என்ன பேச வேண்டும் என் பிரதமர்?- இந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமை

By சமஸ்

அன்புக்குரிய கேளிர், வணக்கம்!

உலகின் பழமையான விவாதங்களில் ஒன்று இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்தில் மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. ‘நகரமா, கிராமமா; எது நம் நீட்டித்த நிம்மதியான வாழ்வுக்கு உகந்தது?’ லண்டன், நியூயார்க், மாஸ்கோ, சாவ்பாவ்லோ என்று மனித குலம் உருவாக்கிய கனவுப் பெருநகரங்கள் பலவும் கரோனா தொற்றுக்கு அதிகம் இலக்கானதும், பெருநகரங்களை ஒப்பிட நெரிசலும் நெருக்கடியும் அற்ற கிராமங்களும், சிறுநகரங்களும் பாதுகாப்பாக இருப்பதும் இந்த விவாதத்துக்குக் கூடுதல் உத்வேகம் தந்திருக்கிறது. உலகின் பல நாடுகளில் நகரங்களில் வாழ்வோர் இன்று அங்கிருந்து வெளியேற இருப்பதாகச் சொல்கின்றனர்; குறைந்தபட்சம் நகரின் மையத்திலிருந்து புறநகருக்கேனும் சென்றிட வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். அதேசமயம், பெருநகரங்களிலிருந்து வெளியேறியோர் மீண்டும் பிழைப்புக்காக அதே பெருநகரங்களை நோக்கித் திரும்புகின்றனர்.

இந்தியாவில் இந்த விவாதம் இன்னும் கூடுதல் ஆழத்துக்குச் செல்கிறது. டெல்லி, மும்பை, அகமதாபாத், பெங்களூரு, சென்னை என்று வாய்ப்புள்ள பெருநகரங்களை நோக்கிப் புலம்பெயரும் பல கோடிப் பேர் இடையில் தங்கள் மாநில எல்லையைக் கடக்க வேண்டியிருக்கிறது. ஊரடங்கின்போது வெளிமாநிலப் பெருநகரங்களிலிருந்து திரும்பிய பலர் தங்கள் மாநில எல்லையைத் தொட்டதும் மண்ணில் விழுந்து வணங்கியதும், மண்ணை அள்ளி முகத்தில் பூசிக்கொண்டதும், தேம்பி அழுததுமான உணர்ச்சிப் பெருக்குக் காட்சிகள் சாதாரணமானவை அல்ல; உள்ளபடி நகரம் – கிராமம் விவாதத்தைத் தாண்டி, இந்தியாவில் மாநிலம் என்னவாக அர்த்தப்படுகிறது என்ற ஆழமான கேள்வி நோக்கி நம்மைத் தள்ளும் வெளிப்பாடுகள் அவை.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நாட்டின் கிழக்கு, மேற்கு எல்லைகளை ஒட்டி பல லட்சம் பேர் அகதிகளாக நடந்ததோடு, இந்தக் கொள்ளைநோய் ஊரடங்குக் காலகட்டத்தில் தத்தமது மாநில எல்லைகளை நோக்கிப் பல லட்சம் பேர் நடந்ததைப் பலர் இணைத்துப் பேசியது சரியான ஓர் உருவகம்தான். புலம்பெயர்வை நாம் தொழிலாளர்கள் பிரச்சினையாக அல்லது பொருளாதாரப் பிரச்சினையாக விவாதித்துக் கடந்துவிட முனைகிறோம். அது சரியல்ல. இந்தியா எதிர்கொள்ளும் பெரும் சமூக – அரசியல் விவகாரமும் இது. தன்னுடைய மொத்த நிர்வாகப் பார்வையையும் இந்தியா மறுவரையறைக்கு உள்ளாக்கிக்கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது.

புலம்பெயர்வின் சவால்கள்

முறையான ஆய்வுகள் இல்லை, கணக்கெடுப்புகள் இல்லை என்றாலும், இன்றைக்கு இந்தியாவில் உள்நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஐம்பது கோடியைத் தொடலாம் என்பதைச் சமீபத்திய போக்குகள் சுட்டுகின்றன. அதாவது, நம் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் எந்த ஊரில் இன்று பணியாற்றுகிறார்களோ அந்த ஊரில் பிறக்காதவர்கள் அல்லது பத்தாண்டுகளுக்கு முன்புவரைகூட அந்த ஊருக்கு வந்திடாதவர்கள். இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயர்ந்திருப்பவர்கள்; ஏனையோர் சொந்த மாநிலத்துக்குள்ளேயே புலம்பெயர்ந்திருப்பவர்கள்.

பொதுவாகவே, புலம்பெயர்வானது ஒரு சமூகத்தின் இயங்கியலில் பெரும் மாற்றங்களை உண்டாக்கக் கூடியது. அதிலும், பிரத்யேகக் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் மாநிலங்களைக் கொண்ட, இந்தியா போன்ற அதீத மக்கள்தொகையும் நிலநெருக்கடியும் கொண்ட ஒரு நாட்டில், வரைமுறை இல்லாமல் மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயர்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதானது இரட்டைச் சவால். வெளியிலிருந்து வருவோர் அடிப்படை உரிமைகள் ஏதுமின்றி இங்கே சுரண்டப்படுவதும், பாதுகாப்பற்ற அடிமைகளாக அவர்கள் நடத்தப்படுவதும் தடுக்கப்பட்டு, அவர்களும் எல்லா வகையிலும் சமமானவர்களாக, புதிய சமூகத்தின் அதிகாரத்தில் பங்கேற்கும் கண்ணியச் சூழலை உருவாக்குவது முதலாவது சவால். மாறாக, மலிவுக் கூலியில் விதிக்கப்பட்ட சூழலை எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்ளும் புலம்பெயர்வோர் மறைமுகமாக ஏற்கெனவே கண்ணியச் சூழலுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் உள்ளூர் அடித்தட்டுச் சமூகத்தினருக்குப் போட்டியாகிவிடுகிறார்கள், அவர்களுடைய பேர சக்தியைப் பின்னுக்கு இழுக்கிறார்கள், காலப்போக்கில் வந்த இடத்திலேயே அவர்கள் தங்கும்போது உள்ளூரின் சமூக அரசியல் இயங்கியலை முற்றிலுமாகக் குலைத்துவிடுகிறார்கள் எனும் உள்ளூராரின் அச்சங்களுக்கு முகம் கொடுத்து, அவர்களுடைய அக்கறைகளையும் பாதுகாப்பதன் வழி சமூகத்தின் இணக்கச் சூழலைப் பராமரிப்பது இரண்டாவது சவால். முக்கியமாக, சமூகப் பிளவை நாம் தடுத்தாக வேண்டும்.

புலம்பெயர்வா, படையெடுப்பா?

இந்தியாவில் இந்தச் சமூகப் பிளவு ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டது. புலம்பெயர்வோர் குடியேற்றத்தால் ஏற்கெனவே அங்கு நிலைத்திருக்கும் உள்ளூரார் மூழ்கடிக்கப்படுவதும், சமூக அரசியல் களம் மாறுவதும் எத்தகைய சமூகப் பிளவை உண்டாக்கும் என்பதையே வட கிழக்கு மாநிலங்களில் இன்று காண்கிறோம். மிக முக்கியமானதும் நாம் கவனிக்கத் தவறுவதுமான போக்கு, புலம்பெயர்வால் பெரும் பொருளாதார முன்னேற்றத்தை அடைந்த மாநிலங்களிலும் புலம்பெயர்வுக்கு எதிரான உணர்வு பெருகுவதாகும். குஜராத்தின் உற்பத்தி மற்றும் சேவைத் தொழில் துறைகளில் 80% வேலைவாய்ப்புகள் குஜராத்தைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்; அதில் 25% தொழிலாளர்கள் நிறுவனம் அமைந்துள்ள சுற்றுப்புறத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்போவதாக முதல்வர் விஜய் ரூபானி அறிவிக்க இதுவே வழிவகுத்தது. மஹாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், தமிழகம் என்று நாட்டின் முதன்மையான தொழில் மாநிலங்கள் மட்டும் அல்ல; அதிகம் வெளிமாநிலங்களுக்குப் புலம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களைக் கொண்ட ஏழை மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசமும்கூட இதே மாதிரியான அறிவிப்பை வெளியிட்டது. மிக முக்கியமான விஷயம், மாநிலக் கட்சிகள் மட்டும் அல்ல; தேசியக் கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும்கூட இன்று மாநிலங்களில் இந்தக் குரலிலேயே பேச வேண்டியிருக்கிறது.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கல்வி - வேலைகளுக்கான கடும் போட்டிச் சூழல் வெளியூரார் மீதான எதிர்ப்புணர்வை அதிகரித்துவரும் சூழலில், மேற்கண்ட அறிவிப்புகள் யாவும் சட்ட முயற்சிகளாக மாறாமல் அறிவிப்பாகவே நீடிப்பதற்கான ஒரே காரணம், நம்முடைய அரசமைப்புச் சட்டம் இப்படியான சட்டங்களுக்கு எதிராக இருப்பதே ஆகும். “மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் சார்ந்து நாட்டின் எந்தவொரு குடிநபருக்கும் எதிராக அரசு பாகுபாடு காட்டக் கூடாது” என்கிறது அது. ஆனால், பெரும்பான்மை உள்ளூர் சமூகங்கள் வரைமுறையற்ற புலம்பெயர்வை ஒரு படையெடுப்பாகவே பார்க்கின்றன. குறிப்பாக, இந்தி பேசாத மாநிலங்கள். இது புறந்தள்ள முடியாதது. ஏனென்றால், மாநிலம் தாண்டிய புலம்பெயர்வில் மூன்றில் இரு பங்கினர் இந்தி மாநிலங்களிலிருந்து வருகிறார்கள்; ஒட்டுமொத்த எண்ணிக்கை அடிப்படையிலும் அரசியல் அடிப்படையிலும் பெரும்பான்மைப் பலத்தை இந்தி மாநிலங்கள் கொண்டிருப்பதால், சிறுபான்மை இந்தி பேசாத மாநிலங்கள் அவர்களை அச்சுறுத்தலாகப் பார்ப்பதற்கான நியாயங்களை முற்றிலுமாக நிராகரித்துவிட முடியாது. ஏனென்றால், ‘இந்து – இந்தி – இந்துஸ்தான்’ செயல்திட்டத்தை அந்தரங்க ஆசையாகக் கொண்டிருக்கும் தேசிய அரசுகளையே நாம் எதிர்கொண்டுவருகிறோம்.

மூன்றடுக்குக் குடியுரிமை

எப்படியும் மாநிலங்களின் பிரத்யேகமான நிறங்களை அச்சுறுத்தலாகவும், குடியேற்றத்தைக் கலப்புச் சூழலுக்கான வாய்ப்பாகவும், ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே நிறத்தைத் தருவதை லட்சியமாகவும் கருதும் சக்திகளிடமிருந்து உள்ளூர் சமூகங்களைப் பாதுகாப்பது அவசியமாகிறது. அதற்கு, உள்ளூர் சமூகங்களுக்கான முன்னுரிமையை, வெளியூர் சமூகங்கள் மீதான பாகுபாட்டிலிருந்து பிரித்துப் பார்க்கும் ஒரு அரசமைப்பைச் சிந்திக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இருக்கிறது.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘இனிவரும் காலங்களில் உத்தர பிரதேச மாநிலத்தவரை வேலைக்கு அமர்த்திக்கொள்ள விரும்பும் வெளிமாநில நிறுவனங்கள் உத்தர பிரதேச அரசின் அனுமதியைப் பெற வேண்டும்’ என்று கூறியதை இங்கே நினைவுகூரலாம். இதற்குப் பதிலடியாக, ‘மஹாராஷ்டிரத்துக்குள் வேலைக்கு வர விரும்பும் தொழிலாளர்கள் மஹாராஷ்டிர அரசின் அனுமதியையும், கூடவே என் கட்சியின் அனுமதியையும் பெற வேண்டும்’ என்று மஹாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான ராஜ் தாக்கரே கூறியதையும் நினைவுகூரலாம். வெற்று அரசியல் சவடால்கள் என்பதற்கு அப்பாற்பட்டு, இவற்றில் உள்ள அக்கறைகளைக் கொஞ்சம் பரிசீலிப்போம்.

உத்தர பிரதேசத் தொழிலாளர்களின் உழைப்பைத் தேவையான அளவுக்குச் சுரண்டிக்கொண்டு, கரோனா ஊரடங்கு போன்ற ஓர் இக்கட்டான தருணத்தில் அவர்களை அப்படியே சொந்த மாநிலத்துக்குத் துரத்திவிடுவது மஹாராஷ்டிரம் போன்ற ஒரு தொழில் மாநிலத்துக்கு அழகா? இதை ஏன் உத்தர பிரதேச அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு வாளாவிருக்க வேண்டும்? உத்தர பிரதேசத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பேசும் ஓர் அமைப்பை அந்த மாநில அரசே உருவாக்கினால், அது தொழிலாளர்கள் உரிமைகளைப் பேசலாம்தானே? அதேபோல, மஹாராஷ்டிரத்தின் தலைநகரான மும்பை இன்று புலம்பெயர்ந்தோரால் தத்தளிக்கும் நகரம். பெருகும் மக்கள் நெரிசல், மும்பை நகரத்தை மூச்சுத்திணறலில் தள்ளியிருக்கிறது. இரண்டு கோடிப் பேரைத் தாங்கும் மும்பை இன்னும் எவ்வளவு பேரைக் கொள்ள முடியும்? வெளியிலிருந்து வரும் வகைதொகையற்ற புலம்பெயர்வை முறைப்படுத்தும் அதிகாரம் ஏதும் இல்லை என்றால், ஒரு மாநில அரசும், பெருநகர நிர்வாகமும் எப்படி பெருகும் மக்கள் நெரிசலை நிர்வகிக்க முடியும்? அப்படியென்றால் இதற்கு என்ன தீர்வு? தொழிலாளர் நலச் சட்டங்களைப் பலப்படுத்துவதும், புலம்பெயர் தொழிலாளர்களை அமைப்புக்குள் கொண்டுவருவதும் மட்டுமல்ல; புலம்பெயர்விலும் ஒரு அரசியல் குறுக்கீடு தேவைப்படுவதையே இன்றைய சூழல் சுட்டுகிறது. இந்தியா மூன்றடுக்குக் குடியுரிமைக்கு மாற வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று இதைச் சொல்லலாமா?

இறையாண்மையும் புலம்பெயர்வும்

மனித குல நாகரிகத்தின் ஆதார சுருதிகளில் ஒன்று புலம்பெயர்வு. எந்த ஒரு சமூகத்திலும் அதன் ஒட்டுமொத்த பன்முகத்தன்மையையும், கலாச்சாரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் புலம்பெயர்வை எதிர்க்கும் சிந்தனை பிற்போக்குத்தனமானது. அதேசமயம், நில எல்லைகள் மனித வாழ்வின் முக்கியமான அம்சங்களைத் தீர்மானிப்பதாகிவிட்ட நவீன அரசுக்குப் பிந்தையதான உலகில் புலம்பெயர்வை வரைமுறைப்படுத்துவதும் முக்கியமானதாகிறது.

வெளிநாடுகளுக்குச் சென்று சொந்த ஊர் திரும்புவோரின் கதையிலிருந்து இந்தியா இரண்டு பாடங்களைக் கற்கலாம். புலம்பெயர்ந்த இடத்திலிருந்து சொந்த ஊருக்குப் பெரும் மூலதனத்துடன் திரும்புவதன் வழி தங்களுடைய சொந்த வாழ்க்கையையும் சொந்த பிராந்தியத்தையும் அவர்கள் வளமானதாக உருமாற்றுகிறார்கள்; அதேசமயம், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட அளவிலான எண்ணிக்கையில் புலம்பெயர்ந்தோரைப் பணிக்கு அனுமதித்து, திரும்ப அவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பிவிடுவது, மாறாக அங்கேயே குடியேற விரும்புவோருக்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு படிப்படியாக நிரந்தரக் குடியுரிமை அளிப்பது என்கிற நடைமுறை வழியாகவே உள்ளூர் சூழலைப் பெரும்பான்மை நாடுகள் வெற்றிகரமாகத் தக்கவைத்திருக்கின்றன.

பல நாடுகளின் அளவுக்கான மக்கள்தொகையை மாநிலங்களிலும், சில நாடுகளின் அளவுக்கான மக்கள்தொகையைப் பெருநகரங்களிலும் கொண்டிருக்கும் இந்தியா, மாநிலங்கள் இடையேயான புலம்பெயர்வுக்கு ஒரு முன்னுதாரண கொள்கையை உருவாக்க வேண்டும். குடியுரிமைப் பகிர்வை ஒரு கூட்டாட்சியான இந்தியா இதற்கான முக்கியமான கருவியாகக் கொள்ளலாம். ஏனென்றால், ஒரு ஜனநாயகத்தின் இறையாண்மையானது ஓரிடத்தில் குவிக்கப்பட்டதல்ல. கூட்டாட்சியில் இறையாண்மைப் பகிர்வு குடியுரிமையிலும் பிரதிபலிக்க வேண்டும்.

உலகின் மூத்த கூட்டாட்சியான அமெரிக்கா இரண்டடுக்குக் குடியுரிமையைக் கொண்டிருக்கிறது. நியூயார்க்கில் பிறக்கும் ஒரு குழந்தை அந்த மாநிலத்தின் குடிநபர்; கூடவே, அமெரிக்கக் குடிநபர். சுவிட்சர்லாந்து தன்னுடைய மக்களுக்கு மூன்றடுக்குக் குடியுரிமையைத் தருகிறது. ஜுரிச்சில் பிறக்கும் ஒரு குழந்தை அந்த நகராட்சியின் குடியுரிமை, அது சார்ந்த மாநிலத்தின் குடியுரிமை, சுவிஸ் கூட்டாட்சியின் குடியுரிமை மூன்றையும் பெறுகிறது. நாட்டின் குடியுரிமைக்குக் கூடுதலான இந்தக் குடியுரிமைகளின் விசேஷம் என்ன? கல்வி, வேலைவாய்ப்பு, சலுகைகள், மானியங்கள் வழங்குதலில் உள்ளூர் குடிகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தர இந்தக் குடியுரிமைகள் வழிவகுக்கின்றன.

காஷ்மீர் முன்னுதாரணம்

இப்போது இந்தியாவுக்கு நாம் பேசும் மூன்றடுக்குக் குடியுரிமைக்கான வேர்களை காஷ்மீரிலிருந்து ஒரு முன்னுதாரணமாக நாம் பெறலாம். இந்தியக் குடியரசோடு காஷ்மீரைக் கோக்கும் சிறப்புப் பிரிவாக இருந்த அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-ன் நீட்சியான ‘35 ஏ’ காஷ்மீரிகளுக்கு ­அளித்த உரிமைகளின் முக்கியமான சாராம்சம், உள்ளூர் குடிகளுக்கான சிறப்புரிமை; முக்கியமாக ஜம்மு - காஷ்மீரின் நிரந்தரக் குடிமக்களுக்கு மட்டுமான நிலவுரிமையையும் அரசு வேலைகளில் இடஒதுக்கீட்டையும் அது வழங்கியது. ஜம்மு - காஷ்மீர் இரண்டாகப் பிளக்கப்பட்டு, மாநில அந்தஸ்து நீக்கப்பட்டு, இரு ஒன்றியப் பிரதேசங்களாக்கப்பட்டுவிட்ட பிறகு, இந்தக் கொள்ளைநோய்க் காலகட்டத்தில் ஒரு புதிய நடைமுறையை அங்கு இந்திய அரசு ஏற்படுத்தியிருக்கிறது. அங்கு 15 ஆண்டுகளாக வாழ்ந்த, பணிபுரிந்த எவரும் அல்லது அங்கே ஏழாண்டுகள் படித்த எவரும் முன்பு நிரந்தரக் குடிமக்களுக்கு மட்டும் பாத்தியதைப்பட்ட நலன்களை அடையலாம் என்பதே அது. முந்தைய சிறப்புரிமையின் நீர்த்த வடிவமே இது என்றாலும், ஒரு தொடக்கமாக இதை ஏன் எல்லா மாநிலங்களுக்கானதாகவும் நாம் விஸ்தரித்துப் பார்க்கக் கூடாது?

ஒரு இந்தியக் குடிநபர் நாட்டின் எந்த மாநிலத்துக்கும் சுதந்திரமாகச் செல்லலாம். அதேசமயம், அவர் கல்வி அல்லது வேலைவாய்ப்புக்காகப் புதிய மாநிலத்தின் நகரம் ஒன்றிலேயே வசிக்க முடிவெடுக்கையில் மாநில அரசிடமும் உள்ளூர் அரசிடமும் தன் விவரங்களைப் பதிவுசெய்திட வேண்டும். புதிதாகக் குடியேறிய நகரிலேயே ஒருவேளை நிரந்தரமாக அவர் வசிக்க முடிவெடுத்தால், அந்த மாநிலத்தில் உள்ளூராருக்கு இணையாக அந்த ஊரின் ஓட்டுரிமையையும் நிலவுரிமையையும் பெறுவதற்கு ஒரு கால இடைவெளி அங்கு தொடர்ந்து வசிப்பவராக இருக்க வேண்டும்; படிப்படியாக நகரின் நிரந்தரக் குடியுரிமையைச் சம்பந்தப்பட்ட மாநிலமும், உள்ளாட்சியும் அவருக்கு அளிக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில், இவை நீங்கலான ஏனைய எல்லா உரிமைகளும் அவர்கள் உறுதிசெய்யப்பட சம்பந்தப்பட்ட மாநில அரசும், உள்ளூர் அரசும் பொறுப்பேற்க வேண்டும். இதேபோல, ஒரே மாநிலத்துக்குள்ளான புலம்பெயர்வில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமைகளை வழங்க வேண்டும். ஒரு கல்லூரியிலோ, அலுவலகத்திலோ இடம் கோரி போட்டியில் நிற்கும் இருவரில் உள்ளூராருக்கு நூற்றுக்கு ஒரு மதிப்பெண் கூடுதலாக வழங்கும் சலுகையை ஓர் உதாரணமாக இதற்குச் சொல்லலாம். இதை ஒரு தொடக்கப்புள்ளியாகக் கொண்டு நாம் சிந்திக்கலாம். புலம்பெயர்ந்தோருக்கான பாதுகாப்பை அமைப்புரீதியாக உறுதிப்படுத்துவதற்கு இது வழிவகுக்கும். உள்ளூரியத்தை அரசியல் பிரதிநிதித்துவப்படுத்தவும் இது வழிவகுக்கும். அதிகாரப்பரவலாக்கலுக்கும் இது வழிவகுக்கும்!

சமஸ், தொடர்புக்கு: samas@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்