பிப்ரவரி 10, 1988 அன்று தமிழக முன்னேற்ற முன்னணியைத் தொடங்கினார் சிவாஜி.
நான் திராவிடர் கழகத்திலோ, முன்னேற்றக் கழகத்திலோ எந்தக் காலத்திலும் சந்தா கட்டி உறுப்பினராக இருந்ததில்லை என்பார் சிவாஜி. ஆனால், சிவாஜியின் ஆரம்ப கால அடையாளம் திராவிட இயக்கம்தான். நாடக மேடைகளுக்கு அடுத்து, அவரைத் திராவிடர் கழகப் பிரச்சார மேடைகளில்தான் அதிகம் பார்க்க முடியும்.
அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ நாடகத்தில் நடிக்க ஆள் தேடியபோது முதலில் கிடைத்தவர் எம்ஜிஆர். ஆனால் அவர் மறுப்புத் தெரிவிக்கவே, அந்த இடத்துக்கு வந்தார் நடிகர் கணேசன். அவருடைய நடிப்பைப் பார்த்து, ‘சிவாஜி’கணேசன் ஆக்கினார் பெரியார். பெயர் வைத்தவர் பெரியார் என்றாலும், சிவாஜிக்கு அண்ணாவின் மீதுதான் அதிகபட்ச ஈர்ப்பு. கருணாநிதி போன்றவர்களோடு நட்பு.
திராவிட இயக்கம்
பெரியாரிடமிருந்து விலகி திமுகவைத் தொடங்கிய சமயத்தில், அண்ணாவுக்கு உறுதுணையாக இருந்தவர்களுள் கே.ஆர். ராமசாமிக்கு அடுத்து செல்வாக்கு நிரம்பிய திரை நட்சத்திரம் சிவாஜி மட்டுமே. பின்னாளில் எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர். என்று பல நடிகர்கள் திமுகவில் இணைந்து பிரச்சார மேடைகளை அலங்கரித்தனர். திராவிட நாடு கோரிக்கையைத் திமுக மிகத் தீவிரமாக வலியுறுத்திக்கொண்டிருந்த சமயம், திருச்சி லால்குடியில் நடந்த திமுக மாநாட்டில் ஈவெகி சம்பத் பேசினார். அந்தப் பேச்சு சிவாஜியை உணர்ச்சிவயப்படுத்தியது. அடுத்துப் பேசிய சிவாஜி, “அண்ணா ஆணையிட்டால் நான் பட ஒப்பந்தங்களை எல்லாம் கிழித்தெறிந்துவிட்டு, (திராவிட நாட்டு விடுதலை) போரில் ஈடுபடுவேன்” என்று முழங்கினார்.
1957-ல் தமிழ்நாட்டைப் புயல் தாக்கியது. பலத்த சேதம். நிவாரண நிதி திரட்டித் தாருங்கள் என்றார் அண்ணா. ஆகட்டும் என்று சிவாஜி, எம்ஜிஆர் உள்ளிட்டோர் களமிறங்கினர். கையில் துண்டேந்தி, ‘பராசக்தி' வசனம் பேசி நிதி திரட்டினார் சிவாஜி. அதிக நிதி அவருக்கே திரண்டது. ஆனால், அண்ணாவின் பரிசும் பாராட்டும் எம்ஜிஆருக்கே கிடைத்தது. அண்ணாவைச் சுற்றியுள்ளோர் செய்த சதி என்று சந்தேகப்பட்டார் சிவாஜி. சந்தேகம் கொடுத்த சோர்வால் முடங்கிக்கிடந்த சிவாஜியைத் தோள் தட்டி எழுப்பினார் இயக்குநர் பீம்சிங். வாருங்கள், திருப்பதி போய் வரலாம். போனார்கள். மறுநாள் பத்திரிகைகளில் செய்தி, ‘நாத்திக கணேசன் ஆத்திக கணேசன் ஆனார்’ என்று. ‘திருப்பதி கணேசனுக்குக் கோவிந்தா’என்று சுவரொட்டிகள் ஒட்டினார்கள். படச் சுவரொட்டிகள் மீது சாணி அடிக்கிறார்கள் என்று செய்தி வந்தது. வழக்கமான செய்திதான். அது சினிமா விவகாரம். ஆனால் இப்போது நடப்பது அரசியல் விவகாரம் என்பது புரிந்தது சிவாஜிக்கு. இனியும் அமைதி காப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வந்தார்.
