத்ததும் இல்லை. தான் செய்வது தமிழின் தேவையை நிறைவுசெய்வதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்; இது தமிழின் எதிர்காலத்தைப் பற்றியது. தமிழின் இறந்த காலத்தின் புகழைப் பாடுவது போதாது; அது எதிர்காலத்தில் வலுவுள்ள மொழியாக இருக்க வேண்டும்; எதிர்வரும் சவால்களைச் சமாளிக்கும் திறனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதில் தன் கவனத்தைச் செலுத்தியவர் ராமகிருஷ்ணன்.

மொழித் தூய்மைவாதியாக அல்லாமல் அதன் துல்லியம் நோக்கி நகர்ந்தவர் ராமகிருஷ்ணன். தமிழர்கள் தாங்கள் சொல்வதைப் பிசிறின்றி, மிகையின்றி, ஆரவாரமின்றித் தெளிவாகச் சொல்ல வேண்டும், எழுத வேண்டும் என்ற தணியாத தாகம் அவருக்கு இருந்தது. தமிழ் நூல்களை வெளியிடும் முன் சல்லடை வைத்து உமியை அகற்றி அரிசியைத் தரும் வேலையைத் தமிழ்ப் பதிப்புலகில் செய்யும் ஒருசிலரில் அவர் ஒருவராக இருந்தார். இதனாலேயே படைப்பாளர்களின் பாராட்டுகளைப் பெற்றார். சிலருடைய எரிச்சலையும் சம்பாதித்துக்கொண்டார். படைப்பாளியின் மொழியின் மீது ஆதிக்கம் செலுத்துபவர் என்று தமிழ் விமர்சகர்கள் சிலர் சுமத்திய குற்றச்சாட்டுக்கும் ஆளானார்.

ராமகிருஷ்ணனின் சல்லடை மொழியின் துல்லியத்தின் மேல் அவருக்கு இருந்த அக்கறையால் வந்தது. இதனால்தான், ‘க்ரியாவின் வெளியீடுகள் சோடை போவதில்லை’ என்ற பெயரும் அவருடைய பதிப்பகத்துக்கு வந்தது. பதிப்புத் துறைக்கு வரும் முன் ராமகிருஷ்ணன் விளம்பரத் துறையில் இருந்தவர். விளம்பரத்தில் சொற்கள் அம்பு தைப்பதுபோல் நுகர்வோர் மனத்தைக் குழப்பமின்றி அடைய வேண்டும் என்ற பாடத்தை அங்கு அவர் கற்றிருந்தார். இந்தப் பின்னணி சொற்களின் மீது இயல்பாகவே அவருக்கு இருந்த அக்கறையை மேலும் துலக்கம் ஆக்கியது.

இந்த அக்கறையே, தமிழை எந்தக் காரியத்துக்குப் பயன்படுத்துபவர்களுக்கும் துணைசெய்யும் ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யை உருவாக்க விதையானது. இந்த முயற்சியினூடாக மொழியியலாளர் என்னும் முறையில் எனக்கும் அவருக்கும் இடையிலான உறவு மலர்ந்தது. பதிப்பு வேலையைத் திட்டமாகச் செய்ய என்ன பயிற்சி வேண்டும்; என்ன கருவிகள் வேண்டும் என்னும் கேள்வி ராமகிருஷ்ணனின் மனதில் எப்போதும் இருந்தது. பள்ளியில் பெற்ற தமிழ்ப் படிப்பு, அது தந்த அலங்காரத் தமிழ் தன் தேவைக்கு ஈடுகொடுக்கவில்லை என்பது புரிந்திருந்தது. தன் கேள்விகளுக்குப் பதில் தேடித் தமிழ்க் கல்வியாளர்களை அணுகுவதில் அவருக்கு நம்பிக்கை இல்லை; அவர்களிடமிருந்து விலகியே இருந்தார். அவருக்கும் எனக்கும் பொதுவான சில அமெரிக்க நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன், ‘அண்ணாமலையை அணுகிப்பாருங்கள்’ என்று யோசனை சொன்னபோது அவருடைய அவநம்பிக்கை போகவில்லை. 1985-ல் இன்னொரு அமெரிக்கத் தமிழாசிரியர் இதே யோசனையைச் சொன்ன பிறகு மைசூரில் இருவரும் சந்தித்தோம். அப்போது உருவான கருவே ‘தற்காலத் தமிழ் அகராதி’.

இந்த அகராதி தற்காலத் தமிழ்ச் சொற்களுக்கு இலக்கண விளக்கமும் பொருள் விளக்கமும் எடுத்துக்காட்டு வாக்கியங்களும் தரும் ஒன்று மட்டுமல்ல. இது தற்காலத் தமிழை வரையறுத்துக் காட்டுகின்ற அகராதி; இந்தத் தமிழின் சொல்வீச்சையும் பொருள் வீச்சையும் காட்டுகின்ற அகராதி. இது தற்காலத் தமிழுக்கு ஒரு கொடை; எதிர்காலத் தமிழுக்கு ஒரு படிக்கல். இதை உருவாக்கப் பலர் உழைத்திருக்கிறார்கள். ராமகிருஷ்ணன் அகராதித் தயாரிப்பைக் கட்டி இழுக்கும் நிர்வாக வேலையில் மட்டுமல்ல; இதன் சொற்களைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து அவற்றின் பொருள் நுணுக்கங்களை வெளிப்படுத்துவது வரை எல்லா நிலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டார். அகராதியின் பார்வை நேர்த்தி ராமகிருஷ்ணனின் படைப்புலக அனுபவத்தால் வந்தது. ஒரு புத்தகம் அழகின் வடிவமாக இருக்க வேண்டும் என்ற கொள்கையையும் அதன் தரத்துக்காக எவ்வளவும் மெனக்கெடலாம் என்ற பண்பையும் எந்த நெருக்கடியிலும் தளர்த்தாதவர் ராமகிருஷ்ணன்.

ராமகிருஷ்ணனுடைய ‘க்ரியா’ கொண்டுவந்த பிற நூல்களும் தமிழின் பலவகைத் தேவைகளையும் நிறைவேற்றுவனவாகவே இருந்தன. அது இலக்கியச் சுவையைக் கூட்டுவதாக இருக்கட்டும், கலாச்சாரப் புரிதலாக இருக்கட்டும்; சுற்றுச்சூழல் பற்றிய அறிவாக இருக்கட்டும்; தமிழைக் கணினியுகத்துக்குக் கொண்டுவருவதாக இருக்கட்டும், எல்லாம் தமிழின் தேவையை முன்னிட்டே இருக்கும். ‘க்ரியா’வின் நூல்கள் பெரும்பான்மையான வாசகர்களைச் சென்றடையாமல் இருக்கலாம். ராமகிருஷ்ணன் அடிக்கடி கூறியதுபோல, ‘சபைக் கூட்டத்தில் இல்லாவிட்டாலும், எங்கோ ஓரிடத்திலிருந்து தமிழில் அழகைத் தேடுவோருக்கு எட்டும் தொலைவிலேயே அவை இருந்தன.’

தமிழின் தேவையை ராமகிருஷ்ணன் இன்னும் கொஞ்சம் நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், கரோனா முந்திக்கொண்டுவிட்டது. இருப்பினும், தமிழின் தேவைக்குக் கொஞ்சத்தைக் கொடுத்துவிட்டு, மிச்சத்தை ஏனையோருக்கு சுட்டிக்காட்டிவிட்டே அவர் மறைந்திருக்கிறார்.

- இ.அண்ணாமலை, மொழியியலாளர், ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யின் அகராதிக் குழுத் தலைவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்