மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் மோசமான உதாரணமாகியிருக்கிறது சீனா
சீனஅரசின் ஒரு குழந்தைக் கொள்கை சீக்கிரமே முடிவுக்கு வந்துவிடும் என்று தோன்றுகிறது. முன்னதாக 13-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் தொடக்கத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போதைய சீனப் பொருளாதாரத் தேக்கம் அதற்கு முன்னதாகவே, அந்த அறிவிப்பு வெளியாவதற்கான சாத்தியங்களைக் கட்டியம் கூறுகிறது.
பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள்தொகையைக் கட்டுக்குள் கொண்டுவருவது எனும் தாமஸ் ராபர்ட் மால்துஸின் மக்கள்தொகைக் கொள்கை பெரும்பாலான நாடுகளால் சுவீகரித்துக்கொள்ளப்பட்டது. எனினும், சீன கம்யூனிஸ்ட் அரசு 1979-ல் அறிவித்த ஒரு குழந்தைக் கொள்கை முன்னுதாரணமே இல்லாதது. மேலும், அதைச் செயல்படுத்த சீனா கையாண்ட வழிமுறைகள் எல்லோரையும் உறையவைத்தன.
ஒரு குழந்தைக் கொள்கையில் சில விதிவிலக்குகள் உண்டு. ஆனால், பெரும்பான்மை மக்களுக்கு அவற்றால் எந்தப் பயனும் இல்லை என்கிறார்கள். இந்த விஷயத்தில் சீனப் பெண்களுக்கு அவர்களுடைய கருப்பையின் மீது உரிமையே கிடையாது என்பதுதான் உண்மை. சீனப் பெண்கள் மாதவிடாய் சுழற்சியை அவரவர் பகுதியில் இருக்கும் சுகாதாரத் துறை அலுவலரிடம் தெரிவிக்க வேண்டியது கட்டாயம். சுகாதாரத் துறையினர் சந்தேகப்பட்டால், பரிசோதனை நடக்கும். விதி மீறப்பட்டிருப்பது தெரியவந்தால், கட்டாயக் கருக்கலைப்பு நடக்கும். 9 மாத, 8 மாதக் கர்ப்பங்கள் எல்லாம் கலைக்கப்படும் கொடூரம் சீனாவில் சகஜம். ஒரு குழந்தைத் திட்டத்தின் கீழ் 33.6 கோடி கருக்கலைப்புகள், 1.96 கோடி குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சைகளைச் செய்திருப்பதாகச் சில ஆண்டுகளுக்கு முன் சொன்னது சீன சுகாதாரத் துறை. இந்த அதிகாரபூர்வப் புள்ளிவிவரத்தைக் காட்டிலும் உண்மையான எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதேசமயம், இந்தக் காட்டுமிராண்டிக் கொள்கை அமலாக்கமெல்லாம் சாமானியர்களுக்குதான். ஒரு குழந்தைக் கொள்கையை மீறி குழந்தை பெற்றுக்கொள்பவர்கள், அவர்களுடைய ஆண்டு வருமானத்தைப் போல் 10 மடங்கு வரை அரசுக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்று ஒரு விதி உண்டு. பணக்காரர்கள் வெளியேற இந்த விதி ஓட்டை போதுமானதாக இருக்கிறது.
எதிர்பாராத எதிர்விளைவுகள்
சீனத்தின் இந்த ஒரு குழந்தைக் கொள்கை, அது எதிர்பாரா பல எதிர்விளைவுகளையும் உண்டாக்கியது. ஒரு சமூகத்தில் இயல்பாகக் கலந்து விரிவடையும் குழந்தைகள் இளைஞர்கள் - நடுத்தர வயதினர் - முதியோர் எனும் சமவிகித மக்கள்தொகை வளர்ச்சி சீனத்தில் நொறுங்கிவிட்டது. முன்பு நர்சரிப் பள்ளிகள் நடத்தப்பட்ட பல கட்டிடங்கள் இன்றைக்கு முதியோர் விடுதிகளாக மாறுகின்றன. ஒரு குடும்பம் ஒரு குழந்தைச் சூழலில், ஆண் பிள்ளை மோகம் கூடுதல் நிர்ப்பந்தங்களை உண்டாக்கியது. விளைவு, பெண் சிசுக் கொலைகள் அதிகம். இன்றைக்கு, சீனத்தில் 119 சிறுவர்களுக்கு 100 சிறுமிகளே இருக்கின்றனர். எல்லாவற்றையும்விட மோசம், சீனத்தின் இரு தலைமுறைகளுக்கு சகோதரப் பகிர்வு என்பதே அந்நியமாகிவிட்டது. குறிப்பாக இப்போது பிறந்திருக்கும் தலைமுறைக்கு அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா யாரும் கிடையாது.
சமூகவியலாளர்கள் இதையெல்லாம் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் சீன அரசு அசையவில்லை. ஆனால், சந்தைத் தேவை அதை இப்போது உலுக்குகிறது. சீன உற்பத்தித் துறைக்குத் தேவைப்படும் தொழிலாளர்களுக்கான எண்ணிக்கையில் மூன்றாவது ஆண்டாகத் தொடர்ந்து தட்டுப்பாட்டை எதிர்கொள்கிறது சீனா. பொருளாதாரம் தேக்கமடையும் நிலையில், ஒரு குழந்தைக் கொள்கையை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவர அரசு விரும்புகிறது. அரசின் முடிவை மக்கள் வரவேற்கிறார்கள்; அதேசமயம், இளைய தலைமுறையினர் எத்தனை பேர் இரண்டாவது பிள்ளைகளைப் பெற்றெடுக்க விரும்புவார்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால், அரசு இதுவரை அவர்களிடம் உருவாக்கியிருக்கும் பார்வை பிள்ளைகளைச் சுமையாகக் கருத வழிவகுத்துவிட்டதைக் கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.
இந்தியாவிலும் ‘கடும் நடவடிக்கை’ தேவையா?
இந்தியாவில் மக்கள்தொகை என்பது ஓட்டு அரசியல் விளையாட்டுடன் தொடர்புடையது. வழக்கமாக, மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் வெளியாகும்போதெல்லாம் இந்து முஸ்லிம் எண்ணிக்கைகளில் வரும் மாறுபாட்டை முன்வைத்து, “முஸ்லிம்கள் எண்ணிக்கை பெருகுகிறது. முஸ்லிம்களைப் போல இந்துக்களும் நிறையப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று கொளுத்திப்போடுவது சங்கப் பரிவாரங்களின் வழக்கம். இந்த முறை வார்த்தைகளை மாற்றிப்போட்டு அறைகூவல் விடுத்திருக்கிறது சிவசேனா. “இந்துக் குடும்பங்களுக்கு நான்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவோம்” என்று பேசியிருக்கும் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியாவுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறது சிவசேனா. “மக்கள்தொகையை அதிகரித்துவிட்டால் மட்டுமே பலம் அதிகரித்துவிடாது; வளம் முக்கியம்; அதற்குக் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைக் கடுமையாக அரசு செயல்படுத்த ஆர்எஸ்எஸ் நிர்ப்பந்திக்க வேண்டும்” என்று சொல்லியிருக்கிறது. இதில் ‘கடும் நடவடிக்கை’ என்பதன் பொருள் காலங்கலாமாக சங்கப் பரிவாரங்கள் மேடையில் விளக்கும் ‘சீன மாதிரி’தான்.
இந்தியா தன் எதிர்காலத்தைத் திட்டமிட ஒரு எல்லைக்குட்பட்ட மக்கள்தொகையைத் திட்டமிடுவது முக்கியமானது. எனினும், அதற்குக் ‘கடும் நடவடிக்கைகள்’ தேவையில்லை; தீவிரமான தொடர் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுப்பதே போதுமானது.
உலகிலேயே மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக்காகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடு சீனா. ஆனால், இன்றைக்கு வரை மகப்பேறு விகிதத்தில், பல நாடுகளை சீனாவால் முந்த முடியவில்லை. சீனாவின் மகப்பேறு விகிதம் இப்போது 1.66%. அதாவது, சராசரியாக ஒரு சீனப் பெண் 1.64 பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறார் என்றால், கனடா பெண்ணுக்கு 1.61 பிள்ளைகள், ஸ்விஸ் பெண்ணுக்கு 1.52 பிள்ளைகள், இத்தாலி பெண்ணுக்கு 1.4 பிள்ளைகள், ஜெர்மனி பெண்ணுக்கு 1.38 பிள்ளைகள், கிரேக்கப் பெண்ணுக்கு 1.34 பிள்ளைகள், போலந்து பெண்ணுக்கு 1.30 என்று செல்கிறது விகிதம். இந்த நாடுகளெல்லாம் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த ‘கடும் நடவடிக்கை’களைக் கையாண்டவை அல்ல.
பெரும்பான்மை சிறுபான்மை அரசியல்
இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் மதம்சார் எண்ணிக்கைகளை ஒவ்வொரு சமூகமும் அதனதன் எதிர்காலச் சூழலோடு பொருத்தி, கணக்கிட்டுப் பார்ப்பது இயல்பானது. 2001 கணக்குபடி, இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 121.09 கோடி. இதில் இந்துக்கள் 96.63 கோடி (79.8%), முஸ்லிம்கள் 17.22 கோடி (14.2%), கிறிஸ்தவர்கள் 2.78 கோடி (2.3%), சீக்கியர்கள் 2.08 கோடி (1.7%), பவுத்தர்கள் 0.84 கோடி (0.7%), சமணர்கள் 0.45 கோடி (0.4%), ஏனையோர் 0.79 கோடி (0.7%), எந்த மதத்தையும் சாராதோர் எனக் குறிப்பிட்டிருப்பவர்கள் 0.29 கோடி (0.2%).
நாட்டின் மக்கள்தொகையில் இந்துக்களின் விகிதம் முதல் முறையாக 80%-க்கும் கீழே வந்திருப்பதைத்தான் பெரிய செய்தியாகப் பரப்புகின்றன சங்கப் பரிவாரங்கள். நாம் அதிகம் கவனிக்க வேண்டிய நேர்மறையான விஷயம், எல்லாச் சமூகங்களிலுமே மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்துகொண்டிருக்கிறது. சுதந்திர இந்தியாவில், 1961-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது 20.76% ஆக இருந்த இந்துக்களின் வளர்ச்சி விகிதம் இப்போது 16.76% ஆகக் குறைந்திருக்கிறது என்றால், அன்றைக்கு 32.49% ஆக இருந்த முஸ்லிம்களின் வளர்ச்சி விகிதம் இன்றைக்கு 24.60% ஆகக் குறைந்திருக்கிறது. கிறிஸ்தவர்கள் (15.5%), சீக்கியர்கள் (8.4%), பவுத்தர்கள் (6.1%), சமணர்கள் (5.4%) என ஏனைய சமூகங்களும் ஆக்கபூர்வமான பாதையை நோக்கியே நகர்கின்றன.
கச்சிதமான குடும்ப அமைப்பு வளமான வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை எல்லாச் சமூகங்களுமே உணர்கின்றன. சமீபத்தில் நடந்த தனிப்பட்ட கலந்துரையாடல் ஒன்றில், “கச்சிதமான குடும்ப அமைப்புதான் இந்துக்களின் வாழ்நிலையில் பெரிய மேம்பாட்டைக் கடந்த 60 ஆண்டுகளில் உருவாக்கியிருக்கிறது” என்று வெளிப்படையாகச் சொன்னார் ஒரு இந்து தலைவர். “கேரள முஸ்லிம்கள் வாழ்நிலைக்கும் உத்தரப் பிரதேச முஸ்லிம்கள் வாழ்நிலைக்கும் உள்ள வித்தியாசம் எங்களுக்கும் புரியாமலா இருக்கிறது?” என்று கேட்டார் அங்கிருந்த ஒரு முஸ்லிம் தலைவர். “என் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதில் அல்ல; அவர்கள் எப்படியான வாழ்நிலையில் இருக்கிறார்கள்” என்பதே இன அரசியல் பேசுபவர்களையும்கூட ஈர்ப்பது ஆரோக்கியமானது.
வறுமையும் ஏழ்மையும் அறியாமையும் எங்கெல்லாம் சூழ்ந்திருக்கின்றனவோ அந்தச் சமூகங்களில்தான் குழந்தைப்பேறு அதிகமாக இருக்கிறது. உலகிலேயே அதிகமாக நைஜரும் (7.4%), சோமாலியாவும் (6.12%) மகப்பேறு விகிதத்தில் உச்சத்தில் இருப்பது எதை உணர்த்துகிறது? கல்வியும் விழிப்புணர்வும் எல்லோரையுமே யோசிக்கவைக்கும். இந்தியாவின் மகப்பேறு விகிதம் இப்போது 2.5%. இது 2% ஆகக் குறைந்தாலே போதும். இந்தியா அறிவிக்காத ‘சந்தோஷமான இரு குழந்தைகள் குடும்பக் கொள்கை’ ஒரு முன்னுதாரணமாக மாறும்!
- சமஸ்,
தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago