பிரதமர் x முதல்வர்

By வெ.சந்திரமோகன்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை ‘தேர்தல்களின் தாய்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி. வியப்பில்லை. சூழல் அப்படித்தான் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி அப்படி மாற்றிவிட்டார்.

ஒருகாலத்தில் பாஜகவுக்கு நம்பகமான கூட்டாளியாக இருந்தவர்தான் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார். பிஹாரில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த லாலு பிரசாத் யாதவ் குடும்ப அரசியலை மூட்டை கட்டியதில் நிதிஷ்குமாருக்கு உற்ற துணையாக இருந்தது பாஜக. ஆனால், முஸ்லிம்களின் நண்பர் என்று பெயரெடுத்த நிதிஷ்குமார், கூட்டணியில் இருந்தபோதே மோடியை எதிர்த்தார்; கடுமையாக விமர்சித்தார். மோடி குஜராத் அரசியலைத் தாண்டி தேசிய அரசியலுக்கு வந்து, பாஜகவின் முகமாக முன்னிறுத்தப்பட்டபோது அதை எதிர்த்துக் கூட்டணியிலிருந்து வெளியேறினார். இன்னொரு விஷயமும் உண்டு. மோடியைப் போலவே நிதிஷுக்கும் பிரதமர் பதவி மீது ஒரு கண் இருந்தது. மக்களவைத் தேர்தலில் மோடி அலை யாரும் எதிர்பாராத வகையில் நிதிஷையும் சேர்த்து வாரிச் சுருட்டியது. கூடவே, லாலுவும் மூழ்கிப்போனார். இதே நிலை தொடர்ந்தால், இதே கதைதான் தொடரும் என்பதை உணர்ந்த நிதிஷும் லாலுவும் இப்போது நண்பர்களாகிவிட்டனர். பொது எதிரி: பாஜக.

மோடிக்கு இந்தத் தேர்தல் மூன்று விதங்களில் முக்கியமானது. 1. மாநிலங்களவைப் பெரும்பான்மை பெற இந்த வெற்றி உதவும். 2. டெல்லி தோல்வி விதிவிலக்கு; மோடி அலை இன்னமும் நாடு முழுவதும் தொடர்கிறது என்ற பிம்பத்தை மீண்டும் தூக்கி நிறுத்துவதற்கு. 3. தனிப்பட்ட வகையில் நிதிஷுக்குத் தான் யார் எனக் காட்ட.

நிதிஷுக்கும் கிட்டத்தட்ட இது வாழ்வா, சாவா தேர்தல்தான். மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின், தனக்குப் பதிலாக முதல்வர் பதவியில் அவர் அமர வைத்த மாஞ்சி, பல்வேறு அரசியல் நாடகங்களின் முடிவில், புதிய கட்சியைத் தொடங்கி பாஜகவுடன் இணைந்து களத்தில் இருப்பது நிதிஷை மேலும் நெருக்கடிக்கு ஆளாக்கியிருக்கிறது. ஒருவேளை தேர்தலில் தோற்றால், கட்சிக்குள்ளேயே அவர் கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள். விளைவு, பிரதமர் x முதல்வர் தேர்தலாகியிருக்கிறது பிஹார் தேர்தல்.

நிதிஷுடைய மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நிதிஷ் என்று கூட்டணிக்கு முன்பே தெளிவாகிவிட்டது. பாஜக கூட்டணியின் முதல்வர் யார் என்று கேட்டால், மோடி முடிவுசெய்வார் என்கிறார்கள். இந்தப் பெரும் யுத்தத்தை முன்னின்று நடத்த மத்திய அமைச்சரவையின் 10 மந்திரிகள் சுழற்சி முறையில் தினமும் பிஹாரைச் சுற்றுகின்றனர்.

அக்டோபர் 12 முதல் நவம்பர் 5 வரை ஐந்து கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் தேர்தல், இன்னொரு சுவாரசியத்தையும் கொண்டிருக்கிறது. பண்டிகை மாதங்களில் நடத்தப்படும் இத்தேர்தலின் முடிவுகள் நவம்பர் 8-ல் அறிவிக்கப்படவிருக்கின்றன. முடிவு அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே, தீபாவளிப் பண்டிகையும் பிஹார் மாநிலத்தின் பிரதான திருவிழாவான சத் பூஜை தினமும் வருகின்றன. இனிப்பு மற்றும் பட்டாசுகளுடன் வெற்றிப் பண்டிகையைக் கொண்டாடப்போவது யார் என்ற கேள்வியுடன் உற்சாகமாகக் களம் இறங்கியிருக்கின்றன வட இந்திய ஊடகங்கள்!

கணிப்புகள் சொல்வது என்ன?

கருத்துக் கணிப்புகளைப் பொறுத்தவரை, துல்லியமான முடிவுகளைத் தெரிவிக்க முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வெள்ளிக்கிழமை வெளியான கருத்துக் கணிப்புகள் நிதிஷ் லாலு கூட்டணிக்கு வாய்ப்பு அதிகம் என்று தெரிவிக்கின்றன. ஆனால், அதற்கு முன்பு வெளியான கருத்துக் கணிப்புகள், பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு அதிகம் என்றும், இரு அணிகளுக்கும் இடையே வெற்றி வாய்ப்புகளின் வித்தியாசம் சில சதவீதம்தான் என்றும் கூறின. அதேசமயம், முதல்வராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்குப் பெரும்பாலானோரின் பதில் நிதிஷ்குமார்தான்!

கலக்கும் வாரிசு!

வேட்பு மனுவில் தனது வயதைக் குறைத்துக் காட்டினார் என்று மட்டும்தான் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் பற்றிப் பலருக்குத் தெரியும். ஆனால், தந்தைக்கு நிகராகத் தேர்தல் களத்தில் கலங்கடிக்கிறார்.

தீர்மானிக்கும் சாதி மதம்!

மகா கூட்டணியைப் பொறுத்தவரை, சாதி அடிப்படையிலான பலத்தைக் கொண்டிருப்பது ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிதான். நிதிஷ்குமார் சார்ந்திருக்கும் சாதியான குர்மி சமூகத்தினர், மொத்த மக்கள்தொகையில் 4%. அதே சமயம், பிஹார் மக்கள் தொகையில் 13% யாதவ சமூகத்தினர். லாலுவின் வாக்குவங்கி அது. இது நிதிஷுக்குக் கைகொடுக்கும் என்று நம்புகிறார். அதேபோல, 15% முஸ்லிம்கள், 5% கோரிகள் ஆதரவும் தனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறார். பாஜகவைப் பொறுத்தவரை 25%-க்கும் மேலாக இருக்கும் பிராமணர்கள், பூமிஹார்கள், ராஜபுத்திரர்கள், காயஸ்த்கள், பனியாக்கள் உள்ளிட்ட சமூகங்களின் வாக்குகளும் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். அதே போல, 10% மஹா தலித்துகள், 6% தலித்துகளின் வாக்குகளும் தங்களுக்குக் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

சொன்ன வார்த்தை!

பாஜகவின் அறிக்கைதான் இந்தத் தேர்தலின் நாயகன். மாணவர்களுக்கு லேப்டாப், இளம் பெண்களுக்கு இரு சக்கர வாகனங்கள், தலித்களுக்கு டிவி, இலவச வேட்டி, சேலைகள் என்று வாக்குறுதி களை அள்ளித்தெளித்திருக்கிறது பாஜக. ஆனால், இதையெல்லாம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அதற்கே இல்லை. ஆகையால், தேர்தல் அறிக்கை (மேனிஃபெஸ்டோ) என்ற பெயரில் அல்லாமல், தொலை நோக்கு ஆவணம் (விஷன் டாக்குமென்ட்) என்ற பெயரில் உஷாராகப் பட்டும் படாமல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது பாஜக. இதைத் தவிர, பசுவதைத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதாகவும் சுஷில் குமார் மோடி பேசிவருகிறார்.

பிரச்சாரம் பலவிதம்

தொழில்நுட்பத்துக்குப் பேர்போன பாஜக, இங்கே ஜி.பி.எஸ். இணைப்பு கொண்ட பிரச்சார வண்டிகளைத் தொகுதிக்கு ஒன்று என இறக்கியிருக்கிறது. அதேபோல, இணையத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட தேர்தல் பணிமனைகளை அமைத்திருக்கிறது. நிதிஷும் சளைக்கவில்லை. ஜி.பி.எஸ். வாகனங்களோடு ஜீப்புகளையும் கிராமங்கள்தோறும் அனுப்புகிறார்; மோடிக்கு பிஹாரிகளின் டிஎன்ஏக்களை அனுப்பிவைக்க மாதிரி சேகரிக்க.

மோடியின் பிரச்சாரக் கூட்டங்களுக்குப் போட்டியாக லாலுவும் நிதிஷ்குமாரும் தினமும் குறைந்தபட்சம் 4 முதல் 5 பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பிரச்சாரம் செய்கிறார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் மோடியை வறுத்தெடுக்கிறார்கள்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, தனக்கே உரிய பாணியில் மோடியைக் காய்ச்சி எடுக்கிறார் ராகுல் காந்தி.

மகா குழப்பங்கள்

கூட்டணியின் அளவைப் போலவே நிதிஷ் கூட்டணியில் பூசல்களும் பிரம்மாண்டமாகத் தெரிகின்றன. ஆரம்பத்திலேயே முலாயம் சிங் தன்னுடைய சமாஜ்வாதிக்குப் போதிய இடங்கள் ஒதுக்கப்படவில்லை என்று கூட்டணியிலிருந்து கழண்டுகொண்டார். பாட்னாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் நிதிஷ்குமார், சோனியா காந்தியுடன் இணைந்து ஒரே மேடையில் தோன்றினாலும், “இனி, காங்கிரஸுடன் இணைந்து பிரச்சாரம் செய்யப்போவதில்லை” என்று கூறியிருக்கிறார் லாலு. பிரச்சார மேடைகளில் நிதிஷ்குமாரைப் பற்றிக் குறிப்பிடும் சோனியா, தன்னைப் பற்றி ஒருவார்த்தைகூடப் பேசவில்லை என்ற கோபம் அவருக்கு. உண்மையில், இந்தக் கூட்டணிக்குள் தனிக் கூட்டணியாக இயங்குகின்றன காங்கிரஸும் நிதிஷின் ஜனதா தளமும். லாலுவும் முதுகில் குத்த சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிக்கிறார் என்றே சொல்கிறார்கள்.

மாஞ்சியின் வருத்தம்

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் குழப்பங்களுக்குப் பஞ்சமில்லை. ராம் விலாஸ் பாஸ்வான், ஜிதன் ராம் மாஞ்சி என்று தலித் தலைவர்களுடன் கூட்டணி வைத்திருக்கும் பாஜக, சாதி அடிப்படையிலான வாக்குகளை அள்ளிவிடலாம் என்று நினைக்கிறது. எனினும், தொகுதிப் பங்கீட்டில் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 40 இடங்களைக் கொடுத்த பாஜக, தங்களுக்கு 20 இடங்களை மட்டுமே கொடுத்திருக்கிறது எனும் ஆதங்கம் ஜிதன் ராம் மாஞ்சிக்கு இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல், கட்சியை இவ்வளவு காலம் தூக்கிப்பிடித்து நிறுத்திய சுஷில்குமார் மோடியைச் செல்லாக்காசு ஆக்கிவிட்டார் மோடி. ஆக, இங்கும் விரிசல்கள் விரிகின்றன.

வார்த்தைப் போர்

லாலு பிரசாத் இருக்கும் கூட்டணி வெற்றி பெற்றால், ‘ஜங்கிள் ராஜ்’(காட்டாட்சி)தான் பிஹாருக்குக் கிடைக்கும் என்று அச்சுறுத்திக்கொண்டிருக்கிறார் அமித் ஷா. லாலு ஒரு ‘சாரா சோர்’(தீவனத் திருடர்) என்று அமித் ஷா சாடியிருந்தார். பதிலுக்கு, ‘அமித்ஷா ஒரு நரமாமிசப் பட்சிணி’ என்று தாக்கியிருக்கிறார் லாலு. அவரது மனைவி ராப்ரி தேவி இன்னும் ஒருபடி மேலே போய், “அமித் ஷா ஒரு ஜல்லாத் (மரண தண்டனையை நிறைவேற்றுபவர்!)” என்று பாய்ந்திருக்கிறார். மோடியும் லாலுவும் வார்த்தைப் போரில் இறங்கியிருக்கிறார்கள். ஆக மொத்தத்தில், அரசியல் மாண்புகள் எல்லாம் சந்தி சிரிக்கின்றன பிஹாரில்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்