மெல்லத் தமிழன் இனி 2 - தேவை மதுவிலக்குச் செயல்திட்டம்!

By டி.எல்.சஞ்சீவி குமார்

மதுவிலக்கு நிலைப்பாடு கொண்டவர்களில் சிலர், படிப்படியாக மதுக் கடைகளை மூடலாம்; மதுக் கடைகளின் எண்ணிக்கையையும் இயங்கும் நேரத்தையும் குறைக்கலாம் என்றெல்லாம் யோசனை தெரிவிக்கிறார்கள். செய்யலாம்தான். ஆனால், அப்படிச் செய்யும்போதும் அரசின் கொள்கை மதுவிலக்கை நோக்கியதாக அமைய வேண்டும். அதற்கு என்னவெல்லாம் அரசு செய்ய வேண்டும்?

காலாண்டுத் திட்டங்கள்

மதுவிலக்குச் செயல்திட்டம் வகுக்க வேண்டும். இன்றைக்கு மது விற்பனையை அதிகரித்து இலக்கு நிர்ணயிப்பதுபோல, அப்போது மது விற்பனையைக் குறைத்து இலக்கு நிர்ணயிக்க வேண்டும். குறைவாக விற்பனை செய்யும் மதுக் கடையின் விற்பனையாளர்களுக்கு ஊக்குவிப்புத்தொகை அளிக்க வேண்டும். மதுவிலக்கைக் கட்டாயமாகச் செயல்படுத்துவதற்குக் குறிப்பிட்ட ஆண்டைக் கெடுவாக நிர்ணயிக்க வேண்டும். உதாரணமாக, ‘தமிழகம் 2017 மதுவிலக்கு ஆண்டு’ என்று திட்டத்துக்குப் பெயர் வைக்கலாம். அதுவரையிலான ஓராண்டு காலகட்டத்தை மூன்று காலாண்டுகளாகப் பிரித்து, ஒவ்வொரு காலாண்டிலும் மூன்றில் ஒரு பகுதி மதுக் கடைகளை மூட வேண்டும்.

முதல் காலாண்டில் நகரின் நடுநாயகமாக அமைந்திருக்கும் கடைகளை அப்புறப்படுத்தி, ஊருக்கு வெளியே, மறைவான பகுதியில் அமைக்க வேண்டும். தற்போது நடைமுறையில் ஒரு கி.மீ-க்கு ஒரு மதுக் கடை அமைந்துள்ளது. இரண்டாம் காலாண்டில் இதை 50 கி.மீட்டருக்கு ஒரு கடை எனக் குறைக்க வேண்டும். மது அருந்துவோர் குறைந்தது ஒரு மணி நேரமாவது பயணம் செய்தாக வேண்டும் என்கிற கட்டாயத்தை இதன் மூலம் ஏற்படுத்த முடியும். மூன்றாம் காலாண்டில் மீதமிருக்கும் மதுக் கடைகளையும் மூடிவிடலாம்.

இடைப்பட்ட காலகட்டத்தில் காலை 11 மணிக்கு மதுக் கடையைத் திறந்து மாலை 7 மணிக்குக் கடைகளை மூட வேண்டும். மாலை 6 மணிக்கு முன்பாக மது வாங்கச் செல்வோருக்கு 50% கூடுதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். வார இறுதி நாட்களிலும் சம்பள நாட்களிலும் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். உடல் நலனுக்கு அதிக அளவு கேடு விளைவிக்கும் ‘சி’ கிரேடு மது வகைகளைத் தடை செய்ய வேண்டும். மதுக் கடைகளின் அறிவிப்புப் பலகையின் அளவைப் பாதியாகக் குறைக்க வேண்டும். குடி மையங்களை மொத்தமாக மூட வேண்டும். வீட்டுக்கு வாங்கிச் சென்று மட்டுமே மது அருந்த முடியும் என்கிற சூழலை ஏற்படுத்த வேண்டும். மதுக் கடைகளில், பொது இடங்களில் மது அருந்துவதற்குத் தடை விதிக்க வேண்டும். இவற்றைச் செய்தாலே மது அருந்துவோரின் எண்ணிக்கையை 50% குறைக்கலாம்.

தேவை பிரச்சார இயக்கம்

மேற்கண்ட திட்டங்கள் நடைமுறையில் இருக்கும்போதே மதுவிலக்கு குறித்த மிகப் பெரிய பிரச்சார இயக்கத்தை அரசு தொடங்க வேண்டும். அதனை மதுக் கடையின் வாசலில் இருந்தே தொடங்க வேண்டும். மதுக் கடையின் வாசலில் மது அருந்துவதால் ஏற்படும் உடல், மன நலக்கேடுகளை விளக்கும் வாசகங்கள், புகைப்படங்களைப் பெரிதாக அமைக்க வேண்டும். அவை மதுக் கடைகளுக்கு வருபவர்கள் வெட்கித் தலைகுனியும் வகையில், குற்ற உணர்வைத் தூண்டும் வகையில் அமைய வேண்டும்.

மது அருந்துவதால் ஏற்படும் கேடுகளை விளக்கும் நாடகங்களை ஊர்கள்தோறும் நடத்த வேண்டும். உள்ளாட்சி மன்றக் கூட்டங்களில், அரசு, தனியார் நிகழ்ச்சிகளில், பள்ளிகளின் தினசரி காலை பிரார்த்தனைக் கூட்டங்களில் ‘நான் மது அருந்த மாட்டேன்’ என்கிற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும். பள்ளிகளில் மதுவிலக்கு தொடர்பான பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகளை வைக்க வேண்டும். மதுவின் தீமைகளைப் பிரபலங்களைப் பேச வைத்து, தொலைக்காட்சிகளில் விளம்பரமாக வெளியிட வேண்டும். மதுவின் பாதிப்புகள் குறித்த புகைப்படங்களை, மதுவால் நேர்ந்த விபத்துக்களின் படங்களைப் பொது இடங்களில், அரசு கண்காட்சிகளில் வைக்க வேண்டும்.

மதுவிலக்குப் பிரச்சாரத்துக்கு திரைத் துறையைப் பெருமளவு பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று பிரபல நடிகர்கள் மது அருந்துவதைப் பார்த்துதான் பெரும் இளைஞர் கூட்டமே மதுவுக்கு அடிமையாகியுள்ளது. எம்ஜிஆர் தனது திரைப்படங்களில் மது அருந்துவது போன்ற காட்சிகளை அறவே தவிர்த்தார். அரிதாக அப்படியான காட்சிகள் இடம்பெற்றாலும் அது தீயவனாகச் சித்தரிக்கப்படுபவர் மது அருந்துவதுபோலத்தான் அமைந்தன. பல திரைப்படங்களில் அவர் மதுவை வெறுக்கும்படியான வசனங்களைப் பேசினார். அவரைப் பின்பற்றி ‘வாத்தியாரே சொல்லிட்டார்’ என்று அந்தக் காலகட்டத்தில் மதுவைக் கைவிட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். எனவே, பிரபல நடிகர்களை வைத்து மதுவின் கொடுமைகளை விளக்கும் திரைப்படங்களை அரசே தயாரித்து வெளியிடலாம். இதன் மூலம் பெரும் இளைஞர்கள் கூட்டம் மதுவின் பக்கம் செல்வதைத் தடுக்க முடியும். தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பதுபோல மதுவை வெறுத்து ஒதுக்கும்படியான காட்சிகளை, வசனங்களை அமைக்கும் திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்கலாம்.

மறுவாழ்வுத் திட்டங்கள்

இன்னொரு பக்கம் மதுவால் பாதிக்கப்பட்ட குடிநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையங்களை ஊர்கள்தோறும் தொடங்க வேண்டும். அந்த மையங்களுக்கான பிரத்தியேக மருத்துவர்கள், செவிலியர்கள், ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். இந்த மையங்களில் குடிநோயாளிகளுக்குச் சிகிச்சை, மருந்து, உணவு, ஆலோசனை, பயிற்சி ஆகியவற்றை இலவசமாக அளிக்க வேண்டும். தற்போது அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் குடிநோய் சிகிச்சை மையங்கள் இல்லை. அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய குடிநோய் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும். அந்த மையத்திலேயே பிரத்தியேகமாக கல்லீரல், இரைப்பை மற்றும் குடல் அறுவைச் சிகிச்சைப் பிரிவுகளை அமைக்க வேண்டும். இவை மட்டும் போதாது; மதுப் பழக்கத்தால் கணவரை இழந்த பெண்களுக்கும் வாரிசுகளை இழந்த பெற்றோர்களுக்கும் வாழ்வாதாரமாகப் பெரும் தொகையை நஷ்டஈடாக வழங்க வேண்டும்.

மதுவிலக்கு நிவாரண நிதி

இவற்றை எல்லாம் செய்வதற்குக் கூடுதல் நிதி தேவைப்படுமே என்று கேள்வி எழலாம். “மதுவிலக்கைப் படிப்படியாக அமல்படுத்தும்வரை மதுவால் வரும் வருவாயை மதுவிலக்குப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதுதான் அரசின் உண்மையான மதுவிலக்கு நோக்கமாக அமையும்” என்றார் காந்தி.

நான்காம் காலாண்டுத் திட்டத்தில் மதுவின் வருவாய் மொத்தமாகக் குறையும்போது பூகம்ப, வெள்ள நிவாரண நிதியைப் போல ‘மதுவிலக்கு நிவாரண நிதி’வசூலிக்கலாம். கட்சிகளிடம், தொழிற்சங்கங்களிடம், பெரும் நிறுவனங்களிடம் நிதி கேட்கலாம். வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கும்போது, கொடிநாள் வசூல் போன்று சிறு தொகையை வசூலிக்கலாம். மதுவிலக்கு தபால் தலையை விற்பனை செய்யலாம். பிரபலங்களை வைத்து இசை நிகழ்ச்சிகளை, விளையாட்டுப் போட்டிகளை நடத்தி நிதி வசூலிக்கலாம். அரசு, தனியார் நிறுவனங்களின் ஊழியர்களிடம் ஒருநாள் சம்பளத்தை மதுவிலக்கு நிவாரண நிதியாக கேட்டுப் பெறலாம்.

இன்று அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள். 1967-ம் ஆண்டு அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தபோது, பூரண மதுவிலக்கைத் தமிழகத்தில் அமல்படுத்தி வரலாறு படைத்தார் அவர். அண்ணாவின் கொள்கையைப் பின்பற்றும் திராவிடக் கட்சிகள் மீண்டும் அந்த வரலாற்றைப் படைக்குமா?

(நிறைந்தது)

- டி.எல்.சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்