முதலில் அவர் களத்தில் இறங்கட்டும்... கொஞ்சம் ஒப்பாரியை நிறுத்துங்களேன்!

By சமஸ்

ஜனநாயகம் என்பது நம்முடைய எண்ணங்களுக்கு ஏனையோர் இடம் அளிப்பது மட்டும் அல்ல; ஏனையோரின் எண்ணங்களுக்கு நாமும் இடம் அளிப்பதுதான். தேர்தலுக்கு முன் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விருப்பங்களை முன்வைக்கலாம். தேர்தல் நாள் என்பது அவற்றின் மீதான தீர்ப்பு நாள். ஓட்டுகள் வெறுமனே மக்களுடைய விருப்பங்கள் மட்டும் அல்ல; இந்த நாட்டின் மீது, இந்த ஜனநாயகத்தின் மீது, இந்த அரசியல் மீது, கடந்த கால அரசாங்கத்தின் மீது, எதிர்கால அரசாங்கத்தின் மீது, நம்முடைய வாதப்பிரதிவாதங்கள் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடுகள்.

தேர்தலுக்கு முன் நரேந்திர மோடியைப் பற்றி, அவர் முன்னிறுத்திய குஜராத் முன்மாதிரியைப் பற்றி, அவருடைய கடந்த கால வன்முறை வரலாற்றைப் பற்றி, அவரை முன்னிறுத்திய பெருநிறுவனங்களைப் பற்றி எல்லோருமே பேசினோம், எழுதினோம், விவாதித்தோம். மக்கள் இப்போது தீர்ப்பு அளித்திருக்கிறார்கள் (நாம் பேசி, எழுதி, விவாதித்தவற்றின் மீதும்தான்). வடக்கே ஜம்முவிலிருந்து தெற்கே குமரி வரை கிழக்கே அருணாசலப்பிரதேசத்திலிருந்து மேற்கே கட்ச் வரை இது தெளிவான தீர்ப்பு. காங்கிரஸ் வரக் கூடாது என்று மட்டும் மக்கள் நினைக்கவில்லை; பா.ஜ.க-தான் வர வேண்டும் என்றும் நினைத்திருக்கிறார்கள். மோடிதான் வர வேண்டும் என்றும் நினைத்திருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு கட்சியின், வேட்பாளரின் வெற்றி, தோல்விக்குப் பின்னணியிலும் மக்களின் வலுவான செய்திகள் அடங்கியிருக்கின்றன. நமக்கு உண்மையாகவே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என்றால், மக்களின் அந்தச் செய்திகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதுதான் அடிப்படையாக இருக்க முடியும். ஆனால், சுற்றிலும் நிரம்பி வழியும் குரல்களைக் கேளுங்கள்... ஒரே புலம்பலும் ஒப்பாரியும் ஊளைச்சத்தமும்...

தேர்தலுக்குப் பின் மக்களிடையே பயணித்தபோது, அவர்களிடம் எதிர்கொண்ட சின்னச்சின்ன நியாயங்கள் இவை.

"நீங்கள் ஏன் மோடிக்கு ஓட்டு போட்டீர்கள்?"

"பின்னே, இவ்வளவு கொடுமைகளுக்கும் பின்னால், சிங்குக்கே ஓட்டுபோடச் சொல்கிறீர்களா? "

"நீங்கள் ஏன் அ.தி.மு.க-வுக்கு ஓட்டு போட்டீர்கள்?"

"தி.மு.க-வுக்கு ஓட்டு போட என்ன நியாயம் இருக்கிறது?"

ஒரு கட்சிக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார்: "காசையும் வாங்கிக்கொண்டு மாற்றிக் குத்திவிட்டார்கள்... வரவர நியாயம் செத்துக்கொண்டிருக்கிறது."

ஒரு வாக்காளர் சொன்னார்: "அவர்களுக்கு என்ன காசுக்கா பஞ்சம்? ஆனால், இந்தத் தேர்தலில் காசையே கண்ணில் காட்டவில்லையே... "

- எல்லாமும் கலந்ததுதான் ஜனநாயகம்; எண்ணற்ற விசித்திரங்களையும்தான்.

சமூக வலைத்தளத்தில் ஒரு நண்பர் எழுதியிருந்தார்: "இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் எப்படி வெற்றி பெற்றன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதைப் பற்றி மூச்சுக் கூட விடாத பலர் தி.மு.க என்ன தவறு செய்தது, அறிவுஜீவிகள் என்ன தவறு செய்தார்கள் என்றெல்லாம் இஷ்டத்துக்கு சவடால் அடித்துக்கொண்டிருக்கிறார்கள்..."

அது சரி, காங்கிரஸும் தி.மு.க-வும் மட்டும் என்ன காந்திய வழியிலா ஓட்டு கேட்டுக்கொண்டிருந்தார்கள்?

இன்னொரு நண்பர் எழுதியிருந்தார்: "மொத்தம் 31% ஓட்டுகளைத்தான் பா.ஜ.க. வாங்கியிருக்கிறது. 69% வாக்குகள் மோடிக்கு விழவில்லை..."

முதல் பொதுத்தேர்தலில் நேருவின் காங்கிரஸே 45% வாக்குகளைத்தான் பெற்றிருந்தது. இந்திய தேர்தல் வரலாற்றில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ராஜீவின் காங்கிரஸ் 1984-ல் 414 இடங்களை வென்றபோது பெற்ற வாக்குவீதம் 48.1%. புள்ளிவிவரங்களை எப்படியும் வளைக்கலாம்.

பந்தயத்தில் ஒரு விளையாட்டுக்காரர் ஜெயிக்க வேண்டும் என்றால், முதலில் எதிர் போட்டியாளரைப் பற்றி சரியாக மதிப்பிடத் தெரிந்திருக்க வேண்டும். வெற்றிக்கு நிறைய உத்திகளோடு உழைக்கவும் வேண்டும். எதிர்ப் போட்டியாளர் ஜெயிக்கும்போது அங்கீகரிக்கத் தெரிய வேண்டும். தன்னுடைய குறைகளைப் பற்றி யோசிக்கவும் வேண்டும்.

மணி ரத்னத்தின் ‘குரு' படத்தில், அதன் கதாநாயகன் குருநாத் பேசும் ஒரு வசனம் ஞாபகத்துக்கு வருகிறது: "குருநாத்தின் இந்த வெற்றி கடுமையான உழைப்பால் வந்தது... நீ என்னை எதிர்க்க வேண்டுமானால், கடுமையாக உழைக்க வேண்டும்... குருநாத்தை ஜெயிக்க நீ இன்னொரு குருநாத்தாக மாற வேண்டும்..." (அதாவது, உழைப்பில்...)

நம் எல்லோரையும்விட ஆயிரம் மடங்கு பிரம்மாண்டமானது இந்திய ஜனநாயகம். அட...மோடியைவிடவும்தான்!

-சமஸ், தொடர்புக்கு: samas@kslmedia.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்