ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியை விட்டு விலகப்போகிறேன் என்று சில நாட்களுக்கு முன்புதான் அறிவித்திருந்தார் ரகுவன்ஷ் பிரசாத் சிங். பிஹாரில் அடுத்த மாதம் தேர்தல் நடக்கவிருக்கிறது என்பதால் அவரது அறிவிப்பு விவாதங்களையும் எதிர்பார்ப்புகளையும் எழுப்பிவந்த நிலையில், அவரது மரணச் செய்தியும் வந்துசேர்ந்திருப்பது துயரமானது.
ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவர் மட்டும் அல்லாது பிஹாரின் கண்ணியமான அரசியல் அடையாளங்களிலும் ஒருவர் ரகுவன்ஷ். லாலுவுடன் இணைந்து நீண்ட நெடிய அரசியல் பயணத்தை மேற்கொண்டவர். பிஹாரின் வைஷாலியிலிருந்து ஐந்து முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சிக் காலத்தில், ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். அந்நாட்களில், நூறு நாள் வேலைத் திட்டம் என்ற பெயரில் அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உருவாவதற்கும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கும் காரணமானவர்களில் ஒருவர்.
லாலுவின் தளபதி
அடிப்படையில், ரகுவன்ஷ் ஒரு கணிதவியலாளர். அத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஆராய்ச்சியாளர். சோஷலிஸ கருத்துகளின்பால் ஈர்க்கப்பட்டு அரசியலில் களமிறங்கியவர். நெருக்கடிநிலைக் காலத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அவரது இல்லம் சோதனையிடப்பட்டது. ஆனால், அவர் கைதுசெய்யப்படவே இல்லை. அழுக்குடையோடும் செருப்பில்லாத வெறுங்காலோடும் விவசாயியைப் போல தோற்றமளித்த அவரை ஒரு கணிதவியலாளர் என்று காவல் துறையால் அடையாளம் கண்டுகொள்ள முடியாததுதான் காரணம்.
ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் இணைந்த மிகச் சில ராஜபுத்திர தலைவர்களில் அவரும் ஒருவர். 1977-ல் பிஹாரில் முதல்வர் கர்ப்பூரி தாகூர் அமைச்சரவையில் எரிசக்தித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். பிஹாரின் முதல்வர் வேட்பாளராக லாலு முதன்முறை களம் இறங்கியபோது அவரது கரங்களை வலுப்படுத்தியவர் அவர். லாலு சிறைசெல்ல வேண்டியிருந்தபோது, அவரது மனைவி ராப்ரி தேவி முதல்வர் பொறுப்பை ஏற்பதற்கும் ஆதரவாக நின்றவர். 1996-ல் மக்களவைக்குள் அடியெடுத்து வைக்கும் வரை, மாநில அரசியலில்தான் அவரது முழுக் கவனமும் இருந்தது; பின்னர் தேசிய அரசியலிலும் அவர் தடம் பதிந்தது. கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் என்றபோதும் தொண்டர்கள் எப்போதும் அவரை அணுகவும் பேசவும் முடியும். மத்திய அமைச்சராகப் பதவியில் இருந்தபோது டெல்லியிலும் அதே அணுகுமுறையைத் தொடர்ந்தவர். அவர் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்புவகித்த காலம்தான், இந்தியாவின் கிராமப்புற வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக மாறியது. அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், திட்டக் குழு துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா, தேசிய ஆலோசனைக் குழுத் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் ஒப்புதலோடு நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு சட்ட வடிவம் கொடுத்தார். நிதியமைச்சகத்தோடு மல்லுக்கட்டி நிதி ஒதுக்கீடுகளையும் பெற்றார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டாவது முறையாக 2009-ல் பதவியேற்றபோது, ராஷ்ட்ரீய ஜனதா தளம் அந்தக் கூட்டணியில் இடம்பெறவில்லை. சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது. தேர்தலுக்குப் பின்பு அமைச்சரவையிலும் அக்கட்சி இடம்பெறவில்லை. ரகுவன்ஷ் பிரசாத் சிங் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று சோனியா காந்தி, மன்மோகன் சிங் இருவருமே விரும்பினர். லாலுவும் அதற்குத் தடையாக இருக்கவில்லை. எனினும், அமைச்சர் பொறுப்பை ஏற்காமல் லாலுவுடன் அரசியல் பயணத்தைத் தொடர்ந்தவர் ரகுவன்ஷ்.
தொடக்கத்தில் வெகுஜன கவர்ச்சித் திட்டமாகச் சித்தரிக்கப்பட்ட ஊரக வேலை உறுதித் திட்டம் சுதந்திர இந்தியாவில் எவ்வளவு ஒரு முக்கியமான, புரட்சிகரமான திட்டம் என்பது இன்று உணரப்படுகிறது. இந்தத் திட்டத்தைக் கிட்டத்தட்ட உருக்குலைத்துவிட முயன்றது பாஜக அரசு. ஆனால், இன்று கரோனா போன்ற ஒரு பெருந்தொற்று காலத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் மாபெரும் வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிலையிலும், இந்நாட்டின் பெரும் பகுதி அடித்தட்டு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்திடாமல் பாதுகாக்கப்படுவதில் வேலை உறுதித் திட்டம் முக்கியப் பங்காற்றுவதை அதே அரசும் அங்கீகரிக்கிறது. கொள்ளைநோயின் பாதிப்பிலிருந்து கிராமப்புறப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்த வேலைத் திட்டத்தை மென்மேலும் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே ஊரக மற்றும் வேளாண் பொருளியலாளர்களின் பரிந்துரையாக இருக்கிறது. ஆக, தான் முன்னெடுத்த ஒரு திட்டம் கோடிக் கணக்கானவர்களைப் பசிக் கொடுமையிலிருந்து காப்பாற்றிவருவதை வாழும் காலத்திலேயே பார்த்த மனநிறைவோடுதான் நம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்றிருக்கிறார் ரகுவன்ஷ்.
நீங்கா நட்பு
கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும் தோல்வியடைந்ததன் காரணமாக, தீவிர அரசியலிலிருந்து சற்று விலகியே இருந்தார் ரகுவன்ஷ். லாலு சிறை சென்ற பின் அவருடைய மகன் தேஜஸ்வியுடன் அவருக்கு உறவு சரியாக இல்லை. ஆயினும், மதச்சார்பின்மை என்ற தனது கொள்கையிலிருந்து சற்றும் பிறழாதவர் அவர், கட்சியுடனான தன்னுடைய முரண்பாட்டை அரசியல் எதிரிகளுக்கான சாதகம் ஆக்கிவிடவில்லை. ராஷ்ட்ரீய ஜனதா தளத்திலிருந்து விலகுவதாக அறிவித்தவுடன் அவர் பாஜகவில் சேர்ந்துவிடக்கூடும் என்று சில ஊகங்கள் எழுந்தன. ஆனால், அவர் நிதிஷ் குமாருக்குத் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி அந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
லாலுவும் நிதிஷும் இணைந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதுதான் ரகுவன்ஷ் பிரசாத் சிங்கின் விருப்பம். அதை அவர் தொடர்ந்து வெளிப்படுத்திய நிலையிலும் கட்சிக்குள் அதற்கு உரிய கவனம் கொடுக்கப்படவில்லை என்பதே அவர் மனக்குறை. கட்சியிலிருந்து விலகும் முடிவை அவர் அறிவித்தபோது லாலு அதற்கு ஆற்றிய எதிர்வினையே எல்லோரையும் நெகிழவைத்தது: “நீங்கள் கட்சியிலிருந்து விலகுவதான செய்தியை நான் நம்பவில்லை; நீங்கள் எங்கேயும் செல்லப்போவதில்லை” என்று கூறியிருந்தார் லாலு. தனது அரசியல் வாழ்வின் இணை பிரியாத தளபதியான ரகுவன்ஷ் இறந்த பின் லாலு வெளியிட்ட இரங்கல் செய்தி அவர்கள் இடையேயான ஆழமான நட்பை மீண்டும் வெளிக்கொணர்ந்தது: “நீங்கள் எங்கேயும் செல்ல மாட்டீர்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால், இப்போது எங்களை விட்டு இவ்வளவு வெகுதூரம் சென்றுவிட்டீர்களே!”
- செல்வ புவியரசன்
தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago