ஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா?

By இரா.வினோத்

அண்மையில் வெளியான ‘தனிஷ்க் ஜுவல்லரி’ விளம்பரத்தில் இந்து மருமகளுக்கு முஸ்லிம் மாமியார் வளைகாப்பு செய்வதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்துத்துவ ஆதரவாளர்கள் ‘லவ் ஜிகாத்’ எனத் திரித்து, சமூக வலைதளத்தில் அதைக் கண்டித்தனர். ‘தனிஷ்க் ஜூவல்லரியை முற்றுகையிடுவோம்’; ‘டாடா குழுமத்தைப் புறக்கணிப்போம்’ என்றெல்லாம் பகிரங்கமாக மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இதனால், ‘தனிஷ்க் ஜுவல்லரி’ அந்த விளம்பரத்தைத் திரும்பப் பெற்றது. இந்த விஷயத்தில் இந்துத்துவ ஆதரவாளர்களை ‘சோஷியல் மீடியா மாஃபியா’ என்று வர்ணித்தனர் எதிர்த் தரப்பினர். தமிழ் அரசியல் பேசுபவர்களும் இதில் உள்ளடக்கம்.

ஜனநாயகம், கருத்துரிமை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி தமிழக சமூக வலைதளப் பரப்பும் பரவலாக இந்துத்துவர்களைக் கண்டித்தது. அதே வேளையில், முத்தையா முரளிதரன் பற்றிய ‘800’ படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ வெளியானதும் இவர்களில் பெரும்பாலானோர் அதற்கு எதிர் நிலைப்பாட்டை எடுத்தனர். முரளிதரனுக்கு ‘துரோகி’ முத்திரை குத்தியதோடு, விஜய் சேதுபதியையும் வாட்டாள் நாகராஜ் பாணியில் மிரட்டினர். அனுபவம் வாய்ந்த அரசியலர்கள் பலரும் இதற்குப் பொங்கியது சமூக வலைதளங்களின் அவசர மனநிலைக்கு அவர்களும் தள்ளப்பட்டிருப்பதை உறுதிசெய்தது. இதையடுத்து விஜய் சேதுபதியும் படத்திலிருந்து விலகினார்.

உணர்வுகளின் முதலீடு

அண்டை நாடு, தமிழர்கள் கணிசமாக வாழ்கிறார்கள் என்ற முறையில் இந்தியா - இலங்கை உறவு நூற்றாண்டுக்கும் மேலாக நீடிக்கிறது. இலங்கையில் கடுமையாக யுத்தம் நடந்துகொண்டிருந்த காலத்திலேயே இரு நாடுகளுக்கும் இடையே தொழில், வர்த்தகம், கலை பண்பாட்டு‌ உறவு தொடர்ந்தது. உள்நாட்டுப் போர் ஈழத் தமிழர்களின் இனப் படுகொலையோடு முடிந்த பத்து ஆண்டுகளில் சினிமா, கிரிக்கெட் சம்பந்தப்பட்ட விஷயங்கள்கூட தமிழகத்தில் சர்ச்சையாக்கப்படுகின்றன. அந்தத் தருணத்தில் காட்டாறாகப் பாயும் தேசியவாதம், மொழித் தூய்மைவாதத்தின் வேகத்தைப் பார்த்துப் பயந்து, அறிவுஜீவிகளும் மௌனித்துவிடுகின்றனர். உணர்வுபூர்வமான விஷயத்தைச் சிலர் தங்களின் முதலீடாக மாற்றி மக்களைத் தவறாக வழிநடத்துவதையும் அவதானிக்க முடிகிறது.

முரளிதரன் பட விவகாரத்தில் எழுந்த எதிர்ப்புக்கு ‘ஈழ ஆதரவு’ முலாம் பூசப்பட்டாலும், அந்தக் குரலின் உள்ளே அதையும் தாண்டிய சாதி, வர்க்கம், மாகாண வேறுபாடுகளும், தொழில் போட்டியும் இருப்பது தெரிகிறது. அவர் மலையகத்தைச் சாராத ஈழத் தமிழராகவோ, அந்தப் படத்தை லைக்கா தயாரித்திருந்தாலோ இந்த எதிர்ப்பு எழுந்திருக்காது என்றும் சொல்லப்படுகிறது.

போர் முடிந்த சமயத்தில் ஒரு பத்திரிகையாளராக நான் மேற்கொண்ட இலங்கைப் பயணத்தில், எல்லாத் தரப்பு சாமானிய மக்களையும் சந்தித்துப் பேசியபோது, அதுவரை எனக்குச் சொல்லப்பட்ட கதைகள், படித்த நூல்கள், எனக்குள் கட்டப்பட்டிருந்த பிம்பங்கள் எல்லாம் உடைந்து சிதறின. கண்டி, ஹட்டன் தேயிலைக் காடுகளுக்குச் சென்றபோது, இந்திய வம்சாவளித் தமிழரின் துயர வரலாற்றைக் கேட்டு இதயம் நொறுங்கியது. என் பக்கத்துக் கிராமத்தில் இருந்து வந்த இவர்களைப் பற்றி தமிழகத்தில் ஏன் எந்தத் தலைவரும் பேசவில்லை? எழுதவில்லை? போராடவில்லை? அடுக்கடுக்காகக் கேள்விகள் எழுந்தன.

18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்திலிருந்து இடம்பெயர்ந்த ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் கடலிலும் நாட்டிலும் தோட்டத்திலும் பட்ட துயரங்கள் வார்த்தைகளில் வடிக்க முடியாதவை. கடுங்குளிர், அட்டைக்கடி, லாயக் கொட்டடி, கங்காணிகளின் சவுக்கடி, கால நேரமில்லாத வேலை, குறைந்த கூலி, துரைமாரின் சர்வாதிகாரம் என்று நரக வாழ்க்கை. பிரிட்டிஷாரிடமிருந்து ஒட்டுமொத்த இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தபோதும் இம்மக்களுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை.

1964-ல் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் ஒரு நூற்றாண்டுக்குப் பின் கிட்டத்தட்ட 6 லட்சம் பேரை வேரடி மண்ணோடு பிடுங்கி, இந்தியாவின் தேயிலைக் காடுகளில் வீசினர். எஞ்சியவர்கள் ‘கூலி’, ‘கள்ளத்தோணி’, ‘தோட்டக்காட்டான்’ என இழிவுபடுத்தப்பட்டு, அடுத்தடுத்த‌ இனக் கலவரங்களில் குறிவைத்துத் தாக்கப்பட்டனர். சிங்களர்களிடமிருந்து தப்பித்து வட கிழக்குக்கு ஓடிய மக்கள் போரில் சிக்கினர். போராளிக் குழுக்களில் சேர்ந்து போராடி மடிந்தது போக, மீதம் உள்ளவர்கள் தமிழகத்துக்கு அகதிகளாக ஓடினர். இன்றைக்கும் தாய்நாட்டிலே அகதிகள் முகாமில் வாழும் இவர்களின் கண்ணீர்க் கதை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாதது.

தோட்டத்துப் பொடியனின் கதை

200 ஆண்டுகளாக இலங்கையில் எல்லாத் தரப்பினருடனும் முட்டி மோதி, மலையகத் தமிழர்கள் தங்களது தனித்த அடையாளத்துடன் தலைநிமிரத் தொடங்கியுள்ளனர். அவர்கள் மத்தியிலிருந்து எழுந்துவந்தவர்தான் முத்தையா முரளிதரன். அவரது மூதாதையர் தேயிலைத் தோட்டத்தில் கஷ்டப்பட்ட நிலையில், தந்தை முத்தையாவின் முயற்சியால் அங்கிருந்து வெளியேறியவர். இனக்கலவரத்தில் தன் தந்தை வெட்டப்பட்டதை நேரில் பார்த்தவர். சொத்துகளையும் சில சொந்தக்காரர்களையும் இழந்தவர். கடைக்கு பிஸ்கட் போட்டுக் கஷ்டப்பட்டு முன்னேறிய முத்தையா, தன் பிள்ளைகளை நல்ல நிலைக்குக் கொண்டுவந்தார். தன் கொடையுள்ளத்தால் கண்டியில் எல்லோராலும் மதிக்கப்படுபவராக முத்தையா இருக்கிறார். முரளிதரன் பிரபலமான கிரிக்கெட்டராகி சென்னையைச் சேர்ந்த பெண்ணை மணந்திருக்கிறார். அவர் எந்த உயரத்துக்குப் போனாலும் ‘தோட்டத்துப் பொடியன்’ என்ற அடையாளம் மட்டும் இலங்கைத் தமிழர்களிடையே மாறவில்லை. இதற்குக் காரணம், சாதிய – வர்க்க மனோபாவம்தான்.

முரளிதரனின் வாழ்க்கையே திரைக்கதையைப் போல விறுவிறுப்பானது. தன் திறமையால் ஆதிக்கத்தை எதிர்கொண்டார். செல்வாக்கான யாழ்ப்பாண மேட்டுக்குடியினராலே நுழைய முடியாத இலங்கை அணிக்குள் கடுமையாகப் போராடி நுழைந்தார். ஆஸ்திரேலியாவில் அவர் மீது நிறவெறி காட்டியபோதும், பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளானபோதும் உடையாமல் இருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக அவரது தனித் திறமையையே, அதாவது பந்து வீசும் விதத்தையே குறை சொல்லி போட்டியிலிருந்து வெளியேற்‌றப்பட்டபோதும் ஓயாது போராடினார். வெளியுலகமே தெரியாத தோட்டத்தில் ஒருவனாக இருந்த அவர் உலகமே கொண்டாடுபவராக மாறினார். யார் ஏற்றாலும் மறுத்தாலும் முத்தையா முரளிதரன் மலையகத்தின் பெருமை மட்டும் அல்ல; நாம் வாழும் காலத்தில் தமிழ்ச் சமூகத்தின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவர்.

ஒரு தேயிலைத் தோட்ட சாமானியன், சவால்களை எதிர்கொண்டு சாதனையாளன் ஆன கதையே ‘800’ என்று கூறப்படுகிறது. நூற்றாண்டு காலத் தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக மலையகத் தமிழரைப் பற்றிப் படம் என்ற சிறப்பும் இதற்கு இருக்கிறது. முரளிதரன் கடந்த காலத்தில் இலங்கைப் போர் தொடர்பில் மாறுபட்ட கருத்துகளையோ, அரசின் மொழியிலோகூடப் பேசியிருக்கலாம். ஆனால், அவர் ஒரு விளையாட்டு வீரர்; அரசியலர் அல்ல என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஒரு நாட்டின் தேசிய அணியில் இடம்பெற்றிருந்த வீரர் என்ற அவருக்கான எல்லையையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் முற்றிலும் மாறுபட்ட கருத்தைத் தவறுதலாகவே அவர் கூறியிருந்தார் என்றாலும்கூட அதற்கும் அவரைப் பற்றி ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படம் வருவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? முழுக்கவுமே எதிர் நிலையில் நின்று பேசுவோருக்கான சுதந்திரத்தையும் அங்கீகரிப்பதுதானே ஜனநாயகம்?

இலங்கை அரசுக்கு ஆதரவானவர் என்று புலம்பெயர் ஈழத் தமிழ்க் குழுக்கள் ஒரு திரியைக் கொளுத்திவிட்ட‌தும், தமிழ்நாட்டில் தமிழ் அடையாள அரசியல் பேசுவோர் குரல் பொங்க ஆரம்பித்தது. ‘கலைக்கு மொழியில்லை, பேதமில்லை’ என முழங்கிய பாரதிராஜா ‘முரளிதரன் போரின்போது பிடில் வாசித்தார்’ என்றார். ஜனநாயகத்தையும் கருத்துரிமையையும் பேசும் கி.வீரமணி, வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எனப் பல தலைவர்களும் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கக் கூடாது என்று அறிக்கை வெளியிட்டனர். சரியாக, ராதிகா ஒருவர் குரல்கொடுத்தார். ‘2008 ஐபிஎல் கிரிக்கெட்டில் முரளிதரன் சென்னை அணிக்கு விளையாடியபோதும், கலாநிதி மாறனின் ‘சன் ரைசர்ஸ் அணி’க்குப் பயிற்சியாளராக இருந்தபோதும் அமைதி காத்தது ஏன்?’ என்றார்.

கருத்துரிமை பொது

வேடிக்கை என்னவென்றால், இப்போது போராளிகள் வேஷம் கட்டுபவர்கள் பலர், தமிழ்ச் சமூகத்தின் அசலான பிரச்சினைகளில் மௌனம் காப்பதுதான். ‘விஜய் சேதுபதியின் வீட்டை முற்றுகையிடுவோம்’ என மிரட்டுவோர் எத்தனை பேர் சாதியின் பெயரால் கொலைகளை நிகழ்த்தியவர்களின் வீடுகளை இங்கே முற்றுகையிட்டிருக்கிறார்கள்; ஊராட்சித் தலைவர் ஆன பிறகும் நாற்காலியில்கூட உட்கார அனுமதிக்காத ஆதிக்கச் சாதியினரின் வீடுகளை முற்றுகையிட்டிருக்கிறார்கள்?

இலங்கை ராணுவத்துடன் நேருக்கு நேர் போர் நடத்திய முன்னாள் போராளிகள் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிவிட்டனர். ‘உங்கள் அரசியலுக்கு எங்களைப் பயன்படுத்தாதீர்கள்’ என்று ஃபேஸ்புக்கில் எழுதுகிறார்கள். ஜனநாயகம் பேசுவோர் அதற்குக் காது கொடுக்க வேண்டும். தங்களுக்கு இருக்கும் கருத்துரிமை மற்றவருக்கும் இருக்கிறது என்பதை உணர வேண்டும்!

- இரா.வினோத்,

தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்