அதிபர் ட்ரம்ப் ஏற்படுத்திய சுற்றுச்சூழல் பாதிப்புகளைச் சரிசெய்வது எப்படி?

By செய்திப்பிரிவு

ஆர்க்டிக் தேசிய வன உயிர் சரணாலயத்தின் கடற்கரைச் சமவெளி நிலத்திலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க அமெரிக்க உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. வரி விதிப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக அந்தப் பகுதியில் துளை போட்டு எண்ணெய், எரிவாயு எடுப்பதற்கு அங்கீகாரம் வழங்கும் முடிவு, 2017-ல் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டரான லிஸா முர்கோவ்ஸ்கியின் முன்னெடுப்பால் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதுதான். இதன் மூலம், ஐசனோவர் ஆட்சிக்காலத்திலிருந்து ஆர்க்டிக் தேசிய வன உயிர் சரணாலயப் பகுதிக்குக் கிடைத்துவந்த பாதுகாப்பு முடிவுக்கு வருகிறது.

ட்ரம்ப்பின் தொடர் தாக்குதல்கள்

அபரிமிதமான வன உயிர்களைக் கொண்ட, சுற்றுச்சூழல் சமூகத்துக்கு முக்கியமான பங்களிப்பைச் செய்கின்ற இந்தச் சரணாலயத்தின் நிலப் பகுதியின் கீழ் இருக்கும் எண்ணெய் உறிஞ்சி எடுக்கப்படும் எனும் அறிவிப்பு, ட்ரம்ப் அரசு நிர்வாகம் எடுக்கும் வருத்தமளிக்கும் மற்றுமொரு நடவடிக்கை ஆகும். அமெரிக்காவின் நீர், நிலப் பகுதிகளுக்குப் பாதுகாப்பு, சுத்தமான காற்றுக்கு உத்தரவாதம், புவிவெப்பமயமாதலுக்குக் காரணமான வாயுக்களைக் குறைத்தல் என ஒபாமா ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட எல்லா நடவடிக்கைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் தீர்மானத்துடன் செயல்படுகிறார் ட்ரம்ப்.

நீதிமன்றங்களின் தலையீட்டால் பல பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தின் கணிசமான ஆதரவைப் பெறும் வாய்ப்புள்ள புதிய அதிபர் மூலம் இன்னும் நிறைய விஷயங்களைச் செய்ய முடியும். பொறுமையும், ஒழுக்கமும் தேவைப்படும் விஷயம் இது. அமெரிக்காவின் சுற்றுச்சூழல் கொள்கைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ட்ரம்ப். ஆற்றல் ஆதிக்கம் எனும் முறை தவறிய வியூகத்தின் காரணமாகவே பெரும்பாலான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. புதைபடிவ எரிபொருளை மேலும் மேலும் உற்பத்தி செய்வதையே அந்த வியூகம் வலியுறுத்திவந்தது. அதன் விளைவாகக் காட்டுத் தீ, வெள்ளம், புயல் எனப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதைக் கண்கூடாகப் பார்த்துவருகிறோம். புதைபடிவ எரிபொருளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவியல் உலகமும் அறிவுறுத்திவருகிறது.

முக்கியமான பின்னடைவுகள்

2015 பாரிஸ் பருவநிலை மாநாட்டில் அமெரிக்காவின் பசுங்குடில் வாயு உமிழ்வைக் கணிசமாகக் குறைக்க ஒபாமா வழங்கிய உத்தரவாதத்துக்கு அடிப்படையாக இருந்த மூன்று கொள்கைகள், ட்ரம்ப் அரசின் செயல்பாடுகளால் பாதிப்புக்குள்ளானவற்றில் மிக முக்கியமானவை.

அவை: மின்னுற்பத்தி நிலையங்களிலிருந்து கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விதிமுறைகள்; எண்ணெய், எரிவாயு உற்பத்தியின்போது மீத்தேன், சக்திவாய்ந்த பிற பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள்; மோட்டார் வாகனங்களுக்கான எரிபொருள் திறனை அதிகரிப்பது தொடர்பான விதிமுறைகள் ஆகியவை ஆகும்.

யூட்டா மாநிலத்தில் புதைபடிவ எரிபொருள் அபரிமிதமாகக் கிடைக்கும் இரண்டு நிலப் பகுதிகள், பில் கிளிண்டன் ஆட்சிக்காலத்திலும் (1996), ஒபாமா ஆட்சிக்காலத்திலும் (2016) தேசிய நினைவுச் சின்னங்களாக ஆக்கப்பட்டன. அதேபோல், அழியும் நிலையில் உள்ள சேஜ் கிரெளஸ் பறவைகளைக் (கௌதாரி குடும்பத்தைச் சேர்ந்தவை) காக்கும் நோக்கில், மேற்குப் பகுதியில் உள்ள மில்லியன் கணக்கான ஏக்கர் நிலங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை ஒபாமா எடுத்தார். அந்த நடவடிக்கைகளும் தற்போது பாதிப்பைச் சந்தித்திருக்கின்றன.

இதற்கிடையே, எப்போதோ முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதப்பட்டுவந்த சில மோசமான கொள்கைகளும் ட்ரம்ப் ஆட்சியில் புத்துயிர் பெற்றுவிட்டன. அலாஸ்காவின் டோங்காஸ் தேசிய வனப்பகுதிகளில் இதுவரை பாதுகாக்கப்பட்டுவந்த மரங்களை வெட்டுவது, மீன்வளம் நிறைந்த பிரிஸ்டல் விரிகுடா பகுதியில் தங்கம் மற்றும் வெள்ளிச் சுரங்கங்களை ஏற்படுத்துவது என்பன போன்ற நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. இந்த ஆண்டும் சுற்றுச்சூழலில் கணிசமான சேதங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்றாலும், ‘கோவிட்-19’ பெருந்தொற்று ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் காரணமாக அவற்றைப் பற்றிய கவனம் குறைவாகவே காணப்படுகிறது.

நுரையீரலைப் பாதிக்கக்கூடிய ‘கோவிட்-19’ பெருந்தொற்றுக்குள்ளானோரின் மரணத்துக்குக் காற்று மாசும் ஒரு காரணம் என்பதற்கான சான்றுகள் வெளியாகியிருக்கின்றன. இப்படியான சூழலில் காற்று மாசுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் ஆதரவளித்திருப்பது விபரீதமானது.

பாதரச மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது அதிகம் செலவு பிடிக்கும் விஷயம் என்பதைக் காரணம் காட்டி, புதைபடிவ எரிபொருள் உற்பத்தித் துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் ஏப்ரல் மாதம் தளர்த்தப்பட்டிருக்கின்றன. அதே மாதத்தில், நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 2.5 மைக்ரோமீட்டர் அளவு கொண்ட காற்று மாசு துகள்கள் வெளியேற்றப்படுவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விதிமுறைகளைக் கடுமையாக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் மறுத்துவிட்டது. இதுபோன்ற பாதுகாப்பு விதிமுறைகள் அவசியம் என்று அந்நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வலியுறுத்தியது செவிமடுக்கப்படவில்லை.

ஆறுதல் அளிக்கும் அம்சங்கள்

சுற்றுச்சூழல் மீது ட்ரம்ப் அரசு இப்படித் தொடர்ந்து தாக்குதல் நடத்திவந்தாலும், சாதகமான ஓர் அம்சமும் இருக்கவே செய்கிறது. ட்ரம்ப்பின் உதவிகளைப் பெறுவதாகக் கருதப்படும் நிறுவனங்கள், அவரது அரசுடன் எல்லா நேரங்களிலும் இணக்கமாகச் செயல்படுவதில்லை. சில நிறுவனங்கள் அவரது அரவணைப்பை அசவுகரியமாகவே கருதுகின்றன.

வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கும் ட்ரம்ப் அரசுக்கும் இடையிலான மோதல் ஓர் உதாரணம். சராசரியாக ஒரு கேலனுக்கு 40 மைல்கள் எனும் அளவில் இருக்கும் வாகனங்களின் எரிபொருள் செயல்திறன், 2025-ம் ஆண்டில் 50 மைல்களாக இருக்க வேண்டும் எனும் இலக்குடன் ஒபாமா ஆட்சிக்காலத்தில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. அதில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வாகன உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ட்ரம்ப் அரசு அந்த எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றத் தவறிவிட்டது.

இதையடுத்து வாகன உற்பத்தித் துறையில் 30 சதவீதத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் 5 முக்கிய நிறுவனங்கள், ட்ரம்ப்புக்குத் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வகையில் கலிபோர்னியா மாநிலத்தின் எரிபொருள் செயல்திறன் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதாக அறிவித்து, அம்மாநில அரசுடன் பிரத்யேக ஒப்பந்தத்தையும் ஏற்படுத்திக்கொண்டுள்ளன. அவை ஏறத்தாழ ஒபாமா அரசு விதித்த கட்டுப்பாடுகளுக்கு நிகரானவை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், ஒபாமா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மீத்தேன் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட வேண்டும் என்று சில பெரிய எண்ணெய் நிறுவனங்கள் ட்ரம்ப் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளன. நிலக்கரியைவிடவும் இயற்கை எரிவாயுதான் பருவநிலைக்கு உகந்தது எனும் கருத்தாக்கத்தின் அடிப்படையில் பெரும் முதலீடுகளைச் செய்திருக்கும் அந்நிறுவனங்கள், முறையான கண்காணிப்பு இல்லாமல் கசிவுகள் ஏற்படும்பட்சத்தில் தங்கள் விற்பனை மதிப்பு குறையும் என்று அச்சப்படுகின்றன. அந்த அச்சம் சரியானதும்கூட.

அதேபோல், பாதரச மாசுபாடு தொடர்பான கட்டுப்பாட்டு விதிமுறைகள் தளர்த்தப்படுவதில் பெரிய பலன் ஏதும் இல்லை என்று புதைபடிவ எரிபொருள் உற்பத்தித் துறையைச் சேர்ந்த பெரிய நிறுவனங்கள் கருதுகின்றன. ஏனெனில், அது தொடர்பான தொழில்நுட்பங்களில் அவை ஏற்கெனவே அதிக அளவில் முதலீடு செய்துள்ளன. மீன்பிடித் தொழில் துறையைச் சேர்ந்தவர்களின் அபிமானத்தைப் பெறும் ட்ரம்ப்பின் முயற்சிகள் தோல்வியைத்தான் சந்தித்திருக்கின்றன.

ஆர்க்டிக் பகுதிக்கு ஆபத்து குறையலாம்

ஆர்க்டிக்கின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளைப் பொறுத்தவரை, அங்கு குத்தகை எடுப்பதில் எண்ணெய் நிறுவனங்களுக்கிடையே போட்டிகள் ஏதும் உருவாகிவிடவில்லை. அந்நிறுவனங்கள் ஆர்வம் காட்டாததில் வியப்பு ஏதும் இல்லை. ஏனெனில், கேட்பு குறைவு, விலையும் குறைவு என்பது மட்டுமல்ல; பருவநிலை குறித்த விழிப்புணர்வு கொண்ட இன்றைய உலகில் தங்கள் முதலீடுகள் திரும்பக் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு என்பதால், தங்களது சில சொத்துகளின் மதிப்புகளைக் குறைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை எண்ணெய் உற்பத்தித் துறையைச் சேர்ந்த சில நிறுவனங்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. இந்தச் சூழலில், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் கொண்ட பகுதிகளில் எண்ணெய், எரிவாயு எடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அவை தயக்கம் காட்டவே செய்கின்றன.

மேலும், இது பணம் சம்பந்தப்பட்ட விஷயம். பருவநிலை எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்த அக்கறை அதிகரித்திருக்கும் நிலையில், ஆர்க்டிக்கின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் முதலீடு செய்ய நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்போவதில்லை என்று மோர்கன் ஸ்டான்லி, கோல்டுமேன் சாக்ஸ், ஜேபி மோர்கன் சேஸ், சிட்டிக்ரூப், வெல்ஸ் ஃபார்கோ உள்ளிட்ட முதலீட்டு வங்கிகள் உறுதியளித்திருக் கின்றன. ஆர்க்டிக் பகுதி முழுவதிலும் இதைக் கடைப்பிடிக்கப்போவதாகவும் சில வங்கிகள் அறிவித்திருக்கின்றன. இதையடுத்து, எக்ஸான், செவ்ரான் போன்ற பெரிய நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறும் எனக் கருதப்படுகிறது.

நீதி துணை நிற்கும்

இது தொடர்பாக வழக்குகள் தொடரப்படுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. ஆர்க்டிக்கின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் 10 பில்லியன் பேரலுக்கும் அதிகமாக எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் நடவடிக்கைகளால், வன உயிர்களுக்குக் கடும் பாதிப்பு ஏற்படுவதுடன், பருவநிலைக்கும் ஆபத்து ஏற்படலாம் என்று எழுந்திருக்கும் அச்சத்தை அமெரிக்க உள்துறை அமைச்சகம் குறைத்து மதிப்பிடுவதாகச் சொல்லி சுற்றுச்சூழல் அமைப்புகளும், பல்வேறு மாநில அரசுகளின் தலைமை வழக்கறிஞர்களும் நீதிமன்றங்களை அணுகத் தயாராகி வருகின்றனர்.

இதுவரை, நீதிமன்றங்கள் ட்ரம்ப் அரசுக்கு அத்தனை இணக்கமாக இல்லை. போஃபர்ட், சக்சி கடல் பகுதிகளில் எண்ணெய் எடுக்கும் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் ஒபாமா அரசு கொண்டுவந்த நிர்வாக நடவடிக்கையை ரத்து செய்ய ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சியை நீதிமன்றங்கள் நிராகரித்துவிட்டன. அதேபோல், கனடாவிலிருந்து குழாய் மூலம் எண்ணெய் எடுத்துவரும் ‘கீஸ்டோன் எக்ஸ்.எல்’ திட்டத்தைப் புதுப்பிக்கும் நடவடிக்கைக்கும் நீதிமன்றங்கள் தற்காலிகமாகத் தடை விதித்திருக்கின்றன. இந்த நிலையில், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் தொடர்பாக ஒபாமா அரசு கொண்டுவந்த திட்டங்களைத் திரும்பப் பெறும் ட்ரம்ப்பின் முயற்சிகளையும் நீதிமன்றங்கள் நிராகரிக்கலாம்.

சாதிப்பாரா ஜோ பிடன்?

சுற்றுச்சூழலுக்கும், ஒழுங்குமுறைகளுக்கும் எதிரான ட்ரம்ப்பின் லட்சியங்களுக்கு மிகப் பெரிய தடையாக ஜோ பிடன் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பரில் நடைபெறும் அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றிபெறுவதுடன், நாடாளுமன்ற மேலவையை (செனட்) ஜனநாயகக் கட்சியினர் கைப்பற்றிவிட்டால் இது சாத்தியமாகலாம். அதிபர் எனும் முறையில், இதற்கான பல்வேறு அதிகாரங்கள் அவருக்குக் கிடைக்கும். அத்துடன் சுற்றுச்சூழல் தொடர்பான தனது சொந்தத் திட்டங்களையும் அவர் முன்னெடுக்க முடியும்.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், 2 ட்ரில்லியன் டாலர் மதிப்பில் அவர் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கும் விரிவான திட்டம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பொது நிலங்களில் துளையிடும் திட்டங்களில் மேலும் கவனமான அணுகுமுறை, ஆற்றல் திறன் மேம்பாடு, தூய்மையான எரிபொருள், தூய்மையான வாகனங்கள் எனும் சூழலை உருவாக்கப் பெரிய முதலீடுகளை ஈர்ப்பது எனும் அம்சங்கள் அந்தத் திட்டத்தில் இருக்கும்.

ஜோ பிடன் கொண்டுவர உத்தேசித்திருக்கும் அந்தப் பிரம்மாண்டத் திட்டத்தையும், அவரது உரைகளையும் உற்றுநோக்கும்போது இன்னொரு முக்கியமான அம்சத்தைக் கவனிக்க முடிகிறது. அது மனிதர்களுக்கும் இயற்கை உலகத்துக்கும் இடையிலான உறவு குறித்த முற்றிலும் வித்தியாசமான பார்வை. உதாரணமாக, அலாஸ்கா தங்கச் சுரங்கத் திட்டத்துக்கு எதிராக அவர் நடவடிக்கை எடுக்கலாம்; அமெரிக்காவின் மூன்றில் ஒரு பங்கு நிலத்தையும் நீரையும் பாதுகாக்கும் நடவடிக்கையை அவர் எடுக்கலாம்; புதிய நினைவுச் சின்னங்களையும் தேசியப் பூங்காக்களையும் உருவாக்கலாம்.

மொத்தத்தில், அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்தில், சுற்றுச்சூழல் குறித்த ஒரு புதிய, வரவேற்கத்தக்க நெறிமுறையை நாம் எதிர்பார்க்கலாம்!

‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில் வெளியான தலையங்கம்
தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

மேலும்