காவல் நீதியும் சாதி நீதியும்

By எவிடென்ஸ் கதிர்

பல சமயங்களில் நீதிக்கான பயணத்தைச் சடலங்கள்தான் தொடங்கியிருக்கின்றன.

பல சமயங்களில் நீதிக்கான பயணத்தைச் சடலங்கள்தான் தொடங்கியிருக்கின்றன. இதற்கு சமீபத்திய சாட்சி விஷ்ணுபிரியா. தலித் சமூகத்தைச் சேர்ந்த 27 வயதான விஷ்ணுபிரியா கடந்த பிப்ரவரி 2015 மாதம் திருச்செங்கோடு டிஎஸ்பியாகப் பொறுப்பேற்றார். பணியில் சேர்ந்த நான்கு மாதங்களில் அவருக்குச் சவாலான வழக்கு ஒன்று வந்தது. கோகுல்ராஜ் என்கிற தலித் இளைஞர் கடந்த ஜூன் 24-ம் தேதி கழுத்து துண்டிக்கப்பட்டு முண்டமாக ரயில் தண்டவாளத்தில் கிடந்தார். ஆதிக்கசாதிப் பெண் ஒருவரும் கோகுல்ராஜும் காதலித்தார்கள் என்று இந்தப் படுகொலையை சாதி வன்மக் கும்பல் நடத்தியது. இதன் விசாரணை அதிகாரியாக விஷ்ணுபிரியா நியமிக்கப்பட்டார்.

`கொலை'

கோகுல்ராஜ் படுகொலையில் சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், முக்கியக் குற்றவாளியான சாதி சங்கப் பிரமுகர் கைது செய்யப்படாமல் இருக்கிறார். இந்த நிலையில்தான் கடந்த 18-ம் தேதி விஷ்ணுபிரியா மர்மமான முறையில் தூக்கிலிட்டு இறந்துபோனார். இதை போலீஸார் தற்கொலை என்று கூற, விஷ்ணுபிரியாவின் குடும்பத்தினரோ அதை மறுத்துவருகின்றனர்.

சாதியத்தின் பங்கு

விஷ்ணுபிரியாவின் மரணத்துக்குச் சாதியம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை மறுக்க முடியாது. தலித் இளைஞரின் கொலையை விசாரணை செய்த ஒரு தலித் போலீஸ் அதிகாரி இறந்துபோயிருக்கிறார். விஷ்ணுபிரியா தரப்பினர் இதற்குப் பின்னணியாகச் சொல்வது இதுதான்-

விஷ்ணுபிரியா டிஎஸ்பியாகப் பொறுப்பேற்றதிலிருந்து திருச்செங்கோடு பகுதியில் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகப் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் அதிகளவு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த சாதிக் கும்பல்கள், காவல் உயர் அதிகாரி ஒருவரிடம் புகார் செய்திருக்கின்றன. அந்த உயர் அதிகாரி விஷ்ணுபிரியாவிடம், “நீ சாதி பார்த்து வேலை பார்க்கிறாயா? உன்னை யார் எஸ்.சி. / எஸ்.டி வழக்குகளைப் பதிவுசெய்யச் சொன்னது?” என்றெல்லாம் கேட்டதாகச் சொல்லப்படுகிறது.

சாதி வன்கொடுமைக்கு எதிராக நடவடிக்கை எடுத்த எனக்கு சாதி முத்திரை குத்துகிறார்களே என்று கலங்கியிருக்கிறார் விஷ்ணுபிரியா. கோகுல்ராஜ் கொலையின் முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருக்கும் நிலையில், கொலையில் சம்பந்தப்படாத சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் கண்டறிந்த விஷ்ணுபிரியா, நாம் கைது செய்திருக்கக்கூடிய சிலர் அப்பாவிகள் என்று உயர் போலீஸ் அதிகாரியிடம் கூற, “எல்லாம் எனக்குத் தெரியும். நான் சொல்வதை மட்டும் செய். தேவையில்லாமல் பேசாதே” என்று விஷ்ணுபிரியாவிடம் கோபத்தைக் காட்டியிருக்கிறார் அந்த அதிகாரி. ஒரு கட்டத்தில் குற்றம் செய்யாத நபர்கள் மீதே குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்ய வேண்டுமென்று விஷ்ணுபிரியாவை அந்த அதிகாரி நிர்ப்பந்திக்க, இப்படி அப்பாவிகள்மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்தால், முக்கியக் குற்றவாளி மீதான தேடுதல் வேட்டையைப் பலவீனப்படுத்திவிடும் என்பதை உணர்ந்த விஷ்ணுபிரியா அதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்த மிரட்டல்கள்

கோகுல்ராஜின் படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளித் தரப்பினரும் விஷ்ணுபிரியாவைக் கடுமையாக மிரட்டியிருக்கின்றனர். இதற்கிடையில், சில சாதியத் தொழில் சக்திகளின் முக்கிய வழக்குகளின் விசாரணை அதிகாரியாக விஷ்ணுபிரியா நியமிக்கப்படுகிறார். அந்தத் தரப்பும் விஷ்ணுபிரியாவை மிரட்டியிருக்கிறது.

விஷ்ணுபிரியா பல நேரங்களில் வீட்டில் படுத்துறங்காமல் காவல் வாகனத்தில் கைத்துப்பாக்கியுடன் இருந்திருக்கிறார். ஒரு காவல் அதிகாரி மிரட்டப்பட்டும், அவருக்குத் தகுந்த பாதுகாப்பு கொடுத்து, மிரட்டிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரியின் மவுனம் சந்தேகத்தை எழுப்புகிறது.

இந்த நிலையில்தான், விஷ்ணுபிரியா இறந்திருக் கிறார். “சாதி பார்க்காமல், அரசியல் சார்பில்லாமல் பணி செய்கிற எங்களுக்குக் காவல் துறையில் மரணம்தான் பரிசாகக் கிடைக்கிறது. விஷ்ணுபிரியாவின் மரணத்துக்கு முக்கியக் காரணமான எஸ்பி மீதும் டிஐஜி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விஷ்ணுபிரியாவின் தோழி கீழக்கரை டிஎஸ்பி மகேஸ்வரி துணிச்சலுடன் சொல்லியிருப்பது பலருக்கு அதிர்ச்சியை உண்டுபண்ணியிருக்கிறது. ஆனால், நீதியை விரும்புகிறவர்களுக்கு மகேஸ்வரியின் குரல் நம்பிக்கை அளித்திருக்கிறது.

விஷ்ணுபிரியா எழுதியதாகச் சொல்லப்படுகிற தற்கொலைக் கடிதத்தின் சில பகுதிதான் தன் மகள் எழுதியது. பல பகுதிகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன என்று அவரது தந்தை ரவி கூறுகிறார். அந்தக் கடிதம் உண்மையானதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், அந்தக் கடிதத்தின் குரலில் போலீஸ் தன்மை தெரிகிறது. நான் தற்கொலை செய்துகொள்வதற்கும் கோகுல்ராஜ் வழக்குக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. போலீஸ் மீது ஆத்திரமடைய வேண்டாம். அவர்கள் நல்லவர்கள். என் மரணத்துக்கு எதிராக நீதி கேட்டு அரசியல் இயக்கங்கள் போராடக் கூடாது என்றெல்லாம் விஷ்ணுபிரியா எழுதியிருக்கிறாராம்.

இதுபோன்ற விந்தையான வழக்குகள் நிறைய உள்ளன. கோகுல்ராஜ் தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக பேசிய வீடியோ பரப்பப்பட்டது. ஆனால், சில நாட்களில் அது தற்கொலை அல்ல; கொலை என்று கண்டறியப்பட்டது.

உண்மை வெல்லும்

வன்கொடுமைகளுக்கு எதிராகத் துணிச்சலாக வழக்கை நடத்தியது, அரசியல் சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது, அப்பாவிகள்மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்ய மறுத்தது போன்ற காரணங்களுக்காக மிரட்டப்பட்ட நிலையில், தன் உயிரைக் கொடுத்துவிட்டு நேர்மையுடன் இறந்திருக்கிறார் விஷ்ணுபிரியா.

பொதுவாகவே, காவல் துறையில் சாதியமும் அரசியலும் ஆணாதிக்கமும் மிகுந்து காணப்படுகின்றன. ஆண் அதிகாரிகளால் பல பெண் போலீஸார் கடுமையான துயரங்களுக்கு உட்படுத்தப்படுவது போன்றே சாதி ஆதிக்க அதிகாரிகளால் பல தலித் போலீஸாரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அதுவும் ஒரு பெண் தலித் அதிகாரியின் நிலை எந்த நிலையில் இருக்கும் என்பதை நாம் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

“இடஒதுக்கீட்டில் பணியில் சேர்ந்த விஷ்ணு பிரியாவுக்குத் திறமையில்லை. அதனால்தான் இறந்துபோனார்” என்று சில சாதிக் கும்பல் சமூக வலைதளங்களில் எழுதுகின்றன. “காவல் துறையில் சேர்ந்தால் சாதாரண ஏழை எளிய மக்களுக்கு நீதியை வாங்கிக் கொடுக்க முடியும். அதனால்தான் டிஎஸ்பி ஆனேன். ஆனால், இந்தத் துறையில் துர்நாற்றம் வீசுகிறது. தவறான துறையைத் தேர்ந்தெடுத்துவிட்டேன்” என்று தம்முடைய நண்பர்களிடம் விஷ்ணுபிரியா பகிர்ந்திருக்கிறார். ஆனால், கொஞ்ச நாட்கள் காவல் துறையில் பணி செய்துவிட்டோம் என்கிற விசுவாசத்தினால், காவல் துறைக்குத் தான் பொறுப்பானவள் அல்ல என்று போலீஸ் மீது பழியைப்போடாமல், தம்மீது பழியைப்போட்டு இறந்துபோன விஷ்ணுபிரியாவின் அப்பாவித்தனத்தை என்ன சொல்வது?

எது எப்படியோ சாதியமும் பெண்ணடிமைத்தனமும் காவல் துறையில் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்கு விஷ்ணுபிரியாவின் மரணம் சாட்சி!

- எவிடென்ஸ் கதிர், சமூகச் செயல்பாட்டாளர், தொடர்புக்கு: info@evidence.org.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்