ராயின் காந்தியும் உண்மையான காந்தியும்

By ராஜ்மோகன் காந்தி

அருந்ததி ராய், "காந்தியின் இருப்பு பெரும் அணைகளையும் பெரும் தொழிற்சாலைகளையும் ஆதரிக்கவும் அவர்களுடைய ஆதரவைப் பெறவும் அனுமதித்தது" என்கிறார். "டாட்டாக்கள் கட்டும் அணை மின்சாரம் எடுக்கப் பயன்படப்போகிறது என்பதால் போராட்டத்தைக் கைவிடும்படி கிராமத்தினரிடம் சொன்னார்" என்கிறார். இது எவ்வளவு தூரம் உண்மை?

முக்கியமான ஒன்றைப் பதிவுசெய்யத் தவறிவிட்டார் ராய். மூன்று வருடங்களுக்கு முன்னர், அதாவது ஏப்ரல் 1921-ல் முல்ஷி அணை திட்ட நிலையில் இருந்தபோது, இடம்பெயர்ந்த கிராமவாசிகள் சத்தியாகிரகத்தைத் தொடங்கிய சூழலில், காந்தி தன் பத்திரிகையில் ஒரு கடிதம் எழுதினார். கண்ணியமான மொழியில் எழுதியிருந்தாலும் டாட்டாவுக்குக் காட்டமான எச்சரிக்கையை விடுத்த கட்டுரை அது.

"மாபெரும் டாட்டா அமைப்பினர், அவர்களுடைய சட்டரீதியான உரிமைகளை வலியுறுத்துவதைக் காட்டிலும், மக்களுடன் நேரடியாக விவாதித்து அவர்களுடன் ஆலோசித்து எதையும் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். ஒரேயொரு ஏழையாக இருந்தாலும்கூட, அவருடைய ஒப்புதலின்றி டாட்டாவின் திட்டங்கள் நிகழும்போது, அவை இந்தியாவுக்கு அளிக்க இருப்பதாகக் கூறும் வரங்களின் பெறுமதிதான் என்ன?

அரை வயிறும் கால் வயிறுமாகப் பட்டினியில் வாடும் மூன்று கோடி ஆண்களையும் பெண்களையும் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் உள்ள நோயுற்ற மக்களையும் சுட்டுக்கொன்று அவர்களுடைய உடலை உரமிட்டால், எஞ்சியவர்கள் வசதியாக வாழலாம், ஏழ்மையும் நோய்மையும் முடிவுக்கு வந்துவிடும் என நான் சொல்ல முடியும். ஆனால், ஒரு கிறுக்கனைத் தவிர வேறு எவரும் இத்தகைய யோசனையை முன்மொழிய முடியாது. ஆண்களும் பெண்களும் சுட்டுக் கொல்லப்படவில்லை என்றாலும், அவர்கள் பார்த்து வளர்ந்த, உணர்வுபூர்வமான நெருக்கம் கொண்ட, நெகிழ்வான பிணைப்பு கொண்ட, வாழ்வுக்கே பொருள் அளிக்கும் நிலத்திலிருந்து அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது எவ்வகையில் முன்னதைக் காட்டிலும் வலுவற்ற வாதமாக இருக்கும்?

அவர்கள் பலவீனமான, ஆதரவற்ற தம் தேசத்தவர்களின் விருப்பத்துக்குச் செவிமடுத்தால் இந்தியாவின் வளர்ச்சிக்கு டாட்டா எனும் மகத்தான பெயருக்கு இன்று வாரிசாய் இருப்பவர்கள் உண்மையிலேயே உதவுவார்கள் எனக் கோருகிறேன்." (யங் இந்தியா, 27 ஏப்ரல், 1921)

எனினும் டாட்டாக்கள் அவர்களின் திட்டத்தின்படி முன்சென்றார்கள் என்பது வேறுவிஷயம். முல்ஷி அணை குறித்து அவர் தெரிவித்த கருத்துக்காக அல்ல, ஆங்கிலேய அரசருக்கு எதிரான ராஜதுரோகத்துக்காக ஒரு வருடத்துக்குள் காந்தி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையிலிருந்து விடுதலை அடைந்தபோது, அணை கட்டுமானப் பணி பாதியளவு நிறைவடைந்திருந்தது. ராய் தன் அடிக்குறிப்பில் சுட்டியுள்ள கடிதத்தில் காந்தி எழுதியவாறே, இடம்பெயர்ந்த பெரும்பாலான கிராம மக்கள் அதற்கான இழப்பீட்டையும் பெற்றிருந்தனர். மேலும், தொடர்ந்து நடைபெற்ற சத்தியாகிரகத்தைத் தலைமை தாங்கியவர் அகிம்சையின்மீது முழு ஈடுபாடு கொண்டவர் அல்ல என்று காந்தி கருதினார். இவற்றை எல்லாம் காரணங்களாக அடுக்கிய பின்னர், சத்தியாகிரகத்தைக் கைவிடுமாறு அறிவுறுத்தினார்.

இந்த ஆலோசனை, விவசாயிகளுக்குப் போதுமான அளவு ஆதரவளிக்கிறதா அல்லது அணையைப் போதுமான அளவு வலுவாக எதிர்த்ததா எனும் கேள்வி நியாயமானதே. இதற்குப் பல விதமான பதில்கள் கிடைக்கக்கூடும் (உண்மையான ஆய்வுகூட அவசியப்படலாம்). எனினும், முல்ஷி அணையை முன்னிட்டு டாட்டாக்களைக் குறிப்பிடத்தக்க அளவு கடுமையான சொற்களால் காந்தி பொதுவெளியில் விமர்சனம் செய்தார் என்ற உண்மையை மறைத்ததன் காரணமாக, ராய் தீர்ப்பெழுதும் தகுதியை இழக்கிறார். அதே சமயம், நூலின் பிற பகுதிகளில், காந்தி டாட்டாக்களிடம் மென்மையாக நடந்துகொண்டார் என்றெழுதும்போது நாம் ராய் எழுதுவதைச் சந்தேகிக்க வேண்டியதாகிறது.

வட்டமேஜை மாநாட்டுக்கு முன்

ஆகஸ்ட் 2, 1931-ல் இந்தியாவின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க பிரித்தானியப் பிரதமர் ஏற்பாடு செய்திருந்த லண்டன் வட்டமேஜை மாநாட்டுக்குச் செல்வதற்கு முன்னர், அதே வட்டமேஜை மாநாட்டுக்குச் செல்லவிருந்த அம்பேத்கரை காந்தி முதன்முறையாக மும்பையில் சந்தித்தார். அகமதாபாத்தில் காந்தி மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

"தீண்டாமை எனும் களங்கத்தை நீக்காமல் நாம் அரசமைத்தோம் எனில், இப்போதிருக்கும் நிலையைக் காட்டிலும் சுயராஜ்ஜிய அரசில் தீண்டத்தகாதோர் இழிவான நிலையில் இருப்பார்கள் என்றே நம்புகிறேன். காரணம், நம் பலவீனங்களுக்கும் குறைகளுக்கும் அதிகார ஆற்றல் முட்டுக்கொடுக்கும்." (பியாரிலால் 1932, 303)

இந்தியாவின் சாதி இந்துக்களுக்கு அவர்கள் ஏற்கெனவே அனுபவித்துவந்த சமூக மற்றும் பொருளியல் அதிகாரத்துடன் சுயராஜ்ஜிய அரசில் அரசியல் அதிகாரமும் சேர்ந்துகொள்ளும் என்பதை காந்தி இங்கு ஒப்புக்கொள்கிறார். ஆகவே, தலித்துகளின் நிலை இன்னும் இழிவாகும் எனக் கருதினார். சுயராஜ்ஜிய இலக்கைக் கைவிட்டுவிட முடியாது என்பதால், சுயராஜ்ஜியத்தை அடையும் போராட்டத்துடன் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டமும் இணைந்துகொள்ள வேண்டும் என்பதே இதற்குத் தீர்வாக இருக்க முடியும் என காந்தி கருதினார்.

ஆப்பிரிக்கர்களை வெறுத்தாரா?

காந்தி 1922- 24 வரை பூனா எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, சிறை வார்டராக இருந்த ஆதன் எனும் சோமாலியக் கைதியுடன் நட்பானார். காந்தியுடன் சிறையில் காலம்கழித்த, அவ்வப்போது அவரை விமர்சிக்கவும் செய்த இந்துலால் யாஞிக் 1943-ல் எழுதிய அவருடைய புத்தகமான 'நானறிந்த காந்தி'(Gandhi As I Knew Him) எனும் நூலில் ஆதனுடன் தொடர்புடைய நிகழ்வைப் பதிவுசெய்துள்ளார்.

'ஒரு மாலைப் பொழுதில் எங்கள் சோமாலி தேசத்துக் கறுப்பின வார்டரின் கையில் தேள் கொட்டியது. பயங்கரமாகக் கத்தினார். திரு.காந்தி அந்த இடத்துக்கு விரைந்து வந்தார். புண்ணைக் கீறி விஷத்தை வெளியேற்ற வேண்டி ஒரு கத்தி வேண்டும் எனக் கோரினார். ஆனால், அந்தக் கத்தி அழுக்காக இருந்தது. காலம் கடத்தாமல் புண்ணைச் சுற்றி நீரால் கழுவிச் சுத்தம் செய்துவிட்டுப் புண்ணில் வாய்வைத்து விஷத்தை உறிஞ்சி எடுத்தார். ஆதன் நிவாரணம் பெறும்வரை உறிஞ்சுவதும் துப்புவதுமாக மாறி மாறிச் செய்துகொண்டே இருந்தவர், அதன் பின்னர்தான் நிறுத்தினார். (யாஞிக் 1943, 303)

கறுப்பர்களை வெறுத்தவர் இப்படித்தான் நடந்துகொண்டிருப்பாரா?

இருட்டடிக்கப்பட்ட வரலாற்றுப் பின்புலம்

ராயின் 153 பக்க அழித்தொழிக்கும் முயற்சியில், சுவாரசியமான, ஆனால் உண்மையில் அவரது நாசகார நோக்கங்களை அம்பலப்படுத்தும் விஷயம் இதுதான்:- ராய் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி ஒருவார்த்தைகூடக் குறிப்பிடவில்லை. சாதி, வர்க்க, இன, பாலின விவாதங்கள் நிகழ்த்தியவர், அதன் பிரம்மாண்ட பின்னணிச் சூழலை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டார். 20-ம் நூற்றாண்டின் முதற்பாதியில் காந்தியோ அல்லது அம்பேத்கரோ அல்லது வேறு யாரோ கூறிய எதையுமே அதன் பின்புலத்தை அறிந்துகொள்ளாமல் புரிந்துகொள்ள முடியாது.

இந்தியர்களின் அநீதியால் மட்டுமின்றி அந்நிய ஆட்சியாலும் துயருற்று அவமானப்பட்ட இந்திய மக்கள், முன்னுரிமை அடிப்படையில் போராட வேண்டியிருந்தது என்பதே அந்தப் பின்புலம். இந்திய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் ஐரோப்பிய அடக்குமுறைக்கு எதிராகவும் மாறி மாறிப் போராட ஏதோ ஒன்றைத் தேர்வுசெய்ய வேண்டியிருந்தது அல்லது அவர்கள் இவை இரண்டுக்கும் இடையில் மாறி மாறி ஊசலாடினார்கள்.

18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானியாவின் காலனியாக அமெரிக்கா இருந்தபோது, மனசாட்சியுள்ள சிலரும் இப்படிச் சிலவற்றுக்கு முன்னுரிமை வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். அடிமைமுறையை ஒழிப்பதற்குத் தங்கள் ஆற்றலைக் குவிக்க வேண்டுமா அல்லது பிரித்தானிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர ஆற்றலைக் குவிக்க வேண்டுமா? இறுதியில் அடிமைமுறை எதிர்ப்பைக் காட்டிலும், விடுதலைப் போராட்டம் அதிக ஆற்றலை ஈர்த்துக்கொண்டது, அடிமைமுறை அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்திலும்கூடப் பூடகமாக இடம்பெற்றிருந்தது. 1865-ல் உள்நாட்டுப் போரின் முடிவில் தெற்குப் பகுதி சரணடைவதற்கு முன்னர்தான் அடிமைமுறை சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டது.

அந்தப் போரைப் பொறுத்தவரை, அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் வேறு பல அமெரிக்கர்களைப் போலவே நாடு சிதறாமல் காக்கப்பட வேண்டும் என எண்ணினார். அடிமைமுறை ஒழிக்கப்படுவதற்கு முன்னர் தெற்கின் பிரிவினை ஒடுக்கப்பட வேண்டும் என்று அவர் எண்ணினார். நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற அம்பேத்கருக்கு இது நன்றாகவே தெரியும்.

காந்தியும் அவரது தலைமுறையினரும் எதிர்கொண்ட இந்தியா, மனசாட்சி உள்ளவர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சவால்களை அளித்தது. அவற்றில் குறைந்தது மூன்று முக்கியமானவற்றைப் பட்டியலிடலாம், அந்நியர்களால் ஆளப்பட்ட அடிமை தேசம் இந்தியா. இந்திய சமூகம் தீண்டாமையைக் கடைப்பிடித்தது. மேலும், இந்து - இஸ்லாமியப் பிரிவினை வேறு இருந்தது.

1920-களிலும் 1930-களிலும் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் தலித்துகளும் சாதி இந்துக்களும் கடுமையான மோதலில் ஈடுபட்டிருந்தார்கள் எனில், இந்து - இஸ்லாமியர் நம்பகமின்மையைக் காட்டிலும் சுதந்திரத்தை அடைவதற்குக் கடக்க முடியாத பெருந்தடையாக இருந்திருக்கும் என காந்தி கருதினார். இந்தியாவுக்கு சுதந்திரத்தை மறுப்பதற்குக் காத்திரமான காரணமாகப் பேரரசு அதை முன்வைத்திருக்கும். உலகமும் அதை அப்படியே ஏற்றிருக்கும். மேலும், இன்றைய சூழலைக் காட்டிலும் அன்று சாதி இந்துக்கள் செல்வத்துடனும் ஆயுதங்களுடனும் செல்வாக்காகத் திகழ்ந்தனர். இத்தகைய ஒரு மோதல் தலித்துகளை அழித்தொழிக்கக் கூடும் என காந்தி அஞ்சினார். தலித்துகளுக்கான இரட்டை வாக்குரிமையைத் தான் எதிர்ப்பதற்குத் தலித்துகளின் பாதுகாப்பைப் பற்றிய கவலைதான் காரணம் என்றார் காந்தி.

தன்னைச் சுற்றியிருக்கும் நிஜ உலகை அவதானித்த காந்திக்கு, சாதி இந்துக்களைத் தேசிய விடுதலையை நோக்கிச் செலுத்தும் அதேவேளையில், தீண்டாமை குறித்து அவர்களை வெட்கச் செய்வதே தலித்துகள் சாதி இந்துக்கள் உட்பட அனைவருக்கும் நன்மை விளைவிக்கும் சிறந்த செயல்திட்டமாக இருக்கக்கூடும் எனக் கணித்தார். அவரைப் பொறுத்தவரை ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதன் வழியாக, அதைக் காட்டிலும் பெரிய தீமையான தீண்டாமையையும் சாதி மேட்டிமையையும் வெற்றிகரமாக எதிர்க்க முடியும் எனக் கருதினார்.

சுதந்திரம் அடைந்த 67 ஆண்டுகளுக்குப் பின்னரும் அந்தச் செயல்திட்டம் தவறென நிரூபிக்கும் வகையில் இதுவரை எதுவுமே நிகழவில்லை.

(காந்தியை விமர்சித்து அருந்ததி ராய் கடந்த ஆண்டு எழுதிய 'முனைவரும் புனிதரும்' கட்டுரைக்கு ராஜ்மோகன் காந்தி எழுதிய எதிர்வினை. 'சுதந்திரமும் சமூக நீதியும்'என சுனில் கிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில், சர்வோதயா இலக்கியப் பண்ணை வெளியீடாக தமிழில் வரவிருக்கிறது. அந்நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் இவை.)

- சுனில் கிருஷ்ணன், தொடர்புக்கு: forgandhitoday@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்