சென்னை குரோம்பேட்டையில் உள்ள அஸ்தினாபுரத்தில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் 50 வயது வங்கி ஊழியர் கரோனாவுக்குச் சிகிச்சை பெற்று, தொற்று நீங்கிய பிறகு வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். 14-21 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வதற்காக, அவரது வீட்டின் வாயில் முழுவதையும் அடைக்கும் விதமாகத் தகரத் தட்டியைப் பொருத்தியிருக்கின்றனர் பல்லவபுரம் நகராட்சி ஊழியர்கள். அந்தத் தகரத் தட்டி பொருத்தும் ஒளிப்படம் பெரும் சர்ச்சையானது. அடுத்த ஒரு சில மணி நேரங்களில் அந்தத் தகரத் தட்டி நீக்கப்பட்டுவிட்டது என்றாலும், பிரச்சினை இதில் தொடங்கவும் இல்லை, இத்துடன் முடிந்துவிடவும் இல்லை!
கரோனா காலத்தில் தொற்று ஏற்பட்டவர்கள் மட்டுமல்லாமல் அவருடன் ஒரே வீட்டில் வசித்தவர்களும் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கூடுதலாக, சென்னை மாநகராட்சியில் கரோனா பரிசோதனை செய்துகொண்டவர்களும்கூட பரிசோதனை முடிவு தெரியும் வரை வீட்டில் குடும்பத்துடன் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. தொற்று எண்ணிக்கை அதிகரித்த சூழலில், இந்த நடைமுறை தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
இதை உறுதிசெய்வதற்கு உள்ளாட்சி அமைப்புகள் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டன. முதலில் தொற்று கண்டறியப்பட்டவர்களின் வீட்டு வாசலில், அந்த வீட்டில் வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை, தொற்று கண்டறியப்பட்ட தேதி, தனிமைப்படுத்தல் காலம் நிறைவடையும் தேதி ஆகியவற்றைக் குறிப்பிடும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இதன் மூலம் அந்த வீடுகளுக்குள் மற்றவர்கள் நுழைய மாட்டார்கள், வீட்டில் இருப்பவர்கள் வெளியே வந்தால் மற்றவர்கள் புகாரளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த ஸ்டிக்கர் ஒட்டிய வீடுகளிலிருந்து பலர் வெளியே புழங்கியதாகக் குற்றச்சாட்டுகள் வரவே, இந்த வீடுகளுக்கு அருகில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும், உள்ளாட்சி நிர்வாக ஊழியர்கள் கண்காணிப்பார்கள், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் அனைவரும் அரசு பராமரிப்பு மையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டது.
தனிமைப்படுத்தலும் தகரத் தடுப்பும்
இவற்றுடன் தொற்று கண்டறியப்பட்டவர்களும் அவர்களின் வீட்டில் இருப்பவர்களும் வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்திக்கொள்வதை உறுதிசெய்வதற்காகத் தகரத் தட்டி வைத்து அடைக்கும் நடைமுறையும் தொடங்கியது. முதலில், ஒரு தெருவில் ஒருவருக்கோ ஒருசிலருக்கோ தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், முழுத் தெருவும் தகரத் தட்டி வைத்து அடைக்கப்பட்டது. ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரே ஒரு வீட்டில் யாருக்காவது தொற்று கண்டறியப்பட்டால், முழுக் குடியிருப்பையும் அடைத்து வைக்கும் நடைமுறையும், தொற்று கண்டறியப்பட்டவரின் வீட்டை யார் நினைத்தாலும் வெளியேற முடியாதபடி முழுமையாக அடைத்து வைக்கும் நடைமுறையும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதெல்லாம் கடுமையான எதிர்ப்புகளுக்கு உள்ளானாலும், இப்போதும்கூட தமிழகத்தின் சில பகுதிகளில் முழுத் தெருவையோ சாலையையோ, தகரத் தட்டி வைத்து தனிமைப்படுத்தும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஒரு நபர் கரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார் என்பதற்காக ஒரு தெருவையே முடக்கி பல குடும்பங்களைத் தவிக்கவைப்பது அரசின் மிகக் கோரமான மனநிலையையே வெளிப்படுத்துகிறது.
வீட்டு வாயில்களை முடக்கும்போது அவசரத் தேவைகளுக்கு நகராட்சி ஊழியர்களுக்கோ தன்னார்வலர்களுக்கோ அழைத்தால் அவர்கள் வந்து உதவுவார்கள் என்று கூறப்படுகிறது. சிறுசிறு அத்தியாவசியத் தேவைகளுக்கும்கூட சம்பந்தமில்லாத ஒரு நபரைச் சார்ந்திருக்கச் சொல்வது என்ன நியாயம்? திடீர் விபத்துகள், மாரடைப்பு போன்ற உடல்நலப் பிரச்சினைகள் நிகழ்ந்தாலோ, முதியவர்களுக்கு ஏதாவது ஆகிவிட்டாலோ அந்த அவசரத் தேவையை எப்படிப் பூர்த்திசெய்வது? அவசரச் சிகிச்சை தேவைப்படும் நேரத்தில், சிகிச்சை தாமதமாவதால் உயிரிழப்பு உள்ளிட்ட மோசமான விளைவுகளை இது ஏற்படுத்தியிருக்கிறது. முகப்பேரில் தட்டி வைத்து அடைக்கப்பட்ட வீட்டில் தவறி விழுந்த மூதாட்டி உடனடியாக வெளியே அழைத்துவரப்பட முடியாமல், வெளியே இருப்பவர்களும் உள்ளே செல்ல முடியாமல் தவித்த கதைபோல தமிழகத்தில் நடப்பவை ஏராளம். இந்தத் தகரத் தடுப்பு மிகச் சாதாரண நாட்களிலேயே கடும் மனவுளைச்சலை உருவாக்கும்போது இப்படியான அவசரக் காலங்களை எப்படி எதிர்கொள்ள முடியும் என்று அரசு சிந்தித்துப் பார்ப்பதுபோல தெரியவில்லை.
தமிழகத்தில் மட்டுமா?
தமிழகத்தைவிட அதிக கரோனா நோயாளிகளையும் மரணங்களையும் எதிர்கொண்டிருக்கும் டெல்லியில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. பெங்களூருவில் மாநகராட்சி ஊழியர்கள் சிலர், அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் இரண்டு வீடுகளை அடைக்கும் விதமாக தகரத் தட்டியை வைத்துவிட்டுச் சென்றது பெரும் சர்ச்சையானது. அதையடுத்து, அந்தத் தகரத் தட்டி நீக்கப்பட்டதோடு மாநகராட்சி அதிகாரிகள் சார்பில் விளக்கமும் கொடுக்கப்பட்டது. வேறெந்த மாநிலங்களிலும் இப்படி நடந்ததாகச் செய்திகள் கிடைக்கவில்லை. தமிழகத்தில் மட்டும்தான் இந்த நடைமுறை இன்றும் பின்பற்றப்படும் அவலம் தொடர்கிறது. மேலும், இந்தத் தகரத் தட்டி வைத்து அடைப்பதற்கான நிதி ஒதுக்கீடு, செலவழிக்கப்படும் தொகை ஆகியவை குறித்து பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன.
கரோனா தொற்றுக்கு உள்ளானவர்களும் அவரைச் சார்ந்தவர்களும் எதிர்கொள்ளும் உடல், மனரீதியான இன்னல்கள் ஏராளம். இந்நிலையில், அவர்களைச் சிறைக் கைதிகள்போல் அடைத்து வைப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும், இது அபாயகரமான நடவடிக்கையும்கூட. தமிழக அரசு இதை உடனடியாகக் கைவிட்டுவிட்டு, பொதுமக்கள் மீது அக்கறை கொண்ட வேறு வழிமுறைகளைச் செயல்படுத்த வேண்டும். உலகளாவிய ஒரு கொள்ளைநோயை கரோனா உருவாக்கியிருக்கிறது. ஆனால், உலகில் எத்தனை நாடுகள் ஈவிரக்கமற்ற இத்தகு தகரத் தடுப்பை உருவாக்கியிருக்கின்றன? எந்த அறிவின் அடிப்படையில் ஒரு சமூகமும் அரசும் இத்தகு கொடூரத்தைக் கடக்க முடியும்? தமிழகத்தின் சமகாலத் தகர மனநிலையையே தகரத் தடுப்பு முறை வெளிப்படுத்துகிறது!
- ச.கோபாலகிருஷ்ணன், தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
15 days ago