பாரதி என்றொரு நவீனக் கனவு!

By செய்திப்பிரிவு

உ.வே.சா.வின் ‘என் சரித்திர’த்தில் ஒரு காட்சி: பகட்டான போலிப் புலவர் ஒருவர், பாடிப் பரிசல் பெற தனது பரிவாரங்களுடன் ஓர் ஊருக்கு வருகிறார். ஏற்கெனவே இயற்றப்பட்ட செய்யுள்களில் புதிய புரவலர்களின் பெயர்களைச் செருகி, புதுப் பாடல் எனச் சொல்லிப் பரிசு பெறும் பாணி அவருடையது. அவரது தகுதியின்மையை அறிந்துகொண்ட தமிழறிந்த தனவான் ஒருவர், அவரை எச்சரித்து சொற்பப் பரிசிலோடு திருப்பி அனுப்புகிறார். ஒருவகையில் அந்த போலிப் புலவர் அக்காலத்தின் தமிழ் இலக்கியச் சூழலைச் சரியாகவே புரிந்துகொண்டிருந்தார் எனத் தோன்றுகிறது. 18, 19-ம் நூற்றாண்டுகளில் இலக்கியம் என்பது பெரும்பாலும் நொடித்துப்போய்த் தள்ளாடி நின்றுகொண்டிருக்கும் சிற்றரசாட்சிகளின் ராஜரீகத்தின் ஜம்பக் குறியீடாகவே இருந்தது. அதன் மூலம் புலவருக்கு வாழ்வாதாரமும், அரசருக்கு அதிகார பிம்ப உருவாக்கமும் கிடைத்தது. இப்படியாக, இலக்கியத்துக்கு ஜமீன்தார்களின் அரசவை ஓர் ஆதரவுத் தளமாக இருந்தது என்றால், இன்னொரு ஆதரவுத் தளமாக விளங்கியவை மதக் கட்டுமானத்தின் அதிகார மையங்களாக இருந்த மடங்கள். சிற்றிலக்கியங்களும் தலபுராணங்களும் இலக்கிய வகைமைகள். தலைவனும் உள்ளூர் புராணமும் பாடுபொருட்கள். முடிந்துபோன வாழ்வியலின் ஓர் அசட்டு கௌரவச் சின்னமாக அப்போது எஞ்சியிருந்தது இலக்கியம்.

பாரதி ஒரு யுகசந்தியில் வந்து நிற்கிறான். அவனுக்கான பாதி முக்கியத்துவம் அவன் எழுத வந்த காலகட்டத்தாலேயே நிலைபெற்றுவிடுகிறது. காலனிய நவீனத்துவம், உலகளாவிய கருத்தியல்களோடு தன் மரபைத் தானே எட்ட நின்று பார்க்கும் விமர்சனத் தொலைவையும் அளித்தது. பாரதியின் படைப்புகள் திருத்தலங்களில் கற்றோர் முன்னில் புனித அங்கீகாரத்தின் பொருட்டும் புரவலரின் பெருமையைப் பறைசாற்றும் நோக்கிலும் அரங்கேற்றப்படவில்லை. அச்சுக் கலையும் ஜனநாயகமும் தனிமனிதவாதமும் அறிமுகம் பெறுகிற அந்தக் காலத்தில், அவை மக்கள்திரளை நம்பி அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன. பாரதி அவனது சமகாலத்திய கவிராயர்கள் போலன்றி முழுமுற்றாகத் தனது காலத்தால் பாதிக்கப்பட்டவன். அதன் தாக்குதலுக்குத் தானே விரும்பி, தன்னை எல்லாத் திசையிலும் திறந்து ஒப்புக்கொடுத்தவன்.

அழகியல் ரீதியாக, மரபார்ந்த கவித்தொடர்ச்சியில் ஒரு காலையும், மறுமலர்ச்சிக் கால லட்சியங்களிலும் கற்பனாவாதத்திலும் மற்றொரு காலையும் ஊன்றியவாறே தன் படைப்புகளை எழுதியவன் பாரதி. ஓர் அறிவுஜீவியாகவும், சமூக உயிரியாகவும், பிரெஞ்சுக் கவிஞர் ஆர்தர் ரைம்போ சொன்னதைப் போல நூறு சதவீதம் நவீன மனிதனாகவே வாழ்ந்திருக்கிறான். அதனால்தான், அவன் காலத்தில் இயற்றப்பட்ட பெரும்பாலான படைப்புகளோடு தொடர்புகொள்ள முடியாத நம்மால், மரபு வடிவங்களில் எழுதப்பட்டாலும், பாரதியின் உலகுடன் உறவுகொள்ள முடிகிறது. சொல்லப்போனால், நினைவிலிருந்து வரும் சொல்லாக அவனுடையதே இருக்கிறது பெரும்பாலும். நமது அறிவையும் அபிப்ராயங்களையும் தாண்டி, அவனது வரிகள் ‘வானகத்தைச் சென்று தீண்டுவன் இங்கென்று மண்டியெழும் தழலை’ போல அவ்வப்போது உயிர்த்தெழுகின்றன. அகால மரணத்தால் அவரது முழு சாத்தியம் நமக்கு அறியக் கிடைக்கவில்லை; எனினும், பாரதியின் கவிதைகள் இந்தப் பண்பாட்டின் ஆழங்களுக்குள் கசிந்து நுழைந்துள்ளன என்பதால், எல்லாக் காலத்திலும் அவை அதன் நினைவிலும் நாவிலும் எழுந்தருளிக்கொண்டே இருக்கும்.

பாரதிக்குப் பின் வந்தவர்களை நவீனத்துவத்திலிருந்து மரபை எதிர்கொண்டவர்கள் என்றால், பாரதியை மரபில் நின்றபடி நவீனத்துவத்தை எதிர்கொண்டவர் எனக் கூறலாம். கலைப் படைப்புகளுக்கு மட்டுமின்றி, அவனது கவிதைகள் சிந்தனைக்கும் உந்துசக்தியாக இருந்துள்ளன. ஏனெனில், சிந்தனைக்கு மரபு அவசியமாகிறது. தமிழ்ச் சமூகத்துக்கென்று தமிழில் அசலாகச் சிந்திக்கும் ஒருவருக்கு வள்ளுவரைப் போலவே பாரதியும் தவிர்க்க முடியாத மூலவர். இவர்கள் இருவரையும் தொட்டுக்கொள்ளாமல் எதைப் பற்றியும் பேசி முடிக்காத ஜெயகாந்தனை இங்கு உதாரணமாகச் சொல்லலாம். ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’ என்ற வரி தேசியப் பாடல்கள் பிரிவில் அமர்த்தப்பட்டிருக்கலாம். ஆனால், 2020-லும் எனக்கு அது பொருளுடைத்ததாகவே உள்ளது. ‘வேண்டுமடி எப்போதும் விடுதலை’ என்று அவரே பாடவில்லையா என்ன.

தான் எழுதிக்கொண்டிருக்கும் காலகட்டம் பற்றிய, அப்போதைய உலகளாவிய போக்குகளைப் பற்றிய பிரக்ஞை அவருக்கு இருந்துள்ளது. சொல்லப்போனால், தமது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற விருப்பமும், அப்படி பெயர்க்கப்படுவது பற்றிய பெருமையும் இருந்துள்ளது. ‘திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்’ என்று அப்பட்டமாக அளவுகோலைக் கச்சேரியிலிருந்து உலகரங்குக்கு எடுத்துச்சென்ற கவிஞன் அவன். பிற நாட்டார் அதைப் போற்றினரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், அப்படியான ஒரு பெருங்கனவைக் கொண்டியங்கிய இளைஞன் அவன் என்பது முக்கியம்.

பாரதியின் கவிதைகள் உணர்திறனுக்குள்ளோ அறிவுப்பரப்புக்குள்ளோ நுழைவதற்கு முன்பே உடலின் சக்தி மண்டலத்துக்குள் ஊடுருவிவிடுவன. எதிரொலிக்கும் அச்சொற்களின் வெண்கல ஒலியும், உத்வேகம் மிக்க ஆத்மார்த்த வெளிப்பாடும் வாசிப்பின் தொடக்கத்திலேயே ஒருவரை இணங்கச்செய்துவிடும். பிறகு, அந்த அலையின் மேல் பிடிப்பற்றுப் பயணிப்பவனாகிவிடுகிறார்கள் வாசகர்கள். ‘அறிவார்த்த விளைவோ அல்லது மனம் புனைந்த கவிதையோ, அதிமனதின் வெளிப்பாடாக அமையும் ஓர் உச்சக் கூற்றினுடைய ஆற்றலையும் அழகையும் தொட முடியாது’ என்ற அரவிந்தரின் கருத்துகள் இவ்விடத்தில் பொருந்திவருபவை. ‘ஊழிக்கூத்து’ போன்ற அமானுஷ்ய கவித்துவ நிகழ்வுகளை அப்படித்தான் புரிந்துகொள்ள முடியும்.

தேசிய, சமூக, ஆன்மிக லட்சியவாதங்களின் விசையால் செயல்படும் எழுச்சிக் கவிதைகள் இருக்கும் அதேநேரம் ஞானப் பாடல்கள், பக்திப் பாடல்கள் போன்ற பகுதிகளில் உளைச்சலும் அச்சமும் மீட்சியும் காணக்கிடைக்கின்றன. ‘வெற்றி வெற்றி’ என்று கூத்திடும் கவிஞர் எல்லாக் கடவுளரிடமும் ரகசியமாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தவறவில்லை. ‘சுகத்தினை நான்வேண்டித் தொழுதேன்; எப்போதும்/ அகத்தினிலே துன்புற்று அழுதேன்’ என்று வெளிப்படையாகவே ஒரு குரல் ஒலிக்கிறது. சமூக மனிதனின் ஏனைய பாடல்களை விட இருத்தலின் துயருறும் தனிமனிதனின் இத்தகைய கவிதைகள் அவனது ஆளுமைக்குள் நுழைய வாய்ப்பளிக்கின்றன.

பாரதி இன்று தமிழில் ஒரு நவீனத் தொன்மமாக நிலைபெற்றுவிட்டவன். அத்தொன்மத்தை உருவாக்கிக்கொண்ட தமிழ்ச் சமூகம், தன்னை நவீன காலகட்டத்துக்குத் தயார்செய்ய அதையும் பயன்படுத்திக்கொண்டது. ஏனெனில், கம்பருக்குப் பின்னரான எண்ணூறு வருடங்களில் அப்படியான ஒரு தனிப்பெரும் கவியாளுமை இங்கு உருவாகியிருக்கவில்லை. பாரதி மூலம் தோன்றிய அந்நல்வாய்ப்பைத் தமிழ்ச் சமூகம் பயன்படுத்திக்கொண்டது எனலாம். ஆனால், இதற்கு ஒரு நிழற்பக்கம் இருக்கிறது. அது இத்தகைய ஆளுமைகளைத் திருவுருக்களாக மாற்றி அவர்களிடமிருந்து தப்பிக்கும் உத்தி. காணும் இடமனைத்தும் காந்தி படங்களைத் தொங்கவிட்டு, ‘காந்திக்கு இந்நாட்டில் இப்போது இடமில்லை’ என்ற உண்மையை மறைத்துக்கொள்வதைப் போல வள்ளுவரும் பாரதியும் மேற்கோள்களாகத் தமிழர்களால் ஒவ்வொரு நாளும் அதிவிரைவாகக் கடந்துசெல்லப்படுகின்றனர்.

இந்தப் பிம்பங்களைத் தொழுதுவிட்டு, இவற்றின் சாராம்சத்தைக் கைகழுவுவது என்பது துரதிர்ஷ்டவசமானது. கலையின் சாரமே கலாச்சாரமாக உருத்திரண்டு வருகிறது. தமிழின் வரலாறும், பண்பாட்டு அடையாளமும் அதன் இலக்கியங்களாலேயே வடிவமைக்கப்பட்டவையாய் இருப்பினும் அவை பற்றிய நமது அறியாமையும் அலட்சியமும் ஆச்சரியமூட்டுபவை. கலைவெளிப்பாடும் கலாச்சாரமும் கைவிடப்பட்டிருக்கையில், சமூகம் ஒருநாள் நலம்பெற்றுச் சிறந்தோங்கும் என்ற எதிர்பார்ப்பு அபத்தமானது. நமது காடுகளும் நீர்நிலைகளும் ஆரோக்கியமாக இல்லாதபோது, நாம் மட்டும் ஆரோக்கியமாக இருக்க முடியும் என நம்புவதைப் போல நகைப்புக்குரியது.

- சபரிநாதன், ‘வால்’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர்.

தொடர்புக்கு: sabarinathan021@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்