1977-ல் டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிக்கொண்டிருந்தார் ராஜ் நாராயண். பட்டியலின சமூகத்தினரைப் பற்றிப் பேசும்போதெல்லாம் ‘ஹரிஜன்’ எனும் வார்த்தையையே அவர் பயன்படுத்தினார். அவருக்குப் பின்னர் மேடையேறிய ஓர் இளம் பெண், “அம்பேத்கர் ஒரு முறைகூட உச்சரிக்காத அந்த வார்த்தையை நீங்கள் எப்படிப் பயன்படுத்தலாம்? அரசமைப்புச் சட்டத்தில் பட்டியலினத்தவர்கள் என்றுதானே குறிப்பிடப்பட்டிருக்கிறது?” என்று ராஜ் நாராயணை விளாசித் தள்ளினார்.
தீர்க்கமான அறிவும் துணிச்சலும் நிறைந்த அந்த 21 வயதுப் பெண்ணை வியந்து பார்த்துக்கொண்டிருந்தார் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த கன்ஷிராம். ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நட்சத்திரத்தை அவர் அடையாளம் கண்டது அப்போதுதான்!
அரசியல் பயணத்தின் தொடக்கப்புள்ளி
இளங்கலைப் பட்டப் படிப்புக்குப் பின்னர் எல்எல்பி படித்து, பிறகு பி.எட். முடித்துவிட்டு டெல்லியில் ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிவந்த அந்த இளம் பெண்தான் மாயாவதி. வேலை பார்த்துக்கொண்டே ஐஏஎஸ் தேர்வுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தவரை அரசியலுக்கு அழைத்து வந்தவர் கன்ஷிராம். டெல்லியில் மாயாவதியின் வீட்டுக்கே சென்று அவரை அரசியல் பாதைக்கு அழைப்பு விடுத்ததும், குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி மாயாவதி அரசியலுக்குள் நுழைந்ததும் வரலாறு.
‘தலித் ஷோஷித் சமாஜ் சங்கர்ஷ் சமிதி’ (டிஎஸ்4) எனும் பெயரில் கன்ஷிராம் நடத்திவந்த அமைப்பு 1984-ல் பகுஜன் சமாஜ் கட்சியாக உருவெடுத்தபோது அதில் மாயாவதியின் உழைப்புக்கும் பங்கு இருந்தது. கன்ஷிராமின் சிந்தனையும், மாயாவதியின் உரை வீச்சும் பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சிக்குத் தூண்களாக இருந்தன. பின்னர் உத்தரப் பிரதேச முதல்வராகப் பதவியேற்றதற்கு முன்னால் மாயாவதி எத்தனையோ தோல்விகளை, சவால்களைக் கடந்துவர வேண்டியிருந்தது.
1995-ல் சமாஜ்வாதி கட்சியுடனான உறவை முறித்துக்கொண்டு பாஜக உதவியுடன் முதல்வர் பதவிக்கு வந்தவர் அவர். அதற்கு முதல் நாள் லக்னோவில் அரசு விருந்தினர் மாளிகையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் அவர் மீது நடத்திய கொலைவெறித் தாக்குதல் அவர் எதிர்கொண்ட மிகப் பெரிய சோதனைகளில் ஒன்று. துணிச்சலுக்குப் பெயர் போன மாயாவதி அவற்றையெல்லாம் கடந்துதான் வெற்றிகளைச் சுவைத்தார்.
சிறந்த நிர்வாகி
ஐஏஎஸ் கனவில் இருந்த மாயாவதியிடம், “நீ அரசு நிர்வாகத்தில் அங்கம் வகித்தால் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடும் இடத்தில் இருப்பாய்” என்று நம்பிக்கை வார்த்தை சொல்லித்தான் கன்ஷிராம் அவரை அரசியலுக்கு அழைத்தார். நான்கு முறை உத்தரப் பிரதேச முதல்வராகப் பதவி வகித்த மாயாவதி, ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்குப் போதிய சுதந்திரம் கொடுப்பது, தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பது என (பிற கட்சிகளின் ஆட்சிகளை ஒப்பிட) சிறந்த நிர்வாகத்தை வழங்கினார். அவரது ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு ஒப்பீட்டளவில் கட்டுக்குள் இருந்தது. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் குறைந்திருந்தன. பொருளாதாரத்திலும் உத்தரப் பிரதேசம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டது. பட்டியலினச் சமூகத்தினருக்கு நிலம் வழங்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டினார் மாயாவதி.
அவர் மீது ஊழல் புகார்கள், வாரிசு அரசியல் குற்றச்சாட்டுகள் போன்றவை இருந்தாலும் உத்தரப் பிரதேச அரசியல் களத்தைப் பொறுத்தவரை அவரது வார்த்தைகளுக்கான மதிப்பு இன்னமும் குறையவில்லை. ஆனாலும், முன்பு போல அவரது அரசியல் பாதை தீர்க்கமானதாக இல்லை என்பதுதான் இன்றைக்கு அவர் மீது எழுந்திருக்கும் முக்கியமான விமர்சனம்.
எதிர்ப்பாக மாறிய எதிர்பார்ப்பு
இப்போதெல்லாம் ட்விட்டரில் எதையேனும் எழுதுவது அல்லது அரசை விமர்சித்துக் காணொலிகளை வெளியிடுவது என்பதைத் தாண்டி அவரது செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. ஒரு காலத்தில் கிராமம் கிராமமாக சைக்கிளில் சென்று கட்சிப் பணியாற்றிய மாயாவதி, கடந்த சில ஆண்டுகளாக கள அரசியலை விட்டே ஒதுங்கியிருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.
நாட்டையே உலுக்கியிருக்கும் ஹாத்ரஸ் சம்பவம் தொடர்பாக ட்வீட்டுகள், காணொலிகள் மூலம் யோகி அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தாலும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல மாயாவதி முன்வராதது பட்டியலினச் சமூகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்விஷயத்தில் மாயாவதி மவுனம் காப்பதாக ஜாதவ்கள் உள்ளிட்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த சிலர், ஆக்ராவின் ஜக்தீஷ்பூர் பகுதியில் அவரது உருவ பொம்மையை எரித்துத் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர்.
சமார் சமூகத்தைச் சேர்ந்தவரான மாயாவதி, ஹாத்ரஸ் சம்பவத்தில் உயிரிழந்த பெண் வால்மீகி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், பெரிய அளவில் எதிர்ப்பைக் காட்டவில்லை என்றெல்லாம்கூட விமர்சனங்கள் எழுகின்றன. 2014-ல் படாவ்னில் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தின்போதும்கூட, அப்போதைய அகிலேஷ் யாதவ் அரசைக் கண்டித்து மாயாவதி போராட்டத்தில் இறங்கவில்லை. இவை மாயாவதியின் மீதான போராளிப் பிம்பத்தைச் சிதைத்திருக்கின்றன.
கொள்கை ரீதியிலான சறுக்கல்
அதேசமயம், எப்போதும் களத்தில் இறங்கிப் போராடுவது மட்டுமே பகுஜன் சமாஜ் கட்சியின் உத்தி அல்ல என்றும், கொள்கை ரீதியிலான முன்னெடுப்புகளில்தான் மாயாவதியின் கவனம் இருக்கும் என்றும் அவரது ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். ஆனால், கருத்தியல் ரீதியிலான நடவடிக்கைகளை கன்ஷிராம் முன்னெடுத்ததுபோல், மாயாவதி மேற்கொள்ளவில்லை என்றும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அறிவுசார் புலத்தில் இயங்கிவருபவர்களுடன் மாயாவதி இணக்கம் காட்டவில்லை என்றும் விமர்சனங்கள் உண்டு.
பீமா கோரேகான் சம்பவம் தொடர்பாகவும், பிரதமர் மோடியைக் கொல்ல சதி செய்ததாகவும், சமூகச் செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்ப்டே கைது செய்யப்பட்டபோது நோம் சோம்ஸ்கி தொடங்கி ஜிக்னேஷ் மேவானி வரை பலரும் அதற்கு எதிராகக் குரல் எழுப்பினர். ஆனால், மாயாவதி தரப்பு மவுனமாகவே இருந்தது. உண்மையில், பகுஜன் சமாஜ் கட்சியின் அரசியல் சமரசங்கள் குறித்து முன்பு ஆனந்த் டெல்டும்ப்டே தெரிவித்திருந்த கருத்துகள் மாயாவதிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பீமா கோரேகான் சம்பவம் தொடர்பாக சுதிர் தவாலே, சுரேந்திர காட்லிங், ஷோமா சென் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மாயாவதி அறிக்கை வெளியிடவே செய்தார். ஆனால், அது உடனடி எதிர்வினையாக அமையவில்லை. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவந்த சமயத்தில்தான் அந்தப் பிரச்சினை பற்றி அவர் வாய் திறந்தார்.
“பட்டியலினச் சமூகத்தினருடன், இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தில் நலிந்த பிரிவினரை அணி திரட்டுவது சமூக அளவில் அவசியம்” என மத்திய அரசின் கொள்கை உருவாக்கங்களில் பெரும் பங்கு வகித்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், சமூகச் செயற்பாட்டாளருமான பி.எஸ்.கிருஷ்ணன் போன்றோர் சுட்டிக்காட்டியதை மாயாவதி அலட்சியம் செய்தார். இந்தியாவிலேயே பட்டியலினச் சமூகத்தினரை அணிதிரட்டி ஆட்சிக்கு வந்த ஒரே கட்சி பகுஜன் சமாஜ் கட்சிதான்.
‘பகுஜன்’ எனும் வார்த்தையே முன்னேறிய சமூகத்தினர் அல்லாத சாமானியர்களைத்தான் குறிக்கிறது. ஆனால், முன்னேறிய சமூகத்தினருடனான அரசியல் அணி சேர்க்கையில்தான் மாயாவதி அதிக ஆர்வம் காட்டினார். ஒரு கட்டத்தில் இந்த அணுகுமுறை, அவரை அரசியல் ரீதியான தோல்விக்கு இட்டுச் சென்றதுடன் சமூக அளவிலும் பல பின்னடைவுகளை ஏற்படுத்திவிட்டது.
குறைந்துவரும் எதிர்ப்புணர்வு
கடந்த சில காலமாகவே மோடி தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்த விமர்சனங்களை மாயாவதி குறைத்துக் கொண்டுவிட்டதாக விமர்சிக்கப்படுகிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டக்கூறு ரத்து, முத்தலாக் தடை, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என மோடி அரசு கொண்டுவந்த பல மசோதாக்களை பகுஜன் சமாஜ் ஆதரித்திருக்கிறது. காஷ்மீருக்கு எதிர்க் கட்சியினர் செல்ல முயற்சித்ததையும் விமர்சித்தார் மாயாவதி. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகப் பேசிய பகுஜன் சமாஜ் எம்எல்ஏவை இடைநீக்கம் செய்தார். எனினும், அச்சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்பாடு செய்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்தார்.
சீனாவுடனான பிரச்சினை தொடர்பாக மத்திய அரசைக் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துவந்த நிலையில், “இவ்விஷயத்தில் காங்கிரஸ் பக்கம் நிற்க எனக்கு சம்மதம் இல்லை. தேசப் பாதுகாப்பு விஷயம் என்பதால் நான் பாஜகவுக்கே ஆதரவளிக்கிறேன்” என்று சொன்னார். தேசத்தையே உலுக்கிய பிரச்சினைகளின்போதும், பாஜக அரசை நோக்கி விரல் நீட்டாத மாயாவதி காங்கிரஸ் மீதே விமர்சனங்களை வைத்துக்கொண்டிருந்தார்.
நான்கே மணி நேர அவகாசத்துடன் நாடு தழுவிய பொதுமுடக்கத்தைப் பிரதமர் மோடி அறிவித்த கணம் முதல், புலம்பெயர்த் தொழிலாளர்கள் எதிர்கொண்ட இன்னல்கள் நாடு முழுவதும் பேசுபொருளாயின. மோடி அரசு குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், பாஜகவைவிடவும் காங்கிரஸ்தான் இதில் அதிகம் கண்டிக்கப்பட வேண்டிய கட்சி என்று குற்றம்சாட்டினார் மாயாவதி.
சுதந்திரத்துக்குப் பின் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், சொந்த ஊரைவிட்டு வெளி மாநிலங்களுக்குச் சென்று வேலை பார்க்கும் சூழலுக்கு மக்களைத் தள்ளிவிட்டது காங்கிரஸ்தான் என்பது அவரது விமர்சனம். பொதுமுடக்க அறிவிப்பைத் தகுந்த முன்னேற்பாடுகளுக்குப் பின்னர் வெளியிடாத மத்திய அரசைக் கண்டிக்காமல், காங்கிரஸ் மீது அவர் குற்றம்சாட்டியது பலருக்கும் வியப்பளித்தது.
காங்கிரஸுடனான கசப்பு
பட்டியலின சமூகத்தினர், சிறுபான்மையினர் எனப் பல்வேறு தரப்பினரின் வாக்குகள் ஒரு காலத்தில் காங்கிரஸுக்கே கிடைத்துவந்தன. உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் செல்வாக்கு இழந்துவிட்ட நிலையில், அந்த வாக்குகள் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளுக்குச் சென்றுவிட்டன. இந்நிலையில் காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெறுவது பகுஜன் சமாஜ் கட்சிக்கான வாக்கு வங்கியை இழக்கச் செய்யும் என்பதாலேயே அக்கட்சியை மாயாவதி கடுமையாக விமர்சிக்கிறார் என்று அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
மக்கள் பிரச்சினைக்காக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி சாலையில் இறங்கிக் குரல் கொடுக்கும் தருணங்களில் மாயாவதி அதைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். “விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த சகோதரிகள், மகள்கள் மீது நிகழ்த்தப்படும் அராஜகங்களைப் பயன்படுத்தி, சில கட்சிகள் தங்கள் அரசியல் லாபத்துக்காக நாடகம் நடத்துகின்றன. ஹாத்ரஸ் சம்பவம் இதற்கு உதாரணம்” எனும் வார்த்தைகள் மூலம் மாயாவதி மறைமுகமாக விமர்சித்திருப்பது காங்கிரஸைத்தான்.
யோகி அரசைக் காட்டாட்சி என்று விமர்சித்துக் கொண்டிருந்த மாயாவதி, காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானிலும் காட்டாட்சி நடப்பதாக விமர்சித்திருக்கிறார். காங்கிரஸ், பாஜக என இரண்டு கட்சிகளின் ஆட்சிகளும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் பங்களிக்கவில்லை என்று விமர்சிப்பதன் மூலம் இரு கட்சிகளையும் சம தொலைவில் வைத்திருப்பதாகக் காட்ட முயல்கிறார் மாயாவதி.
பீம் ஆர்மியும் பிரச்சினைகளும்
பட்டியலினச் சமூகத்தினரின் ஆதரவுத் தளத்தை மாயாவதி இழந்துவரும் நிலையில், பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் போன்றோர் அதைக் கைப்பற்றுவார்கள் என்று கணிக்கப்படுகிறது. களப் போராட்டங்களில் மிகத் தீவிரமாக இயங்கிவரும் சந்திரசேகர் ஆசாத் ஊடகங்களை மிகத் திறமையாகக் கையாள்வதன் மூலமும் கவனம் ஈர்க்கிறார். ஆனால், “பட்டியலின சமூகத்திலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட தலைவர்கள் உருவாவது ஆரோக்கியமான விஷயம்தானே? எதற்காக மாயாவதியையும் சந்திரசேகர் ஆசாத்தையும் எதிர் எதிராக நிறுத்தும் வகையில் ஊடகங்கள் கட்டமைக்கின்றன?” என்று சிலர் வாதிடுகின்றனர். அது ஏற்றுக்கொள்ளத்தக்க வாதம் என்றாலும் இருவரும் இதுவரை பொதுப் பிரச்சினைகளில் ஒன்றிணைந்து இயங்க முன்வரவில்லை எனும் விமர்சனத்தைத் தவிர்க்கவே முடியாது.
ஆரம்பம் முதலே பீம் ஆர்மியை மாயாவதி கடுமையாகச் சாடிவருகிறார். “பகைக் கட்சிகளின் கைப்பாவையாகச் சிலர் செயல்படுகிறார்கள். அம்பேத்கரின் இயக்கத்துக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று அவர் விமர்சிக்கிறார். போராட்டம் நடத்திக் கைதாவதன் மூலம் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கிறார் என்றுகூட சந்திரசேகர் ஆசாதை மாயாவதி விமர்சித்திருக்கிறார்.
ஒருமுறை, சந்திரசேகர் ஆசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பிரியங்கா காந்தி அவரைச் சென்று சந்தித்தது மாயாவதிக்கு அதிருப்தியை உருவாக்கியது. டெல்லி ஜந்தர் மந்தரில் கன்ஷிராமின் பிறந்தநாளை ஒட்டி சந்திரசேகர் ஆசாத் நடத்திய பொதுக்கூட்டத்தில் கன்ஷிராமின் சகோதரி ஸ்வரன் கவுர் கலந்துகொண்டார். இதுவும் தனக்கு எதிரான சமிக்ஞை என்றே மாயாவதி எடுத்துக்கொண்டார். பின்னர் அவர் பீம் ஆர்மி கட்சியில் சேருவதாகச் செய்திகள் வெளியானபோதும் மாயாவதியின் வீழ்ச்சி குறித்த ஆரூடங்கள் வெளியாகின. கன்ஷிராமின் இறுதிக் காலத்தில் அவரைச் சந்திக்க விடாமல் அவரது குடும்பத்தினரை மாயாவதி தடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அவர் மீது கன்ஷிராமின் குடும்பத்தினருக்கு அதிருப்தி உண்டு என்பது கவனிக்கத்தக்கது.
மீள்வது சாத்தியமா?
தற்போதைக்கு பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலிலும், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடக்கவிருக்கும் இடைத் தேர்தல்களிலும் கவனம் செலுத்துகிறார் மாயாவதி. பிஹாரில் மஜ்லிஸ்-இ-இத்ஹாதுல் முஸ்லிமன் கட்சி, ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி ஆகியவற்றுடன் இணைந்து மூன்றாவது அணியை உருவாக்கியிருக்கிறார். எனினும், இந்த முயற்சி எந்த அளவுக்குக் கைகொடுக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
“எனது மறைவுக்குப் பின்னரும் எனது பணிகள் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். நான் உயிரோடு இருக்கும்போதே அந்தப் பொறுப்பை மாயாவதிக்கு வழங்குகிறேன்” என்று 2001-ல் பொதுமேடையில் கன்ஷிராம் அறிவித்தார். “கன்ஷிராம் எனக்கு அளித்த பொறுப்பை நான் நேர்மையுடன் முன்னெடுத்துச் செல்வேன்” என்று மாயாவதியும் உறுதியளித்தார். ‘கன்ஷிராமால் நிறைவேற்ற முடியாத விஷயங்களை மாயாவதி நிறைவேற்றுவார்’ என்பதே பகுஜன் சமாஜ் கட்சியினரின் முழக்கமாகவும் இருந்துவருகிறது.
ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களை ஆட்சி அதிகாரத்தில் இடம்பெறச் செய்வதுதான் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பதே கன்ஷிராமின் லட்சியம். சீரிய சிந்தனையும், செயல்வேகமும் கொண்ட இளம் தலைவராக மாயாவதியை அடையாளம் கண்ட கன்ஷிராம் தனது லட்சியம் நிறைவேறும் என்பதில் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த லட்சியத்தை நோக்கிய பயணத்தில் மாயாவதியின் சாதனைகள் குறைத்து மதிப்பிடத்தக்கவை அல்ல என்றாலும், அவர் இன்னமும் சாதிக்க இன்றைய அவரது வேகமும் வியூகங்களும் உதவாது என்பதே உண்மை!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago