ஆகாயத் தாமரைகள் மலர்ந்தால் என்னவாகும்?

By கே.சந்துரு

ஆகாயத் தாமரை பார்ப்பதற்கு கவனம் ஈர்க்கும். ஆனால், மிக வேகமாக வளர்ந்து நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதோடு, நீரை மாசுபடுத்திக் காலப்போக்கில், நீர்நிலைகளைத் தூர்ந்துபோகவும் செய்யும். தமிழ்நாட்டில், ‘தாமரை மலர்ந்தே தீரும்' என்று சொல்லி வந்த பாஜகவினர், இன்று தங்கள் கட்சித் தலைமையகமான கமலாலயத்தில் குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு அளிக்கும் ராஜவரவேற்பு எங்கே அந்தக் கட்சி, தாமரைகளுக்குப் பதிலாக ஆகாயத் தாமரைகளை வளர்க்கத் தொடங்கிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

சில மாதங்களாகத் தமிழ்நாட்டிலுள்ள கேடிகள், குற்ற வரலாறு கொண்டவர்கள் பலரும் அக்கட்சியில் இணைந்துவருவதும் அதற்கு அக்கட்சித் தலைமை கொடுக்கும் விதவிதமான விளக்கங்களும் மோசமானவை. முதலில் தனக்கு அப்படிப்பட்ட சமூக விரோதிகளின் பின்னணி தெரியாது என்று சொன்ன அக்கட்சித் தலைமை இப்போது, அவர்கள் திருந்தி வாழ்வதற்காகக் கட்சியில் சேர முனைகிறார்கள் என்றெல்லாம் சொல்லிப் பார்க்கிறது. குற்றவாளிகளின் தண்டனைக் காலம் முடிந்த பிறகு அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக சீரமைப்பு இல்லங்கள் உண்டு. ஆனால், விசாரணைக்கு முன்னரே குற்றப்பின்னணியர்களைக் கட்சியில் சேர்த்து புனிதர்களாக்கும் பணி ஒரு அரசியல் கட்சிக்கு எதற்கு?

1975-77 நெருக்கடிநிலைமை பிரகடனப்படுத்தப்பட்ட காலம். ரயில்கள் நேரத்துக்கு வருகின்றன. அலுவலகங்களில் ஊழியர்கள் வராமல் இருப்பதில்லை. சமூக விரோதிகள் கூண்டோடு ஒழிக்கப்பட்டுவிட்டார்கள் என்றெல்லாம் அரசுத் தரப்பில் பிரச்சாரம் செய்யப்பட்டது. கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட நாளிதழ்கள் அரசு செய்திகளையே தினசரி வெளியிட நேர்ந்தது. இதையெல்லாம் அன்றைக்கு சிறையில் இருந்த இன்றைய பாஜக தலைவர்கள் படித்துக்கொண்டிருந்தார்கள்.

இந்த நெருக்கடிச் சூழலின்போது இந்தியாவில் மனித உரிமைகள் கடுமையாக நசுக்கப்படுவதாகச் செய்திகள் கசிய நேர்ந்ததைக் கண்ட பல மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் இந்தியாவுக்குப் பயணித்தனர். அவர்களில் ஒருவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான ரஸல் கல்லூரியின் பேராசிரியர் டேவிட் செல்போர்ன். அவர் நல்ல எழுத்தாளரும்கூட. தனது இந்தியப் பயணத்தைப் பற்றி அவர் எழுதிய நூல் – ‘இந்தியா மீது ஒரு கண்’ (An Eye to India) பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்தியப் பயணத்தை முடித்துவிட்டு பிரிட்டன் திரும்பிய பின் தொழிலாளர் கூட்டமொன்றில் இந்திய நிலைமையைப் பற்றி பேசினார் டேவிட் செல்போர்ன். “நான் இந்தியாவுக்குச் செல்லும் முன் செய்தித்தாள்களில் நெருக்கடி காலகட்டத்தில் சமூக விரோத சக்திகள் பொதுவெளிகளிலிருந்து அறவே ஒழிக்கப்பட்டுவிட்டதாகப் படித்தேன். நான் டெல்லி மற்றும் பல நகரங்களுக்குச் சென்றேன். நகரங்களில் விசாரித்தபோது சமூக விரோத சக்திகளின் நடமாட்டம் காணப்படவில்லை. எனக்கு ஆச்சரியம் பீறிட்டது. அவர்களெல்லாம் எங்கே போனார்கள் என்று கேட்டேன். தற்போது அவர்களெல்லாம் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட, மாநில நிர்வாகிகளாக மாறிவிட்டார்கள் என்று கூறினார்கள்.”

டேவிட் செல்போர்ன் இப்படிச் சொல்லி முடித்தவுடன் கூட்டத்தினரின் கைத்தட்டல் அடங்க வெகு நேரமாகியது. இதே நிலை எதிர்காலத்தில் பாஜகவிலும் உருவாவதற்குத்தான் குற்றப்பின்னணியர்களை கட்சியில் சேர்க்கும் அக்கட்சித் தலைமையின் விதவிதமான விளக்கங்கள் உதவும்.

- கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்