அலுவலக வரவேற்பறையிலிருந்து, “செ.கணேசலிங்கன் வந்திருக்கிறார்” என்று தகவல் வந்தது. தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். ஈழத்தில் மார்க்சியப் பார்வையுடன் எழுத ஆரம்பித்தவர்களில் முன்னோடி. நாவல், சிறுகதை என்று புனைவுகளில் மட்டும் இல்லாமல், சமயம், சமூகவியல், அரசறிவியல், பெண்ணியம், கலை, திறனாய்வு என்று சகலப் பிரிவுகளிலும் எழுதிக் குவித்தவர். எல்லாவற்றையும்விட ஈழப் போராட்டத்தின் முக்கியமான சாட்சியங்களில் ஒருவர். ஒருகாலத்தில் போராளிகளுக்கு அரசியல் பாடம் எடுத்தவர். வயது இப்போது 87 ஆகிறது.
கணேசலிங்கன் நல்ல பேச்சாளியும்கூட. ஒரு காபி உள்ளே போனால், இலங்கை, மஹிந்த ராஜபட்ச விக்கரமசிங்க உள்கதைகள், புலிகள் விட்டுப்போன தங்கச் சுரங்கம் என்று வெள்ளமாகப் பேச்சு பாயும். வரவேற்பறைக்குச் சென்றபோது, கையில் ஒரு புத்தகத்துடன் சிரித்துக்கொண்டிருந்தார். “கொழும்பு போய் வந்தேன். இது புது நாவல். ‘சுசிலாவின் உயிரெச்சம்’. போன முறை கொடுத்துவிட்ட ‘பாலுமகேந்திரா’ புத்தகம் வாசிச்சீங்களா?” புத்தகத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பதற்காக பேனாவை எடுக்கும்போது விரல்களில் அத்தனை நடுக்கம்.
பிரமிப்பாக இருந்தது. கடந்த ஒரு வருஷத்தில் அவர் எழுதியிருக்கும் மூன்றாவது புத்தகம் இது. கணேசலிங்கன் சென்ற பின் சகாக்களிடம் இதுபற்றிப் பேச்சு ஓடியது. சாரி சொன்னார், “அந்த உயிரிடம் சொல்ல அவ்வளவு இருக்கிறது; அவற்றை முடிந்தவரை யாரிடமாவது சொல்லிவிட அது துடிக்கிறது; அதுதான் அவரைத் தொடர்ந்து இயக்குகிறது.”
ஊரில் வீட்டுக்கு முன் குளம். இக்கரையில் பிள்ளையார் கோயில்; அக்கரையில் கனகாம்பாள் கோயில்; நடுவே ஆலமரத்தடி. மூன்றுமே பெரியவர்கள் உட்காரும் இடங்கள். வீட்டில், பள்ளிக்கூடங்களில் இருந்த நேரத்தைக் காட்டிலும் பிள்ளைகள் இங்குதான் அதிகம் கிடப்போம். பெரியவர்களின் பேச்சில் சொக்கிக்கிடப்போம்.
நகர்மய வாழ்க்கையில் கோயில் திண்ணைகளும் மரத்தடிகளும் சீந்துவாரற்றுப் போய்விட்டன. பிள்ளைகளைப் பள்ளிக்கூடங்கள் தின்றது போக, டிவியும் வீடியோ கேம்களும் பங்கிட்டுக்கொள்கின்றன. பெற்றவர்கள் நாம் முன்பைவிட நிறையப் பேசுகிறோம்; கேட்கிறோம்; தொலைபேசியில், செல்பேசியில், முகநூலில், மின்னஞ்சலில்.. மெய்நிகர் உலகம் ஆக்கிரமித்திருக்கும் இந்த உரையாடல் நேரில் நிற்கும் மனிதர்களைப் புறந்தள்ளிவிடுகிறது. பேச்சு கேட்டல் கவனித்தல் வார்த்தைகளின் வழியே அந்த உலகில் பிரவேசித்தல் அதில் வாழ்தல் எனும் அன்றைய பேச்சு மரபு அருகிவருகிறது; மாறாக, பேச்சு கேட்டல் உடனடியாகப் பதில் சொல்லுதல் எனும் புது வழக்கத்துக்கு மாறுகிறோம். பேச்சு வெறும் தகவல் சார்ந்த / உள்ளே நுழைய முடியாத வெற்று அரட்டையாக உருமாறும்போது பெரியவர்கள் அந்நியர்கள் ஆகிவிடுகிறார்கள்.
உலகில் பல நாடுகளிலும் / சமூகங்களிலும் இந்த மாற்றம் நிகழ்கிறது. எனினும், இந்தியர்களைப் போன்ற ஒரு சமூகத்துக்கு இது கூடுதல் பேரிழப்பு. ஏனென்றால், பிற சமூகங்களைப் போல, எதையும் பதிவுசெய்துவைக்கும் / ஆவணப்படுத்திவைக்கும் மரபு நம்மிடம் இல்லை. நம்முடைய தொன்மையான கலை இலக்கியங்கள், மருத்துவக் குறிப்புகளில் தொடங்கி குடும்ப வரலாறு வரை எல்லாமே கர்ணப்பரம்பரையாகத் தொடர்வதுதான். இந்த வாய்வழி மரபில் பேச்சு மூலமாகவே ஒரு தலைமுறையிடமிருந்து இன்னொரு தலைமுறைக்கு எல்லாச் செய்திகளும் கடத்தப்படுகின்றன. ஆக, இங்கே ஒரு பெரியவர் பேச யாருமற்றவராக ஆகும்போது, அவருடன் அவர் காலத்துச் செய்திகள் மட்டும் முடிந்துபோவதில்லை; கூடவே தலைமுறை தலைமுறையாகக் கடந்துவந்து அவரிடத்தில் நிரம்பியிருக்கும் செய்திகள் யாவும் முடிந்துவிடுகின்றன. கணேசலிங்கன் போன்ற சிலர் இதை அப்படி விட்டுவிடுவதாக இல்லை. எப்படியாவது தங்களுக்குள் இருக்கும் விஷயங்களைக் கடத்திவிடத் துடிக்கிறார்கள்.
ஏ.வி. தனுஷ்கோடி வகுப்பு எடுக்கிறார். அவருக்கு 5 மொழிகள் தெரியும். தமிழ், ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, இந்தி. கூடவே பொருளியல், வணிகவியல் தெரியும். ஓவியம் தெரியும். புகழ்பெற்ற பல ஓவியக்காட்சிகளில் அவருடைய ஓவியங்கள் இடம்பெற்றிருக்கின்றன. நாடகம் தெரியும். நடிப்பு தெரியும். ‘மெட்றாஸ் பிளேயர்ஸ்’, ‘மேக்ஸ்முல்லர்பவன் தியேட்டர் குரூப்’பின் ஏராளமான ஆங்கில ஜெர்மன் நாடகங்களில் நடித்தவர் அவர். சில ஆங்கில பிரெஞ்சு படங்களிலும் நடித்திருக்கிறார். ‘கூத்துப்பட்டறை’யில் நாடகங்களை இயக்கியிருக்கிறார். ‘தி இந்து’, ‘ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ்’, ‘டிரஷர்’, ‘அசைட்’ ஆங்கிலப் பத்திரிகைகளில் பல ஆண்டுகள் நாடக விமர்சனங்கள் எழுதியிருக்கிறார். மொழிபெயர்ப்பு தெரியும். உலகின் உன்னதமான அதேசமயம் மிகச் சிக்கலான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் பிரான்ஸ் காஃப்காவின் ‘விசாரணை’யை ஜெர்மனிலிருந்து நேரடியாகத் தமிழுக்குக் கொண்டுவந்தவர் அவர்.
தனுஷ்கோடிக்கு இப்போது 78 வயதாகிறது. தனக்குத் தெரிந்ததில் எது ஒன்றைக் கற்றுத்தரவும் தயாராக இருக்கிறார். இதற்கு அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட வழி தனிவகுப்பு. தனுஷ்கோடியின் வகுப்புகள் வித்தியாசமானவை. ஒரு மணி நேரம் வகுப்பு என்றால், அந்த ஒரு மணி நேரமும் முழுக்க முழுக்க அந்த ஒரு மாணவருக்கே உரியது. ஒரு நாளைக்குக் குறைந்தது ஆறு மாணவர்களுடானாவது உரையா டுகிறார். “நம் ஒவ்வொருவரிடமும் சொல்லிக் கொடுக்க ஏதோ ஒன்று நிச்சயம் இருக்கும். அதைச் சொல்லிக்கொடுத்துவிடுவது கடமை.
என்னுடைய அப்பா ஏ.வி.லோகநாதன். நேர்மையான ஆட்சியர் என்று காமராஜரிடம் பெயரெடுத்தவர். மதிப்பீடுகள் இல்லாவிட்டால் வாழ்க்கைக்கே அர்த்தமில்லை என்று சொல்வார். மதிப்பீடுகள் என்கிற வார்த்தையே காலாவதியாகும் ஒரு காலகட்டத்தில் வாழ்கிறோம். எந்த வழியிலாவது பிள்ளைகளுக்கு மதிப்பீடுகளைச் சொல்லிகொடுத்துவிட வேண்டும்!” என்கிறார். வகுப்பெடுக்கும்போது அவரது மெல்லிய குரல் பல தருணங்களில் உடைகிறது. ஆனாலும், தளராமல் விஷயங்களைக் கடத்துகிறார் தனுஷ்கோடி.
காந்தியின் கடைசி நாட்களில் அவருடைய தனிச்செயலராக இருந்த வி.கல்யாணத்தைச் சமீபத்தில் சந்தித்தேன். வயது 95 ஆகிறது. வீட்டில் தனி மனிதராக இருக்கிறார். “இங்கே எல்லாமே நான்தான். நானே சமைப்பேன். நானே பாத்திரம் விளக்குவேன். நானே துவைப்பேன். நானே முடி வெட்டிக்கொள்வேன்” என்று உற்சாகம் கொப்பளிக்கப் பேசும் கல்யாணம் காலையில் 4 மணிக்கெல்லாம் எழுந்துவிடுகிறார். வீட்டில் தான் வளர்க்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுகிறார். பழுத்த இலைகளைப் பறிக்கிறார். உதிர்ந்த இலைகளைப் பெருக்கி உரமாக்குகிறார். காலை வேளை முழுவதும் அவருடைய செடிகளுக்கானது. எளிமையாக, அற்புதமாக சமைக்கிறார். “மூன்றே நிமிஷம். இங்கே கண்ணை மூடிக்கொண்டு நான் சமைப்பேன்” என்று சொல்லியவாறே அவர் நுழையும் சமையல் அறை கச்சிதமாக இருக்கிறது. பாத்திரங்களை எண்ணிவிடலாம்.
பிரிட்டீஷ் இந்தியாவில் அவர் அம்மா வாங்கிய குக்கரில் பிடியளவு அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளை அடுத்தடுத்த அடுக்குகளில் வைத்து வேகவிடுகிறார். போத்தலில் இருக்கும் ஊறுகாய் இணை சேரும்போது எளிய உணவின் சுவை எங்கோ கூட்டிச் செல்கிறது. “மகாத்மாகிட்ட கத்துக்கிட்ட அனுபவங்களைவிட நான் சொல்ல ஏதாவது வேண்டுமா என்ன?” என்று கேட்கும் கல்யாணம் பள்ளி கல்லூரி மாணவர் களைத் தேடித்தேடிச் சென்று பேசுகிறார். சந்தித்த நாளில்கூட அன்றைக்குத்தான் கேரளம் சென்று திரும்பியிருந்தார். “கண்ணூருக்குப் பள்ளிக்கூட நிகழ்ச்சி ஒன்றுக்காகப் போயிருந்தேன். பிள்ளைகள்கூடத்தான் அதிகம் பேச வேண்டும் என்பார் மகாத்மா” என்கிறார்.
எல்லோரும் கணேசலிங்கன்கள், தனுஷ் கோடிகள், கல்யாணங்களாக மாறி நம்மைத் தேடி வர முடியுமா? பெரியவர்களிடம் பேசுவோம்; பிள்ளைகளை அவர்களிடம் பேசவைப்போம்; தேச நலன் கருதியேனும்!
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
6 days ago
கருத்துப் பேழை
5 days ago