தேர்தலுக்குத் தயாராகும் பிஹார்!- நடந்ததும் நடக்கவிருப்பதும்

By வெ.சந்திரமோகன்

பெருந்தொற்றுக்கு நடுவே தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவருகிறது பிஹார். கரோனா காலத்தில் தேர்தலைச் சந்திக்கும் முதல் மாநிலமான பிஹாரில், அதற்கான முஸ்தீபுகளில் அரசியல் கட்சிகளும் இறங்கியிருக்கின்றன. கூட்டணிக்குள் உரசல்கள், பழைய பிரச்சினைகள், புதிய எதிரிகள் என ஏறத்தாழ எல்லாப் பிரதானக் கட்சிகளும் வெவ்வேறு வகையில் சவால்களை எதிர்கொண்டிருக்கின்றன.

தொடங்கிவைத்த மாஞ்சி

இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சித் தலைவர் ஜிதன் ராம் மாஞ்சிதான் தேர்தல் பரபரப்பை முதலில் பற்றவைத்தவர். கடந்த பல மாதங்களாகவே மகா கட்பந்தன் கூட்டணியில் மாஞ்சியால் குழப்பங்கள் நடந்துகொண்டே இருந்தன. 2019 டிசம்பருக்குள் ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்காவிட்டால் மூன்றாவது அணியை உருவாக்கும் சூழல் உருவாகும் என்று மிரட்டிக்கொண்டிருந்தார் மாஞ்சி. ஒவைசியின் அனைத்திந்திய மஜ்லீஸ்-ஈ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியுடன் அவர் கைகோக்கலாம் எனும் ஹேஷ்யங்களும் எழுந்தன.

இதற்கிடையே முதல்வர் நிதீஷ் குமாரை மாஞ்சி சந்தித்தது பல்வேறு ஊகங்களுக்கு வித்திட்டது. இதன் பின்னணியில் பாஜக இருப்பதாகவும் பேசப்பட்டது. ஆனால், ‘ஒரு முதல்வரை ஒரு கட்சித் தலைவர் சந்திக்கிறார் என்பதைத் தாண்டி இதில் பேச எதுவும் இல்லை; இதன் பின்னணியில் நாங்கள் இல்லை’ என்று பாஜக விளக்கமளித்தது. இறுதியில், எதிர்பார்த்ததுபோலவே, கூட்டணியைவிட்டு வெளியேறி ஐக்கிய ஜனதா தளத்துடன் கைகோத்துவிட்டார் மாஞ்சி.

நிதீஷுக்குச் சவால் விடும் இளைஞர்கள்

நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட நிதீஷ் குமாருக்கு இந்த முறை இரு இளைஞர்கள் கடும் சவாலை ஏற்படுத்தியிருக்கின்றனர். ஒருவர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ். இன்னொருவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே இருந்துகொண்டு குடைச்சல் கொடுக்கும் சிராக் பாஸ்வான்; லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) தலைவர் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன்.

சமீபத்தில் நிதீஷ் குமார் நடத்திய இணையவழிப் பொதுக்கூட்டம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. முதல் கூட்டத்திலேயே முத்திரை பதித்துவிட வேண்டும் என்று நினைத்திருந்த நிதீஷ், லாலு பிரசாத் குடும்ப ஆட்சியின்போது வாகனங்களில் சமூக விரோதிகள் துப்பாக்கி சகிதம் சென்ற காட்சிகளை நினைவூட்டி, “அப்போதெல்லாம் மக்கள் மாலை நேரத்துக்கு முன்பாகவே வீடு திரும்பிவிடுவார்கள். அந்த அளவுக்குக் காட்டாட்சி நடந்தது” என்றெல்லாம் விமர்சித்தார்.

ஆனால், தேஜஸ்வி யாதவ் இதற்கெல்லாம் அசரவேயில்லை. “15 ஆண்டுகளுக்கு முந்தைய கதையெல்லாம் நிதீஷுக்கு நினைவிருக்கிறது. ஆனால், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவங்களைப் பற்றி அவர் எதுவும் பேசவில்லை. முஸாஃபர்பூரில் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த பல தலைவர்களுக்குத் தொடர்பு இருந்ததை அவர் மறந்துவிட்டாரா?” என்று தொடங்கி, ஊழல் புகாருக்குள்ளாகியிருக்கும் பிஹார் அமைச்சர்கள் குறித்தெல்லாம் பேசி நிதீஷுக்குப் பெரும் சவாலை ஏற்படுத்தியிருக்கிறார். பாட்னா உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் நிதீஷ் அரசைப் பற்றி வெளியிட்ட விமர்சனக் கருத்துகளைச் சுட்டிக்காட்டவும் அவர் தவறவில்லை.

அதேபோல், சிராக் பாஸ்வானுக்கும் நிதீஷுக்கும் இடையிலான உரசல்கள் மிகுந்த கவனம் பெற்றிருக்கின்றன. முதல்வர் பதவியின் மீது சிராக் கண்வைத்திருப்பதாகவே பேசப்படுகிறது. ஊழல், சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைகள், பொருளாதார நிலை எனப் பல்வேறு பிரச்சினைகளை வைத்து நிதீஷ் அரசை அவர் விமர்சித்துவருகிறார். கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது, பொதுமுடக்கத்தின் போது நிவாரண உதவி வழங்குவது என்பன உள்ளிட்ட விஷயங்களில் நிதீஷ் அரசு தோல்வியடைந்துவிட்டதாகவும் எல்ஜேபி குற்றம்சாட்டுகிறது.

பிரச்சினையின் பின்னணி

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 42 இடங்களில் போட்டியிட்ட எல்ஜேபி, இரண்டே இடங்களில்தான் வெற்றி பெற்றது. தற்போது ஐக்கிய ஜனதா தளம், இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா ஆகியவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் நிலையில் எல்ஜேபிக்குக் கடும் அழுத்தம் உருவாகியிருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

பிஹார் மக்கள்தொகையில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 15 சதவீதம் இருக்கும் நிலையில், அச்சமூகத்தின் வாக்குகளைக் கவருவதில் இந்த மூன்று கட்சிகளும் முனைப்பு காட்டுகின்றன. ஐக்கிய ஜனதா தளத்தில் இருக்கும் பட்டியலினச் சமூகத் தலைவர்களை வைத்தே, அந்தச் சமூகத்தினரின் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்று நிதீஷ் கணக்குப் போடுகிறார். ஜிதன் ராம் மாஞ்சிக்கு இதுவரை நிதீஷ் பெரிய அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகத் தெரியவில்லை. அக்கட்சிக்கு 10 தொகுதிகள் கிடைத்தால் அதிகம். எல்ஜேபியும் மாஞ்சியின் வரவை அவ்வளவாக ரசிக்கவில்லை. தொகுதி ஒதுக்கீட்டின்போது மேலும் பிரச்சினைகள் ஏற்படலாம் என்று தெரிகிறது.

சிராக் எந்த முடிவெடுத்தாலும் துணை நிற்கப்போவதாக ராம்விலாஸ் பாஸ்வான் பச்சை கொடி காட்டிவிட்டார். தனது உடல்நிலையைக் காரணம் காட்டி ஒதுங்கி நிற்கும் ராம்விலாஸ், அரசியலில் தனது மகனை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்வதற்கான தருணம் இது என்றே கருதுகிறார். கிட்டத்தட்ட 10 சதவீத வாக்கு வங்கியை வைத்திருக்கும் எல்ஜேபி, தனக்கான முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.

பட்டியலினச் சமூகத் தலைவர்களில் முக்கியமானவரான சந்திரசேகர் ஆசாதின் பீம் ஆர்மியும் களத்தில் குதிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியைக் கடுமையாக எதிர்த்துவரும் அக்கட்சி தனித்துப் போட்டியிடுமா அல்லது மகா கட்பந்தனில் சேருமா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

பழைய பகை

பாஜகவைப் பொறுத்தவரை நிதீஷ்தான் முதல்வர் வேட்பாளர் என்பதை ஏற்கெனவே சொல்லிவிட்டது. ஆனாலும், ஐக்கிய ஜனதா தளத்துக்கு எல்ஜேபி குடைச்சல் தரும் விவகாரத்தில் பாஜக தலைவர்கள் பட்டும்படாமலும் நடந்துகொள்கிறார்கள். ‘பாஜகவுடன்தான் நாங்கள் கூட்டணி வைத்திருக்கிறோம்; ஐக்கிய ஜனதா தளத்துடன் அல்ல’ என்று எல்ஜேபி அழுத்தம் திருத்தமாகச் சொல்வதை பாஜக கண்டும் காணாமல் இருக்கிறது.

2019 தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பின்னர், மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு இடமளிக்கப்படாததால் அதிருப்தியடைந்திருந்த நிதீஷ் குமார், பிஹார் அமைச்சரவை விரிவாக்கத்தின்போது பாஜகவைப் புறக்கணித்தார். இதனால், இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவில் ஒரு கசப்புத்தன்மை இருந்துகொண்டே இருந்தது. அதேசமயம், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க, அந்தக் மறைந்துவிட்டதுபோல தோன்றியது. எனினும், இப்போதும் பிடியைத் தன் வசம் வைத்துக்கொள்ளவே பாஜக விரும்புகிறது.

கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் நிதீஷ் குமாரின் செல்வாக்கு சரிந்திருப்பதாகவே பாஜக தலைமை கருதுகிறது. மோடியின் செல்வாக்கை வைத்துத்தான் நிதீஷால் வெல்ல முடியும் என்று கள நிலவரங்களை வைத்து அக்கட்சி கணித்திருக்கிறது. இந்நிலவரம் குறித்து நிதீஷின் கவனத்துக்கும் கொண்டுசென்றிருக்கிறார்கள் பாஜக தலைவர்கள்.

இதையடுத்து, லாலு பிரசாதின் முந்தைய ஆட்சியைக் காட்டாட்சி என்று விமர்சிப்பதன் மூலமே தனது செல்வாக்கைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் எனும் நிலைக்கு நிதீஷ் தள்ளப்பட்டிருக்கிறார்.

இன்னும் வளராத மாநிலம்

பிஹாரில் கடந்த 15 ஆண்டுகளில் சட்டம் - ஒழுங்கு, சாலை வசதி போன்றவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் நடந்திருந்தாலும், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழில் துறை ஆகியவற்றில் லாலு ஆட்சிக்காலத்தைவிட, நிதீஷ் ஆட்சியில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுவிடவில்லை. “கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை 10 ஆண்டு காலத்துக்குள் மேம்படுத்திவிட முடியாது” என்று துணை முதல்வரும், பாஜக தலைவருமான சுஷீல் குமார் மோடி போன்றோர் சமாதானம் சொல்கிறார்கள். பிஹாரில் பெரிய நிறுவனங்கள் அமைப்பதற்குப் போதிய நிலங்கள் இல்லை என்று சுஷீல் குமார் மோடியே ஒப்புக்கொள்கிறார். ஆனால், இந்தக் குறைகளையெல்லாம் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள ஆர்ஜேடி திட்டமிட்டிருக்கிறது.

ஆர்ஜேடி-யின் அவஸ்தைகள்

2015 பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மகா கட்பந்தன் கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளத்துக்கு 71 இடங்கள்தான் கிடைத்தன. ராஷ்ட்ரிய ஜனதா தளமோ 80 இடங்களில் வென்றிருந்தது. அதன் பின்னர் இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இடம்பெயர்ந்தார் நிதீஷ். துணை முதல்வராக இருந்த தேஜஸ்விக்கு அதில் கடும் அதிருப்தி. இதற்கிடையே மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் சிறை சென்றுவிட்டதால், கட்சி மேலும் கலகலத்துக் கிடக்கிறது.

ஏற்கெனவே, முன்னேறிய வகுப்புகளைச் சேர்ந்த வாக்காளர்களிடம் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்குப் பெரிதாக ஆதரவு இருந்ததில்லை. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், குறிப்பாக யாதவ் சமூகத்தினரின் வாக்குகளைத்தான் அக்கட்சி சார்ந்திருக்கிறது. முன்னேறிய வகுப்பினரின் மத்தியில் பாஜகவுக்கான செல்வாக்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் முன்னேறிய வகுப்பான வைஷாலி சமூகத்தைச் சேர்ந்தவரும், லாலுவின் நெருங்கிய சகாவாக இருந்தவருமான ரகுவன்ஷ் பிரசாத் சிங் அதிருப்தியடைந்து வெளியேறுவது அக்கட்சிக்கு மேலும் பின்னடைவைத் தந்திருக்கிறது.

லாலு சிறைக்குச் சென்ற பின்னர் கட்சி அவரது மகன்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதனால், மூத்த தலைவர்கள் பலரும் தாங்கள் ஓரங்கப்பட்டப்படுவதாக வருத்தத்தில் இருக்கிறார்கள். அவர்களில் மிக முக்கியமானவர் ரகுவன்ஷ். குறிப்பாக, ஒரு கோப்பை நீரின் அளவுக்குத்தான் கட்சியில் ரகுவன்ஷின் நிலை இருப்பதாக, லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் கூறியது அவரைக் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. மேலும், 2014 மக்களவைத் தேர்தலில், எல்ஜேபி சார்பில் ரகுவன்ஷை எதிர்த்துப் போட்டியிட்டு வென்ற ராமா சிங் கிஷோரைக் கட்சியில் சேர்த்துக்கொள்ள தேஜஸ்வி யாதவ் முடிவெடுத்ததும் அவரைக் கோபப்படுத்தியது.

அவரது எதிர்ப்பால் அந்த முடிவை தேஜஸ்வி கைவிட்டதாகக் கூறப்பட்டது. கடைசியில் வேட்பாளர் பட்டியலில் ராமா சிங் கிஷோரின் பெயரும் இருப்பதைக் கவனித்த ரகுவன்ஷ், ஒட்டுமொத்தமாகக் கட்சியைவிட்டு வெளியேற முடிவெடுத்துவிட்டார். அவருடன் மேலும் பல தலைவர்களும் அணி மாறுகிறார்கள். சிறையிலிருந்து லாலு உருக்கமாக எழுதிய பதில் கடிதத்தைக்கூட ரகுவன்ஷ் அலட்சியம் செய்துவிட்டார். ‘மூத்த தலைவர்களை நடத்தும் விதம் இதுதானா?’ என்று ஆர்ஜேடி கட்சி மீது விமர்சனங்கள் எழுவதற்கு இது ஒரு காரணமாகிவிட்டது.

குடும்பம் எனும் சுமை

இதுபோதாதென்று தேஜ் பிரதாபின் மனைவி ஐஷ்வர்யா ராய், தன் கணவரை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிடலாம் எனும் செய்தியும் வெளியாகியிருக்கிறது. 2018-ல் அவர்களுக்குத் திருமணம் நடந்த நிலையில், ஐந்தே மாதங்களில் தேஜ் பிரதாப் விவாகரத்து கோரியது பரபரப்பாகப் பேசப்பட்டது. ஐஷ்வர்யாவின் தந்தை சந்திரிகா ராய், கடந்த தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் சார்பில் போட்டியிட்டு வென்றவர். தனது மகளின் திருமண உறவு ஏறத்தாழ முறிந்துவிட்டதால் கோபமடைந்திருக்கும் அவர், கட்சியைவிட்டு வெளியேறி ஐக்கிய ஜனதா தளத்தில் சேர்ந்து விட்டார். அதே வேகத்தில் தனது மருமகனைத் தேர்தல் களத்தில் வீழ்த்த தனது மகளையே ஆயுதமாக்கிக்கொள்ள அவர் விரும்புகிறார்.

கடந்த தேர்தலில் மஹுவா தொகுதியில், 28,000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்ற தேஜ் பிரதாப், இந்த முறை அந்தத் தொகுதியில் ஐஷ்வர்யா ராய் போட்டியிடலாம் என்று பேசப்படுவதால், வேறு வழியின்றி ஹஸன்பூர் தொகுதியில் போட்டியிடத் திட்டமிட்டிருக்கிறார். ஆனால், எங்கு சென்றாலும் அங்கு அவரை எதிர்த்து ஐஷ்வர்யா ராய் போட்டியிடுவார் என்றே தெரிகிறது.

லாலு பிரசாத் ஆட்சியின்போது குழந்தைகளாக இருந்தவர்கள், இந்தத் தேர்தலில் முதல்முறை வாக்காளர்களாக மாறியிருப்பார்கள். லாலு ஆட்சி குறித்து அவர்களுக்கு நல்ல விதமாகவோ, கெட்ட விதமாகவோ எதுவும் நினைவிருக்காது. ஆனால், அதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ளலாம் என்று தேஜஸ்வி நம்புகிறார்.

“எங்கள் கட்சி 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது நான் சிறு பையன். லாலு தனது ஆட்சிக்காலத்தில் சமூக நீதியை நிலைநாட்டவில்லை என்று யாரும் சொல்ல முடியாது. நாங்கள் தவறு செய்திருக்கலாம். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்றெல்லாம் அவர் பேசிவருகிறார்.

மரணமும் ஆதாயமும்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம், பிஹார் அரசியல் களத்தில் அனைத்துத் தரப்பினராலும் பயன்படுத்தப்படும் ஆயுதமாகியிருக்கிறது. “இந்த வழக்கில் நாங்கள்தான் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ய வைத்தோம். சிபிஐ விசாரணை கோரினோம்” என்கிறது ஐக்கிய ஜனதா கட்சி. மறுபுறம், “நாங்கள்தான் இந்தப் பிரச்சினை பற்றி முதலில் குரல் எழுப்பினோம்” என்று ராஷ்ட்ரிய ஜனதா தளமும் மார் தட்டுகிறது.

‘சுஷாந்த் சிங் பிஹார் மண்ணின் மைந்தர். அவரது மரணத்தை அரசியலாக்க விரும்பவில்லை. அவரது மரணத்துக்கு நியாயம்தான் கேட்கிறோம்’ என்றெல்லாம் பாஜக பேசினாலும் அதை ஒரு தேர்தல் பிரச்சினையாக்கி வாக்குகளை அள்ளுவதே அக்கட்சியின் நோக்கம் என்று பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். பாஜக போஸ்டர்களில் சுஷாந்த் சிங் படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸை பிஹார் தேர்தல் பார்வையாளராக நியமித்திருப்பது இவ்விஷயத்துக்குப் பாஜக எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதைக் காட்டுகிறது.

யாதவ் சமூகத்தினர், பட்டியலினச் சமூகத்தினர், முஸ்லிம்கள் ஆகியோரே கடந்த தேர்தலில் அதிகம் வெற்றி பெற்றனர். இம்முறை அந்தக் கணக்கை மாற்ற சுஷாந்த் சிங்கின் மரணம் ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தப்படுகிறது. ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், அவரது மரணத்தை ஆதாயமாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்புவதையும் உணர முடிகிறது.

இனி என்ன?

‘பாத் பிஹார் கி’ (பிஹாரைப் பற்றிப் பேசுவோம்) எனும் முழக்கத்துடன் நிதீஷ் அரசுக்கு எதிராக 100 சுற்றுப்பயணம் தொடங்கிய பிரசாந்த் கிஷோர், இந்தத் தேர்தலில் இன்னமும் முழுமையாகக் களமிறங்கவில்லை. பிஹாரைச் சேர்ந்தவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைய முகமுமான கன்னையா குமாரும் இன்னமும் பேசத் தொடங்கவில்லை. தேர்தல் நெருங்க நெருங்க காட்சிகள் இன்னும் வேகமாக மாறலாம்.

இவற்றுக்கு நடுவே, ஜாமீன் கோரி லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்த மனு அக்டோபர் 9-ல் விசாரணைக்கு வருகிறது. ஒருவேளை அவர் ஜாமீனில் வெளிவந்துவிட்டால் பிஹார் தேர்தல் களத்தின் போக்கு திசை திரும்பலாம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்