காங்கிரஸ் இயக்கம்
விரக்தியின் விளிம்பில் நின்ற சிவாஜியை காமராஜர் என்ற காந்தம் கவர்ந்திழுத்தது. இனி காமராஜரே என்னுடைய வழிகாட்டி என்று சொன்னார் சிவாஜி. சிவாஜி காங்கிரஸில் இணைந்ததில் அண்ணாவுக்கு வருத்தம்தான். அதனாலென்ன, ‘எங்கிருந்தாலும் வாழ்க!’ என்று சொல்லிவிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸின் நட்சத்திரப் பேச்சாளராக, பிரச்சாரப் பீரங்கியாகச் செயல்பட்டார் சிவாஜி. 1967 தேர்தலில் காமராஜரும் காங்கிரஸும் தோற்று, திமுக ஆட்சியைப் பிடித்தபோதும் சிவாஜி பாதை மாறவில்லை. மேலும், தீவிரமாகவே கட்சிப்பணி செய்தார். காங்கிரஸ் கட்சி உடைந்தபோது காமராஜரின் பக்கமே நின்றார் சிவாஜி. 1971 தேர்தலில் சிவாஜி - எம்ஜிஆர் இடையே கடும் வார்த்தை யுத்தங்கள் நடந்தன. “என்னைவிடச் சிறப்பாக உன்னால் நடிக்க முடியுமா?” என்று கேட்டார் சிவாஜி. “என் படத்தின் வசூலை உன்னுடைய படத்தால் விஞ்ச முடியுமா?” என்று எதிர்க் கேள்வி எழுப்பினார் எம்.ஜி.ஆர். மூத்த தலைவர்களின் தலையீட்டுக்குப் பிறகே தனிமனிதத் தாக்குதல் முடிவுக்கு வந்தது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு, இரண்டு காங்கிரஸ் கட்சிகளையும் இணைப்பதில் ஆர்வம் செலுத்திய தலைவர்களுள் சிவாஜியும் ஒருவர். 1973 புதுச்சேரி தேர்தலின்போது காமராஜரும் இந்திராவும் கூட்டணி அமைத்தனர். ‘காவிரியும் கங்கையும் சங்கமித்துவிட்டன’ என்று சிலாகித்தார் சிவாஜி. காமராஜரின் மறைவுக்குப் பிறகு இந்திரா காங்கிரஸில் இணைந்தார் சிவாஜி. அவருக்குக் கட்சியில் உரிய முக்கியத்துவம் கொடுத்தார் இந்திரா. 1980 தேர்தலில் திமுகவும் இந்திரா காங்கிரஸும் கூட்டணி அமைத்தபோது, “என் பிறந்த வீடும் புகுந்த வீடும் ஒன்றாகிவிட்டது” என்றார் சிவாஜி. பின்னர் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, “நாடாள கலைஞர் இருக்கிறார், நடிப்பதற்கே போகட்டும் எம்.ஜி.ஆர்” என்று பேசினார் சிவாஜி. அந்தச் சமயத்தில் திரை நட்சத்திரம் நர்கீஸ் மரணமடையவே, அவர் வகித்துவந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை சிவாஜிக்குக் கொடுத்தார் இந்திரா. தேசிய அளவில் இந்திரா காந்தி உள்ளிட்டோருடன் நல்ல நட்பு இருந்தாலும் இங்கே மூப்பனார், சிவாஜி கோஷ்டி மோதல் ஏகப்பிரபலம். தேர்தல் வரும்போதெல்லாம் சிவாஜி கோஷ்டிக்கென்று தனியே ஒதுக்கீடு செய்யப்படும். அந்த கோஷ்டியைச் சேர்ந்தவர்தான் இன்றைய காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
தமிழக முன்னேற்ற முன்னணி
எம்.ஜி.ஆர். மரணத்துக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டபோது காங்கிரஸ் கட்சி வி.என்.ஜானகியை ஆதரிக்க வேண்டும் என்றார் சிவாஜி. ஆனால், ஜெயலலிதா அதிமுகவையே ஆதரிப்போம் என்று சொல்லிவிட்டார் ராஜீவ். அந்த நொடியில் ராஜீவ் - சிவாஜி உறவு கசந்தது. விளைவு, சிவாஜி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களான ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் பதவி விலகினர். மொத்தமாக விலகிவிடலாம் என்றனர் சிவாஜி ரசிகர்கள். சிவாஜி, 10 பிப்ரவரி 1988 அன்று தமிழக முன்னேற்ற முன்னணியைத் தொடங்கினார். 1989 தேர்தலில் அதிமுக (ஜா) பிரிவுடன் கூட்டணி அமைத்தார் சிவாஜி. அவருடைய கட்சிக்கு 50 இடங்கள் தரப்பட்டன. திருவையாறு தொகுதியில் சிவாஜி போட்டியிட்டார். ஈவிகேஎஸ்.இளங்கோவன் பவானிசாகரில் போட்டியிட்டார். எம்.ஜி.ஆரின் மறைவு, சிவாஜியின் ஆதரவு என்ற இரண்டு அம்சங்களும் வி.என்.ஜானகிக்குக் கைகொடுக்கவில்லை. திருவை யாறில் தோற்றுப்போனார் சிவாஜி. அத்தோடு கட்சியைக் கலைத்துவிட்டு, அரசியலிலிருந்து ஒதுங்கினார் சிவாஜி.
ஜனதா தளம்
வேண்டாம் என்று விலகிப்போன சிவாஜியை மீண்டும் அரசியல் களம் அழைத்தது. ராஜீவ் காந்திக்கு எதிராகத் தேசிய அளவில் அணியமைத்த வி.பி.சிங், தன்னுடைய ஜனதா தளம் கட்சியின் தமிழகத் தலைவராக சிவாஜி செயல்பட வேண்டும் என்று கோரினார். கடந்த காலக் கசப்பனுபவங்களைச் சொல்லி மறுதலித்தார் சிவாஜி. ஆனால், சிவாஜியின் நண்பரான ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் வழியே தான் நினைத்த காரியத்தைச் சாதித்தார் வி.பி. சிங். தமிழக ஜனதா தளத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார் சிவாஜி. பின்னர் நடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் ஜனதா தளம் இடம்பெற்றது. கருணாநிதியும் சிவாஜியும் ஒரே மேடையில் பங்கேற்றனர். ஆனால், தேர்தல் முடிவுகள் எதுவும் சாதகமாக அமையவில்லை. அத்தோடு அரசியலிலிருந்து முற்று முழுதாக விலகினார் சிவாஜி. ‘சக்சஸ்' என்ற வார்த்தையின் வழியே திரைத் துறைக்குள் நுழைந்த சிவாஜி, ஏனோ அந்த வார்த்தையை அரசியல் களத்தில் உச்சரிக்கவே முடியவில்லை!
- ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர், ‘இந்தியத் தேர்தல் வரலாறு’ உள்ளிட்ட பல்வேறு நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: writermuthukumar@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago