மனிதர்கள் | புலிக்குத் தமிழ் தெரியும்!

By சமஸ்

மீண்டும் ஒரு பயணம். வயலில், மலையில், காட்டில், கடலில்… நடைபாதையில், சாலையோரங்களில், ரயிலடிகளில்… பள்ளிக்கூடங்களில், மருத்துவமனைகளில், தொழிற்சாலைகளில்…

‘மனிதர்கள்!’ சகஜீவிகளை நோக்கிச் செல்லும் பயணம் இது. நம் பக்கத்து வீட்டில், எதிர்வீட்டில் வாழக் கூடியவர்கள், பயணத்தில் கடக்கும்போது நம் கண்ணில் படக்கூடியவர்கள், சட்டென ஒருகணம் வந்து யார் என்று யோசிக்கும் முன் மறைந்துவிடக் கூடியவர்கள், நாம் நினைத்தால் தோழமையுடன் தோள் மீது கை போட்டுக்கொள்ளக் கூடியவர்கள், நம்மைப் போலவே பிழைப்புக்காக ஓடிக்கொண்டிருப்பவர்கள், ஆனால், ஏதோ ஒருவகையில், நம் ஒவ்வொருவரின் உலகத்துடனும் பிணைக்கப் பட்டவர்கள், ஏதோ ஒரு வகையில், நம் வாழ்க்கைக்கு முக்கியமான பங்களிப்பைச் செய்பவர்கள், நமக்கு மிக நெருக்கமானவர்களை நெருங்கிச் செல்லும் பயணம் இது.

ஒரு மடக்கு தண்ணீர் நம் வாயைத் தேடி வர எத்தனை முகமற்ற மனிதர்களின் உழைப்பைக் கடக்க வேண்டியிருக்கிறது என்பதை நாம் யோசிப்பது இல்லை. சமூக வாழ்க்கையின் அடிப்படைக் கல்வி சக உயிரைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதில் இருந்தே தொடங்குகிறது என்றால், இந்தப் பயணம் ஒருவகையில் அப்படிப்பட்ட முயற்சி!

தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய உயிரியல் பூங்கா சுமார் 1490 ஏக்கருக்கு விரிந்து கிடக்கிறது; லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள், செடி கொடிகள் காற்றுடன் விளையாடுகின்றன. வண்டலூரைப் பூங்காவாகப் பார்ப்பவர்களுக்கு, அது ஒரு பிரமாண்டமான உயிரியல் பூங்கா. காடாகப் பார்ப்பவர்களுக்கு அது ஒரு சின்ன காடு. இந்தியாவிலேயே அதிகமான விலங்குகள், இனங்களைக் கொண்ட பூங்காவும் இது. கிட்டத்தட்ட 166 இனங்களைச் சேர்ந்த 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் இங்கிருக்கின்றன. நான் ஒரு மனிதரைப் பார்க்கச் சென்றிருந்தேன். செல்லையா!

கிழக்குத் திசை நோக்கி கை காட்டுகிறார்கள். “நல்ல காடு இது. ஏறுகுத்தான மலை. நெடுக குன்றுங்க. சுத்திலும் நிறைய ஏரி, குளங்கள் இருந்துச்சு. இப்போ எல்லாம் நாசமாப்போச்சு. நல்ல வேளை, அரசாங்கம் இங்கெ பூங்காவைக் கொண்டாந்துச்சு. இல்லென்னா இதையும் கூறுபோட்டு வித்திருப்பானுவ. இப்போ நீங்க பார்க்கப்போறீங்களே, அதை அப்போலாம் உள்ளூர்க்காரங்க சின்னக்காமுகடுன்னு சொல்வோம். இப்போ இந்தப் பேரெல்லாம் யாருக்கும் தெரியாது. எங்க பூங்கா ஆளுங்களே புலிக்குன்றுன்னுதான் சொல்வாங்க!” - செல்லையாவை அறிமுகப்படுத்த வந்த பெரியவர் கதை சொல்லிக்கொண்டே வந்தார்.

“செல்லையா இங்கெ வந்து ஒரு இருவது வருஷம் இருக்கும். கடுமையான உழைப்பாளி. நம்மகிட்ட பேசும்போது கொஞ்சம் முசுடு மாரித் தெரியும். ஆனா, புலிங்ககிட்ட புள்ள மாரி கிடக்கும். கிட்டத்தட்ட 22 பிரசவம் தனி மனுஷனா பார்த்திருக்கு. எவ்ளோ பெரிய வேலை! இங்கெ பொறந்த புலிங்க எல்லாமே செல்லையா தூக்கி வளர்ந்த புள்ளைங்க. செல்லையா பேச்சுக்கு அடங்காத புலின்னு ஒண்ணு இங்கெ இல்ல!”

நாங்கள் புலிக்குன்றை நெருங்கிக்கொண்டிருப்பதைக் காற்றில் கலந்துவரும் வீச்சம் சொல்கிறது. புலிக் குன்றின் வெளிப்பகுதி வேலி அமைக்கப்பட்ட திறந்தவெளி. புலிகளுக்கு அவற்றுக்குப் பிடித்த வனச் சூழலைக் கொடுப்பதற்கேற்ப இதை அமைத்திருக்கிறார்கள். உள்பகுதியில் உள்ள கட்டிடத்தில் அவற்றுக்கான அறைகள் கட்டப்பட்டிருக்கின்றன. இரும்புக் கதவுகள் திறக்கப்படுகின்றன. செல்லையா கட்டிடத்துக்குள் இருப்பதாகச் சொல்கிறார், நுழைவாயில் கதவைத் திறந்துவிடும் ஜீவானந்தம். பெரியவர் விடைபெற்றுக்கொள்கிறார். இரண்டடிகள் எடுத்து வைத்திருக்க மாட்டோம். அந்தக் கட்டிடத்தை இடித்துவிடும் அளவுக்கு ஒரு பெருஞ்சத்தம், உறுமல். ஜீவானந்தம் சிரிக்கிறார். “பீஷ்மரு, கடுப்பா இருக்கான். செல்லையா அண்ணன்கூடதான் கத்திட்டு இருக்கான்!”

நாசியை இறுக அடைத்துக்கொள்ளும் அளவுக்கு நெடி சங்கடப்படுத்துகிறது. மேலும் முன்னேறுகிறோம். இப்போது சன்னமான, ஆனால் மேலும் நிறைய சத்தங்கள் கேட்கின்றன. கட்டிடத்தில் வாசல் கதவு குறுகலாக இருக்கிறது. வெளியில் நிற்கச் சொல்லிவிட்டு உள்ளே செல்லும் கிருஷ்ணன், செல்லையாவிடம் சொல்லிவிட்டு வந்து உள்ளே அழைக்கிறார். வெளியிலிருந்து இருட்டாகத் தெரியும் அந்தக் கட்டிடத்துக்குள் வாசலுக்குள் நுழைந்ததும்தான் தெரிகிறது, தொட்டுப்பார்க்கும் தூரத்தில் தனித் தனி அறைகளில் வரிசையாகப் புலிகள்…

புதியவனைப் பார்த்த கணத்தில் வருகிறது உறுமல், அதே சத்தம்! “டேய் பீஷ்மரு, அமைதியா இரு!” “வாங்க சார், கொஞ்சம் காத்திருங்க, இவனைச் சமாதானப்படுத்தி வந்திர்றேன்.” - இருவருக்குமான வார்த்தைகள் மூலம் இருவரிடமும் ஒரு அறிமுகத்தை உருவாக்குகிறார் செல்லையா.

“என்னடா கண்ணா நீயி, முரண்டு பிடிக்கிற! அப்பா சொல்றேன்லே, சின்ன பசங்க பேச்சு கேட்குறானுங்க. நீ முரண்டு பிடிக்கிற. டே ராஜா, கொஞ்சம் உன் அறைக்குள்ள போடா!” பீஷ்மர் என்று செல்லையா அழைக்கும் அந்த வெள்ளைப்புலி பின்வாசலுக்கும் அறை வாசலுக்கும் இடையே நடுவில் வழிமறித்து நிற்கிறது. செல்லையா தடுப்புக் கம்பிகள் வழியே உள்ளே கையை நீட்டுகிறார். பீஷ்மர் இப்போது அவருக்கு நெருக்கமாக வருகிறது. தலையை வருடுகிறார். அது இன்னமும் சமாதானம் ஆகவில்லை என்பதைப் போல தலையை உதறுகிறது. முறைக்கிறது. செல்லையா சூடாகிறார். “டேய், இப்போ நீ உள்ள போப்போறீயா இல்லையாடா?”

ஃப்ஸ்ஃச்…

எச்சில் செல்லையா மீது மட்டும் அல்லாமல் எங்கள் முகத்திலும் அப்பிக்கொள்கிறது. விருட்டெனப் பின் வாசல் படி வெளியே திறந்தவெளிக்குப் பாய்ந்துவிட்டது பீஷ்மர்.

“பொல்லாப் பய, இப்ப வர மாட்டான், வாங்க சார், நாம பேசலாம்!” என்று முகத்தைத் துடைத்துக்கொண்டே வருகிறார் செல்லையா! “இவனுக்கு உடம்பு சரியில்லாமப்போன எங்க டாக்டரே பயந்துகிட்டுதான் வருவார். ஊசி போடப்போறார்னு தெரிஞ்சாலே மேல மூத்திரத்தை அடிச்சுட்ருவான். என் கதையில என்ன சார் பெரிய விசேஷம் இருக்கு? இவங்களைப் பத்தி எழுதுங்க. எவ்ளோ பெரிய ஆகிருதி. அற்ப மனுஷ ஜென்மம் நாம. இன்னைக்கு நாம வாழணும்னு சொல்லி இவங்களையெல்லாம் ஒண்ணுமே இல்லாம ஆக்கிக்கிட்டு இருக்கோமே சார்!” என்பவர் கை கால்களைக் கழுவிவிட்டு வந்து உட்கார்கிறார்.

“தூத்துக்குடி பக்கம் மேலசீத்தலையைச் சேர்ந்தவன்தான் சார் நானு. பத்தாவதுக்கு மேல படிக்க குடும்பச் சூழல் இல்ல. வேலைக்கு ஓடிவந்துட்டேன். வனத்துறையில வாரக்கூலியா வேலைக்கு எடுத்தாங்க. 1984-ல நான் வேலைக்குச் சேர்ந்தப்போ ஒரு நாள் கூலி பத்து ரூவா. பதினைஞ்சு வருஷம் கழிஞ்சப்போ அது எண்பத்தி நாலு ரூவா ஆச்சி. வேலை நிரந்தரம் ஆச்சு. மொத ரெண்டு வருஷம் மரம் வெட்டிக் கழிக்கிறது, முள் செத்துறதுன்னு காட்டுப் பராமரிப்பு வேலையில இருந்தேன். பெறகு விலங்குப் பராமரிப்பு வேலைக்கு மாத்தினாங்க.

விலங்குப் பராமரிப்புங்குறது விலங்குகளோட கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி நெருங்குறதுல்லதான் சார் இருக்கு. இங்கெ வந்து 20 வருஷம் ஆகுது. இப்பம் 12 பேர் இங்கெ இருக்காங்க. பீஷ்மர், அனு, இந்திரா, ஆத்ரேயன், அர்ஜுனன், காவேரி, தாரா, மீரா, பாமா, ஆகான்ஷா, நமர்தா, ராமா. இவங்கள்ல பீஷ்மரும் அனுவும்தான் இப்ப எல்லாத்துக்கும் மூப்பு. அதனாலதான் செல்லமும் சேட்டையும் அதிகமாயிப்போச்சு” என்று சிரிக்கும் செல்லையாவுக்கு இங்குள்ள ஒவ்வொரு புலியின் சகல விவரங்களும் அத்துபடி.

“இதோ, இந்த ராமா இருக்கானே, இவனும் சந்திராவும் 3.8.2011-ல பொறந்தவங்க. சந்திரா இப்போ இல்ல. ஆத்ரேயன், அர்ஜுனன், காவேரி, சித்ரா நாலு பேரும் 23.10.2012-ல பொறந்தவங்க. சித்ரா இப்போ இல்ல. இந்திரா, வள்ளி, செம்பியன் மூணு பேரும் 5.6.2010-ல பொறந்தவங்க. வள்ளி, செம்பியன் ரெண்டு பேரும் இப்ப இல்ல. என் கல்யாண நாள்கூட எனக்கு ஞாபகத்துல இல்ல. ஆனா, இவங்க பொறந்த நாளை மறக்க முடியாது. ஒவ்வொரு பிரசவத்துக்கும்கூடவே கெடக்கிறேன்ல! பொறக்குற எல்லாருக்கும் நல்ல சுழியை ஆண்டவன் எழுதி வுடுறதில்ல. மனுஷன் வாழ்க்கைகூடத் தேவலாம். இவங்க வாழ்க்கை இன்னும் கஷ்டம். காட்டையே ஆள்றதுங்க, இப்படிச் சின்ன இடத்துல வாழணும்னா? ஆனா, ஒருவகையில இது பாதுகாப்பு. உலகம் முழுக்க நூறு வருஷம் முன்னாடி ஒரு லட்சம் புலி இருந்துச்சாம். இப்போ நாலாயிரத்துக்கும் கொறைச்சலாயிட்டு.

காலையில ஒன்பது மணிக்கு வருவேன். வந்த உடனே அறைக்குள்ள போயி பார்ப்பேன். மொத நா சாயங்காலம் போட்டுட்டுப்போன எறைய தின்னுருக்கா, மலம் ஜலம் எல்லாம் பிரச்சினையில்லாம போயிருக்கான்னுட்டு. பெறகு பேரிட்டு கூப்பிடுவேன். அவங்களும் பதிலுக்குக் கூப்பிடுவாங்க. பெறகுதான் வேலையை ஆரம்பிப்பேன்.”

புலிக்குட்டிகளுடன் செல்லையா | படம்: ரகு

“நீங்க பேசுறது, அதுங்களுக்குப் புரியுமா?”

“நல்லாக் கேட்டீங்க. அவங்களுக்குப் பேச வராதே தவிர, நான் பேசுற தமிழ் நல்லாப் புரியுங்க. நான் பேரிட்டுக் கூப்புடறேன்னு வெச்சுக்குங்க, ‘ஸ்ஸ்ஸ்’னு கிட்ட வந்து சத்தம் கொடுப்பாங்க. அப்படின்னா, நல்லா இருக்கோம்னு அர்த்தம். இப்போ சாயங்காலம் கெளம்புறேன்ல, இந்த காக்கி உடுப்புலேர்ந்து, கலர் உடுப்புக்கு மாறுறேன் பாத்துக்கங்க, வீட்டுக்குக் கெளம்புறேன்னு தெரிஞ்சுக்குவாங்க. கத்துவாங்க. அதுவும் பீஷ்மரு இருக்கானே கம்பி மேல வந்து முட்டிக் கத்துவான்.”

“சாப்பாடெல்லாம் எப்படி?”

“சின்ன புள்ளையா இருக்குறப்போ கோழிக்கறி கொடுப்போம். கொஞ்சம் வளர்ந்துட்டா, மாட்டுக்கறி. ஒவ்வொருத்தருக்கும் ஒரு நாளைக்கு ஏழு கிலோ கறி, 150 கிராம் ஈரல். வாரத்துல செவ்வாய்க்கிழமை மட்டும் வயித்துக்கு வேலை கொடுக்குறதில்ல. ஒவ்வொருத்தருக்கும் ஒரு நேரம் இருக்கு. அந்த நேரத்துல, தொறந்துவிட்டா அவங்களா திறந்தவெளிக்குப் போயிட்டு அவங்களா உள்ள வந்துருவாங்க. நான், செல்லாயின்னு ஒரு அம்மா, ஜீவானந்தம், கிருஷ்ணன் இப்படி நாலு பேர் இங்கெ இருக்கோம். இன்னைய வரைக்கும் அசம்பாவிதம் எதுவும் நடந்ததில்ல. எல்லார் மேலயுமே அவங்க பாசம் காட்டத்தான் செய்றாங்க. என்ன, ஜோடி சேர்ற நேரம் வந்துட்டா அவங்களோட எண்ணமெல்லாம் அங்கெ போய்டும். நாங்களும் நோக்கம் புரிஞ்சுக்கிட்டு அதுக்கேத்த மாதிரி இணை சேர உட்ருவோம். அதேபோல, உடம்பு சரியில்லைன்னா, அவங்க எறை எடுக்க மாட்டாங்க. மலத்தைப் பார்ப்போம். பூச்சி ஏதும் நெளிஞ்சா டாக்டர்கிட்ட சொல்லி பூச்சி மாத்திரை வாங்கிக் கொடுப்போம். ஜுரம், சளி, இல்ல வேறு எதாச்சும் பிரச்சினைன்னா டாக்டர் வந்து பார்த்து மருந்து கொடுப்பார். சரியாயிரும். கஷ்டம்னு சொல்லணும்னா, சாவுதான் சகிச்சுக்க முடியாதது. பல நாள் பசி, தூக்கத்தைக் கொன்னுடும் அந்த நெனைப்பு.”

“உங்களோட அன்றாட வாழ்க்கைமுறையில இந்த வேலையால எதாச்சும் பாதிப்பு உண்டா?”

“பாதிப்புன்னு சொல்ல முடியாது. ஆனா, கவனம் எல்லாம் உங்களுக்கு உங்க புலிக்கிட்டதான் இருக்குன்னு வூட்டுல திட்டுவாங்க. ஏன்னா, வார விடுப்பு நாளைக்கூட நான் முறையா எடுத்துக்க மாட்டேன். அதிசயமா நாலு நாள் விடுப்பு கேட்டு வெளியூர் கெளம்புவேன். மூணு நாள்லேயே பாதியில மனசு மாறி ஓடியாந்துருவேன். இப்ப 55 வயசாவுது. ரிட்டயர்டு ஆயிட்டேன்னா, என்னாகும்னு நெனைக்கத்தான் பயமா இருக்கு!”

பீஷ்மர் திரும்ப உள்ளே வந்திருப்பதாகச் சொல்லிக் கூப்பிடுகிறார் ஜீவானந்தம். “வாங்க சார்” என்று கூட்டிக்கொண்டு செல்கிறார் செல்லையா. உள்ளே தன் அறைக்குள் வந்து படுத்தபடி செல்லையாவைப் பவ்யமாகப் பார்க்கிறது பீஷ்மர்!

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

(அடுத்த மனிதர் அடுத்த வெள்ளி…)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்