கால்களைச் சங்கிலிகளால் பிணைத்துவிட்டு ஓட்டப் பந்தயத்தில் ஓடச் சொன்னால் என்ன நடக்கும்?
சில நாட்களுக்கு முன்னால் வெளிநாட்டில் இருக்கும் நண்பர் ஒருவர் ‘இந்தியா - பிணம் தின்னிகளின் நாடு’ என்று பதிவிட்டிருந்தார். அவரது தந்தைக்கு இறுதி மரியாதைகள் செய்வதற்காகத் தமிழ்நாட்டுக்கு வந்திருந்த அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் நடந்தவற்றைப் பற்றிக் குறிப்பிடும் பதிவு. கணவரை இழந்தவரிடம் மரணச் சான்றிதழுக்காக ஓர் அதிகாரி லஞ்சம் வாங்குவதிலிருந்து தொடங்கும் அந்தப் பயணம் எங்கெங்கெல்லாம் செல்கிறது என்பதைப் பற்றி பின்பு எழுதுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஓர் இளம் எழுத்தாளரைப் பற்றி மற்றொரு நண்பரிடம் கேட்டேன். “வேலை அழைப்பை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். 30 லட்சம் கொடுக்க வேண்டியிருந்தது. பெரிய வேலை. பணமும் பெரியதாகத்தானே இருக்கும்.”
சென்ற வாரம் தமிழ் சேனல் ஒன்று போலீஸ் அதிகாரி 1,000 ரூபாய் லஞ்சம் கேட்பதைப் பதிவுசெய்து காட்டியது.
இவை அனைத்தும் தினமும், எல்லா இடங்களிலும், அநேகமாக எல்லோருக்கும் நடப்பவை. அநேகமாக எல்லோருக்கும் நடப்பதாலேயே இதைத் தீர்க்க முடியாத நோய் என்று மக்கள் திடமாக நம்புகிறார்கள். ஆயிரம் சட்டங்கள் இருந்தாலும், லஞ்சம் வாங்குபவன் பிடிபடுவது கடவுள் விதித்தால்தான் நடக்கும் என்பது அவர்களது நம்பிக்கை!
இந்த நம்பிக்கை உண்மையா?
தமிழகத்தின் நிலைமை
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் (பொதுத் துறை நிறுவனங்களில் வேலை செய்பவர்களையும் சேர்த்து) 10 லட்சத்துக்கும் மேல் இருக்கிறார்கள். இவர்களில் லஞ்சம் வாங்குபவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று பொதுமக்களிடம் கேட்டால், 90 சதவீதத்துக்கும் மேல் என்பார்கள். நாம் 10% என்று எடுத்துக்கொள்வோம். அதாவது, குறைந்தது ஒரு லட்சம் பேர் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் லஞ்சம் வாங்குகிறார்கள். இவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் (உதாரணமாக, போக்குவரத்து போலீஸ்)தினமும் லஞ்சம் வாங்குகிறார்கள். ஒரு வருடத்தில் பல நூறு தடவை சிறைக்குச் செல்லக்கூடிய குற்றத்தைச் செய்துகொண்டிருக்கிறார்கள். லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர் வருடத்துக்குச் சராசரி 30 தடவை இந்தக் குற்றத்தைச் செய்கிறார் என்றே வைத்துக்கொள்வோம். இது மிகவும் குறைவான மதிப்பீடுதான். இந்த மதிப்பீட்டின்படி தண்டனைக்குரிய குற்றங்கள் வருடத்துக்குச் சுமார் 30 லட்சம் தடவை நடைபெறுகின்றன. இவற்றில் எத்தனை குற்றங்களுக்கு உண்மையில் தண்டனை கிடைக்கின்றன? தமிழக விஜிலன்ஸ் பிரிவின் புள்ளிவிவரங்கள்படி 2013-14-ல் பதிவுசெய்த குற்றங்களே 71தான். இவர்களில் தண்டனை பெறுபவர்கள் 30 பேர் இருந்தால் அதிசயம். சென்ற 5 ஆண்டுகளில் தண்டனை பெற்றவர்களின் சராசரி 27 மட்டுமே. எனவே, குற்றம்புரிந்தால் தண்டனை பெறும் வாய்ப்பு மிகமிகக் குறைவு. இதையே மற்றொரு முறையில் கூறினால் குற்றம்புரிந்தால் தண்டனை கிடைக்கும் வாய்ப்பு 0.00001 மட்டுமே.
இது எவ்வளவு குறைவு என்பதை விளக்குவதற்கு மற்றொரு உதாரணம் கூறுகிறேன். தமிழகத்தில் சாலை விபத்தில் சிக்கிக் காயம் மற்றும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2014-ல் 90,000. தமிழ்நாட்டின் மக்கள்தொகையையும் இங்கு வருகை தருபவர்களையும் கணக்கில்கொண்டு அதில் 90% பயணம் செய்பவர்கள் என்று எடுத்துக்கொண்டால், சுமார் 7 கோடி இருக்கும். இவர்களுக்கு விபத்து நிகழக் கூடிய வாய்ப்பு 0.00128%. எனவே, தமிழ்நாட்டில் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு, லஞ்சம் வாங்கி தண்டனை பெறக்கூடிய வாய்ப்பைவிட 128 மடங்கு அதிகம்.
இப்போது புரிகிறதா, லஞ்சம் வாங்குபவர்கள் ஏன் வெளிப்படையாகவே லஞ்சம் வாங்குகிறார்கள் என்று?
காரணம் என்ன?
தமிழக விஜிலன்ஸ் பிரிவில் மட்டும் சுமார் 400 பேர் இருக்கிறார்கள். அதாவது, வருடத்தில் ஒருவருக்கு லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காகத் தண்டனை வாங்கிக் கொடுக்கக் குறைந்தது 15 பேர் வருடம் முழுவதும் வேலை செய்கிறார்கள். இவர்கள் மீது நான் குறை சொல்ல வில்லை. கால்களைச் சங்கிலிகளால் பிணைத்துவிட்டு ஓட்டப் பந்தயத்தில் ஓடச் சொன்னால் என்ன நடக்கும்? தமிழகத்தில் மாத்திரம் இந்த நிலைமை இல்லை. மத்திய விஜிலன்ஸ் கமிஷனின் புள்ளிவிவரங்களும் கிட்டத்தட்ட இதே லட்சணத்தில்தான் இருக்கின்றன.
நமது சட்டங்களும், அரசு, அரசியல் அமைப்புகளும், நீதித் துறையும் சேர்ந்து செயல்படும் விதம் ஊழல் செய்பவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கின்றன. ஊழலுக்கு எதிராக வேலை செய்பவர்களுக்கு எத்தனை தடைகளை வைக்க முடியுமோ அத்தனை தடைகளையும் வைக்கின்றன. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது இது. அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும், நீதி அரசர்களும், ஊழலை உண்மையில் பெரிய குற்றமாக நினைப்பதில்லை. ‘சாப்பிட்டால் பரவாயில்லை... வேலையாவது நடக்கிறதே’என்ற அடிப்படையில்தான் பெரும்பாலும் இக்குற்றம் அணுகப்படுகிறது. நாமும் ஒரு நாள் பிடிபடலாம் என்ற அச்சமும் காரணமாக இருக்கலாம். இதனால், லஞ்சம் வாங்கியவரைப் பாதுகாக்கும் வேலை அவர் பிடிபட்டவுடன் (பிடிபடுவதே அபூர்வம் என்பது வேறு விஷயம்) ஆரம்பமாகிறது. அவரது மேலதிகாரிகள், உடன் வேலை செய்பவர்கள், உறவினர்கள், அவருக்குத் தெரிந்த அரசியல்வாதிகள் இவர்கள் அனைவரும் கூட்டாகவும் தனித்தனியாகவும் அவரைக் குற்றமற்றவர் என்று உறுதிசெய்யக் கடுமையாக உழைக்கிறார்கள். இவர்களையெல்லாம் தாண்டி, அவரது வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றால், அங்கு ‘நிரூபிக்கும் வரை நிரபராதி’ என்ற வெண்ணெய் அதிகமாகத் தடவப்படுகிறது. முயன்று நிரூபிப்பதும் மிகச் சில சமயங்களிலேயே நடைபெறுகிறது.
மக்களின் எதிர்பார்ப்பு
லஞ்சம் என்பது இருவர் செய்யும் குற்றம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், கொடுப்பவர் பெரும்பாலும் கட்டாயத்தால் கொடுக்கிறார். கட்டாயப்படுத்தினாலும் கொடுக்கக் கூடாது என்ற உறுதியுடன் செயல்பட மக்கள் முன்வருவதில்லை என்பது கசப்பான உண்மை. எல்லோரும் இந்த உறுதியுடன் செயல்பட்டால், லஞ்சம் தானாகவே மறைந்துவிடும். ஆனால், மக்கள் எல்லோருக்கும் இத்தகைய அற உணர்வு இருக்கும் என்று நினைப்பது நடைமுறைக்கு ஒவ்வாதது. மாறாக, அரசுக்கும் அரசை இயக்குபவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இந்த அற உணர்வு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. இந்த எதிர்பார்ப்பில்தான் மக்கள் தங்கள் அரசைத் தேர்ந்தெடுக்கிறார்கள்; அரசு ஊழியர்கள் வேலையில் அமர்த்தப்படுகிறார்கள். ஆனால், ஒவ்வொரு நொடியிலும் இங்கு நடந்துகொண்டிருப்பது மக்களாட்சிக்கு எதிராக அதைப் பாதுகாக்க உறுதி எடுத்துக்கொண்டவர்களே செய்யும் கெரில்லாப் போர்.
நாம் என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் லஞ்சக் குற்றத்துக்காக வருடத்துக்குச் சராசரியாக 27 பேர் மட்டும் தண்டிக்கப்படுகிறார்கள் என்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய புள்ளிவிவரம் நமக்கு. அரசுக்கு அதிர்ச்சி அளிப்பதாகத் தெரியவில்லை. இரண்டு வருடங்கள் மட்டும் இது 27,000 ஆக மாறினால், அநேகமாக இதில் பெரும்பகுதி சரியாகிவிடும். ஆனால், மாற்றத்தைக் கொண்டுவர வேண்டியவர்களே அந்தப் பக்கத்தில் இருந்தால், மாற்றம் என்பது நாம் காணும் பல பகல் கனவுகளில் ஒன்றாகத்தான் இருக்கும். விலைவாசி உயர்வால் 30 லட்சம், மூன்று கோடியாக ஆகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
- பி.ஏ. கிருஷ்ணன், ‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர்,
தொடர்புக்கு: tigerclaw@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago