அமெரிக்காவில் நடந்திருப்பது ஆட்சி மாற்றமல்ல, அரசியல் மாற்றம். ட்ரம்ப் எதிர்த்து நின்றது ஜனநாயகக் கட்சியை மட்டுமில்லை, அவரைப் பற்றி உருவான கடுமையான எதிர்மறைக் கருத்துகளையும்தான் என்கிறது ஒரு தரப்பு. இதை ஜோ பைடனின் கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றியாகக் கொள்ள முடியாது, ட்ரம்ப்பின் தனிப்பட்ட வகையிலான அணுகுமுறைகளின் தோல்வியைத்தான் இது குறிக்கிறது என்கிறது மற்றொரு தரப்பு. எது எப்படியிருப்பினும், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் பெற்றிருக்கும் வெற்றி என்பது இனிவரும் ஆண்டுகளில் அமெரிக்காவின் பிரதான கருத்தியல் போக்கைத் தீர்மானிப்பதாக அமைந்திருக்கிறது.
ஏன் தோற்றார் ட்ரம்ப்?
உலகமே பெருந்தொற்றுப் பரவலைச் சமாளிப்பதற்காகப் போராடிக்கொண்டிருந்தபோது அதை ட்ரம்ப் மிகவும் அலட்சியமாகக் கையாண்டார். அதைப் போலவே, அவரது ஆட்சிக் காலத்தில் நிறவெறி காரணமாகப் பதற்றமான சூழல் நிலவியது. ஜனநாயகக் கட்சி இந்த இரண்டு முக்கிய விஷயங்களையுமே தேர்தலில் தனது முக்கிய ஆயுதங்களாகக் கையிலெடுத்துக்கொண்டது. அந்தத் தேர்தல் வியூகம் வெற்றிபெற்றுமிருக்கிறது.
ட்ரம்ப்பின் ஆட்சிக் காலத்தில், அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சியடையவே செய்தது. எனினும், அமெரிக்காவின் விரிந்து பரந்த நிலப்பரப்பை நிர்வகிக்கும் வகையில், ஒரு திறம்பட்ட குழுவை உருவாக்காமல் அனைத்துக்கும் தன்னையே முன்னிறுத்தியதுதான் அவரின் தோல்விக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. அவருடைய ஆட்சிக் காலத்தில், ஐந்து பேர் பாதுகாப்புத் துறைச் செயலாளர் பொறுப்பில் இருந்திருக்கிறார்கள். ஆறு பேர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களாக இருந்திருந்திருக்கிறார்கள். அவர்களில் இரண்டு பேர் வெறும் ஏழெட்டு நாட்கள் மட்டுமே அந்தப் பொறுப்பில் இருந்திருக்கிறார்கள். கடைசியில், முக்கிய முடிவுகள் அனைத்தும் ட்ரம்ப் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாலேயே எடுக்கப்பட்டதைப் பொதுவில் யாரும் விரும்பவில்லை.
ட்ரம்ப் அதிபராகப் பதவி வகித்த கடந்த நான்காண்டுகளில் சர்வதேச அமைப்புகளுடனான அமெரிக்காவின் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுவிட்டது. சுற்றுச்சூழல் குறித்த பாரிஸ் ஒப்பந்தம் போன்ற முக்கிய அமைப்புகளிலிருந்து அவர் வெளியேறினார். உள்நாட்டளவில் அமெரிக்காவை வலுப்படுத்த விரும்பிய அவர், சர்வதேச அளவில் அந்நாட்டைப் பலவீனப்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.
பெருந்தொற்றுக் காலத்தில் உலக சுகாதார நிறுவனத்துடன் அமெரிக்கா இணைந்து பணியாற்றி உலகுக்குப் பேருதவியை செய்திருக்க முடியும். ட்ரம்பின் மூர்க்கத்தனமான அரசியல் நடவடிக்கைகளும் அடாவடியான பேச்சும் அந்த வாய்ப்பை இல்லாமலாக்கிவிட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்ற பொறுப்பை ட்ரம்ப் தனது பதவிக் காலத்தில் உணர்ந்ததாகவே தெரியவில்லை. பெரும்பான்மைவாதத்தின் கண்மூடித்தனமான ஆதரவாளராக மாறி, ஜனநாயக விழுமியங்களைச் சிதைக்கும் முயற்சியில் இறங்கியதோடு தனது பிரபல்யம் அளித்த மக்கள் செல்வாக்கின் துணையோடு அந்நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும் செய்தார். அமெரிக்காவைத் தாண்டி உலகம் முழுவதும் உள்ள வலதுசாரிகள் தங்களுடைய அபிமானத் தலைவராக அவரை ஏற்றுக்கொண்டது அதனால்தான். எனவே, ட்ரம்பின் தோல்வி என்பது அவரது தனிப்பட்ட தோல்வியோ அல்லது குடியரசுக் கட்சியின் தோல்வியோ மட்டுமில்லை. ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றியாகவே அது பார்க்கப்படுகிறது.
காத்திருக்கும் மாற்றங்கள்
தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது, நிறவெறிப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்வது ஆகியவற்றுடன் சர்வதேச விவகாரங்களிலும் அமெரிக்காவின் அணுகுமுறை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐநாவின் அமைப்புகளில் மீண்டும் அமெரிக்கா முக்கியத்துவம் பெறுவதற்கான முயற்சிகளும் எடுக்கப்படும்.
குடியேற்ற விஷயத்தில் குடியரசுக் கட்சியைக் காட்டிலும் ஜனநாயகக் கட்சியினர் மிதவாதப் போக்கினர் என்பதால், உயர்கல்விக்காகவும் வேலைவாய்ப்புகளுக்காகவும் அமெரிக்காவில் தங்கியிருக்கும் இந்தியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் வராது. குடியேற்ற விதிமுறைகளை மிகவும் கடுமையாக்கினார் ட்ரம்ப். ஆனால், குடும்பமாகக் குடியேறுவதை ஆதரிப்பதாக பைடன் உறுதியளித்திருக்கிறார். வேலைவாய்ப்புகளின் அடிப்படையில் நிரந்தரமாகத் தங்கியிருக்கவும் குடியேறவும் தற்போது வழங்கப்பட்டுவரும் அனுமதிகளை உயர்த்துவதாகவும் கூறியிருக்கிறார். தொழில்திறன் பணியாளர்களுக்கான தற்காலிக அனுமதி முறையில் சீர்திருத்தங்களைச் செய்யவும், வேலைவாய்ப்பு அடிப்படையிலான பச்சை அட்டைகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்கவும் உறுதிமொழிகளை அளித்திருக்கிறார்.
இந்தியா ஏற்றுமதியில் உபரி காணும் நாடுகளுள் அமெரிக்காவும் ஒன்று. கடந்த 2019-20 நிதியாண்டில் இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியில் ஏறக்குறைய 17% அமெரிக்காவுடனானது. அமெரிக்காவுக்கு மற்ற நாடுகளிலிருந்து ஏற்றுமதியாகும் சேவைப் பணிகளில் இந்தியாவின் பங்கு 5% ஆக இருந்துவருகிறது. 2005-2019 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சேவைப் பணிகளின் சராசரி வருடாந்திர வளர்ச்சி வீதம் 14% ஆக இருந்துவருகிறது. தவிர, இந்தியாவில் செய்யப்படும் நேரடி அந்நிய முதலீட்டில் ஐந்தாவது பெரிய நாடாக அமெரிக்கா விளங்கிவருகிறது. பங்குச் சந்தை நடவடிக்கைகளில் மூன்றில் ஒரு பங்கு முதலீடுகள் அமெரிக்காவைச் சேர்ந்தவை. வாணிப விவகாரங்களில், ட்ரம்பைக் காட்டிலும் பைடன் சற்று மிதமாகவே நடந்துகொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.
இந்திய நட்புறவு மேலும் வலுப்படும்
ராஜதந்திரரீதியிலான இந்திய - அமெரிக்க நட்புறவிலும் எந்த மாற்றங்களும் ஏற்படாது என்று நம்பலாம். ஏனெனில், ஒபாமாவின் காலத்தில் துணை அதிபராகப் பதவி வகிப்பதற்கு முன்பாகவே இந்தியாவுடன் நட்புறவைப் பேண வேண்டும் என்று வலியுறுத்திவந்தவர் பைடன். செனட் சபையின் வெளியுறவுக் கமிட்டி தலைவராகவும் பின்பு துணை அதிபராகவும் இந்தியாவுடனான அமெரிக்க நட்புறவை வலுப்படுத்தியதில் அவருக்கு முக்கியமான பங்குண்டு. அவர் துணை அதிபராகப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பு, ‘2020-ம் ஆண்டில் அமெரிக்காவும் இந்தியாவும் உலகின் மிகவும் நட்புறவு கொண்ட நாடுகளாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது கனவு’ என்று குறிப்பிட்டுப் பேசியவர் அவர்.
2008-ல் செனட்டராக இருந்த பாரக் ஒபாமா இந்திய அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தத்தை ஆதரிக்கத் தயங்கியபோது, தானே அதற்குப் பொறுப்பேற்று ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களோடும் குடியரசுக் கட்சி உறுப்பினர்களோடும் கலந்து பேசி, அந்த ஒப்பந்தத்தை நிறைவேறச் செய்தவர் பைடன். அவர் துணை அதிபராகப் பதவி வகித்த காலத்தில் ஐநா பாதுகாப்பு அவையை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அதில் இந்தியாவுக்கு இடமளிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியது. ஒபாமா- பைடன் காலத்தில் பாதுகாப்புத் துறையின் முதன்மைக் கூட்டாளிகளில் ஒன்றாக இந்தியாவை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது. ஜோ பைடன் தனது அதிபர் தேர்தலுக்கான பிரச்சார அறிக்கையில், தெற்காசியாவில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எந்த வகையிலும் சகித்துக்கொள்ள முடியாது என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். கடந்த இருபதாண்டுகளில் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சிகளைச் சேர்ந்த அதிபர்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாவுடனான நட்புறவில் எந்த மாற்றமும் நிகழ்ந்ததில்லை.
கடந்த ஆறு மாதங்களில் இந்திய - சீன உறவு சிக்கலுக்குரியதாக மாறியிருக்கும் நிலையில், ட்ரம்ப் காலத்தில் இந்தியாவுக்குக் கிடைத்துவந்த ராஜதந்திரரீதியிலான ஆதரவு பைடன் காலத்திலும் தொடர வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். அதற்கான சாத்தியங்கள் நிறையவே உள்ளது என்ற நம்பிக்கையை பைடனின் கடந்த கால செயல்பாடுகளும் நடப்பு கால வார்த்தைகளும் அளிக்கின்றன. என்ன, ட்ரம்ப் காலத்தில் அமெரிக்கா மிகவும் கடுமையான வார்த்தைகளால் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தது, ஜோ பைடன் காலத்தில் அந்த வார்த்தைகள் மிகவும் நயத்தக்க நாகரிகத்தோடு வெளிப்படும்.
ட்ரம்பின் தோல்வி என்பது அவரது தனிப்பட்ட தோல்வியோ அல்லது குடியரசுக் கட்சியின் தோல்வியோ மட்டுமில்லை. ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றியாகவே அது பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago