மோடி உதிர்க்கும் முத்துக்கள்

By வாஸந்தி

மாற்றம் நிகழும்-அது மிக இயல்பாக… மழை பொழிவதுபோல!

அவர் உலக நாயகன் என்பதில் சந்தேகமில்லை. பிறந்த நாட்டில் இருக்கும்போது, அவர் மூடின முத்து - அதாவது தேர்தல் பிரச்சார மேடையில் நிற்காத நேரத்தில். மூடிய அறைக்குள் அமர்ந்து ‘மன் கீ பாத்’ சொற்பொழிவை ஒலிப்பதிவு செய்யாத நேரத்தில்… மக்கள் மன்றத்தில் என்னதான் அமளி நடக்கட்டுமே - முக்கியத் துறையின் அமைச்சர் பற்றி சர்ச்சை எழட்டுமே, மாநில பாஜக அரசுகளின் ஊழல்களைப் பற்றி புகார்கள் வெடிக்கட்டுமே - ஊஹும் அதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாததுபோல கண்ணுக்குத் தெரியாமல் போவார். அவரது அமைச்சரவையில் உள்ள சில பல உருப்படிகள் சகட்டுமேனிக்குச் சிறுபான்மையினரை அவமதிக்கும் வகையில் அவதூறு பேசி உளறட்டுமே - அவர் தாமரை மேல் ஒட்டாத நீர் - பத்மபத்ர ந வாம்பஸா… பல்கலைக்கழக உயர் நியமனங்கள், புனே ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் அமர்த்தப்பட்ட தகுதியற்ற தலைவர் பற்றிய விவகாரம், அதை எதிர்க்கும் மாணவர்களின் போராட்டம்... நாடு முழுவதும் அறிஞர்கள் தெரிவிக்கும் விமர்சனங்கள் - எதுவும் அவரது செவியில் விழாது. அவர் எட்டாத உயரத்தில் இருப்பவர். தந்தக் கோபுரத்தில். அங்கிருந்து அவரது பார்வைக்குக் காலடி மண் தெரிய வாய்ப்பில்லை. அவரது பார்வையில் படுவது அகன்று விரிந்த கடல் பரப்பு. பாற்கடல். அதில் மையமாக அவர் - சயனித்திருக்கும்

மோடி மந்திரம்

அயல்நாட்டுப் பயணங்கள் சிலிர்ப்பூட்டும் விஷயங்கள். பாதுகாப்பு உணர்வைத் தருபவை. நியூயார்க் பார்த்திருக் கிறீர்களா? மாடிசன் ஸ்க்வேர் கார்டன்? அடேயப்பா, அங்கே வந்திருந்த மாபெரும் கூட்டத்தில், அமெரிக்கவாழ் இந்தியர்கள் லட்சக்கணக்கில் கூடி ‘மோடி… மோடி!” என்று கைத்தட்டி நிறுத்தாமல் கோஷமிட்டபோது கண்களில் நீர் நிறைந்தது. பெருமிதத்தில் மார்பு இன்னும் விரிந்து நிமிர்ந்து நின்றது. அதையும் மிஞ்சப் பார்த்த ஷாங்காய் நகரக் கூட்டத்துக்கு சீனாவின் மூலைமுடுக்குகளில் இருந்தெல்லாம் அங்கு வாழும் இந்தியர்கள் வந்தார்களே? இதற்கு முன் யாருக்கு அத்தகைய வரவேற்பு கிடைத்திருக்கும்? ‘‘கனவுகூடக் காண முடியாத பின்புலத்திலிருந்து வந்தவன் நான், உங்கள் முன் நிற்கிறேன்’’ என்றபோது கூட்டம் எப்படி ஆர்ப்பரித்தது! ஓ, மறந்துவிட்டது. ஆஸ்திரேலியப் பயணத்தில், சிட்னி அல்ஃபோன்ஸ் அரீனாவில் எப்படிப்பட்ட அரங்க ஏற்பாடு! மத்தளமும் சங்கும் முழங்க வரவேற்பு. கடல்போலக் கண்முன் விரிந்த ஜனத்திரள். ஆஹா, அந்த ஆனந்த உணர்வை அனுபவத்தில்தான் அறிய முடியும். இப்போது வேறு திசையிலும் திணறடிக்கும் வரவேற்பு. துபாயின் பிரபல கிரிக்கெட் மைதானத்தில் 50,000 பேர் கூடியிருந்தார்கள். ‘மோடி… மோடி!’ என்று மந்திரம்போல் இசைத்தார்கள். இந்தியில் பேசப்பேச ஒவ்வொரு வரிக்கும் ஆர்ப்பரித்தார்கள்.

மோடியின் அபய ஹஸ்தம்

வெளிநாடுகளில், அங்கு வாழும் இந்தியர்களின் கூட்டத்தில் பேசுவது வெகு சுலபம். சவுகரியமாக வாழும் என்.ஆர்.ஐ. கூட்டத்தின் உற்சாக ஆர்ப்பரிப்பு போதையைத் தரும். தடுமாற வைக்கும். அவருக்காக வந்த கூட்டமல்லவா? அலங்கார வார்த்தைகளுக்குப் பஞ்சமில்லை. ‘‘வள்ளல் பெருமக்களான உங்களது உபயத்தால்தான் இந்திய நாட்டின் பொருளாதாரம் தடம்புரளாமல் இருக்கிறது’’ என்ற வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவை.

‘‘இத்தனை ஆண்டுகள் இந்தியா இருண்டிருந்தது. ஊழல் கறை படிந்திருந்தது. நீங்கள் அதை நினைத்து வெட்கப்பட்டீர்கள். இனி நீங்கள் தலை நிமிரலாம். உங்கள் பிறந்த மண்ணின் வாசல் திறந்திருக்கிறது. உங்கள் வளங்களை அங்கு கொட்டுங்கள். பயப்படாமல் வர்த்தகம் செய்யுங்கள்…’’

மோடி என்ற மகத்தான தனி மனிதரின் அபய ஹஸ்தம் உங்களைக் காக்கும் என்கிற சேதி வார்த்தைகளால் சொல்லப்படாமல் அவர்களைப் பரவசப்படுத்தும். அவர்களால் புரிந்துகொள்ள முடிந்த ஹிந்துஸ்தானி மொழி. இந்திய மொழி செவியில் விழும்போது நாடி நரம்பெல்லாம் உசுப்பிவிடுவதுபோல் இருக்கிறது. நல்ல வேளை புரியாத மொழி பேசும் அறிவுஜீவி இல்லை அவர். அறிவுஜீவிகளுடன், கலைஞர்களுடன் அவருக்குத் தொடர்பு இல்லை. வார்த்தைகளால் பின்னல் பின்னித் தோரணம் கட்டுகிறார். எத்தகைய கனவுகளை விரிக்கிறார்? அவருடைய உடையைப் பார்த்தீர்களோ? எத்தனை நேர்த்தி! ஒவ்வொரு நாட்டுக் கூட்டத்துக்கும் அதற்கு ஏற்ற உடை. அதற்குப் பொருத்தமாக அங்கவஸ்திரம். இத்தனை ஸ்மார்ட்டாக எத்தனை இந்தியப் பிரதமர்களைப் பார்த்திருக்கிறீர்கள்?

என் பலம் தெரியாது

அவருக்குத் தெரியும், இந்த லாகிரி சொற்ப நேரம்தான் நிலைக்கும். இதுவரை நீங்கள் மேற்கொண்ட பயணங்களால் நாட்டுக்கு என்ன லாபம் கிடைத்தது என்று பொருளாதார நிபுணர்கள் கேட்பார்கள். கேட்கட்டும்; விவாதத்துக்கு அவர் தயாரில்லை. அவருக்குப் பேசித்தான் பழக்கம். கேட்டுப் பழக்கமில்லை. கேட்க வேண்டிய அவசியமில்லை. எதிர்பாராத அளவு தேசம் தழுவிய வெற்றியைக் கட்சிக்குத் தனது பேச்சுத் திறமையால், பிரச்சாரத் திறமையால் கிடைக்கவைத்து ஆட்சியில் அமர்த்தியாகிவிட்டது. இன்னும் நான்கு ஆண்டுகள் அவரை அசைக்க முடியாது. பேசுபவர் பேசட்டும். வேலையற்றவர்கள். தோற்றுப்போனவர்கள். பொது மேடையில் அவர்களை நார் நாராகக் கிழித்துப் போடுவது சிரமமில்லை. மக்கள் அவரது ஒவ்வொரு வார்த்தையையும் நம்புவார்கள். வாக்குகளை அப்படித்தான் அள்ள முடியும். நாடாளுமன்றத்தில் விவாதிப்பதால் அல்ல.

அந்தப் பொடியன் என்ன சொன்னான்? நாடாளு மன்றத்துக்கு வந்து கேள்விகளைச் சந்திக்க மோடிக்குத் தைரியமில்லை என்றான். என் பலம் அவனுக்குத் தெரியாது. பல திறமையான இளம் தலைவர்கள் கொண்ட பழமையான கட்சி அவனை நம்பித் தொங்கிக் கொண்டிருக்கிறது. நமது அதிர்ஷ்டம் அது. வெற்றுக் காற்று. என் சகாக்களே அவனை ஊதி வெளியேற்றுவார்கள்.

அது சரி... விமானத்திலிருந்து தரையிறங்கிவிட்டீர்களா? இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.

தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள்? எப்படி நிறைவேற்றப்போகிறீர்கள்?

நீங்கள் மேடையில் பேசும் பேச்சுக்கள், மன் கீ பாத் பிரசங்கங்கள் யாவும் நடைமுறைப் பிரச்சினைகளைத் தொடுவதில்லையே? ஏன்? வானத்தை வில்லாய் வளைப் பேன் என்கிறீர்கள். எப்படி? என்னதான் உங்கள் திட்டம்? அல்லது எண்ணம்? யாருக்கும் தெரியாது. வருஷத்துக்கு ஒரு முறை நீங்கள் செங்கோட்டையில் நின்று முழங்கும் சுதந்திர தினப் பேச்சுக்குக் காத்திருக்க வேண்டுமா?

பீதியளிக்கும் அலட்சியம்

உங்கள் உடல்மொழி தெரிவிக்கும் சமிக்ஞை ஆபத்தா னது. நார்சிஸ (சுயமோகம்) எல்லையைத் தொடுவது. எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் அரசு இல்லை என்கிற மிதப்பு , உங்கள் மவுனம் வெளிப்படுத்தும் அலட்சியம் பீதியளிக்கிறது. இந்தப் பயம் என்னுடைய பிரத்தியேக உணர்வு இல்லை. கருத்துச் சுதந்திரத்துக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல், அறிவுக்கூடங்களில் நுழைந்திருக்கும் அடிப்படைவாதம், அமைச்சர்களின் தன்னிச்சையான பிடிவாதங்கள், எதிர்ப்பை அமுக்கும் மூர்க்கம், எல்லாவற்றையும் அங்கீகரிக்கும் உங்கள் மவுனம் அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. மக்கள் கவனிப்பார்கள். இன்றில்லாவிட்டால் நாளை. அவர்கள் வெறும் வாக்கு எண்கள் அல்ல. உயிர்த் துடிப்புள்ள, எதிர்பார்ப்புகள் நிறைந்த ஜீவன்கள். அவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பதை உலக வரலாறு சொல்லும்.

ஜான் ஸ்டீன்பெக் எழுதிய ‘கிரேப்ஸ் ஆஃப் ராத்’ என்ற நாவலில் கேஸி என்ற ஒரு கதாபாத்திரம் ஏமாற்றமும் விரக்தியும் மிகுந்த காலகட்டத்தில் சொல்லும், ‘அது நிகழும். மக்கள் ஒன்றாகச் சிந்தித்து எழும் காலம் வரும், மாற்றம் விளைவிக்க. அது மிக இயல்பாக நிகழும். மழை பொழிவதுபோல!’

நான்கு ஆண்டுகளில் அது நிகழலாம் - மிக இயல்பாக - மழை பொழிவதுபோல.

- வாஸந்தி, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்,

தொடர்புக்கு: vaasanthi.sundaram@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்