பிஹாரில் அக்டோபர் 28-ல் முதற்கட்ட வாக்குப் பதிவு நடக்கவிருக்கும் சூழலில், தேர்தல் களத்தில் அனலடிக்கத் தொடங்கியிருக்கிறது. மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்று, நிதீஷ் குமாரின் ஆட்சி தொடரும் என்றே சில மாதங்களுக்கு முன்புவரை கருதப்பட்டது. ஆனால், அது அத்தனை எளிதில்லை என்பதைச் சமீபத்திய நிகழ்வுகள் உணர்த்துகின்றன. குறிப்பாக, ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் களத்தில் நிதீஷுக்குக் கடும் சவாலாக இருப்பார் எனத் தெரிகிறது.
இதுவரை வெளியாகியிருக்கும் கருத்துக் கணிப்புகள், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை உறுதிசெய்யும் வகையிலேயே அமைந்திருக்கின்றன. அதேசமயம், அக்கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்குச் சற்றே பின்னடைவு ஏற்படலாம் என்றும் அவை கணித்திருக்கின்றன. மறுபுறம், ‘தி லல்லன்டாப்’ எனும் இந்தி ஊடகம் வெளியிட்டிருக்கும் கருத்துக் கணிப்பில் அடுத்த முதல்வர் யார் எனும் கேள்விக்கு 31 சதவீதம் பேர் நிதீஷ் என்றே பதிலளித்திருக்கிறார்கள். ஆனால், அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் தேஜஸ்வி, 27 சதவீதத்தினரின் தெரிவாக இருக்கிறார். கூடவே சிராக் பாஸ்வானுக்கு 5 சதவீத ஆதரவு இருப்பதாக அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது. பிஹாரின் இன்றைய அரசியல் நிலவரத்தை வைத்துப் பார்க்கும்போது, இவற்றை நிதீஷ் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
குற்றச்சாட்டுகள்
ஒருவகையில் நிதீஷின் முந்தைய வெற்றிகளுக்குத் துணைபுரிந்த அவரது வாக்குறுதிகள் இன்றைக்கு அவருக்கு எதிராகத் திரும்பியிருப்பது கவனிக்கத்தக்க விஷயம். தனது ஆட்சி அமைந்தால் குற்றங்கள் குறையும் என அவர் வாக்களித்திருந்தார். ஆனால், இன்னமும் குற்றங்கள் குறையவில்லை என்று எதிர்க் கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள். குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பட்டியலினச் சமூகத்தினருக்கு எதிரான குற்றங்களைப் பட்டியலிட்டு நிதீஷ் தரப்பை நிம்மதி இழக்க வைக்கிறார்கள் ஆர்ஜேடி கட்சியினர்.
வேலைவாய்ப்பின்மை, புலம்பெயர்த் தொழிலாளர் பிரச்சினை, கரோனா பரவலால் நிகழ்ந்திருக்கும் வேலையிழப்பு, வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகள், வேளாண் மசோதாக்கள் என்பன போன்ற பிரச்சினைகள் இந்தத் தேர்தலில் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக, “ஆர்ஜேடி ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்” என்று தேஜஸ்வி அளித்திருக்கும் வாக்குறுதி இந்தத் தேர்தலில் முக்கியமான அம்சமாகக் கருதப்படுகிறது. கூடவே மருத்துவத் துறை, காவல் துறை என பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கில் பணி நியமனங்கள் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கின்றன என்றும் தேஜஸ்வி குற்றம்சாட்டிவருகிறார்.
“ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்று இருக்க வேண்டிய சூழலில், பிஹாரில் 17 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர்தான் இருக்கிறார். ஒரு லட்சம் பேருக்கு 140 காவலர்கள் இருக்க வேண்டிய சூழலில், இங்கு ஒரு லட்சம் பேருக்கு 77 காவலர்கள்தான் இருக்கிறார்கள். காவல் துறையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாகக் கிடக்கின்றன” என்று புள்ளிவிவரங்களை அள்ளிவிடுகிறார் தேஜஸ்வி.
நிதீஷின் ஆட்சிக் காலத்தில் ஒரு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைகூடக் கட்டப்படவில்லை என்றும், சிகிச்சைக்காகப் பிற மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய நிலையில் பிஹார் மக்கள் இருப்பதாகவும் அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் பொதுவான வாக்காளர்கள் மத்தியில் எதிரொலிக்கலாம்.
நிதிஷ் தனது 15 ஆண்டு கால ஆட்சியில் பிஹார் மாநிலத்தைப் பின்னடையச் செய்துவிட்டதாக விமர்சிக்கும் தேஜஸ்வி, வாக்குப் பதிவு இயந்திரத்தில் கை வைக்கும்போது இதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று வாக்காளர்களிடம் கோரிக்கை வைக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, “கரோனா நிவாரணப் பணிகளுக்காக நிதீஷ் வெளியில் வரவில்லை. தேர்தல் வந்ததும் ஓட்டுக் கேட்க மட்டும் வெளியில் வருகிறார்” என்றும் அடுத்தடுத்துக் கணைகளை வீசுகிறார் அவர்.
பதிலுக்குப் பதிலடி
இதற்குப் பதிலடியாக லாலு ஆட்சியில் இருந்த பிரச்சினைகள், குடும்ப அரசியல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளிலேயே ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலைவர்கள் கவனம் செலுத்துகின்றனர். “10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக வாக்குறுதி தருபவர்களுக்கு அதை நிறைவேற்றுவதற்கான அறிவோ அனுபவமோ இல்லை” என்று பதிலடி தந்திருக்கும் நிதீஷ், “அப்படியே இத்தனை பேருக்கு வேலை தந்தாலும் அதற்கான சம்பளத்தைச் சிறையிலிருந்து எடுத்துக் கொடுப்பீர்களா அல்லது கள்ள நோட்டுகளை விநியோகிப்பீர்களா?” என்றும் கிண்டலடித்திருக்கிறார். ஊழல் வழக்கில் லாலு சிறை சென்றதை வைத்து லாலு குடும்பத்தின் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை ஐக்கிய ஜனதா கட்சியும் பாஜகவும் முன்வைக்கின்றன.
ஆனால், “18 மாதங்களுக்கும் மேலாக நான் துணை முதல்வராக இருந்தேன். அந்தக் காலகட்டத்தில் என் மீது என்ன ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது?” என்று பதிலடி தருகிறார் தேஜஸ்வி. அதேபோல், “ஐந்தாண்டு கால அரசியல் வாழ்வில் ஐம்பது ஆண்டு கால அனுபவத்தைப் பெற்றுவிட்டேன். நான் அனுபவமற்றவன் என்றால் என்னை ஏன் துணை முதல்வராக்கினீர்கள்?” என்றும் சீறுகிறார்.
செல்வாக்கு அதிகரிக்கிறதா?
தேஜஸ்வி யாதவ் கலந்துகொள்ளும் பிரச்சாரக் கூட்டங்களில் பெரிய அளவில் கூடும் கூட்டம் பலரையும் கவனிக்கச் செய்திருக்கிறது. இதை எதிரணியினரும் கவனிக்கத் தவறவில்லை. தேஜஸ்வியின் பேச்சைக் கேட்க மக்கள் கூடுவதை பாஜகவே ஆச்சரியத்துடன்தான் பார்க்கிறது. ஆனால், ஆர்ஜேடிக்கு வழக்கமாக ஆதரவளிக்கும் பகுதிகளில்தான் தேஜஸ்விக்குக் கூட்டம் கூடுகிறது என்று சமாதானம் சொல்லிக்கொள்கிறார்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள். ஆனால், வழக்கமான ஆதரவாளர்களையும் தாண்டி பொதுமக்களும் கலந்துகொள்வதாக ஆர்ஜேடி கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.
அரசியல் குடும்ப வாரிசாக இருந்தாலும் ஒரு கிரிக்கெட் வீரராகத்தான் தேஜஸ்வியின் பொது வாழ்க்கை தொடங்கியது. 19 வயதுக்குட்பட்டோருக்கான டெல்லி அணியில் இடம்பெற்றவர். ஜார்க்கண்ட் அணிக்காக ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் விளையாடியிருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் ‘டெல்லி டேர்டெவில்ஸ்’ அணியிலும் இடம்பெற்றிருந்தார். எனினும், கிரிக்கெட் வீரராகச் சொல்லிக்கொள்ளும்படியான எந்தச் சாதனையையும் அவர் செய்யவில்லை. அதன் பின்னர்தான் அவரது அரசியல் பிரவேசமும் நிகழ்ந்தது.
ஆரம்பத்தில் தனது தந்தை லாலு பிரசாதுடன் பொது மேடைகளில் தோன்றியவர், மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு சிறை சென்றதைத் தொடர்ந்து கட்சியின் பிரதான முகமாகத் தன்னை உருவாக்கிக்கொண்டார். இடையில் குடும்பத்துக்குள் எழுந்த அதிகாரப் போட்டியிலும் அவருக்கே வெற்றி கிடைத்தது. இன்றைக்கு அவரது செல்வாக்கு உயர்ந்திருப்பது ஆர்ஜேடியின் மூத்த தலைவர்களுக்கே வியப்பளிக்கிறது.
கிரிக்கெட்டுக்காகப் பள்ளிப் படிப்பைப் பாதியில் கைவிட்டவர் என்றாலும், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் திறனும் சாதுரியமாகப் பதிலளிக்கும் திறனும் கொண்டவர் தேஜஸ்வி. சமூக வலைதளங்களைக் கையாள்வதிலும் அவருக்கு நல்ல தேர்ச்சி உண்டு. இப்படியான துடிப்பான தலைவரிடமிருந்து எழுந்திருக்கும் சவாலை நிதீஷ் எப்படிச் சமாளிப்பார் என்று உற்றுநோக்கப்படுகிறது.
சிராக் தரும் குடைச்சல்
தேஜஸ்வி தரும் சவாலுடன் லோஜ் ஜனசக்தி (எல்ஜேபி) தலைவரும், மறைந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகனுமான சிராக் பாஸ்வான் ஏற்படுத்திவரும் நெருக்கடியும் நிதீஷைத் திணறச் செய்கிறது. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை ‘வாக்குகளைப் பிரிக்கும் கட்சி’ என்றே எல்ஜேபி அழைக்கப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவான வாக்குகளை எல்ஜேபி பிரிக்கும் என்று கருதப்படுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டாலும் பாஜகவுடனான உறவு தொடரும் என்றும், பாஜக போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என்றும் சிராக் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்குப் பின்னர் பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைக்கலாம் என்றும் திட்டமிட்டிருந்தார். இதன் மூலம் மறைமுகமாக நிதீஷுக்கு நெருக்கடி தர பாஜக முயற்சி செய்வதாகவும் சொல்லப்பட்டது. மாநில அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து எல்ஜேபி வெளியேறிவிட்டாலும், தேசிய அளவில் அக்கட்சியைக் கூட்டணியிலிருந்து பாஜக வெளியேற்றவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
அதேசமயம், சிராக் பாஸ்வானுடன் தேஜஸ்வி யாதவுக்கு ரகசிய உடன்பாடு இருக்கலாம் எனும் சந்தேகம் பாஜகவுக்கு எழுந்திருக்கிறது. சிராக் பாஸ்வானுடன் அவர் அரசியலைத் தாண்டிய நட்பு பாராட்டுவது, எதிரிக்கு எதிரி நண்பன் என்பதையே காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். பாஜக போட்டியிடும் இடங்களில் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட மாட்டார்கள் என்று கூறிவந்த எல்ஜேபி, தற்போது பாஜக போட்டியிடும் 5 இடங்களில் தனது வேட்பாளரை நிறுத்தியிருப்பது மேலும் குழப்பங்களை உருவாக்கியிருக்கிறது.
கூட்டணிக்குள் மறைமுகக் கணக்குகள் இருப்பதாகவே வைத்துக்கொண்டாலும் நிதீஷ்தான் முதல்வர் வேட்பாளர் என்று பாஜக திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. எனவே, அவரது வெற்றியை உறுதிசெய்வதற்கான எல்லா அஸ்திரங்களையும் அது பயன்படுத்தும் என எதிர்பார்க்கலாம். பிஹார் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்ட தலைவர்கள் தீவிரமாகக் களப் பணியாற்றி வருகிறார்கள்.
அக்டோபர் 23-ல் தேஜஸ்வியுடன் இணைந்து ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவார் என்று சொல்லப்படும் நிலையில், அதே தேதியில் பிரதமர் மோடியும் பிஹாரில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கவிருக்கிறார். “சமரசம் செய்யத் தயாராக இருந்திருந்தால் பாஜகவுடன் கைகோத்து முதல்வர் பதவியை எப்போதோ அடைந்திருப்பேன். ஆனால், என் தந்தை லாலு பிரசாத்தின் வழியில் பாஜகவையும் ஆர்எஸ்எஸ் அமைப்பையும் எதிர்ப்பவன் என்பதால் நான் அதை விரும்பவில்லை” என்று பேசிவருபவர் தேஜஸ்வி. எனவே, பிஹாரில் இன்னும் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago