ஊழல் எதிர்ப்பு என்ற புள்ளியில் அர்விந்த் கேஜ்ரிவால், பிரசாந்த் பூஷண் என்று முக்கியமான ஆளுமைகளுடன் இணைந்து அரசியல் மாற்றத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கியவர் யோகேந்திர யாதவ். ஆஆக-வில் ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரணமாகக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட யோகேந்திர யாதவ் தற்போது, ‘ஸ்வராஜ் அபியான்’ எனும் பெயரில் ஓர் அமைப்பைத் தொடங்கி விவசாயிகள் போராட்டம் நடத்திவருகிறார். மீண்டும் யோகேந்திர யாதவின் குரல் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.
கட்சியில் இருந்து நீங்கள் நீக்கப்பட்டதை எதிர்ப்பது போல் ஆரம்பித்த ‘ஸ்வராஜ் அபியான்’ அரசியல் அமைப்பின் சார்பில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கிவிட்டீர்களே?
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் சிலருடன் சேர்ந்து தொடங்கிய அரசியல் அமைப்பின் நோக்கங்களைப் பூர்த்தி செய்யவே கடந்த ஏப்ரல் 14-ல் ஸ்வராஜ் அபியான் துவக்கப்பட்டது. அதன் முதல் கட்டமாகத்தான் இந்த விவசாயிகள் போராட்டம். தொடர்ந்து மக்கள் பிரச்சினைகள் அனைத்தையும் எங்கள் போராட்டங்களின் அங்கமாக எடுத்து நடத்துவோம். தமிழகத்தில் நடைபெறும் மதுவுக்கு எதிரான போராட்டத்தையும் நாங்கள் விரைவில் எடுக்க இருக்கிறோம். இதை ஏற்கெனவே ஹரியாணா மாநிலத்தில் நடத்திய நாங்கள் அதற்காகத் தமிழகத்தைச் சேர்ந்தவர்களிடம் பயிற்சிபெற்றோம்.
டெல்லியில் ஜன்லோக்பால் மற்றும் மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவுச் சம்பவத்துக்கு எதிரான போராட்டங்களுக்காகத் திரண்ட இளைஞர்களை ஒன்றுகூட்டி ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டதுபோல், விவசாயிகளுக்காக நீங்களும் போராடத் தொடங்கி இருப்பது புதிய அரசியல் கட்சியைப் பின்கதவு வழியாகத் துவக்கும் முயற்சியா?
நாட்டின் அரசியலைச் சரியான பாதையில் திசைதிருப்பி பொதுமக்களின் உரிமைகளை நிலைநாட்டச் செய்வதே ‘ஸ்வராஜ் அபியா’னின் நோக்கம். போராட்டம் நடத்தாமல் அரசியல் செய்ய முடியாது எனும் அளவுக்கு அரசியல் சூழல் முற்றிலும் மாறிவிட்டது. எனவே, இந்த அமைப்பின் கடைசிகட்டப் போராட்டமாக ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் நாங்கள் அதை நிச்சயமாகச் செய்வோம்.
நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன?
முற்றிலும் வெற்றி என்று கூற முடியாது. எனவே, இந்தப் போராட்டத்தை ஜனநாயக முறைப்படி எந்த உள்நோக்கங்களும் இல்லாமல் முன்னெடுத்துச் சென்றால்தான் முழுமையான பலன் கிடைக்கும். தன்னிடம் இருக்கும் கையளவு நிலத்தையும் பெருநிறுவனங்களிடம் இழக்கும் நிலை விவசாயிகளுக்கு உருவாகிவிட்டதால்தான் நாங்கள் அவர்களுக்காக நீதி கேட்டு டெல்லியின் ஜந்தர் மந்தரை நோக்கி டிராக்டர் ஊர்வலம் நடத்தினோம். இதில், நாடு முழுவதிலும் உள்ள கிராமங்களில் இருந்து 6,520 மண் கலசங்களில் கொண்டு வரப்பட்டுள்ளன. இதை வைத்து டெல்லியின் ரேஸ்கோர்ஸ் மைதானம் முன்பாக ஒரு நினைவுச்சின்னம் அமைப்போம். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் மூலம், ரேஸ்கோர்ஸ் மைதானம் அமைப்பதற்காக மால்ச்சா கிராமம் முழுவதும் கையகப்படுத்தப்பட்ட சம்பவம் நடந்தது. அதை நினைவுகூர்வதுபோல் இச்சின்னம் அமையும்.
உங்களது இந்தப் போராட்டத்தில் மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒன்றிணைந்து போராடும் திட்டம் உண்டா?
நாங்கள் ஒன்றிணைந்தே போராடிவருகிறோம். ஆனால் அது விவசாயி களுடன்தானே தவிர அரசியல் கட்சிகளுடன் அல்ல. எங்களுடன் நாடு முழுவதிலும் உள்ள 40 விவசாய அமைப்புகள் இணைந் துள்ளன. இதுதான் உண்மையான ஒற்றுமை. அரசியல் கட்சிகளுடன் சேர்வது ஒற்றுமையே அல்ல. அவர்கள் இன்று வருவார்கள்; நாளை தங்கள் சுயலாபங்க ளுக்காக வேறு திசை நோக்கிச் சென்றுவிடுவார்கள்.
விவசாயிகள் தற்கொலைப் பிரச்சினையில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடந்திருக்கின்றன?
நிலைமை மோசமாகிக்கொண்டுவருகிறது என்பதுதான் உண்மை. இதுவரை இல்லாத ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் விவசாயிகள் தற்கொலைச் சம்பவங்கள் நிகழத் தொடங்கியிருக்கின்றன. விவசாயிகள் வேறு காரணங்களுக்காகத் தற்கொலை செய்துகொண்டதாகத் தவறான தகவல்களைத் திட்டமிட்டுப் பதிவுசெய்துவருகிறது மத்திய அரசு. இத்துடன் விவசாயிகள் தற்கொலையை அட்டவணைப்படுத்தி அதைப் பல புதிய பட்டியல்களில் தொகுக்கத் தொடங்கியிருக்கிறது. இதன் மூலம் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்ட முயல்கிறது. உரங்களை மத்திய அரசு ஏற்றுமதி செய்ததால் அதற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. விளையும் பயிர்களுக்கு உகந்த விலை கொடுப்பதாக அளித்த உறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
ஆம் ஆத்மி கட்சியில் மீண்டும் சேர அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறதே?
நேரடியாக அழைப்பு வரவில்லை. ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்த அர்விந்த் கேஜ்ரிவால் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ளும் மனநிலையில் இருப்பதுபோல் கருத்து தெரிவித்திருந்தார். அனால், இதுகுறித்து அவர் என்னிடம் இதுவரை அதிகாரபூர்வமாக எதுவும் பேசவில்லை.
கட்சிகள் பொதுப் பிரச்சினைகளுக்காக ஒரு அணியில் சேர்வது போல், ஆம் ஆத்மி கட்சியுடன் கைகோக்கும் நிலை ஏற்பட்டால் மீண்டும் ஒன்றிணைவீர்களா?
ஜனநாயக முறையில் நேர்மையான கொள்கைகளுக்கானப் பாதையில் செல்வதற்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தோம். கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தடம் மாறிப் பிரிந்து சென்றவர்கள் அவர்கள்தான். எனவே நேர்மையான கொள்கைகளை மீண்டும் கடைப்பிடிக்க விரும்புகிறவர்கள் வரவேற்கப்படுவார்கள். ஒரு நல்ல கேள்வியை நீங்கள் அவர்களிடம் கேட்காமல் தவறாக என்னிடம் வந்து கேட்டிருக்கிறீர்கள்.
டெல்லியில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்தும் நினைத்ததைச் செய்ய முடியாமல் இருப்பது ஆம் ஆத்மி கட்சியின் தோல்வி என்று சொல்லலாமா? ஜன் லோக்பால் மசோதாவை உடனடியாகக் கொண்டு வர முடியாமல் இருப்பது ஏன்?
இதுகுறித்து நாம் இப்போது முடிவு எடுத்து கூறுவது மிகவும் தவறானதாகிவிடும். எந்த ஒரு அரசுக்கும் குறைந்தது ஓராண்டு கால அவகாசம் அளிக்க வேண்டும். இதைத்தான் மோடி அரசு பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாகச் சொன்னேன். எனவே, இரு அரசுகளைப் பற்றியும் மதிப்பீடு செய்ய இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்!
ஆர். ஷபிமுன்னா, தொடர்புக்கு: shaffimunna.r@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago