கரோனாவின் தொடர்ச்சியாக ஐந்து மாதங்களாக நாட்டைப் பீடித்திருக்கும் ஊரடங்கு, பொருளாதாரத்தை ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தி என்னும் அளவுகோலைக் கொண்டு, பொருளாதாரத்தைக் கணக்கிட்டால், மிக மோசமான பொருளாதாரச் சரிவைச் சந்தித்திருக்கிறோம். 2019 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் 4.7% ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி விகிதம், 2020 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் கடைசி ஏழு நாட்கள் ஊரடங்கின் காரணமாக 3.1% ஆகக் குறைந்துவிட்டது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டு மதிப்பீடுகள் மேலும் அதிர்ச்சியை அளிக்கக்கூடும்.
கரோனா நோய்த்தொற்றிலிருந்து தப்பிக்க முடியாது, அதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற நிலையில், நாம் ஒரு புதிய வாழ்க்கை முறைக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறோம். தொழில் துறை ஏற்கெனவே இருக்கும் தேவை-அளிப்புச் சங்கிலியைப் பலப்படுத்தவும், புதிய தேவைகளைக் கண்டறியவுமான முயற்சிகளில் இறங்கியிருக்கிறது. எனினும், பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வேளாண் தொழிலைச் சார்ந்திருக்கும் இந்தியாவில், அந்தத் துறையே நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக அமைந்துள்ளது.
இளைஞர்களின் ஆர்வம்
நல்ல பருவமழையும் அதிக விளைச்சலும் கிராமங்களில் பணப்புழக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. நகர்ப்புறங்களில் பணிபுரிந்துவந்த புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களுடைய கிராமங்களுக்குத் திரும்பி விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள். உறுதியான வேலைவாய்ப்பு இல்லாதபட்சத்தில், தற்காலிக வேலைகளை நம்பி நகரங்களுக்குத் திரும்புவதற்குப் பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை. நிலைமை மீண்டும் சீராகும் வரை, கிராமத்திலிருந்து விவசாயத்தைப் பார்த்துக்கொள்ளலாம் என்பதே பலரின் திட்டமாக இருக்கிறது. அதன் விளைவாக, விதை தானியங்களுக்கு வழக்கத்தைக் காட்டிலும் கூடுதல் தேவை ஏற்பட்டிருக்கிறது. இளைஞர்கள் வேதியுரம், பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்த மரபான விவசாய முறைகளின் மீது ஆர்வம் காட்டுகிறார்கள். மூலிகை விவசாயம், தேனீ வளர்ப்பு உள்ளிட்ட புதிய வாய்ப்புகளைத் தேடித் தேடித் தெரிந்துகொள்கிறார்கள்.
விவசாயம் செய்வதோடு மட்டுமின்றி, அதற்கான புதிய சந்தை வாய்ப்புகளையும் அறிந்துகொள்வதில் இன்றைய கிராமத்து இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். பழங்கள், காய்கறிகளைச் சந்தைக்குச் சென்று விற்றுவந்த விவசாயிகள், இப்போது தங்கள் கிராமத்தையொட்டிய பிரதான சாலைகளிலேயே கடை விரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். போக்குவரத்துச் செலவுகள் தவிர்க்கப்படுவதோடு, சுமைகளை ஏற்றி இறக்கக் கூலி, விற்றுக்கொடுப்பதற்கான தரகு ஆகியவையும் தவிர்க்கப்படுகின்றன. எனினும், விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில், காய்கறிகள் மற்றும் பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழத் தொடங்கியுள்ளது. குறைந்தபட்சம் விவசாயத்துக்குச் செய்த செலவையாவது திரும்பப் பெற முடியும் என்ற நிலையை உறுதிப்படுத்தினால் ஒழிய காய்கறி, பழ விவசாயத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க முடியாது.
அதிகரிக்கும் பணப்புழக்கம்
நகர்ப்புறங்களிலிருந்து தொழிலாளர்கள் கிராமங்களுக்குத் திரும்பியதால், இந்த ஆண்டு அறுவடை உரிய காலத்தில் நடந்திருக்கிறது. கடந்த நிதியாண்டின் ராபி பருவத்தில் உணவுப்பொருட்கள் விற்பனை 4.5% அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஊரடங்கால் வாகன விற்பனை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், விவசாயத்துக்கான டிராக்டர் மற்றும் இதர உபகரணங்கள் விற்பனையும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. மஹாராஷ்டிரம், மத்திய பிரதேசம், குஜராத், தெலங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் டிராக்டர் விற்பனை அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் பணப்புழக்கம் திருப்திகரமான அளவில் உள்ளது என்பதற்கான அளவீடாகவும் இதைக் கொள்ளலாம். சோப், பிஸ்கட் போன்று வேகமாக விற்பனையாகும் நுகர்வுப் பொருட்களின் வியாபாரமும் கிராமங்களில் அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களோடு ஒப்பிடுகையில் கிராமங்களில் இந்த வகையான பொருட்களின் விற்பனை நிலையானதாகவும் இருக்கிறது. இதுவும் பணப்புழக்கத்தின் முக்கியமானதொரு அளவீடு. கடந்த பத்து ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் நீர்த்தேக்கங்களில் இருப்பு அதிகரித்துள்ளது. எனவே, கிராமப்புறங்களின் பொருளாதார நிலை இதேபோல தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.
இன்னொரு பக்கம், விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு வழக்கமாகக் கிடைத்துவந்த வேலைவாய்ப்புகள் இப்போது அதிகரித்துள்ளன. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு முந்தைய ஒதுக்கீடான ரூ. 61,500 கோடியுடன் கரோனா நிவாரணமாக மேலும் ரூ. 40,000 கோடியை ஒதுக்கிய ஒன்றிய அரசின் நடவடிக்கையும் பலனளித்திருக்கிறது. ஆனாலும், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாக ஆங்காங்கே போராட்டங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நகர்ப்புறங்களிலிருந்து கிராமங்களுக்குத் திரும்பிய தொழிலாளர்களால் விவசாயம் மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது. அதே நேரத்தில், அவர்களுடைய அத்தனை பேரின் அடிப்படைத் தேவைகளையும் விவசாயம் பூர்த்திசெய்தாகவும் வேண்டும்.
பாதிப்புகளும் உண்டு
ஊரடங்குக் காலத்தில் வேளாண்மைத் துறை நம்பிக்கையளிக்கிறது என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு அது எல்லா விவசாயிகளுக்கும் பொதுவானதாகவும் இல்லை என்பதும் உண்மை. ஆரஞ்சு, சாத்துக்குடி விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்திருக்கிறது. ஆனால், பருத்தி, கரும்பு விவசாயிகள் வழக்கத்தைக் காட்டிலும் கடுமையாகவே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் அனைத்து விவசாயிகளும் மின்சார மோட்டார் வசதியைப் பெறாத நிலையில், டீசல் விலையேற்றம் விவசாயத்துக்கான செலவையும் அதிகரிக்கச்செய்கிறது. கதவு சாத்தப்பட்டால் ஜன்னல் திறக்கும் என்றொரு பழமொழி உண்டு. விவசாயம் என்ற கதவு திறந்தேதான் கிடந்தது. யாரும் அதைக் கண்டுகொள்ளாத நிலையில், கரோனா அதை நமக்கு நினைவுபடுத்தியிருக்கிறது. தொழில் துறையின் நெருக்கடிகள் சீராகும் வரை, விவசாயத்தையும் அதைச் சார்ந்திருக்கும் கிராமப்புறங்களையும் காப்பாற்றியாக வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. வேளாண் சீர்திருத்தங்களுக்காக ஒன்றிய அரசால் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொகையானது முறையாகவும் திட்டமிட்ட வகையிலும் செலவிடப்படுவதில்தான் அதன் வெற்றி இருக்கிறது. இளைஞர்கள் நகர்ப்புறங்களில் வேலைபார்த்து சேமித்த பணத்தையும் தங்களது உழைப்பையும் ஒருசேர விவசாயத்தில் முதலீடுசெய்திருக்கிறார்கள். அறுவடை முடிந்து, ஒருவேளை உரிய விலை கிடைக்காமல் தடுமாறும்பட்சத்தில் அவர்களின் கடைசி நம்பிக்கையும் கேள்விக்குறியாகிவிடும்.
- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago