கல்வியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு கொண்ட தலைமுறை இது!
சமீபத்தில் சென்னை மயிலாப்பூரில் உள்ளடங்கிய ஒரு பள்ளி வழியாக எதற்கோ செல்ல வேண்டியிருந்தது. அந்த இடம் பரிச்சயமான சூழலாக மனத்தில் மின்னலடித்தது. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிப் படிப்பை முடித்த எனக்கு இவ்வளாகம் எப்படிப் புழங்கிய பகுதியாக முடியும் என்ற எண்ணம் ஓடியது. என் மகள் எழுதிய ஒரு தேர்வுக்காக உடன் சென்ற நான், அங்கிருந்த மர நிழலில் முழு நாளும் காத்துக் கிடந்தது நினைவுக்கு வந்தது. நான் படித்த பள்ளிக்கூடத்துக்கே என்னைச் சேர்க்கவோ, வகுப்பாசிரியரைச் சந்திக்கவோகூட என் அப்பா வந்ததில்லை. அரசு ஊழியரான அவர், துறைத் தேர்வு ஒன்றை எழுத வந்தபோதுதான் என் பள்ளி வளாகத்தை முதன் முதலில் பார்த்தார். அதுதான் வாழ்வில் ஒரே முறை. என் தலைமுறையிலோ நிலைமை தலைகீழ்.
மேல்நிலைக் கல்வி படித்தபோது தனிப் பயிற்சிக்காக மந்தைவெளியில் பறக்கும் ரயில் நிலையத்தின் அருகில் ஒரு நிறுவனத்தில் மகளைச் சேர்த்திருந்தேன். தானி ஏற்பாடு செய்யும்வரை தொடர்வண்டியில் போய் வந்தாள். விடியற்காலையிலும் மதிய வெயிலிலும் முன்னிர விலும் உடன் சென்றதும், நிலையம், நிறுவன வளாகங்களில் காத்திருந்ததும் எதற்கு எனத் தெரியவில்லை. நம் பொறுப்பைக் காட்டவும் படி என்று சொல்லாமல் அதை உணர்த்தவுமாக இருக்கலாம். இன்று நகர அப்பாக்கள் பலரும் இப்படித்தான் இயங்குகிறார்கள்.
தவச்சாலைகளான கல்விக்கூடங்கள்
தனிவிருப்பமாக மகள் படித்த இந்தி வகுப்பு வசித்த தெருவிலேயே அமைந்துவிட்டது. அதனால், தேர்வு மையத்துக்கும், சான்றிதழ் வழங்கு நிகழ்வுக்கும் மட்டும் செல்ல வேண்டியிருந்தது. சென்னையின் ராயப் பேட்டை, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தியாகராய நகரின் பல பள்ளிகள் காலை முதல் மாலைவரை தவச்சாலைகளாயின. மகளின் அயல் மொழி ஆர்வத்தில் திகைந்த ஜப்பான் மொழி பயின்ற இரு இடங்களும் பேருந்தில் செல்ல வேண்டிய தூரத்தில் அமைந்தன. குறைந்த தூரமேயானாலும் நெரிசல் நேரத்திலும், ஊர்வல காலத்திலும் சென்று திரும்பப் பல மணிநேரம் ஆகிவிடும். இவ்வகுப்புகள் மதியம் மற்றும் இரவுப் பொழுதில் நடைபெறுவன. எனக்கு அருகமைந்த உணவகங்களின் சிறப்புணவு பழக்கமானது, நூலகங்களின் ஊழியர்கள் ‘பரிச்சயமானார்கள்'.
பள்ளிக் கல்வி முடித்ததும் அடுத்தது என்ன என்பதில் இன்றைய சராசரித் தமிழருக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. முதலில் மருத்துவம். அடுத்து பல் மருத்துவம். அதற்கடுத்தது கால்நடை மருத்துவமும் விவசாயமும். நான்காவது பொறியியல். ஐந்தாமிடம் வணிகவியலுக்கு, ஆறாமிடம் அறவியல் பாடங்களுக்கு. இவை ஏதும் கிடைக்காதவர்களின் இறுதிப் புகலிடம்தான் கலைகள். முதல் மூன்று பிரிவுகளைத் தொட முடியாதவர்கள் நான்காவதை விட்டுக் கீழே இறங்குவதில்லை. அப்படி இறங்குவதை அவமானமாகக் கருதும் நிலைக்கு வந்துவிட்டது இன்றைய காலம்.
+2க்குப் பிறகு அடுத்து என்ன செய்யலாம் என்பது பற்றிப் பலர் அதற்கென இயங்கும் நிறுவனங்களை அணுகி ஆலோசனை கேட்பார்கள். அப்படி ஒரு அமைப்பை அணுகினேன். தேர்வு முடிவுகள் வெளிவர மூன்று வாரம் இருக்கும்போதே, அதன் தலைவரைப் போய்ப் பார்த்தேன். ‘என்ன இவ்வளவு தாமதமாக வருகிறீர்கள்’ என்றார் அவர். ‘ஐயா, இன்னும் முடிவுகள் வெளிவரவில்லையே’ என்றேன் மெதுவாக. தேர்வு எழுதுவதற்கு முன்பே வர வேண்டும் என்றார். +2க்குப் பிறகான படிப்புகளுக்கு அகில இந்திய அளவிலான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய பல கடைசித் தேதிகளை அப்போது நான் கடந்துவிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டினார். அதிர்ந்துபோனேன்.
எங்களுக்கு அந்த நேரத்தில் தேர்வு வாய்ப்புகள் 10 இருந்தன. மகள் எல்லாவற்றையும் எழுதினாள். காலையில் கொட்டிவாக்கம் பள்ளியில் ஒரு மணிக்குத் தேர்வொன்று முடியும். அதே நாளில் மதியம் இரண்டு மணிக்கு டி.டி.கே. சாலையில் உள்ள பள்ளி ஒன்றில் இன்னொரு தேர்வு தொடங்கும். ஒரு மணி நேரத்தில் கொட்டிவாக்கத்திலிருந்து ராஜா அண்ணாமலைபுரம் வர வேண்டும். வாடகை உந்தியில் பள்ளி வாசலில் காத்திருந்து, தேர்வு எழுதிவிட்டு வெளிவரும் மகளை உள்ளே திணித்துக்கொண்டு வர முயன்றால், வாசலி லேயே நெரிசலில் வண்டி சிக்கிவிடும். எப்படியோ தப்பித்து 10 நிமிட தாமதத்தில் தேர்வறையை அடைந் தோம். வழியில் வாகன போஜனம். இப்படிப் பல நெருக்கடிகளைச் சந்தித்துப் பல தேர்வுகளை எழுதி முடித்தோம். இத்தேர்வுகள் எனக்கும் என் மகளுக்கும் பொது அறிவை வளர்த்தன. தவிர, வேறு பயன் விளையவில்லை.
மகள் வாங்கிய மதிப்பெண்ணுக்கு அரசு ஒதுக்கீட்டில் சுயநிதிக் கல்லூரியில் பல் மருத்துவம் கிடைத்தது. ஆனால் மகள் அதை விரும்பவில்லை. மொழியும் இலக்கியமும் இயல்பாகவே என் மகளுக்குப் பிடித்தவை. ஆங்கில இலக்கியத்தைத் தேர்ந்தாள். சென்னையின் சிறந்த கல்லூரியில் சேர்ந்தாள். அவள் தேர்வு எனக்கு வருத்தத்தைத் தரவில்லை.
கரையும் சேமிப்பு
இளங்கலை முடித்த பின் முதுகலைக்கான விண்ணப்பங்கள் அனுப்புவதை மகளே பார்த்துக்கொண் டாள். அதற்கான தேர்வுகளில் ஒன்று புதுச்சேரியில், மற்றொன்று டெல்லியில், மற்றவை சென்னையில். இந்தத் தேர்வுகளுக்கு மகளை அழைத்துப் போய் வருவது எங்களுக்கு ஒரு சுற்றுலா போலவே ஆகிவிட்டது. புதுச்சேரியில் எழுதிய தேர்வின் பயனால் இப்போது மகள் ஷில்லாங்கில் படிக்கிறாள். ஆகாய மார்க்கத்தில் சேமிப்பு கரைகிறது.
கல்வியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு நகரவாசிகளுக்காவது வரத் தொடங்கியிருக்கிறது. எனினும் நாம் அடைய வேண்டிய தூரம் கண்ணுக்கு அப்பால் நீண்டிருக்கிறது. மயிலம் கிராமத்தில் படித்துக் கொண்டிருந்த நான், ஆறாம் வகுப்பை அருகமை நகரமான திண்டிவனத்தில் படிக்க விரும்பினேன். அப்பா மறுத்துவிட்டார். எங்கு படித்தாலும் படிக்கிறவர்கள் படிப்பார்கள்; படிக்காதவர்கள் எங்கு சென்றாலும் ஜொலிக்க மாட்டார்கள் என்று சொன்னார். நடுத்தர வர்க்கம், தன் பொருளாதார இயலாமையை மறைத்துக் கொள்ள இத்தகைய அறப் போர்வைகளைப் போர்த்திக் கொண்டு சுருண்டுவிடும்.
பொருளாதாரத்துடன் இணைந்த மத்திய அரசின் திட்டம் ஒன்றுதான் என்னை நகரத்துக்குக் கூட்டிவந்தது. கிராமத்தில் படிக்கும் சிறார்களில் சிறந்தவர்களை நகரத்தில் உள்ள தேர்ந்த பள்ளியில் சேர்க்கும் திட்டம் அது. ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் இயங்கும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பில் முதலிரு இடங்களைப் பெற்ற மாணவர்களுக்குப் போட்டித் தேர்வொன்றை வைத்து, அதில் இருவரைத் தேர்ந்தெடுத்து, நகரப் பள்ளியில் சேர்த்து, படிக்கும் செலவை அரசு ஏற்றுக்கொள்ளும். 97 பேர் பங்கேற்ற போட்டியில் இருவருள் ஒருவராகத் தேர்வுபெற்று கடலூருக்கு வந்து சேர்ந்தேன். போட்டித் தேர்வை எழுதிய திண்டிவனத்துக்கோ, படிக்கச் சென்ற கடலூருக்கோ அப்பா உடன்வரவில்லை. எட்டாவது படிக்கும்போதே பெற்றோர் உடன்வரவில்லை. ஆனால் நானோ பட்டப்படிப்புக்குப் பிறகும் கூடவே அலை கிறேன். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த தலைமுறை என்பது மட்டும் இதற்குக் காரணமாய்த் தோன்றவில்லை. பொருளாதார அன்பும் கூடுதல் காரணங்கள் என்று தோன்றுகின்றன. என் மகள் சொல்வாள் பெண் என்பதுதான் காரணம் என்று.
- பழ. அதியமான்,
‘சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்
தொடர்புக்கு: athiy61@yahoo.co.in
இன்று உலக கல்வி தினம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago