மெல்லத் தமிழன் இனி 2 - மது அருந்துவது தனி மனித உரிமையா?

By டி.எல்.சஞ்சீவி குமார்

மதுவிலக்கு என்கிற பேச்சை எடுத்தாலே சிலர், “மது அருந்துவது தனி மனித உரிமை. அது பொது மக்களின் பொழுதுபோக்கு. மதுவைத் தடைசெய்வது சட்ட விரோதம்” என்றெல்லாம் பொங்கி எழுகிறார்கள். உண்மையில் மது அருந்துவது தனி மனித உரிமையா? பார்ப்போம்.

முதலில் தனி மனிதன் என்றால் என்ன? தனி மனிதன் எனில் யாரையும்/ எதையும் சாராதவராக இருக்க வேண்டும். அவரையும் யாரும்/ எதுவும் சார்ந்திருக்கக் கூடாது. ஆனால், புல்லில் தொடங்கி புலிகள் வரை நீளும் இயற்கையின் இடையில்லா சங்கிலித் தொடரில் மனிதனும் ஒரு அங்கம் எனும்போது ‘தனி மனிதன்’ என்பது எவ்வகையில் சாத்தியம். ஒவ்வொரு தனி மனிதனின் சிறு அசைவையும் உள்ளடக்கியதுதானே ஒட்டுமொத்த உலகத்தின் இயக்கம். அப்படியானால் இங்கே யாரெல்லாம் தனி மனிதன்? நீங்கள்? நீங்கள்? நீங்கள்? ஒருவரேனும் கரங்களை உயர்த்த இயலுமா?

உண்மையில் இங்கு எவர் ஒருவரும் தனி மனிதன் அல்ல. மனிதன் ஒரு சமூக விலங்கு. தனி மனிதனின் நடத்தைகளே சமூகத்தின் நன்மை, தீமைகளைத் தீர்மானிக்கின்றன. சமூக நலனைப் பாதிக்காத தனி மனிதச் சுதந்திரமே சமூகத்தின் சுதந்திரம். ஒரு தனி மனிதன் மது அருந்துவதால் பாதிக்கப்படுவது அவனது உடல் நலம் மட்டுமில்லை. அவனை நம்பியிருக்கும் பெற்றோர், மனைவி, குழந்தைகள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். ஏழைகளின் வீடு, உணவு, குழந்தைகளின் கல்வி, அடிப்படை ஆரோக்கியத்துக்காக செலவிடப்பட வேண்டிய மொத்தப் பணமும் மதுக்கடைகளில் கொட்டப்படுகிறது. நடுத்தெருவில் நிற்கின்றன குடும்பங்கள். சாலைகளில் பிச்சை எடுக்கிறார்கள் குழந்தைகள். தடம் மாறத் தள்ளப்படுகிறார்கள் பெண்கள். இதன் நீட்சியாகக் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் பெருகுகின்றன. கொலைகள், தற்கொலைகள் அதிகரிக்கின்றன. இதெல்லாம்தான் தனி மனித உரிமையா?

தனி மனிதன் மதுவுக்கு அடிமையாவதால் அவனது செயல்திறன் பாதிக்கப்படுகிறது. தனது வேலையை இழக்கிறான். பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. சக பணியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். நிறுவனத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இப்படியாக ஒரு சமூகத்தின் வளர்ச்சியே சிதைவுக்குள்ளாகிறது. இன்னொரு பக்கம் மதுவால் தனி மனிதன் தன்னிலை இழக்கிறான். சக மனிதனுடன் சண்டையிடுகிறான். சாலையில் புரள்கிறான். பொது அமைதிக்கு பாதிப்பு விளைவிக்கிறான்.

பொது அமைதிக்குப் பாதிப்பு என்று வரும்போது சட்டம் நுழைய வேண்டும் அல்லவா. இல்லை, தனி மனித உரிமை பாதிக்கப்படும் என்பதற்காகச் சட்டம் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்குமா? சட்டம் எங்கே தலையிட வேண்டும்/ எங்கே தலையிடக் கூடாது என்பதற்கெல்லாம் ஒரு வரையறை இருக்கிறது இல்லையா! ஒருவர் மது அருந்துவது தனி மனித உரிமை என்றால் கஞ்சாவையும் அபினையும் போதை ஊசியையும் எந்தப் பட்டியலில் சேர்ப்பது? தனி மனித உரிமை என்பதற்காக நான்கு சுவர்களுக்குள் கள்ளச் சாராயம் காய்ச்சிக்கொள்ள முடியுமா? இல்லை, பாலியல் தொழிலைத்தான் அனுமதிக்குமா சட்டம்? தலைக்கவசம் அணிவதும் அணியாததும்கூடத்தான் தனி மனித உரிமை. தனி மனிதனின் நன்மைக்காக, சமூகத்தின் நன்மைக்காக தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கவில்லையா நீதிமன்றம்? பொது நன்மை கருதி லாட்டரியை ஒழிக்கவில்லையா தமிழக அரசு?

தமிழகத்தில் பொதுப் பிரச்சினைகள் ஏராளம். கள்ளச்சாராயம் பொதுப் பிரச்சினைதான். கற்பழிப்பு பொதுப் பிரச்சினைதான். குழந்தைத் திருமணம், குழந்தைகள் கடத்தல், பெண்கள் மீதான வன்கொடுமைகள், சாதியக் கொடுமைகள், வரதட்சணைக் கொடுமைகள், கொலை, கொள்ளைகள் எல்லாமே பொதுப் பிரச்சினைகள்தான். அதேசமயம் இவை எல்லாம் இங்கே நடக்காமல் இல்லை. குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதற்காக அவற்றுக்கு எல்லாம் அனுமதியா கொடுத்துவிட்டோம்? இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த இங்கே சட்டங்கள் உண்டு.

ஆனால், மதுவினால் பொதுப் பிரச்சினை ஏற்படுகிறது, லட்சக்கணக்கான குடும்பங்கள் சாகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த இங்கே சட்டம் எதுவும் இல்லை. எனவே, மதுவிலக்குச் சட்டம் கொண்டு வாருங்கள் என்று கேட்டால், குடிப்பது தனி மனித உரிமை என்பதா? மதுவால் கொத்துக்கொத்தாகச் செத்துக்கொண்டிருக்கும் பிணங்களுக்கு மத்தியில் அமர்ந்துக்கொண்டு ‘குடி உரிமை’யைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது அறிவுஜீவி குடிநோயாளிகளுக்கு?

தெளிவோம்…

- டி.எல்.சஞ்சீவிகுமார்

- தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்