தென்னிந்தியாவின் முதல் மக்கள் நாயகன் என்ற பெருமைக்குரியவர் ‘எம்.கே.டி’ என இசை ரசிகர்களால் அழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர். சினிமா என்கிற ஊடகத்தின் வெளிச்சத்தில், தமிழில் உருவான முதல் பிம்பம் அவர். பள்ளிப்பிராயக் காலத்தில் எஸ்.ஜி.கிட்டப்பாவின் நாடகப் பாடல்கள் அவரை வெகுவாகக் கவர்ந்து ஈர்த்ததோடு, ஓர் உந்துசக்தியாகப் பாடத் தூண்ட, தான் இயற்கையாகப் பெற்றிருந்த மதுர கானக் குரலில் பாடத் தொடங்கிவிட்டார்.
‘திருச்சி ரசிக ரஞ்சனி சபா' அரங்கேற்றிய ‘ஹரிச்சந்திரா' நாடகத்தில், லோகிதாசன் கதாபாத்திரத்தை ஏற்றுத் தனது நாடக உலக அரங்கேற்றத்தைச் செய்தபோது, அவருடைய வயது 10. தீவிரமான ஆறு வருட கால கர்னாடக இசைப் பயிற்சிக்குப் பிறகு, எம்.கே.டி.யின் முதல் அரங்கேற்றம் திருச்சி கமலா தெருவிலிருந்த பெரிய காளியம்மன் கோயிலில் நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடந்தேறிய இக்கச்சேரியின் இறுதியில், அவருக்குப் ‘பாகவதர்' என்கிற பட்டத்தை வழங்குவதாக பிரபல கஞ்சிரா வித்வான் புதுக்கோட்டை தெட்சிணாமூர்த்திப் பிள்ளை அறிவித்தார். அதுவரையில் ‘திருச்சி தியாகராஜன்’ என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்த அவர், அன்று முதல் ‘தியாகராஜ பாகவதர்’ என்று அழைக்கப்படலானார்.
மேடையிலிருந்து வெள்ளித் திரைக்கு...
1926-ல் ‘பவளக்கொடி' என்கிற நாடகத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் எம்.கே.டி. எந்தவொரு குறிப்பிட்ட நாடக கம்பெனியோடும் தன்னை இணைத்துக்கொள்ளாததால், எம்.கே.டி.யின் நாடகங்கள் அனைத்தும் ‘ஸ்பெஷல் நாடகங்கள்' என்றழைக்கப்பட்டுத் தனியாக அரங்கேற்றப்பட்டுவந்தன. அவருடைய நாடகங்களுக்கு மக்களிடையே அதிக அளவில் வரவேற்பு இருந்ததால், நாடக கம்பெனிகள் அவரைப் போட்டி போட்டுக்கொண்டு தங்களது பேனரில் நடிக்கவைத்தன. அவருடைய ஒருநாள் ஊதியம் ஐம்பது ரூபாயாக உயர்ந்தது. அந்தக் காலத்தில் எந்தவொரு நாடக நடிகரும் வாங்காத ஊதியம் அது.
எம்.கே.டி. முதல் முறையாக நாடகத்தில் கதாநாயகனாக அறிமுகமான ‘பவளக்கொடி' 1934-ல் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இப்படத்தைத் தொடர்ந்து,அவர் நடித்து வெளிவந்த ‘நவீன சாரங்கதாரா’, ‘சத்தியசீலன்’, ‘சிந்தாமணி’, ‘அம்பிகாபதி’, ‘திருநீலகண்டர்’, ‘அசோக்குமார்’, ‘சிவகவி’, ‘ஹரிதாஸ்’ ஆகிய ஒன்பது திரைப்படங்கள் பெற்றுத் தந்த பெருவெற்றியைத் தொடர்ந்து, தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம்வந்தார். இத்திரைப்படங்களின் வெற்றிக்கு முத்தாய்ப்பாக அவர் பாடிய பாடல்கள் திகழ்ந்தன.
ஒரே ராகம்... வெவ்வேறு பாவம்...
எம்.கே.டி.யினுடைய முதல் இசைத்தட்டின் பெயர் ‘சிவபெருமான் கிருபை'. ஒரே ராகத்தைப் பல்வேறு வகையான உணர்ச்சிப் பாவங்களோடு பாடுகின்ற தனித்தன்மையை அவர் பெற்றிருந்ததற்குக் குறிப்பிட்ட சில பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம். சற்றே உற்சாகமாக, சந்தோஷமாக சிந்துபைரவியில் ‘வதனமே சந்திர பிம்பமோ' எனப் பாடிவிட்டு, அதே ராகத்தில் சற்றே துக்கமாக ‘பூமியில் மானிட, வன்பசி பிணி' எனப் பாடியுள்ளார். இதே போன்று செஞ்சுருட்டியில் ‘வள்ளலைப் பாடும்' என ஆன்மீகத் தொனியில் பாடிவிட்டு, பிறகு வேறொரு தொனியில் ‘ராதை உனக்குக் கோபம்’ எனக் கவித்துவமாக, ரசனையாகப் பாடியுள்ளார். எம்.கே.டி.யினுடைய ஆன்மீகப் பாடல்களைக் காட்டிலும் அவரது டூயட் பாடல்களே அதிக அளவில் புகழடைந்தன. ‘மாய பிரபஞ்சத்தில்’, ‘சந்திர சூரியர்’, ‘மானே நான்’, ‘உன் அழகை’, ‘வசந்த ருது’ போன்ற டூயட் பாடல்கள் அக்கால ரசிகர்களால் அதிக அளவில் முணுமுணுக்கப்பட்டன.
தமிழ்த் திரையுலகில் பாபநாசம் சிவன் - எம்.கே.டி - ஜி.ராமநாதன் உள்ளிட்ட மூவர் கூட்டணி ஏற்படுத்திய திரைத் துறை வரலாறு முக்கியத்துவமானது. ‘சிதம்பர நாதா’, ‘தீனகருணாகரனே’, ‘கிருஷ்ணா முகுந்தா’, ‘அம்பா மனம் கனிந்து’, ‘மறைவாய் புதைத்து’, ‘உனைக் கண்டு’, ‘சொப்பன வாழ்வில்’, ‘அற்புத லீலைகளை’, ‘ஞானக்கண் ஒன்று’, ‘அன்னையும் தந்தையும்’, ‘மனமே நீ’ போன்ற பாடல்கள் இம்மூவர் கூட்டணியில் உதித்த காலத்தால் அழிக்க முடியாத தெவிட்டாத கானங்கள்.
நிறத்துக்கு ஏற்றாற்போலப் பளபளக்கும் பட்டாடை, தோள்களில் சுருள்சுருளாகப் புரளும் நீண்ட முடி, இரு காதுகளிலும் வைரக் கடுக்கன்கள், கூடவே அவற்றை இடுக்கிக்கொண்டு சிறு வளையங்கள் என ஒருவித கம்பீரத் தோற்றத்தோடு திரையுலகை வலம்வந்த எம்.கே.டி.யினுடைய புகழுக்குக் களங்கம் ஏற்படும்வகையில், லெட்சுமிகாந்தன் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு அவர் கைதானார். சிறையிலிருந்த காலகட்டத்தில் வெளியான அவரது படமான ‘ஹரிதாஸ்' சென்னை பிராட்வேயில் மூன்று தீபாவளிகளைக் கடந்து ஓடி, திரைத் துறையில் புதியதொரு வரலாற்றை ஏற்படுத்தியது. 30 மாதங்கள் சிறைவாசத்துக்குப் பிறகு, அவர் அவ்வழக்கிலிருந்து விடுதலைசெய்யப்பட்டார்.
புதுமைப்பித்தனின் வசனம்
பிந்தைய கால மாற்றத்தில் சில திரைப்படங்களைச் சொந்தமாகத் தயாரித்து நடிப்பது என்கிற முடிவுக்கு வந்தவர், ‘ராஜமுக்தி’, ‘புதுவாழ்வு' ஆகிய திரைப்படங்களைத் தயாரித்து நடித்தார். இதில் 'ராஜமுக்தி' படத்துக்கு வசனம் எழுதியவர் புதுமைப்பித்தன். அவரது மறைவுக்குப் பிறகு அப்படத்தின் எஞ்சிய பகுதிகளுக்கு வசனம் எழுதியவர் டி.என்.ராஜப்பா. அப்படத்தின் பாடல்கள் பிரபலமான அளவுக்கு அப்படம் வெற்றிபெறவில்லை. இவ்விரு படங்களைத் தொடர்ந்து ‘அமரகவி’, ‘சியாமளா’, ‘சிவகாமி’ ஆகிய திரைப்படங்களிலும் நடித்தார். இந்தப் படங்கள் அனைத்தும் தோல்வியைத் தழுவ, அதன்மூலம் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானார்.
1954-க்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை அறவே நிறுத்திக்கொண்டு, தொடர்ந்து கச்சேரிகளில் மட்டுமே பாடிவந்தார் எம்.கே.டி. அவர் காலமாவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் கச்சேரியில் பாடினார். அது தன்னுடைய இறுதிக் கச்சேரி என்று அவருக்கு முன்னமே தெரிந்ததோ என்னவோ, அன்றைய கச்சேரி நீண்ட நேரம் நீடித்தது. அவருடைய இசைப் பயணத்தில் அப்படிப்பட்டதொரு கச்சேரியை அந்நாள் வரையில் அவர் செய்திருக்கவில்லை. அக்டோபர் 22, 1959-ல் சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், ஒன்பது நாட்கள் கழித்து, நவம்பர் 1, 1959-ல் காலமானார். இயற்கை எய்துவதற்குச் சில நாட்களுக்கு முன்பு அவர் தன்னைப் பற்றி செய்துகொண்ட சுயவிமர்சனம் இது: ‘என்னைப் போல் வாழ்ந்தவனும் இல்லை; தாழ்ந்தவனும் இல்லை.'
- வேலாயுத முத்துக்குமார்,
தொடர்புக்கு: narpavi2004@yahoo.com
நவம்பர் 1: எம்.கே.டி நினைவு தினம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago