அடால்ஃப் ஹிட்லரை ஞாபகப்படுத்தக் கூடியவை ‘ ஃபோக்ஸ் வேகன்’ கார்கள். ஜெர்மனில் ‘ஃபோக்ஸ்வேகன்’ என்றால், மக்களுடைய வாகனம் என்று அர்த்தம்.
சீமான்கள் மட்டுமே கார் வைத்திருந்த காலம். சிறிய ரக கார்களை உருவாக்கும் முயற்சிகள் 1920-களில் தொடங்கின என்றாலும், ஹிட்லரால் புதிய போக்கு உருவானது. அமெரிக்காவைப் போல ஜெர்மனியிலும் வீட்டுக்கு ஒரு கார் சூழலை உருவாக்க நினைத்தார் ஹிட்லர். இரு பெரியவர்கள், மூன்று குழந்தைகளுடன் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பயணிக்கக் கூடியதாக ஒரு கார் - அதுவும் 999 ரெய்க்ஸ் விலைக்குள். ஜெர்மனியின் வாகன உற்பத்தித் துறை + பொருளாதாரத்தில் உத்வேகத்தை உருவாக்குவதோடு, உள்நாட்டில் நாஜி கட்சியின் செல்வாக்கை மேலே கொண்டு செல்லவும் இத்திட்டம் உதவும் என்பது கணக்கு.
1937-ல் இப்படித்தான் ‘ஃபோக்ஸ்வேகன்’ உருவாக்கப்பட்டது. இதற்கென ஒரு சேமிப்புத் திட்டமும்கூட அறிமுகப்படுத்தப்பட்டது. 1939-ல் புதிய கார் உருவானது. கூடவே யுத்த சூழலும் ஊழல்களும். தொழிற்சாலைகள் யுத்தத் தளவாட உற்பத்தி ஆலைகளாக மாற, ‘வதைமுகாம் அடிமைகள்’ கொடூரமாக வேலை வாங்கப்பட்ட இடங்களில் ‘ஃபோக்ஸ்வேகன்’ஆலையும் அடக்கம். யுத்தத் துக்குப் பின் எல்லாம் சீர்குலைந்தன. மீண்டும் தலையெடுத்த ‘ஃபோக்ஸ்வேகன்’ 1950-களில் அமெரிக்கச் சந்தையில் கால் பதித்தது. அடுத்த 10 ஆண்டுகளில், தனக்கென அங்கு ஒரு சந்தையை உருவாக்கிக்கொண்டது. கடந்த முக்கால் நூற்றாண்டில், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட கார்களை விற்று, உலகின் ஏனைய நிறுவனங்களை எல்லாம் பின்தள்ளி, ‘டொயாட்டா’வுக்கு அடுத்து பெரிய கார் நிறுவனம் எனும் இடத்துக்கு வந்தது; 2018-ல் முதலிடத்தை அடைவது இலக்கு.
இந்நிலையில்தான் எந்த அமெரிக்கச் சூழலை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதோ, எந்த அமெரிக்காவைத் தனது வலுவான சந்தை களில் ஒன்றாக உருமாற்றிக்கொண்டதோ, அதே அமெரிக்காவின் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை’யால் (இபிஏ) பேரிடிக்கு ஆளாகியிருக்கிறது ‘ஃபோக்ஸ்வேகன்’. மாசுக் கட்டுப்பாட்டு வரையறை களை எட்டாத தனது டீசல் கார்களில், தரக் கட்டுப்பாட்டில் இருப்பதுபோல போலியாகக் காட்டும் மென்பொருட்களை நிறுவியிருந்திருக்கிறது ‘ஃபோக்ஸ்வேகன்’. இந்த முறைகேட்டைக் கண்டறிந்த அமெரிக்கச் சுற்றுச்சூழல் முகமை, அந்நிறுவனத்துக்கு ரூ. 1.17 லட்சம் கோடி அபராதம் விதித்திருக்கிறது.
செய்தி வெளியான முதல் நாள் ‘ஃபோக்ஸ் வேகன்’பங்குகளின் மதிப்பு 20% வீழ்ந்தது; அடுத்த நாள் மேலும் 17% வீழ்ந்தது. முதலில் கள்ள மவுனம் சாதித்த ‘ஃபோக்ஸ்வேகன்’ அடுத்து, அமெரிக்காவில் நிறுவனத்தின் செயல்பாடு முடக்கப்படலாம் எனும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டிருக்கிறது. தலைமைச் செயல் அதிகாரி மார்ட்டின் வின்டர்கோன் பதவி விலகியிருக்கிறார்.
இந்நடவடிக்கைக்குப் பின்னணியில், அமெரிக்க அரசுக்கு என்னென்ன உள் ஆதாய நோக்கங்கள் இருக்கின்றன என்பது தெரியவில்லை; இருக் கலாம். ஆனாலும்கூட, மிகத் துணிச்சலான, மக்கள் - சூழல் நலன்சார் நடவடிக்கை இது. அமெரிக்கர்களிடம் பாராட்ட வேண்டிய விஷயமும்கூட. உலகையெல்லாம் தன் நாட்டின் - தம் தொழில் நிறுவனங்களின் ஏகாதிபத்தியத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டாலும், குறைந்தபட்சம் தன் நாட்டின் மீதும் மக்கள் நலன் மீதும் அமெரிக்கர்கள் கொண்டிருக்கும் கரிசனம் கவனிக்க வேண்டியது.
அமெரிக்காவைப் போலத் தொழில் துறையை வளர்த்தெடுப்பதற்காக தேசத்தின் உடல், பொருள், ஆன்மா என அத்தனையையும் அடகுவைக்கத் தலைப்படும் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் அரசியல்வாதிகள் எந்த அளவுக்குச் சூழல் பாதுகாப்பைப் பொருட்படுத்துகிறார்கள்?
அமெரிக்கா எப்போது தொழில் துறையை உத்வேகப்படுத்த ஆரம்பித்ததோ, அதே காலகட்டத்தில் சூழலியல் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க ஆரம்பித்தது. சுயேச்சையான சூழல் பாதுகாப்பு அமைப்பை வலியுறுத்தி 1950-களில் ஒலிக்கத் தொடங்கிய குரல்களுக்கு அது ஆற்றிய எதிர்வினையே 1970-ல் அதிபர் நிக்ஸன் ஆட்சியில் உருவாக்கப்பட்ட ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை’. ஆண்டுக்கு ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு, 16,000 + நிரந்தர ஊழியர்கள் + அதற்கு இணையான ஒப்பந்த ஊழியர்கள், பரந்து விரிந்த ஆய்வகங்கள், கடல் ஆய்வுகளுக்குச் சொந்தக் கப்பல் என ஒரு பெரிய துறையாகச் செயல்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை ஒரு விதத்தில் இந்தியா போன்ற நாடுகளுக்கு முன்மாதிரி.
அமெரிக்காவில் காற்று, நீர், நில மாசில் தொடங்கி கதிரியக்க அபாயம் வரை கண்காணிக்கும் / ஒழுங்குபடுத்தும் இந்த அமைப்புக்கு அமெரிக்க நாடாளுமன்றம் இன்னும் போதுமான அதிகாரங்களை வழங்கவில்லை என்ற குறை அமெரிக்கர்களிடம் உண்டு. ஆனால், அதன் கையில் இப்போது இருக்கும் அதிகாரமே எத்தகையது என்பதற்கு உதாரணம் ‘ஃபோக்ஸ்வேகன்’ விவகாரம். வெளிநாட்டு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால், சர்வதேச உறவுகள் பாதிக்கப்படும், அந்நிய முதலீடுகள் குறைந்துவிடும் என்றெல்லாம் பயந்து ‘யூனியன் கார்பைடு’ நிகழ்த்திய போபால் படுகொலைகள் முதல் ‘நோக்கியா’, ‘வோடஃபோன்’ நிகழ்த்திய பொருளாதார மோசடிகள் வரை எல்லாவற்றிலும் கை கட்டி வாய் பொத்திப் பார்க்கும் இந்திய அரசாங்கத்தோடு ஒப்பிட்டால், அமெரிக்கர்கள் எவ்வளவு முன்னே இருக்கிறார்கள்!
சுதந்திரத்துக்கு மூன்று தசாப்தங்களுக்குப் பின், அதுவும் போபால் பயங்கரத்துக்குப் பின்புதான் நம் ஆட்சியாளர்கள் சூழல் சீர்கேடு எனும் வார்த்தைகளையே காதின் உள்ளே அனுமதித் தார்கள். பின்னரும் நாம் இயற்றிய சட்டங்கள் புத்தகங்களுக்குள்ளேயே தூங்கவைக்கப்பட்டன. சுற்றுச்சூழலியலாளர்களின் தொடர் குரல்களின் விளைவாக உச்ச நீதிமன்றம், “இந்தியாவிலும் ஒரு சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையை 2014-க்குள் உருவாக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.
2014-ல் பொதுத் தேர்தல். குஜராத் முதல்வராக இருந்தபோது தொழில் வளர்ச்சியின் பெயரால் சுற்றுச்சூழல் பாதுகாப்பை அலட்சியப்படுத்தியவர் மோடி. பிரதமரான பின் அவருடைய நோக்கப்படி, சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நாட்டின் முக்கியமான பாதுகாப்புச் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய டி.எஸ்.ஆர்.சுப்ர மணியன் குழுவை நியமித்தார். இரு மாதங்களில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது அக்குழு. அந்த அறிக்கை என்ன சொல்கிறது; அரசின் போக்கு எப்படியிருக்கிறது என்பதற்கு ரந்தீப் சர்ஜிவாலா விமர்சனத்தின் ஒரு வரி போது மானது: “இந்தியா 60 ஆண்டுகளாக உருவாக்கிய ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கட்டமைப்பையும் அடித்து நொறுக்கி பெரு நிறுவனங்களின் கையில் எல்லாவற்றையும் ஒப்பளிக்க 60 நாட்களில் யோசனை தெரிவித்திருக் கிறது இந்த அறிக்கை.”
தொடர்ந்து ஏற்பட்ட கடும் எதிர்ப்புகளால் “சுற்றுச் சூழல் பாதுகாப்பு முகமை உருவாக்கத்தில் அவசரப் படப்போவதில்லை” என்று தற்காலிகமாக இந்த விவகாரத்தைத் தள்ளிப்போட்டிருக்கிறது அரசு.
ஒவ்வொரு நாளும் தொழில் வளர்ச்சியின் பெயரால் சராசரியாக 333 ஏக்கர் வனப் பரப்பை இழந்துகொண்டிருக்கும், ஆண்டு உற்பத்தி மதிப்பில் 5% இழப்பைச் சூழல் கேடுகளால் பறிகொடுக்கும் நாடு இந்தியா! நாட்டின் பிரதமர் மோடி இப்போது, தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் நியூயார்க், கலிஃபோர்னியா என்று சுற்றும் மோடி, வாஷிங்டனில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் அலுவலகத்துக்கும் அவசியம் போக வேண்டும். ஜனநாயகம், வளர்ச்சி எனும் வார்த்தைகளுக்குள் உண்மையில் எத்தனை அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன என்பதை அவருடைய அரசு இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும்!
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago