அக்டோபர் 31 வரையில் ஊரடங்கைச் சில தளர்வுகளுடன் நீட்டித்திருக்கிறது தமிழக அரசு. கரோனாவுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில், கண்டுபிடித்தாலும் அடுத்த ஆறு மாதங்களுக்குள் அது அனைவருக்கும் கிடைக்கும் என்று உறுதியளிக்க முடியாத சூழலில்தான் அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது. ஆனால், வீழ்ந்துகிடக்கும் பொருளாதாரத்தை இயல்புநிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்றால், ஊரடங்கை இப்படி மேலும் மேலும் நீட்டித்துக்கொண்டே இருப்பது இயலாதவொன்று.
பொன்னுக்கு வீங்கி நோய்க்குத் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு ஐந்தாண்டு காலம் பிடித்திருக்கிறது. கரோனாவுக்குக் கண்டுபிடிக்கப்படும் தடுப்பு மருந்து, நோய் எதிர்ப்பாற்றல் கொண்டது என்பதோடு நோயாளிகளுக்குப் பாதுகாப்பானது என்று ஒழுங்குமுறை அமைப்புகளால் சான்றளிக்கப்பட்ட பிறகுதான் அது விநியோகத்துக்கு அனுமதிக்கப்படும். இந்த நடைமுறைகளை முழுமையாகவும் முறையாகவும் பின்பற்றித் தடுப்பூசி தயாராகும் வரையில், வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்க முடியாது. அப்படியென்றால், ஏதோ ஒரு கட்டத்தில் மக்கள் உரிய பாதுகாப்புடன் வெளியே வந்துதானே ஆக வேண்டும். இது ஒரு எளிமையானதொரு தர்க்கம்தான். ஆனால், இதுவும் ஒரு தீர்வாகத் தற்போது முன்வைக்கப்பட்டுவருகிறது.
அலுவலகங்கள், சந்தைகள், பொதுப் போக்குவரத்து ஆகியவற்றை வழக்கம்போல இயங்க அனுமதிக்கலாம். ஆனால், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல் ஆகிய பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்தே ஆக வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடனும் அதை மீறுபவர்களுக்குத் தண்டனையிலிருந்து எவ்விதமான விலக்கும் இல்லை என்ற எச்சரிக்கையுடனும் இதைச் செயல்படுத்திப் பார்க்கலாம் என்று பரிந்துரைகள் அளிக்கப்படுகின்றன. போக்குவரத்து விதிகளைப் போல நோய்த்தொற்றுப் பாதுகாப்பு விதிமுறைகளையும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க முடியுமா?
போலியோ சொல்லும் பாடம்
இந்தியா ஒரு காலத்தில் இளம்பிள்ளை வாதத்தில் மையமாக இருந்தது. உலகளவில் போலியோவால் பாதிக்கப்பட்டவர்களில் 60% இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். போலியோவுக்குத் தடுப்பு மருந்து இருந்தபோதும்கூட உரிய காலத்தில் அதைக் குழந்தைகளுக்குப் புகட்ட வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் இல்லாமல் இருந்தது. இந்தத் தகவல் இடைவெளியை நீக்கும் வகையில் மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன.
போலியோவுக்குத் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதா இல்லையா என்று உறுதிப்படுத்திக்கொள்வதற்காக மருத்துவப் பணியாளர்கள் வீடு வீடாக ஆய்வுகள் நடத்தினார்கள். இந்த மிகப் பெரும் பிரச்சார இயக்கத்தின் விளைவாகக் குழந்தைகளுக்கு இரண்டு சொட்டு போலியோ மருந்து கொடுப்பது என்பது சமூக அளவில் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் அம்மை, காலரா, டைபாய்டு, காசநோய் ஆகியவற்றுக்குத் தடுப்பு மருந்துகள் கொடுக்கும் வழக்கம் முன்பே நடைமுறையில் இருந்தபோதும் போலியோ தடுப்பு மருந்து இயக்கம் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒன்று. தடுப்பு மருந்தின் மூலமாகப் போலியோவை முற்றிலுமாக ஒழித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை அது மக்களிடம் ஆழமாக உருவாக்கியிருக்கிறது. நாடு முழுவதும் ஒரு ஒழுங்குமுறையை ஒரே நேரத்தில் கடைப்பிடிப்பதன் மூலமாக நோய்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதை மக்கள் ஏற்கெனவே தங்களது அனுபவத்திலிருந்து புரிந்துகொண்டிருக்கிறார்கள். அப்படியொரு பிரச்சார இயக்கம் மீண்டும் நமக்குத் தேவைப்படுகிறது.
இரண்டாவது முழு ஊரடங்கு
ஊரடங்கிலிருந்து வெளியே வருவது எப்படி என்று ஒவ்வொரு நாடும் திட்டமிட்டுக்கொண்டிருக்கையில் இஸ்ரேலில் இரண்டாவது முறையாக நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது உலகையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. பள்ளிகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் மட்டுமின்றி அனைத்து வணிக நிறுவனங்களையும் மூடுமாறு உத்தரவிட்டுள்ளது இஸ்ரேல். தற்போதைக்கு மூன்று வாரங்களுக்கு இந்த ஊரடங்கு நீடிக்கும் என்று தெரிகிறது. இந்த நடவடிக்கைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடந்தாலும் அதற்கும் 20 பேருக்கு மேல் அனுமதியில்லை, ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வதற்காக யாரும் ஒரு கிமீ தொலைவைத் தாண்டிச் செல்லவும் அனுமதியில்லை.
இரண்டாவது முழு ஊரடங்கைக் குறித்த அச்சத்தில் இருக்கும் மற்றொரு நாடு பிரிட்டன். மார்ச் 23 தேதியிலிருந்து தொடங்கி மூன்று மாதங்களுக்கு பிரிட்டன் முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. தொற்று பிரிட்டனுக்குள் பரவ ஆரம்பித்தபோதே லண்டன் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. விரைவில், பிரிட்டனின் அனைத்துப் பகுதிகளிலுமே நோய்த்தொற்று பரவியது. நோய்ப் பரவலின் வேகம் குறைய ஆரம்பித்துவிட்டது என்றாலும், லாய்ஸ்டர் நகரத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்ததால் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளின்படி ஜூன் 29 அன்று மீண்டும் அந்நகரில் முழுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
தொற்றின் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டிருக்கும் மற்ற நகரங்களும் அடுத்தடுத்து முழுமையான ஊரடங்கைப் பின்பற்றிவருகின்றன. தற்போது பிரிட்டனில் ஏறக்குறைய 1.66 கோடிப் பேர் ஊரடங்கு வாழ்க்கைக்கு ஆட்பட்டிருக்கிறார்கள். இது பிரிட்டனின் மொத்த மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கு.
குழந்தைகளுக்கும் முகக்கவசம்
பிரிட்டன் மீண்டும் ஒரு தடவை நாடு தழுவிய ஊரடங்குக்குத் திரும்பிவிடுமோ என்று ஊகங்கள் எழுந்தபடியே இருக்கிறது. நிச்சயமாக அதற்கு வாய்ப்பில்லை என்று போரிஸ் ஜான்சன் மறுத்தாலும் பொதுக் கூடுகைகளுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. வழக்கமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு அனுமதி இருக்காது என்று பிரிட்டன் அரசு மக்களை முன்கூட்டியே எச்சரிக்க ஆரம்பித்துவிட்டது. ஜெர்மனியில் இந்த ஆண்டு முழுவதுமே பொதுக் கூடுகைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இரண்டாவது முழு ஊரடங்கை எப்படியாவது தவிர்த்துவிட வேண்டும் என்று பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் முயன்றுகொண்டிருக்கின்றன. அந்த முயற்சிகளின் முதல் நடவடிக்கை பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவதுதான். பாரிஸ் நகரத்தில் 11 வயதான குழந்தைகளும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஸ்பெயினில் 6 வயதான குழந்தைகளும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் முன்னெடுப்பு
சமீபத்தில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் அறிவிப்பும் இதே நடைமுறைகளைத்தான் அழுத்தமாகச் சொல்கிறது. மக்களின் இயக்கத்தை அனுமதிக்கும் வகையிலும் அதேநேரத்தில் நோய்த் தடுப்பு விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றும் வகையிலும் ஒரு செயல்திட்டத்தை வடிவமைக்குமாறு அவர் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். சமூகச் செயல்பாட்டாளர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஆகியோரையும் இந்தப் பணியில் பங்குகொள்ளச் செய்யுமாறு அவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். ‘பொது இடங்களில் முகக்கவசம் இல்லாமல் ஒருவர்கூட வரக் கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்பதே அசோக் கெலாட்டின் மிக முக்கியமான உத்தரவு.
ராஜஸ்தானைப் போல இந்தியாவின் மற்ற மாநிலங்களும் ‘முகக்கவசம், இடைவெளி, கைகளின் தூய்மை’ என்ற முப்பெரும் முழக்கங்களை மக்களிடம் இன்னும் அழுத்தமாக எடுத்துச்செல்ல வேண்டும். மக்களும் அதைக் கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்க வேண்டும். அரசு என்னதான் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளையும் நோய்ப்பரவல் தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்தாலும் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அவை வெற்றிபெற முடியாது. ஊரடங்கின் முடிவும் நீட்டிப்பும் மக்களின் கைகளில்தான் இருக்கிறது.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago