ஒவ்வொரு கட்சிக்கும் தலைநகரம் முதல் குக்கிராமங்கள் வரை செயலாற்றும் இரு சித்தாந்த அமைப்புகள் தேவை
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் வேர் பரப்ப ஆரம்பித்திருப்பதைச் சொல்லி விசனப்பட்டார் காங்கிரஸ் நண்பர் ஒருவர்.
மோடி ஆட்சியின் ஐந்தாண்டு இலக்குகளில் சங்கப் பரிவாரங்கள் வளர்ச்சி – விரிவாக்கத் திட்டங்களுக்கும் ஒரு முக்கியமான இடம் உண்டு. மோடி பதவியேற்றதுமே இந்த வேலைகள் சுறுசுறுப்பாகத் தொடங்கிவிட்டன. மக்களவைத் தேர்தலுக்கு முன் நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் நடத்திக்கொண்டிருந்த ‘ஷாகா பயிற்சி வகுப்பு’களின் எண்ணிக்கை 39,000. மோடி நாற்காலியில் உட்கார்ந்த அடுத்த 4 மாதங்களில் இந்த எண்ணிக்கை 8% அதிகரித்து 42,000 ஆனது. அடுத்த சில ஆண்டுகளுக்குள் இந்த எண்ணிக்கையை ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும் என்று சொல்கிறார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத். கூடவே எங்கெல்லாம் முன்பு அவர்கள் செயல்படுவது சிரமமாக இருந்ததோ, அங்கெல்லாம் இப்போது கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படி ஷாகாக்கள் எண்ணிக்கை அதிகரிப்பது எந்த அளவுக்கு அரசியலில் நேரடி விளைவுகளை உண்டாக்கும் என்பதற்கு, மேற்கு வங்கம் சமீபத்திய உதாரணம். வங்கதேச அகதிகளை முன்வைத்து நடத்தப்படும் இந்து – முஸ்லிம் பிளவு அரசியல் அங்கு வேலை செய்ய ஆரம்பித்திருப்பதோடு, பாஜக ஓட்டுவங்கி சமீப காலத்தில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது.
ஆர்எஸ்எஸ் போன்ற ஒரு அமைப்பின் வளர்ச்சியையும் விரிவாக்கத்தையும் மதச்சார்பற்ற சக்திகள் பெரும் அச்சுறுத்தலாகப் பார்ப்பது இயல்பானது. ஆனால், வெறுமனே விசனப்பட்டு பிரயோஜனம் என்ன? எனக்கென்னவோ, இந்த விஷயத்தில் ஆர்எஸ்எஸ்காரர்களைத் திட்டித் தீர்ப்பதைவிடவும் அவர்களைப் பார்த்து, ஒரு சில விஷயங்களைக் கற்றுக்கொள்வது பிரயோஜனம் தரும் என்று தோன்றுகிறது.
அரசியல் இயக்கங்களில் தொண்டர்கள் எண்ணிக்கை இன்றைக்கெல்லாம் எத்தனையோ மடங்கு பெருகிவிட்டது. தமிழகத்தில் திமுக, அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை மட்டும் ஒன்றரைக் கோடியைத் தாண்டுகிறது. ஆனால், எவ்வளவு பெரியதாக இருந்தாலும், சித்தாந்த வலு இல்லாத இயக்கங்கள் உள்ளீடற்ற வாளுக்குச் சமானம்தான். 1924, ஜூலை 17 ‘யங் இந்தியா’ இதழில் காந்தி எழுதுகிறார்: “வழிமுறை என்பது வெறும் வழிவகைதானே என்று கேட்கிறார்கள். வழிமுறைதான் எல்லாமும் என்று நான் சொல்வேன். வழிமுறை எப்படியோ அப்படியே முடிவும். வழிமுறைக்கும் முடிவுக்கும் இடையே பிரிக்கும் சுவர் கிடையாது.”
அந்த வழிமுறையை இயக்கம் கற்றுக்கொடுக்காமல் யார் கற்றுக்கொடுப்பது?
காந்தி வழி
காந்தி காங்கிரஸில் செல்வாக்கு செலுத்திய நாட்களில், அவருடைய ஆசிரமத்தில் சேரும் கனவுடன் அவரைச் சென்று பார்ப்பவர்களுக்கு அவர் சொல்லும் முதல் வேலை பெரும்பாலும் துப்புரவுப்பணியாகவே இருக்கும் என்பார்கள். குறிப்பாக, உயர்சாதி / உயர்வர்க்கம் என்று குறிப்பிடப்பட்டவர்கள் சென்றால், கழிப்பறையைச் சுத்தப்படுத்துவதுதான் அவர்களுக்கு ஒதுக்கப்படும் முதல் வேலையாக இருக்கும்.
ஒரு சத்யாகிரகி வார்த்தைகள் மூலம் அல்ல; வாழ்க்கையின் மூலமாகவே தன் சித்தாந்தத்தைக் கண்டடைய வேண்டும் என்பது காந்தியின் வழி. காங்கிரஸின் போக்கை வழிநடத்துவதிலும் காங்கிரஸாருக்குச் சிந்தாந்தம் கற்றுக்கொடுப்பதிலும் காந்தி மறைவுக்குப் பின்பும்கூட சில காலம் வரை காந்திய ஆசிரமங்கள் பங்காற்றின.
பெரியார் வழி
பெரியார் தன்னை ஒரு இயக்கவாதியாகவோ, சித்தாந்தவாதியாகவோ சொல்லிக்கொண்டது இல்லை. ஆனால், வருஷத்தில் 365 நாட்களும் மக்களைச் சந்தித்துப் பேசினார்; எழுதினார். சாமானியரும் வாங்கிப் படிக்கும் வகையில், அரிய பெரும் கருத்துகளை எளிய நடையில் எழுதப்பட்ட சிறு புத்தகங்களாக்கி மலிவு விலையில் குறுவெளியீடாக்கிக் கொடுத்தார். தன்னுடைய எழுத்துகள் / தம் இயக்க எழுத்துகள் மட்டும் அல்லாமல், இங்கர்சால், வால்டர், மெஸ்ரியர் என்றெல்லாம் அயல் அறிஞர்களின் எழுத்துகளையும் இப்படிக் கொண்டுவந்தார். திராவிட இயக்க வெளியீடுகள் மூலமாகவே தமிழ்நாட்டுக்கு முதன்முதலில் கம்யூனிஸ்ட் அறிக்கை தமிழில் படிக்கக் கிடைத்தது. முறையான சிந்தாந்தப் பயிற்சி அமைப்பு எதையும் தன்னுடைய இயக்கத்தில் பெரியார் வைத்திருக்கவில்லை என்றாலும், பயிற்சி முகாம்கள் - தொடர் பிரச்சாரங்களை சிந்தாந்தப் பயிற்சிக்களமாக உருமாற்றிவைத்திருந்தார் பெரியார்.
அண்ணா வழி
அண்ணாவுக்கு வாசிப்பு தந்த விரிவான வெளி உலகின் பல்வேறு மக்கள் இயக்கங்களும் எப்படியெல்லாம் அமைப்பைக் கட்டமைத்தன எனும் ஒரு பரந்துப்பட்ட பார்வையை அவருக்குத் தந்திருந்தது. இந்த விஷயத்தில் நாட்டிலேயே முன்னோடி திமுக என்றுகூடச் சொல்லலாம். விளிம்புநிலை வரை இயக்கத்தைக் கொண்டுசெல்ல கட்சியின் கிளை அமைப்பான கிளைக் கழகங்கள், புதியவர்களை ஈர்க்க மன்றங்கள், கூடவே அவர்கள் அறிவை விரிவாக்க படிப்பகங்கள் என்று குக்கிராமங்களில்கூட ஒரு வலுவான கட்டமைப்பை உருவாக்கியது திமுக. அதற்கென்று பெரிய சித்தாந்தங்கள் ஏதும் கிடையாது என்றாலும், சமகால சமூகப் பிரச்சினைகளை வரலாற்றோடு பொருத்திப் பார்க்கும் அறிவையும் பொதுவுடைமைச் சித்தாந்தம் உள்ளிட்ட பல்வேறு சித்தாந்தங்களையும் வாசிப்பின் வழியே இயக்கத்தினருக்குக் கடத்துவதன் முக்கியத்துவத்தை ஆரம்பக் கால திமுக ஓரளவுக்கு உணர்ந்திருந்தது.
ஆர்எஸ்எஸ் வழி
இன்றைய நிலை என்ன? தலைமையே கடவுள். தலைமையின் சொல்லே வேதம். தலைமைப் போக்கே சித்தாந்தம்! நாட்டில் கொஞ்சமேனும் இயக்கத்தின் வரலாறு, அது கடந்து வந்த பாதை, சென்றடைய வேண்டிய இலக்கு இதையெல்லாம் தம் இயக்கத்தினருக்குச் சொல்லிக்கொடுப்பதில் தொடர்ந்து அக்கறை காட்டிவருகிற அமைப்புகள் என்றால், ஆர்எஸ்எஸ், கம்யூனிஸ்ட் இயக்கங்களை மட்டுமே சொல்ல முடியும். இதில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வைத்திருக்கும் சித்தாந்தப் பயிற்சி அமைப்புகள் கட்சிக்குள் மாநில / மாவட்ட அளவில் செயல்படுபவை. தவிர, கற்பிக்கும் இடத்தில் இந்தக் குழுக்களுக்குக் கிடைக்கும் அதிகாரம் கட்சியின் முடிவுகளைத் தீர்மானிக்கும் இடத்தில் அவற்றுக்குக் கிடையாது. காங்கிரஸிலும்கூட ராகுல் காந்தியின் வருகைக்குப் பிறகு சித்தாந்தப் பயிற்சி வகுப்புகள் தொடங்கியிருக்கின்றன. ஆனால், அது இன்னும் டெல்லியைத் தாண்டவில்லை. சங்கடம் தரும் உண்மை என்னவென்றால், விளிம்புநிலை கிராமங்களையும் சென்றைடையும், புதியவர்களை ஈர்க்கும், தன்னுடைய இயக்கச் சித்தாந்தத்தைப் பரப்பும், எல்லாவற்றுக்கும் மேல் இயக்கத்தின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய அதிகாரத்தைப் பெற்றிருக்கும் ஓர் அமைப்பு வேறு எந்தக் கட்சிக்கும் பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் இருப்பதுபோல இங்கே இல்லை என்பதுதான்.
இங்கே ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டுவது முக்கியம். பாஜக போன்ற ஜனநாயக அரசியலில் பங்கெடுத்திருக்கிற ஒரு அரசியல் கட்சியையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அதன் பிரதிநிதிகளையும் ஜனநாயகத்துக்கு வெளியே இருக்கும் ஆர்எஸ்எஸ் போன்று ஒரு புறஅமைப்பு இயக்குவது ஜனநாயக விரோதம். அதேசமயம், அதிகாரபூர்வமாக அப்படிப்பட்ட சித்தாந்தரீதியான ஒரு அமைப்புக்கான தேவை ஒரு கட்சிக்குள் நிச்சயமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இரு அமைப்புகள் தேவைப்படுகின்றன. 1. கட்சிக்கு உள்ளே சிந்தாந்தப் பயிற்சி அளிப்பதும் கட்சியின் முடிவுகளில் கொள்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அதிகாரம் மிக்கதுமான அமைப்பு, 2. கட்சிக்கு வெளியே கட்சிக்கு அப்பாற்பட்ட புதியவர்களுக்கு, மாணவர்கள் – இளைஞர்களுக்கு வரலாற்றையும் சமூக அக்கறையையும் ஊட்டி, அவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தெடுத்து, சமுதாய நாட்டத்தை உருவாக்கி, அர்ப்பணிப்புணர்வோடு மக்கள் அரசியலை நோக்கி அவர்களை நகரவைக்கும் அமைப்பு.
இந்த இரு அமைப்புகளும் தலைநகரம் முதல் குக்கிராமங்கள் வரை செயலாற்றும் வகையில் கட்டமைக்கப்பட வேண்டும். ஆர்எஸ்எஸ் போன்று அல்லாமல், ஜனநாயகரீதியாகவே இவற்றை உருவாக்கலாம். அதற்கான தேவையையும் ஓரளவுக்கான மாதிரியையும் ஆர்எஸ்எஸ் உணர்த்துகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த மூத்த இந்துத்வவாதிகளில் ஒருவர் தன் ஆரம்பக்காலக் கூட்டங்களில் அடிக்கடி பெரியாரைச் சுட்டிக்காட்டுவார். “முதல் நாள் இரவு படுத்துத் தூங்கிய ஊரில் மறுநாள் தூங்க மாட்டாராம் ஈ.வெ.ராமசாமி. ஓடிக்கொண்டே இருப்பார். அப்படி நாமும் நம் கருத்துகளைச் சுமந்துகொண்டு ஓடினால், மக்கள் நம் கருத்துகளையும் ஏற்பார்கள்” என்பார். அப்படியெல்லாமும் பேசி ஓடிதான் இந்த இடத்துக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள்; இன்னும் அசராமல் ஓடுகிறார்கள். இனஅரசியல் கணத்தில் சுண்டி இழுக்கக் கூடியது. பள்ளிக்கூடங்கள் முதல் கோயில்கள் வரை உள்ளே நுழைய ஏதோ ஒரு சின்ன கண்ணியும் காரணமும் போதும். எதிர்அரசியல் அத்தனை எளிதல்ல. அப்படியென்றால், எதிர்அரசியல் பேசுபவர்கள் எவ்வளவு ஓட வேண்டும்?
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago