சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 1: நெய்தவனுக்கு மட்டுமே தெரியும் ரகசியம்!

By செய்திப்பிரிவு

சாதாரணமாக ஒரு தீவிர நோயிலிருந்து மீண்டுவந்தால் செத்துப் பிழைத்தேன் என்று சொல்வார்கள். ஆனால், நான் நிஜமாகவே ‘செத்துப் பிழைத்தேன்’. மூன்றாம் முறையாக மாரடைப்பு வந்து மருத்துவமனையில் சேர்ந்த 30 நிமிடங்களுக்குள் இதயத் துடிப்பு நின்று, கண் செருகி, வாய் பிறழ்ந்த நிலையில் மருத்துவரும், நவீன உத்திகளும், மின்சார ‘ஷாக்’கும் என்னை இரண்டு நிமிடங்களில் உயிர்ப்பித்துவிட்டன.

வீடு திரும்பினேன். மகனும் மகளும் அவரவர் தேசத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். பிறகுதான் கரோனாவும் ஊரடங்கும் வந்தன. தனியாக வசிக்கும் எனக்கு தினசரி வாழ்க்கை சவாலாக ஆகிவிட்டது.

ஒருநாள், ‘85 வயதில், கடமைகளும் பொறுப்புகளும் இல்லாத நான் ஏன் மரண வாயிலில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டேன்?’ என்ற கேள்வியும் சலிப்பும் என் மனத்தில் தோன்றின. அப்போது பல வருடங்களுக்கு முன் தற்செயலாக நடந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது.

மணமகனின் சார்பாக அழைக்கப்பட்டு ஒரு திருமண வரவேற்புக்குச் சென்றிருந்தேன். வாயிலிலேயே ஒரு பெண்மணி ஓடிவந்து என் இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டு, ‘‘டாக்டர், நீங்கள் அன்று ஊதிய மூச்சுதான் இன்றுவரை என் கணவருக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால்தான் இன்று நாங்கள் இந்தத் திருமணத்தை நடத்த முடிந்தது’’என்று மகிழ்வுடன் கூறினார். யார், என்ன என்று நான் குழம்பியிருக்கும்போது அவருடைய கணவர் வேகமாக என் அருகில் வந்து முகமன் கூறினார். உடனே, அவர் கூறிய சம்பவம் எனக்கு நினைவு வந்தது. அது சுமார் 7 - 8 வருடங்களுக்கு முன் நடந்தது.

நான் இதய நோய் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். ஒருநாள் காலை, பணி தொடங்க வேகமாய் வராண்டாவில் போய்க்கொண்டிருந்தேன். பின்னால் இருந்து ஒரு தள்ளுவண்டியில், நடுத்தர வயது ஆண் ஒருவர் வேர்வையில் குளித்து வேதனையில் அனத்திக் கொண்டிருந்தார். வண்டி என்னைக் கடக்கும்போது நான் அவரைப் பார்த்தேன். அந்தக் கணத்தில் அவர் அனத்தல் நின்று கண்கள் செருகுவதைக் கண்டேன். அனுபவத்தால், தன்னிச்சையாக உடனே நான் ஒரு கையால் அவர் மார்புக்கூட்டை அழுத்திக்கொண்டு, மறு கையால் அவர் மூக்கை மூடிப் பிடித்துக்கொண்டு, அவரது வாயை என் வாயால் ஊதியபடியே வண்டியுடன் ஓடினேன். ஒரு நிமிடத்துக்குள் சிகிச்சை. அறையின் வாயிலை நாங்கள் நெருங்குவதற்கும் அவர் ‘ஹா’ என்று ஒரு பெருமூச்சு விடுவதற்கும் சரியாக இருந்தது.

பிறகு முறைப்படி சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார். இரண்டு மாதம்வரை வாரம் தவறாமல் மறுபரிசோதனைக்கு மனைவியுடன் வந்தார்.

இப்படி இதயத் துடிப்பு நின்றவர்களுக்கு எத்தனையோ முறை சிகிச்சை அளித்து இருக்கிறோம். ‘மானிட்ட’ரும், ‘அலார’மும் உடனே அறிவித்துவிடும். தீவிர சிகிச்சை உபகரணங்களும், அனுபவம் உள்ள குழுவும் இருக்கும். இப்படி ‘செத்துப் பிழைத்த’ நிகழ்வை நாங்கள் நோயாளியிடமோ, குடும்பத்தினரிடமோ தெரிவிப்பது இல்லை. அவசியமானால் தவிர, வீணாக ஏன் அவர்களை தைரியப்படுத்த வேண்டும்?

இது நடந்த காலகட்டத்தில் இந்த 'CPR' (கார்டியோ பல்மனரி ரிஸஸிடேஷன்) என்ற முதலுதவி அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இதுபற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. பள்ளிகளிலும் காவல் துறையினருக்கும் இது போதிக்கப்படுகிறது.

நான் கூறிய நிகழ்வு சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே நடந்தது. அந்த நேரத்தில் என்னை அந்தத் தள்ளுவண்டி கடப்பானேன்? நான் அங்கே இருந்தது எப்படி? அப்போது உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அவரது மகளது திருமணத்துக்குத் தற்செயலாக நான் ஏன் சென்றேன்? அவர்களைச் சந்திப்பானேன்? என்றோ தொடங்கிய ஒரு வட்டம் முடிவு பெற்றதா?

ஒவ்வொரு நிகழ்வுக்கும் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவென்றுதான் நமக்குத் தெரிவதில்லை. பல தருணங்களில் ‘‘இது ஏன் இப்படி நிகழ்ந்தது?’’ என்று நொந்து கொள்கிறோம். சில காலத்துக்கு பிறகு ‘‘நல்லவேளை இப்படி நடந்தது..’’ என்று ஆறுதல் அடைகிறோம். நாமெல்லாம் தரையில் விரிக்கப்பட்ட கம்பளத்தில் ஊறும் எறும்புகள்போல. நெய்யப்பட்ட பூக்களும் ஏன் நிறங்களும்கூட எறும்புகளுக்குத் தெரியுமா?

வாழ்க்கையாக கம்பளத்தை நெய்தவன் மேலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறான். அந்தப் பூக்களும், நிறங்களும் ஏன், எப்படி அமைக்கப்பட்டு இருக்கின்றன என்று அவனுக்குத் தெரியும்!

- சந்திப்போம்... சிந்திப்போம்..!

கட்டுரையாளர்: கல்யாணி நித்யானந்தன்,
இதயநோய் நிபுணர் (பணி நிறைவு),

டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

தொடர்புக்கு:joenitya@yahoo.com
ஓவியம்: வெங்கி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்