பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் களேபரங்களையும் தாண்டி கவனம் ஈர்க்கிறது மத்தியப் பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தல். காரணம், மத்தியப் பிரதேச வரலாற்றில் 28 தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடப்பது இதுவே முதல் முறை. அதனால்தான் இது ‘மினி சட்டப்பேரவைத் தேர்தல்’ என்றும் அழைக்கப்படுகிறது.
பாஜகவைப் பொறுத்தவரை ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு இந்தத் தேர்தல். காங்கிரஸைப் பொறுத்தவரை மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு இது இறுதி வாய்ப்பு. அக்கட்சியின் கவுரவப் பிரச்சினையும்கூட. ஏனெனில், இவற்றில் 27 தொகுதிகள் காங்கிரஸ் கைவசம் இருந்தவை.
முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான், முன்னாள் முதல்வர் கமல் நாத் ஆகியோரின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தலாகவும், பாஜகவில் ஜோதிராதித்ய சிந்தியாவின் இடத்தை நிர்ணயிக்கும் தேர்தலாகவும் இது இருக்கும் என்றும் கருதப்படுகிறது. இவற்றையெல்லாம் தாண்டி சில முக்கியக் கேள்விகளையும் இந்தத் தேர்தல் எழுப்புகிறது.
ஏன் இந்தத் தேர்தல்?
2018 சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆட்சியமைத்தபோது தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று காத்திருந்த ஜோதிராதித்ய சிந்தியா, அது நடக்காததால் விரக்தியில் இருந்தார். ஒருகட்டத்தில் அவர் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்ததால், கமல் நாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது. சிந்தியாவின் ஆதரவாளர்களான 25 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவில் சேர்ந்ததை அடுத்து, அந்த இடங்கள் காலியாகின.
மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் காலமானதைத் தொடர்ந்து அந்தத் தொகுதிகளும் காலியாகின. ஆக மொத்தம் 28 தொகுதிகளை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கும், பெருந்தொற்றுக்கு நடுவே வாக்குச் சாவடியில் வரிசையில் நின்று வாக்களிக்கும் கடமை வாக்காளர்களுக்கும் வந்து சேர்ந்திருக்கின்றன. நவம்பர் 3-ல் வாக்குப்பதிவு நடக்கிறது. நவம்பர் 10-ல் முடிவுகள் வெளியாகிவிடும்.
மொத்தம் 230 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில், ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள 116 இடங்கள் தேவை. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பெற வேண்டுமானால், 28 தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றாக வேண்டும். பாஜகவுக்கு 107 உறுப்பினர்கள் உள்ளனர். இந்தத் தேர்தலில் 9 இடங்களைக் கைப்பற்றிவிட்டால் பிற கட்சிகளின் தயவு அக்கட்சிக்குத் தேவையில்லை.
அதிருப்தியில் வாக்காளர்கள்
இந்த இடைத் தேர்தல் குறித்து மத்தியப் பிரதேச வாக்காளர்கள் மத்தியில் ஒருவகையான அதிருப்தி நிலவுவதும் கவனிக்கத்தக்கது. குறிப்பாக, காங்கிரஸிலிருந்து வெளியேறி பாஜகவில் சேர்ந்த எம்எல்ஏக்களால்தான் இந்தத் தேர்தல் நடக்கிறது என்று அவர்கள் எரிச்சலில் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அணி மாறி வந்தவர்களை, அவர்கள் முன்பு போட்டியிட்ட அதே தொகுதிகளிலேயே களமிறக்குகிறது பாஜக. இரண்டே ஆண்டுகளில் அதே வேட்பாளர்கள் அதே தொகுதிகளில் மீண்டும் இன்னொரு கட்சியில் போட்டியிடுவதைப் பெரும்பாலான வாக்காளர்கள் ரசிக்கவில்லை.
தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் சூழலில்கூட தமோ தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் சிங் லோதி, பாஜகவில் சேர்ந்திருக்கிறார். இதையடுத்து அந்தத் தொகுதியும் காலியாகியிருக்கிறது. அதற்கும் விரைவில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு வந்திருக்கிறது. “காங்கிரஸில் இருக்கும்போது மக்கள் பணி செய்ய முடியவில்லை. பாஜகவில்தான் அது சாத்தியம்” என்று விளக்கம் கொடுக்கும் ராகுல் சிங் லோதி, இனி நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவார் என்று தெரிகிறது.
அவர் மட்டுமல்ல, “பாஜகவில் திறனின் அடிப்படையில் நபருக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன” என்றே கட்சி மாறிய பலரும் சொல்லிவருகிறார்கள். ஆனால், ‘நாங்கள் உங்களுக்குத்தானே வாக்களித்தோம்? ஐந்தாண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றாமல் இரண்டே ஆண்டுகளில் எதற்கு இன்னொரு கட்சியில் சேர்ந்து மீண்டும் வாக்குக் கேட்டு வருகிறீர்கள்?’ எனும் கேள்வி வாக்காளர்கள் மனதில் எழுந்திருப்பதை யாரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
பரஸ்பரக் குற்றச்சாட்டுகள்
எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஆளுங்கட்சிக்குத் தாவுவது இந்திய அரசியலில் புதிய விஷயமில்லைதான். ஆனால், ஆளுங்கட்சி எம்எல்ஏக்களிடம் பேரம் பேசி வளைத்து, ஆட்சியையே கவிழ்த்து அரியணை ஏறும் அரசியல் உத்தி பெரிய அளவில் வளர்ந்திருப்பதுதான் கவலைக்குரிய விஷயம். கர்நாடகம் சமீபத்திய உதாரணம். இது ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கட்சியில் இருக்கும் தலைவர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில், நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் அவர்களிடம் நடந்து கொள்வதில்லை எனும் குற்றச்சாட்டு எப்போதும் காங்கிரஸ் தலைமை மீது வைக்கப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தில் இந்தக் குற்றச்சாட்டை கமல் நாத் எதிர்கொள்கிறார். எனினும், எதிர்க்கட்சியினரிடம் பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்து பேரம் பேசித் தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை பாஜக தொடர்ந்து மேற்கொள்கிறது. அது தொடர்பான விமர்சனங்கள் குறைவு என்பதையும் மறுக்க முடியாது.
குறிப்பாக, சமீபத்தில் கட்சி மாறியிருக்கும் ராகுல் சிங் லோதி சில நாட்களுக்கு முன்னர் அளித்த பேட்டியில், “என்னிடம் பாஜக தரப்பு பேரம் பேசுகிறது. ஆனால், எனக்குப் பல பொறுப்புகள் தந்த காங்கிரஸிலிருந்து வெளியேறி ‘துரோகி’ பட்டத்தைப் பெற நான் விரும்பவில்லை” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இதைச் சுட்டிக்காட்டும் காங்கிரஸ், பணம், பதவி ஆசை காட்டியே எதிர்க்கட்சியினரைப் பாஜக வளைக்கிறது என்று குற்றம் சாட்டுகிறது. பாஜகவுக்குத் தாவிய காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 6 அமைச்சர்களும் அடக்கம். ஆக, அமைச்சர் பதவியையும் தாண்டிய அனுகூலங்கள் வழங்கப்படும் எனும் ஆசை வார்த்தையின் பேரில்தான் இத்தனை பேர் அணி மாறியிருக்கிறார்கள் என்பதையும் ஊகிக்க முடிகிறது.
இன்னொரு பக்கம் சுயேச்சை உறுப்பினர்களுக்கும் பாஜக வலை வீசுகிறது. பகவான்பூர் தொகுதி சுயேச்சை எம்எல்ஏவான கேதார் சிங் டாவர் சமீபத்திய உதாரணம். அவர் பாஜகவுக்கு ஆதரவு மட்டுமே தெரிவித்திருக்கிறார்; கட்சியில் சேரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. எப்படிப் பார்த்தாலும், செல்வாக்கு மிக்க பழங்குடியினத் தலைவரான கேதார் சிங்கைத் தன் பக்கம் ஈர்த்ததன் மூலம் பழங்குடியின மக்களின் வாக்குகளை பாஜக குறிவைத்திருக்கிறது என்பது மட்டும் தெளிவு.
“மக்களின் ஆதரவைப் பெற்ற தலைவர்களை வரவேற்க நாங்கள் தயங்குவதில்லை” என்று பாஜக தலைவர்கள் விளக்கமளிக்கிறார்கள். ஆனால், ஜனநாயகத்தில் அது சரியா என்பதுதான் சாமானியர்கள் மனதில் எழுந்திருக்கும் கேள்வி. உண்மையில், பல மாநிலங்களில் புதிதாகத் தலைவர்களை உருவாக்குவதைக் காட்டிலும், பிற கட்சிகளில் செல்வாக்குடன் இருக்கும் தலைவர்களுக்கு வலைவீசும் உத்தியைப் பாஜக வெற்றிகரமாகப் பயன்படுத்திவருகிறது.
மத்தியப் பிரதேச இடைத்தேர்தலில் 9 இடங்களில் வென்றாலே ஆட்சியைத் தொடர முடியும் எனும் நிலையில் இருக்கும் பாஜக ஏன் மீண்டும் மீண்டும் எதிர் முகாமிலிருந்து தலைவர்களை இழுத்து வருகிறது?
“தேர்தலுக்குப் பின்னர் ஏதேனும் இழுபறி ஏற்பட்டால் அதைச் சரிக்கட்ட பாஜக இப்போதே தயாராக இருக்கிறது; அதனால்தான் இந்த அணுகுமுறையை மேற்கொள்கிறது” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அத்துடன் எதிர் முகாமிலிருந்து ஆட்களை ஈர்ப்பதன் மூலம் மக்கள் மத்தியில் தனது செல்வாக்கைக் காட்டிக்கொள்ளவும் பாஜக முயல்கிறது என்றும் கருதப்படுகிறது.
காங்கிரஸின் பலவீனம்
இதையெல்லாம் கையறு நிலையில் இருந்து கவனித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். "அரசியல் சந்தையில் பேரம் பேசி, யார் கிடைக்கிறாரோ அவரைத் தன் பக்கம் இழுக்கிறது பாஜக” என்று குற்றம் சாட்டியிருக்கும் கமல் நாத், இதுதொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்திருக்கிறார்.
அதேசமயம், பாஜகவின் பேர அரசியலை மட்டும் குறை சொல்லி மக்களிடம் அனுதாபம் தேடுவது காங்கிரஸுக்குப் பலன் தராது. இதோ, மேகாலயாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலர் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் கட்சியில் (என்பிபி) சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் உட்கட்சிப் பூசலைச் சமாளிப்பது, இளம் தலைவர்களுக்கு உரிய பொறுப்பு வழங்குவது, மூத்த தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் தருவது எனும் சமன்பாட்டை காங்கிரஸ் கைக்கொள்வது அவசியம்.
அரசியல் தந்திரங்களைப் பொறுத்தவரை பாஜக எதையும் புதிதாகச் செய்துவிடவில்லைதான். ஆனால், ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளின் உச்சத்தைத் தொடும் அளவுக்கு அக்கட்சி காய் நகர்த்திவருவது விமர்சனத்துக்குரிய விஷயம். மக்கள் பிரதிநிதிகளை இப்படிக் கூண்டோடு அணி மாற்றும் போக்கு தொடர்வது, அரசியல் ஸ்திரத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் என்பதுடன், மக்கள் மத்தியில் ஜனநாயகம் குறித்த மதிப்பீட்டை வலுவிழக்கவும் செய்யும்.
மத்தியப் பிரதேச இடைத்தேர்தல் உணர்த்தும் அரசியல் பாடம் இதுதான்!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago