அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பத்தே நாட்கள் உள்ளன. அதிபர் ட்ரம்ப்புக்கு கரோனா தொற்று வந்ததால் சென்ற வாரம் நடைபெற வேண்டிய விவாதம் நடைபெறவில்லை. கிட்டத்தட்ட 5 கோடி அமெரிக்கர்கள் ஏற்கெனவே அஞ்சல் வழியாகவோ, நேரிலேயோ வாக்களித்துவிட்ட சூழ்நிலையில், தேர்தல் நாளுக்கு முன்பு கடைசி முக்கிய நிகழ்வாக நாஷ்வில் நகரில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் டொனால்ட் ட்ரம்ப் - ஜோ பைடன் இருவரின் கவனமும் சில குறிப்பிட்ட வாக்காளர்கள் வளையத்திற்கு உள்ளேயே சுற்றி வந்தது.
யாருக்கு ஒட்டுப் போடுவதென்பதை இன்னும் முடிவு செய்யாத 3 சத விகிதத்தினரை குறி வைத்த பைடன், ‘‘என்னுடைய குணம் பற்றியும், ட்ரம்ப்பின் குணம் பற்றியும் உங்களுக்கு தெரியும். வெற்றி பெற்றால் எனக்கு வாக்களிக்காதவர்களையும் அரவணைத்து நாட்டை ஒருமைப்படுத்துவேன்" என்று விவாதத்தை முடித்தார்.
கருத்துக் கணிப்புகளின் படி கடந்த தேர்தல் போன்றே மொத்த ஓட்டு எண்ணிக்கையில் ட்ரம்ப் இழப்பதற்கான வாய்ப்புக்குள் அதிகம் உள்ளன. அதிக மக்கள் தொகை உள்ள நியூ யார்க், கலிபோர்னியா, நியூ ஜெர்சி, இல்லினாய்ஸ் போன்ற மாநிலங்களில் பைடனின் வெற்றி உறுதி என்பதே அதற்குக் காரணம்.
ஆனால், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியை முடிவு செய்வது மொத்த ஓட்டுகள் அல்ல. மாநில வாரியாக அளிக்கப்படும் 540 தேர்தல் குழு (electoral college) ஓட்டுக்களில் 270 ஓட்டுகள் பெறுபவரே அதிபராக முடியும். ‘மதில் மேல் பூனை’ போன்று ட்ரம்ப் பக்கமோ பைடன் பக்கமோ சாயக்கூடிய 10 மாநிலங்களை ‘போர்க்கள மாநிலங்கள்’ என்கின்றனர் அமெரிக்கர்கள்.
விவாதத்தின் போது ட்ரம்ப்பின் பார்வை எல்லாம் பென்சில்வேனியா, மிச்சிகன், வட கரோலினா போன்ற போர்க்கள மாநில வாக்காளர்களின் மீதே இருந்தது. அந்த மாநிலங்களில் உள்ள கறுப்பின ஆண்கள் பெருமளவு வாக்குப் பதிவில் பங்கேற்றால் அது தன் வெற்றிக்கு உகந்ததல்ல என்ற நோக்கத்தோடு, பைடன் - ஒபாமா குற்ற மசோதாக்களால் (crime bills) பல கறுப்பின ஆண்கள் சிறைப்படுத்தப்பட்டனர் என்று தாக்கினார் ட்ரம்ப்.
ட்ரம்ப்பின் வெற்றிக்கு அவசியம் பென்சில்வேனியா மாநிலத்தின் 20 ஓட்டுக்கள். பைடன் அங்கு வெற்றி பெற்றுவிடக் கூடாது என்ற முக்கியநோக்கத்தோடு, அந்த மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள இயற்கை எரிவாயு தோண்டும் தொழில் துறையை (fracking industry) எதிர்ப்பவர் பைடன் என்றும், அவர் அதிபரானால் வேலை வாய்ப்புகள் குறைந்து அமெரிக்காவின் பொருளாதாரம் சீர்குலைந்து விடும் என்றும் ட்ரம்ப் எச்சரித்தார்.
போர்க்கள மாநிலங்களில் கரோனா தொற்றால் பள்ளிகளும், பல தொழில்களும் மூடப்பட்டிருப்பது தொடர்பான கருத்து வேறுபாடு நேற்றைய விவாதத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருந்தது. “கரோனா தொற்றோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும், தொற்றுக்காக நாட்டை மூடினால் அமெரிக்காவே அழிந்துவிடும்” என்ற ட்ரம்ப்பின் நிலையை ஆதரிப்போர் கணிசமாக உள்ளனர். “2,23,000 அமெரிக்கர்களின் இறப்புக்களுக்கிடையே தொற்றோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டுமென்பவர் அதிபராகத் தொடர தகுதியற்றவர்” என்பது பைடனின் வாதம்.
நவம்பர் முதல் வார தேர்தலுக்கு முன்பு, ‘அக்டோபர் ஆச்சரியம்’ என கடைசி 10 நாட்களில் ஏதாவது அரசியல் பூகம்பம் நடைபெறுவது அமெரிக்க அரசியலில் வழக்கமாகி விட்டது. சென்ற தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பு ஹிலாரி கிளின்டனின் மின்னஞ்சல்கள் தொடர்பான அமெரிக்க புலனாய்வுத் துறையின் விசாரணை அறிவிக்கப்பட்டதன் விளைவே அவரின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. அதுபோன்று அடுத்த 10 நாட்களில் என்ன நடக்குமோ என்ற கேள்வி பலரிடமும் எழுகிறது.
தன் அதிகார பலத்தை வைத்து ட்ரம்ப் புதிதாக சில குண்டுகளைப் போட வாய்ப்புள்ளது என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள். அதன் முன்னோட்டமாக, பைடனின் மகன் ஹண்டர் பைடன், உக்ரைன் நாட்டுடன் வைத்திருந்த தொழில் தொடர்பில் பல ஊழல்கள் உள்ளன என்றும் அவற்றுக்கும் ஜோ பைடனுக்கும் தொடர்புண்டு என்றும் பல புதிய தாக்குதல்கள் வரத் தொடங்கிவிட்டன. தேர்தல் நாளுக்கு சற்று முன்பு கரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டு பிடித்து அனுமதி அளிக்கப்பட்டுவிட்டதான அறிவிப்பின் மூலம் கடைசி நிமிடத்தில் வாக்காளர்களை திசை திருப்பக் கூடிய வாய்ப்பும் உள்ளது.
அதிபர் வேட்பாளர்களுக்கு இடையேயான கடைசி விவாதம் இரு தரப்புக்கும் பெரும் பாதிப்பின்றி நேற்று முடிந்தது. சென்ற தேர்தலில் இதே நேரத்தில் கருத்துக் கணிப்புகள் எல்லாம் ட்ரம்ப் தோல்வியை நோக்கிச் செல்வதாகவே வெளியாயின. தற்போதும் அவற்றின் நிலை அதேதான். ட்ரம்ப் அல்லது பைடன், வெற்றி யாருக்கு என்பதை உறுதி செய்ய போவது போர்க்கள மாநிலங்களில் உள்ள வாக்காளர்களே. அமெரிக்கா முழுவதும் இந்த தேர்தலில் ஓட்டுப் போடுவதில் அதிக ஆர்வம் தென்படுகிறது. சென்ற அதிபர் தேர்தலை விட மேலும் ஒரு கோடி அமெரிக்கர்கள் வாக்களிக்க வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதால் இந்த தேர்தலில் அமெரிக்க ஜனநாயகத்துக்கு வெற்றி என்பது உறுதி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago