வரலாற்றின் இடுக்குகளிலிருந்து காலன்பக்கை மீட்டெடுத்திருக்கும் லுதுவேனியா, இந்தியர்களுக்கும் ஒரு மகத்தான செய்தியை ஞாபகப்படுத்தியிருக்கிறது
இந்த காந்தி ஜெயந்திக்கு அற்புதமான ஓர் அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறது லுதுவேனியா. காந்தி தன் ‘ஆன்ம நண்பர்’ என்று குறிப்பிட்ட ஹெர்மன் காலன்பக் - காந்தி இருவரும் சேர்ந்திருக்கும் சிலையை நிறுவியிருக்கிறது.
லுதுவேனியாவில் பிறந்த யூதரான ஹெர்மன் காலன்பக் பின்னாளில் தொழில் நிமித்தம் தென்னாப்பிரிக்கா வந்து சேர்ந்தவர். தேர்ந்த கட்டிடக் கலைஞரான அவர், 1904-ல், தன்னுடைய 33-வது வயதில் காந்தியைச் சந்தித்தார். ஆன்மிக உரையாடலால் வலுப்பெற்ற நட்பு, கூடிய சீக்கிரம் காந்தியின் எளிமை, சைவம், சமத்துவ அரசியலை ஹெர்மன் காலன்பக்கிடம் கொண்டுசேர்த்தது.
தென்னாப்பிரிக்காவில் சத்யாகிரகிகளுக்கு என காந்தி திட்டமிட்ட குடியிருப்பான ‘டால்ஸ்டாய் பண்ணை’ உருவாக காந்திக்கு 1,000 ஏக்கர் நிலத்தைக் கொடையாக வழங்கியதோடு, குடியிருப்புகள் அமைக்கவும் உதவியவர் காலன்பக். 1913-ல், ‘ஃபீனிக்ஸ் பண்ணை’யில் காந்தி நடத்திய முதல் பிராயசித்த உண்ணாவிரதப் போராட்டம், சத்தியாகிரக இயக்கம் இரண்டிலும் முக்கியப் பங்காற்றியவர். உலகப் போர் சூழலும் இந்தியச் சுதந்திரப் போராட்டச் சூழலும் காந்தியையும் காலன்பக்கையும் வெவ்வேறு இடங்கள் நோக்கித் திருப்பினாலும், இருவரும் இறுதி வரை ஆன்ம நண்பர்களாகவே இருந்தார்கள். 1945-ல் காலன்பக் இறந்தபோது, தன்னுடைய எஸ்டேட்டின் ஒரு பெரும் பகுதியை தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கு எழுதிவைத்துச் சென்றிருந்தார்.
வரலாற்றின் மீது பரவும் ஒளி
இன்றைக்கெல்லாம் வரலாற்றின் இடுக்குகளில் தள்ளப்பட்டு, அடுத்தடுத்த பாறைகளும் இருளும் சேர்த்து மூடிப் புதைத்துவிட்ட ஒரு பெயர் ஹெர்மன் காலன்பக். லுதுவேனிய அரசு இந்தச் சிலையின் மூலம் அதை மீட்டெடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கூடவே, இந்தியர்களுக்கும் ஒரு மகத்தான செய்தியை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்திருக்கிறது.
இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும் காந்தியின் வாழ்விலும் மறைந்திருக்கும் மிக அற்புதமான ஒரு பகுதி ‘எதிர் ஆட்கள் பங்களிப்பு’. மேற்குலகுடன் எவ்வளவோ முரண்பாடுகள் இருந்திருக்கின்றன காந்திக்கு. அதே மேற்குலகைச் சேர்ந்த பலர் காந்திக்கு மிக நெருக்கமான நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.
இங்கிலாந்தில் அவர் பிரதேச தாவர உணவுச் சங்கத்தைத் தொடங்கியபோது, அதன் தலைவர் ‘தி வெஜிடேரியன்’ பத்திரிகை ஆசிரியர் ஜோஸையா ஓல்டிஃபீல்டு; துணைத் தலைவர் எட்வின் அர்னால்டு.
தென்னாப்பிரிக்காவில் ஜோஹன்ஸ்பர்க்கில் காந்தியின் வீட்டிலேயே ஒருவராக வசித்தவர் ஹென்றி போலக். தன்னுடைய காதலியான மிலியைத் திருமணம் செய்து கொள்ளத் தன் சூழல் அனுமதிக்குமா என்ற யோசனையில் போலக் இருந்தபோது, “நீங்கள் என்னைச் சேர்ந்தவர். உங்களைப் பற்றியும் உங்கள் மனைவி, குழந்தை களைப் பற்றியும் உங்களுக்கு இருக்கும் கவலைகள் யாவும் என் கவலைகள்” என்று சொல்லி, அவர்களுடைய திருமணத்துக்குச் சாட்சியாக நின்று நடத்திவைத்தார் காந்தி. இதேபோல, குடும்பமாக நினைத்து காந்தி அரவணைத்துக் கொண்டவர்கள் ஆல்பர்ட் வெஸ்ட், ஹெபர்ட் கிட்சின்.
தென்னாப்பிரிக்காவில் காந்தி நடத்திய பத்திரிகை ‘இந்தியன் ஒபீனியன்’. “இந்தப் பத்திரிகை இல்லாவிட்டால், தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் சத்யாகிரகப் போராட்டத்தின் வெற்றி சாத்தியப்பட்டிருக்காது” என்பார் காந்தி. அந்தப் பத்திரிகையை முன்னின்று நடத்தியவர்களில் முக்கியமானவர்கள் ஹென்றி போலக், ஆல்பர்ட் வெஸ்ட், ஹெபர்ட் கிட்சின்!
எதிரில் இருப்பவர்கள் எதிரிகளா?
தென்னாப்பிரிக்காவில் காந்திக்கு நேரிட்ட அவமானங் களையும் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையும் விவரிக்கும்போது, “ஒவ்வொரு வெள்ளை முகத்தையும் தம் ஆயுள் முழுவதும் காந்தி பகைத்திருந்தாலும் அதில் நியாயம் இருக்கும்” என்றார் பேராசிரியர் எட்வர்ட் தாம்ஸன். ஆனால், முரண்பாடுகளை மனிதர்கள் மீது சுமத்தி உருவாக்கப்படும் இன அடிப்படையிலான விருப்பு வெறுப்புக்கு காந்தி இடம் அளித்ததே இல்லை. அதனால்தான் தன்னுடைய எல்லை கடந்த நட்புலகைத் தன்னுடைய போராட்டங்களிலும் ஈர்க்க முடிந்தது.
தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் உரிமைக்காக காந்தி நடத்திய 21 ஆண்டு நீண்ட போராட்டங்களில், அவருடைய எதிர்ப் பக்கத்தில் இருந்த முக்கியமான ஆட்சியாளர் ஜான் கிறிஸ்டியன் ஸ்மட்ஸ். பின்னாளில், தென்னாப்பிரிக்க ஒன்றியத்தின் பிரதமரானவர். காந்தியின் போராட்டங்களை முடக்க என்னென்ன வழிகள் உண்டோ அத்தனையும் கையாண்டு பார்த்தவர். கடைசியில், இறங்கிவந்தவர். 1914-ல் இந்தியர்களின் உரிமைகளை ஓரளவுக்கேனும் ஏற்கும் சட்டத்தைக் கொண்டுவந்த பின் காந்தி புறப்பட்டார்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து புறப்படும்போது ஸ்மட்ஸுக்குத் தன் நண்பர்கள் மூலம் ஒரு பரிசை அனுப்பிவைத்தார் காந்தி. அது சிறையில் அடைக்கப்பட்ட நாட்களில், அவர் கைப்பட உருவாக்கிய ஒரு ஜோடி காலணி. 1939-ல் காந்தியின் 70-வது பிறந்த நாளின்போது, தன்னுடைய நட்பின் சமிக்ஞையாக ஒரு குறிப்போடு, அதைத் திருப்பி அனுப்பினார் ஸ்மட்ஸ்: “பல்லாண்டுகள் கோடைக்காலத்தின்போது இந்தக் காலணிகளை நான் அணிந்திருக்கிறேன். எனினும், ஒரு மாமனிதரின் காலணிகளை அணிந்து நிற்க எனக்குத் தகுதியில்லை என்ற எண்ணமே என்னிடம் நிலைத்திருந்தது.”
அந்த காந்தி ஜெயந்தியை ஒட்டி காந்தியர்கள் வெளியிட்ட மலரில், அவர்கள் வேண்டுகோளை ஏற்று ஸ்மட்ஸ் ஒரு கட்டுரை எழுதினார். “மகாத்மாவைப் போன்ற மனிதர்கள்தாம் அற்பமும் பயனற்றவையுமான விஷயங்களி லிருந்து நம் மூளையைத் திசை திருப்புகிறார்கள். நல்ல காரியங்களில் ஈடுபடுவதில் சலிப்பு ஏற்படாமல் இருக்க நமக்கு ஊக்கம் அளிக்கிறார்கள்… தென்னாப்பிரிக்க ஒன்றியம் தோன்றிய ஆரம்பக் காலத்திலேயே எங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் கதையை காந்தியே எழுதியிருக்கிறார். அது எல்லோருக்கும் தெரிந்ததே. அந்த நாளிலேயே நான் பெருமதிப்பு வைத்திருந்த ஒரு மனிதரின் எதிரியாயிருக்க நேர்ந்தது என் தலைவிதி.
விஷயத்துக்குப் பின்னால் இருக்கும் மனித இயல்பே முக்கியம் என்பதை காந்தி ஒருபோதும் மறக்கவில்லை. பகைமைக்கு எந்த நிலையிலும் அவர் ஆட்படவில்லை. மிகவும் சோதனையான காலங்களில்கூட அவர் சாந்த குணத்தைப் பாதுகாத்துவந்தார்… ஒரு விஷயத்தை மறைக்காமல் நான் ஒப்புக்கொள்கிறேன், காந்தியின் செயல்பாடுகள் அந்தக் காலகட்டத்தில் எனக்குப் பெரும் சோதனையாக இருந்தன.”
இங்கிலாந்து கடற்படையில் அட்மிரலாக இருந்த எட்மண்ட் ஸ்லேடின் மகள் மெடிலின் ஸ்லேட். காந்தியால் ஈர்க்கப்பட்டு, தன்னுடைய 33-வது வயதில் இங்கு வந்தார். காந்தி அழைத்த பெயரால் மீரா பென் ஆனார். அடுத்த 34 வருஷங்களை இங்கு கழித்தார். இந்தியச் சுதந்திரத்துக்காகத் தன் சொந்த நாட்டை எதிர்த்துப் போராடி, பல மாதங்கள் சிறையில் இருந்தார். வட்ட மேஜை மாநாடு, சிம்லா மாநாடு, இந்தியப் பிரிவினை என்று பல முக்கிய நிகழ்வுகளில் நேரடிச் சாட்சியம் மீரா பென்.
இங்கிலாந்திலிருந்து ஒரு கிறிஸ்தவ மத போதகராக இங்கு வந்தவர் சி.எஃப்.ஆண்ட்ரூ. தென்னாப்பிரிக்காவில் காந்தி நடத்திய போராட்டத்தை கோகலே சொன்னபோது, அதிலுள்ள நியாயத்தை உணர்ந்து காந்தியோடு கை கோத்தவர். நேட்டாலில் காந்தி ஆசிரமம் அமைக்கவும் ‘இந்தியன் ஒபீனியன்’ பத்திரிகையை வெளிக்கொணரவும் உதவியவர். ஆங்கிலேயர்கள் மத்தியில் இந்தியர்களின் நியாயத்தையும் காந்தியின் மகத்துவத்தையும் தொடர்ந்து பேசியவர். தொடர்ந்து இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்கும் பங்களித்தவர். வைக்கம் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்றவர். வட்ட மேஜை மாநாட்டுப் பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் முக்கியப் பங்கு வகித்தவர். காந்தியை மோகன் என்று சொல்லி அழைத்த மிகச் சிலரில் ஒருவர் சி.எஃப்.ஆண்ட்ரூ.
இன்னும் வெரியர் எல்வின், ஹோரஸ் அலெக்ஸாண்டர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். எது இவர்களையெல்லாம் காந்தியுடன் நெருக்கமாக்கியது? தம் சொந்த நாட்டுடனான யுத்தத்தில் இந்தியர்களின் நியாயத்தைப் பேசச் சொன்னது? பூரணமான சத்தியத்தின் ஒளியும் பரிசுத்தமான அன்பும்!
ஆன்மாவின் உரையாடல்
காந்தியைப் பொறுத்த அளவில் எப்போதுமே எதிர்த் தரப்பு என்பது மாற்றுத் தரப்பே தவிர, எதிரிகள் தரப்பு அல்ல. வெறுக்கப்பட வேண்டியவர்கள் என்பவர்கள் எவருமே அல்லர். நீண்ட உரையாடலும் பரஸ்பரப் புரிதல்களும் நல்லெண்ணப் பரிமாறல்களுமே நீடித்த மாற்றத்துக்கான வழி. இரண்டாம் உலகப் போர் சூழலில், இங்கிலாந்துக்கு எதிர் வியூகம் அமைத்து சுதந்திரப் போராட்ட வெற்றியை விரைவுபடுத்தலாம் என்று ஏனைய தலைவர்கள் அத்தனை பேரும் சொல்லும்போதும்கூட காந்தி கூறுகிறார்: “வெற்றி அல்ல; அதைப் பெறும் வழிமுறை அதைவிட முக்கியம். அவர்கள் முதுகில் குத்தி, கிடைக்கும் சுதந்திரத்தை நான் விரும்பவில்லை. நியாயமான வழியில் சுதந்திரம் நம்மை வந்தடையும்.”
உலகப் போர் சூழலில், 2.7.1940 அன்று ‘ஒவ்வொரு பிரிட்டானியருக்கும்’ என்ற தலைப்பில், போருக்கு எதிராக அனைத்து ஆங்கிலேயர்களுக்குமான ஒரு கடிதத்தை எழுதினார் காந்தி. “நாஸிஸத்தை அழித்துவிட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால், நீங்களே அதைப் பின்பற்றும்போது அதை ஒருபோதும் அழித்துவிட முடியாது” என்று குறிப்பிடும் அந்தக் கடிதத்தில், இறுதிப் பகுதியில் காந்தி சொல்கிறார்: “ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அஹிம்சை வழியைப் பின்பற்றினேன். இப்போதும் அதையே பின்பற்றுகிறேன். என் நாட்டின் எதிர்காலம் எப்படியிருந்தாலும் உங்களிடம் நான் கொண்டுள்ள அன்பு என்றும் குறையாமல் நீடிக்கும். என்னுடைய அஹிம்சை உலகளாவிய அன்புப் பெருக்கினால், மக்கள் அனைவரையும் அரவணைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அதில் நீங்கள் ஒரு சிறு பகுதியல்ல. அந்த அன்பே நான் இந்த வேண்டுகோள் விடுக்க என்னைத் தூண்டிற்று.”
அந்நிய ஆதிக்கத்துக்கு எதிரான போரிலேயே இந்தியா தன்னுடைய வெற்றியை அன்பின் வழியில், சமூகங்களிடையேயான இணக்கத்தினூடே பெற வேண்டும் என்று நினைத்தவர் காந்தி. இந்தியா இன்றைக்கு எதிர்கொள்ளும் போர்களில் பலவும் அதன் உள்நாட்டுச் சமூகங்களுக்கு இடையேயானது. அன்பு எவ்வளவோ மிச்சம் இருக்கிறது. ஏன் வெறுப்பு அரசியலைக் கையில் ஏந்தி நிற்கிறோம்?
சமஸ்,
தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago