இசையோடு பிறந்து, இசையில் வளர்ந்து, இசையில் மூழ்கி முத்துக்கள் எடுத்து இணையற்ற சரித்திரம் படைத்தவர் இசை மேதை எம்.எஸ். சுப்புலட்சுமி. அவருடைய நூற்றாண்டு வருடம் ஆரம்பமாகும் இந்நாளில், அவரது நினைவில் சற்று லயித்திருப்போம்!
தன் இசையைக் கேட்கும் ஒவ்வொருவரையும் புனிதப் பயணம் அழைத்துச் சென்று ஆலயங்களைத் தரிசிக்க வைத்த இசையரசி அவர். தியாகராஜரின் கீர்த்தனைகளைப் பாடும்போது, கருணையே வடிவமான ராமனைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துவார். முத்துஸ்வாமி தீட்சிதரின் ‘துவஜாவந்தி’ ராகக் கீர்த்தனை மூலம் அனைத்து கலைகளுக்கும் இருப்பிடமான திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியைத் தரிசிக்க வைப்பார். சியாமா சாஸ்திரியின் பாடல்களை எம்.எஸ். இசைக்கும்போது, காஞ்சி காமாட்சியும் மதுரை மீனாட்சியும் அலங்கார தேவதைகளாக அணிவகுத்து நிற்பார்கள்.
1916 செப். 16-ம் தேதி மதுரையில் பிறந்தார் எம்.எஸ். தந்தை சுப்பிரமணிய ஐயர், பிரபல வழக்கறிஞர். தாய் சண்முகவடிவு, வீணை இசைக் கலைஞர். வீட்டில் குஞ்சம்மா என்று செல்லமாக அழைக்கப்பட்டார் எம்.எஸ். 5-வது படிக்கும்போது, ஒருநாள் ஆசிரியர் அடித்துவிட, குஞ்சம்மா மயக்கமாகிவிட்டார். சில நாட்களில் உடல்நிலை சரியான பிறகும், குஞ்சம்மாவை இடைவிடாத இருமல் வாட்டியது. அம்மா சண்முகவடிவின் முடிவுப்படி பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி விழுந்தது.
ஒரு சமயம், சண்முகவடிவுக்கு வெளியூரில் கச்சேரி. குஞ்சம்மாவையும் அழைத்துச் சென்றார். மேடையில் அம்மா வீணை வாசித்துக்கொண்டிருக்க, மகள் வெளியே மணலில் வீடுகட்டி விளையாடிக்கொண்டிருந்தார். கண்திறந்து பார்த்தபோது, குஞ்சம்மா இல்லாததைக் கண்டு பதற்றம் அடைந்தார் சண்முகவடிவு. தேடிப் பார்த்து அழைத்துவரும்படி பக்கத்தில் இருந்தவரைப் பணித்தார். குஞ்சம்மா கண்டுபிடித்து அழைத்துவரப்பட்டார். மேடையில், அந்த 8 வயதுக் குழந்தையைப் பக்கத்தில் உட்காரவைத்துக்கொண்டதும், மகளை ஒரு பாட்டுப் பாடச் சொன்னார் சண்முகவடிவு. ‘மராத்தி’பஜன் ஒன்றைக் குஞ்சம்மா பாட, அந்த இனிய குரலில் அங்கிருந்தவர்கள் சொக்கிப்போனார்கள்.
எவரிமாட எம்.எஸ். சுப்புலட்சுமி
குஞ்சம்மாவின் திறமையைக் கண்டறிந்த ரசிகர் ஒருவரின் சிபாரிசின் பேரில், அவருடைய குரலை ஹெச்.எம்.வி. நிறுவனம் பதிவுசெய்து வெளியிட்டது. ‘செஞ்சுருட்டி’ ராகத்தில் மதுரை மீனாட்சி அம்மனைப் போற்றி, ‘மரகத வடிவு’ பாடியபோது குஞ்சம்மாவுக்கு வயது 10. ‘மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி’ என்று கிராமபோன் ரெக்கார்டு லேபிளில் பெயர் அச்சிடப்பட்டது. பிறகு, எம்.எஸ்.எஸ். என்பது சுருங்கி, உலகமே இன்றும் என்றும் உச்சரிக்கும் ‘எம்.எஸ்’ ஆனது!
டீன் ஏஜ் பருவத்தை நெருங்குவதற்கு முன்பாகவே எம்.எஸ்ஸின் திருமணம் குறித்து சண்முக வடிவுக்குக் கவலை வந்துவிட்டது. மகளிடம் இதுபற்றிப் பேசினார்.
“எனக்கு இப்போ கல்யாணத்துக்கு அவசரமில்லேம்மா. சங்கீதத்துல நிறைய சாதிக்கணும்னு எனக்கு ஆசை…” என்று தன் எண்ணத்தை உறுதியுடன் தெரிவித்தார் குஞ்சம்மா.
எம்.எஸ். தன் இசைப் பயணத்தைத் தொடரும்பொருட்டு சென்னைக்குப் பயணமானார். “மதுரைலேர்ந்து வந்திருக்கிற சுப்புலட்சுமிங்கிற சின்னப் பொண்ணு ரொம்ப நல்லாப் பாடறாளாமே...” - சென்னை ரசிகர்களின் வாய்மொழி விளம்பரம் மூலமாகப் பிரபலம் அடையத் தொடங்கினார் எம்.எஸ். சென்னையின் சங்கீத சூழ்நிலை, பிறருடன் பழகும் விதத்தில் எம்.எஸ்ஸிடம் மாற்றங்களை ஏற்படுத்தின. கூச்ச சுபாவம் மெல்ல மெல்ல விலகியது.
‘கிராமபோன் கம்பெனி ஆஃப் இந்தியா’வில் இருந்து அழைப்புகள் வந்தன. ‘கோகிலகான எம்.எஸ்.சுப்புலட்சுமி’ என்று கிராமபோன் தட்டில் பெயரை அச்சிட்டார்கள். எம்.எஸ். பாடிய தியாகராஜரின் ‘காம்போதி’ ராகக் கிருதியான ‘எவரிமாட...’ இசைத் தட்டு விற்பனையில் சாதனை படைக்க, ‘எவரிமாட எம்.எஸ்.சுப்புலட்சுமி’ என்ற பட்டப் பெயருடன் அழைக்கப்பட்டார் எம்.எஸ்!
ஜவாகர்லால் நேருவுடன் எம்.எஸ். சுப்புலட்சுமி.
1983-ம் வருடம், ஜனவரி முதல் தேதி.
மியூசிக் அகாடமியில் ஏற்பாடாகியிருந்த அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் கச்சேரி கடைசி நிமிடத்தில் ரத்தாகிவிட்டது. 16 வயதே நிரம்பிய எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு அன்று அரியக்குடியின் மேடையைக் கொடுத்தது அகாடமி. இங்கே மேடையேறிய முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார் எம்.எஸ்.
பாமரர்கள் மட்டுமல்ல; அன்றைய இசை மேதைகளும் வயது வித்தியாசம் பாராமல் இந்தப் புது வரவை நல்வரவாக ஏற்றுக்கொண்டார்கள். நாகஸ்வர சிம்மம் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை, செம்பை வைத்தியநாத பாகவதர், வயலின் மேதை மைசூர் டி.சவுடையா போன்றவர்கள் எம்.எஸ்ஸின் பாட்டுத் திறனை வியந்து பாராட்டினார்கள். கச்சேரியைக் கேட்ட வீணை காரைக்குடி சாம்பசிவ ஐயர், ‘‘குழந்தே... உன் தொண்டைக்குள்ளே நீ வீணையை ஒளிச்சுவெச்சுருக்கே...’’ என்றார்.
அதன் பின்னர், படிப்படியாக மேலேறிச் சென்று உயரம் தொட்டார் அவர். காஞ்சி மாமுனிவரின் அருள் கிடைக்கப் பெற்றார். கடல் கடந்து சென்று கலாச்சாரத் தூதுவரானார். விருதுகள் இவரைத் தேடி வந்தன. ‘பாரத ரத்னா’ வரை உயரிய விருதுகளைப் பெற்றாலும் பணிவின் உறைவிடமாகத் திகழ்ந்து சங்கீத உலகில் கோலோச்சினார் எம்.எஸ். இவையெல்லாம் சாத்தியமானது எப்படி?
1902 செப்டம்பர் 4-ம் தேதி சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்த டி.சதாசிவம், எம்.எஸ். வாழ்க்கையில் இணைந்தது, பின்னவருக்கு மிக முக்கியமான அத்தியாயம். ரயில் பயணம் ஒன்றில் நடந்த இவர்களது முதல் சந்திப்பு, எம்.எஸ். என்கிற மந்திரச் சொல் உலகின் மூலைமுடுக்குகளில் எல்லாம் உச்சரிக்கப்படுவதற்கு வித்திட்டது.
மதுரையில் பிறந்த வீட்டுச் சூழலிலிருந்து சுப்புலட்சுமியை மீட்டெடுத்து, இசை உலகில் யாரும் எட்டாத உயரத்துக்கு விஸ்வரூபம் எடுக்க வைக்கும் பொறுப்பைத் தன் வாழ்க்கையின் குறிக்கோளாகவே அமைத்துக்கொண்டவர் சதாசிவம்.
1940, ஜூலை 10 அன்று சென்னையை அடுத்த திருநீர்மலை கோயிலில் எம்.எஸ்ஸை வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொண்டார் சதாசிவம். கல்யாண ஏற்பாடுகள் அனைத்தையும் கவனித்துக்கொண்டவர், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் ஆசிரியர் கஸ்தூரி சீனிவாசன்.
எம்.எஸ்ஸின் கற்பனை வளத்துக்குக் கொஞ்சமும் சிக்கல் இல்லாமல் அவருடைய கச்சேரிகளைத் திட்டமிட்டுக் கொடுத்தார் சதாசிவம். ஒரு கச்சேரியில் மெயின் ராகம் எது, சப்-மெயின் ராகம் எது என்று சகலத்தையும் முடிவுசெய்து கொடுத்ததும் அவரே!
எம்.எஸ். பாடிவரும் பக்தி ததும்பும் பஜனைப் பாடல்கள் அனைவரையும் கவர்ந்திழுப்பதைக் கண்ட சதாசிவம், எம்.எஸ்ஸின் பாட்டுத் திறனை முழுவதும் வெளிக்கொண்டுவரும் வகையில், எழுத்தாளர் ‘கல்கி’யுடன் விவாதித்து ‘மீரா’ திரைப்படத்தை உருவாக்கினார். வெள்ளி விழா கொண்டாடிய அப்படத்தில், எஸ்.வி.வெங்கட்ராமன் இசையமைப்பில் எம்.எஸ். பாடிய பாடல்கள் பெரிய அளவில் வெற்றிபெற்றன. அதில் ‘கல்கி’ எழுதிய ‘காற்றினிலே வரும் கீதம்’ பாடல் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கீதமானது!
1947 அக்டோபர் 2.
காந்தியின் பிறந்த நாளில் பாடுவதற்கு எம்.எஸ். அழைக்கப்பட்டார். தவிர்க்க இயலாத காரணங்களால் அவரால் டெல்லி செல்ல இயலவில்லை. சென்னையில் பாடலைப் பதிவுசெய்து ஒலி நாடாவை டெல்லிக்கு அனுப்பிவைத்தார் சதாசிவம்.
அக்டோபர் முதல் தேதியன்று டெல்லியிலிருந்து தகவல் வந்தது. “மேடம்… ‘ஹரி தும் ஹரோ’ என்ற மீராவின் பாடலை நீங்கள் பாடிக் கேட்க வேண்டும் என்று காந்தி விரும்புகிறார். பாடலுக்கு டியூன் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை, எந்த ராகமாக இருந்தாலும் உங்கள் குரலில் கேட்க வேண்டும் என்பது காந்தியின் விருப்பம்...”
ஆனால், எம்.எஸ். அதற்கு உடன்படவில்லை. அந்தப் பாடலுக்கு இசையமைக்க ஆர்கெஸ்ட்ராவினர் அழைக்கப் பட்டனர். வெவ்வேறு விதமான டியூன்கள் அலசப்பட்டன. அவற்றில் ஒரு டியூன் ஓரளவுக்குத் திருப்திகரமாக இருக்க, ஆல் இந்தியா ரேடியோ அலுவலகம் விரைந்தார் எம்.எஸ். அந்தப் பாடலைப் பாடிப் பதிவுசெய்தார். மறுநாள் காலை விமானம் மூலம் ஒலிநாடா டெல்லிக்குப் பறந்தது!
அக்டோபர் 2-ம் தேதி மாலை, பிரார்த்தனைக் கூட்டத்தில் தான் மிகவும் விரும்பிய பாடலைக் கண்கள் மூடிக் கேட்டு ரசித்தார் காந்தி.
ஜனவரி 30,1948 அன்று மாலை காந்தி சுடப்பட்டார் என்கிற சோகத் தகவல் வானொலியில் கசிந்தது. தேசமே துக்கத்தில் மூழ்க, அனைத்து வானொலி நிலையங்களிலும் ஒலிபரப்பான பாடல், காந்தியின் பிறந்த நாளுக்கென்று எம்.எஸ். பாடிப் பதிவுசெய்து அனுப்பிய ‘ஹரி தும் ஹரோ’!
விருதுகள் எம்.எஸ்ஸைத் தேடி வந்தன. அதிலும் ஒரு பெரிய விருது அவரது வீடு தேடியே வந்தது. நாட்டின் குடியரசுத் தலைவரே நேரில் கொண்டுவந்து கொடுத்தார்.
2002-ம் ஆண்டு எம்.எஸ்., பண்டிட் ரவிசங்கர், செம்மங்குடி, டி.கே.பட்டம்மாள் ஆகிய நால்வருக்கு மியூசிக் அகாடமியின் பிளாட்டினம் ஜூப்ளி விருது வழங்க அப்துல் கலாம் வந்திருந்தார். உடல் நலக் குறைவு காரணமாக விழாவுக்கு எம்.எஸ்ஸால் செல்ல இயலவில்லை.
விவரம் அறிந்த குடியசுத் தலைவர், விழா முடிந்ததும் எம்.எஸ்-ஸின் கோட்டூர்புரம் வீட்டுக்குச் சென்று, அகாடமியின் விருதையும் பதக்கத்தையும் நேரில் கொடுத்துவிட்டு விமான நிலையம் சென்றார்.
எம்.எஸ்ஸின் பார்வையில் சாதனை
“வாழ்க்கையில் உங்களுக்குப் பூரண திருப்தி கொடுத்தது எதுவென்று நினைக்கிறீர்கள்?” என்று ஒருசமயம் எம்.எஸ்ஸிடம் கேட்கப்பட்டபோது, முதலில் கொஞ்சம் தயங்கிவிட்டு, பிறகு அழுத்தம் திருத்தமாக அவர் சொன்னது:
“நம் ஒவ்வொருவருக்கும் கடவுள் ஒரு திறமையைக் கொடுத்தனுப்புகிறார். நம்மால் இயன்றவரை அந்தத் திறமையைப் பயன்படுத்திக்கொள்கிறோம். என்னைப் பொறுத்தவரை யாருக்கும் நான் எந்தத் தீங்கும் மனசால்கூட நினைத்ததில்லை. அது மட்டும்தான் இன்னிக்கு வரைக்கும் நான் திருப்திப்பட்டுக்கொள்கிற விஷயம். என்னோட சாதனைன்னு நான் நினைக்கிறதும் இதைத்தான்!”
எம்.எஸ். ஆத்ம திருப்திக்காகவும் உலக அமைதிக்காகவும் பாடியவர். கச்சேரிகள் மூலம் வந்த சன்மானத்தைக் கொண்டு நிறைய சொத்துக்களை அவர் வாங்கியிருக்க முடியும். ஆனால், சங்கீதம் தனக்குக் கொடுத்ததைத் தர்ம காரியங்களுக்குத் திருப்பிக் கொடுத்து மன நிறைவு அடைந்தார். ஒரு புள்ளிவிவரத்தின்படி, தர்மமாக எம்.எஸ். கொடுத்த தொகை கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய்!
நிறைவாக...
72 ராகங்களில் தொகுக்கப்பட்ட மகா வைத்தியநாத சிவனின் ‘மேள ராகமாலிகை’ பாடலை, காஞ்சி மகா பெரியவரின் வேண்டுகோளின்பேரில் எம்.எஸ். பாடினார்.
“மேள ராகமாலிகையின் வார்த்தைகள், அர்த்தங்களைப் பொதித்துப் பொதித்து அடக்கிய அமைப்பில் இருக்கும். ‘கௌரி மனோஹரி தம்பர சத்தம்’ என்று வந்தால், அதில் கௌரி மனோஹரி என்பது ராகத்தைக் குறிக்கும். ‘ஹரிதம்பர சத்தம்’ என்பது பரமேஸ்வரனைக் குறிக்கும். இந்த இடத்தில், ஒரு கணத்துக்கும் குறைவாக இடைவெளி கொடுத்து இரண்டு அர்த்தங்களும் விளங்கும்படி பாட வேண்டும்” என்று ஆணையிட்ட மகா பெரியவரிடம், “இது எப்படிச் சாத்தியம்?” என்று தன் இயலாமையை வெளிப்படுத்தியிருக்கிறார் எம்.எஸ்.
“நீயா பாடப்போறே? அவ பாடிடுவா, நீ ஏன் கவலைப்படறே?” என்று சொல்லியிருக்கிறார் பெரியவர். அதே மாதிரி, அந்த இடத்தில் உரிய முறையில் துல்லியமாகப் பாடினார் எம்.எஸ்.
ஒலிப்பதிவு முடிந்து ஒலிநாடா வெளியான தருணத்தில் எம்.எஸ்ஸிடம் மகா பெரியவர் சொன்னார்:
“சூரிய-சந்திரர்கள் உள்ளவரை உன் புகழ் இருக்கும்.”
அது சத்திய வாக்கு. பொய்க்காது!
- வீயெஸ்வி
தொடர்புக்கு: vsv1946@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
31 mins ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago