சுதாங்கன் நினைவுகள்

By செய்திப்பிரிவு

தமிழில் புலனாய்வு இதழுக்கு வடிவம் கொடுத்தவர்களில் ஒருவர் சுதாங்கன். நாளிதழ், வார இதழ் என்று அச்சுப் பத்திரிகைகளில் மட்டுமின்றி தொலைக்காட்சி ஊடகத்திலும் முத்திரை பதித்த முன்னோடி. ‘திசைகள்’ வழியே இதழியலுக்கு அறிமுகமானவர். இயற்பெயர் ரங்கராஜன். ஏற்கெனவே ரா.கி.ரங்கராஜன் பத்திரிகை உலகில் கோலோச்சிக்கொண்டிருந்த நாட்களில் அறிமுகமானதால் சுதாங்கன் என்ற புனைபெயரைச் சூடிக்கொண்டார். புலனாய்வு இதழியலின் பாலபாடம், தகவல்களைப் பகிர்ந்துகொண்டவர்களைப் பற்றி ஒருபோதும் வாய்திறக்கக் கூடாது என்பது. சுதாங்கன் அதை உறுதியாகக் கடைப்பிடித்தவர். அந்தத் துறைக்குள் அடியெடுத்து வைத்த இளம் பத்திரிகையாளர்களுக்கு அந்தப் பாடத்தை அழுத்தமாக உணர்த்திச்சென்றவர்.

புலனாய்வு என்பது அதிகார மையங்களால் மறைக்கப்படும் செய்திகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதும், அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிராகக் குரல்கொடுப்பதும் மட்டுமே அல்ல; மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு தரவும் முயல்வது என்பதை சாதித்துக்காட்டியவர். கொத்தடிமை முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது என்று மத்திய அமைச்சர் ஒருவர் அறிவித்தபோது, அது இன்னும் நடைமுறையில் உள்ளது என்பதை ஆதாரங்களுடன் அவர் நிரூபித்தார். காவல் துறை உதவியோடு ஆந்திர பிரதேசத்தில் கொத்தடிமைகளாக இருந்தவர்களையும் மீட்டு அழைத்துவந்தார். செய்திகளைக் கொண்டுசேர்ப்பதோடு மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் அக்கறை எடுத்துக்கொண்ட இதழியல் செயல்பாட்டாளர் அவர்.

எம்ஜிஆரின் தொகுதியான ஆண்டிபட்டியில் அடிப்படை வசதிகள்கூட சரியாக செய்யப்படவில்லை என்ற பத்திரிகைச் செய்தி தவறானது என்று அன்றைய தமிழக அமைச்சர் ப.உ.சண்முகம் மறுத்தபோது, அந்தச் செய்தி உண்மை என்பதை வீடியோ ஆதாரங்களுடன் நிரூபித்தவர் சுதாங்கன். வீடியோ என்ற வடிவமே அவ்வளவாகப் பிரபலமாகாத காலகட்டம் அது. எம்ஜிஆரின் உடல்நிலை மோசமாகி அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரது உடல்நலம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் அவர் மக்களிடம் கொண்டுசென்றார். எம்ஜிஆரைச் சுற்றி நடந்துகொண்டிருந்த அரசியல் சதிகளையும் அம்பலப்படுத்தினார். ஒரு அரசியல் தலைவரின் உடல்நலமும், அவரைச் சுற்றியிருப்பவர்களின் மனநலமும் அரசியலில் என்னென்ன விளைவுகளையெல்லாம் ஏற்படுத்தும் என்பதை சமீப காலங்கள் நமக்கு உணர்த்துகின்றன. எம்ஜிஆரை அந்தப் பனிமூட்டத்திலிருந்து விடுவித்தவர் சுதாங்கன். எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட நிகழ்ச்சிகளையும் வழக்கு விவரங்களையும் விறுவிறுப்பான மொழிநடையில் ‘சுட்டாச்சு சுட்டாச்சு’ என்ற பெயரில் புத்தகமாக எழுதினார்.

ஒரு பத்திரிகையாளராகப் பிரபலம் பெற்ற சுதாங்கன் அடிப்படையில் ஒரு எழுத்தாளர். ‘ஆனந்த விகடன்’ ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன், அலுவலகப் பத்திரிகையாளர்களுக்குள்ளாக நடத்தும் சிறுகதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற அவரது கதைகள் புனைபெயரில் பிரசுரமாகியிருக்கின்றன. சித்திர ராமாயணம் எழுதிய பி.ஸ்ரீயின் பெயரன் அவர். எழுத்து வன்மையுடன் தேர்ந்த இசை ரசனையும் கொண்டிருந்தவர் அவர். திரைப்பாடல்கள் குறித்த தகவல் சுரங்கம். கண்ணதாசனின் வரிகளுக்குக் காதலர். எந்தெந்த பாடல் வரிகள் என்னென்ன சூழல்களில் எழுதப்பட்டது என்பதையெல்லாம் நினைவிலிருந்தே சொல்லக்கூடியவர். ஜெயா டிவியின் ‘தேன் கிண்ணம்’ நிகழ்ச்சியின் வெற்றிக்குப் பின்னணியில் சுதாங்கன் இருந்ததும் ஒரு காரணம். தேர்ந்த இசை ரசிகர்களை நிகழ்ச்சிக்கு அழைத்துவரச் செய்து திரைப்பாடல் ரசனையை அடுத்த தலைமுறைக்குக் கடத்தியவர். பல்வேறு இசை நிகழ்ச்சிகளின் உருவாக்கத்திலும் தொகுப்புரையிலும்கூட அவர் முகம் காட்டாமல் இருந்திருக்கிறார். எழுத்து, இசைபோல திரைப்படத் துறையிலும் அவருக்குப் பெரிய ஆர்வம் இருந்தது. திரைநட்சத்திரங்களின் அருகேயே இருந்தாலும் அவரது திரைக்கனவு மட்டும் நிறைவேறாமலே போய்விட்டது.

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

14 days ago

கருத்துப் பேழை

14 days ago

கருத்துப் பேழை

14 days ago

கருத்துப் பேழை

17 days ago

கருத்துப் பேழை

17 days ago

கருத்துப் பேழை

17 days ago

கருத்துப் பேழை

24 days ago

கருத்துப் பேழை

24 days ago

கருத்துப் பேழை

24 days ago

மேலும்