உலக வரலாற்றின் தலைசிறந்த ஆளுமை என்றாலும் காந்தியின் ஒளிப்படங்கள் மிகக் குறைவாகவே காணக்கிடைக்கின்றன. அதிலும் நாட்டு அரசியலின் மையமாக இருந்த அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்தில் அவர் கழித்த 15 வருடங்களின் நிகழ்வுகள் பற்றிய வெகு சில படங்களே உள்ளன. அவர் வார்தாவிலுள்ள சேவாகிராம் சென்ற பிறகுதான் நமக்குச் சில ஒளிப்படங்கள் கிடைக்கின்றன. என்ன காரணம்?
காந்திக்கு கேமராவைக் கண்டாலே ஆகாது. தன்னை யாரும் போட்டோ எடுப்பதை அவர் விரும்பவில்லை. ஒருமுறை வார்தாவில், காங்கிரஸ் கூடுகை ஒன்றுக்குப் பிறகு, ஊடக ஆட்களோடு நின்று தன்னை நேரு படமெடுப்பதைக் கண்ட காந்தி அவரைக் கடிந்துகொண்டார்.
நமக்கு இன்று கிடைத்திருக்கும் காந்தி படங்களில் பல கனு காந்தியால் எடுக்கப்பட்டவை. காந்தியின் ஒன்றுவிட்ட சகோதரரின் பேரன் கனு, சேவாகிராம் ஆசிரமத்தில் வசித்துவந்தார். அப்போது காந்தியுடன் சேர்ந்து உழைக்க, கல்கத்தாவிலிருந்து சேட்டர்ஜி என்பவர் தன் மகள் ஆபா ராணியுடன் ஆசிரமத்துக்கு வந்துசேர்ந்தார்.
சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஆபாவை கனுவுக்குத் திருமணம் செய்துவைத்தார் காந்தி. ஆபா காந்திதான் எப்போதும் காந்தியுடன் இருந்து, அவருடைய ‘வாக்கிங் ஸ்டிக்’ என்று பெயர்பெற்றவர். கனுவும் காந்தியுடனேயே இருந்து அவருக்கு உதவி, காந்தியின் அனுமான் என்று குறிப்பிடப்பட்டார்.
சேவாகிராம் ஆசிரமத்துக்கு வினோபா பாவேவின் சகோதரரான சிவாஜி பாவே ஒருமுறை வந்தார். அவர்தான் காந்தியையும் ஆசிரம நிகழ்வுகளையும் படம்பிடிக்க வேண்டும் என்று கனு காந்திக்கு யோசனை கூறினார். வார்தாவுக்கு அடிக்கடி வந்துபோய்க்கொண்டிருந்த ஜி.டி.பிர்லா, கேமரா ஒன்று வாங்கிக்கொள்ள கனு காந்திக்கு 100 ரூபாய் கொடுத்தார். கனுவின் ஒளிப்பட வேலை தொடங்கியது. காந்தியைப் பற்றி நாமறிந்த பல வரலாற்றுச் சிறப்பு மிக்க படங்கள் கனுவால் எடுக்கப்பட்டவையே.
1994-ல் நான் குஜராத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, ஆபா காந்தியை ராஜ்காட்டில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். கனு காந்தியைப் பற்றி பல விவரங்களைச் சொன்னார். கனு தனது படங்களை இயற்கை ஒளியில்தான் எடுத்தார். அவரிடம் ஃபிளாஷ் இல்லை. மேலும், காந்தி படத்துக்காக போஸ் கொடுக்க மாட்டார். ஆகவே, கனு எடுத்த எல்லாப் படங்களும் இயல்பாகவே இருந்தன. காந்தி தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பது, ஒரு குழந்தையின் நெற்றியில் தனது மூக்கை வைத்துக் கொஞ்சிக்கொண்டிருப்பது, கைத்தடியைப் பிடித்துக்கொண்டு ஒரு சிறுவன்போல இருப்பது என நாமறிந்த காந்தி படங்களில் பல கனுவால் எடுக்கப்பட்டவை. அவை எல்லாவற்றிலும் மனதில் நிற்பது அண்ணல் தனியாக, கஸ்தூரிபாயின் உடலுக்கருகே, தரையில் அமர்ந்திருப்பதைக் காட்டும் படம். அட்டன்பரோ இயக்கிய ‘காந்தி’ திரைப்படத்தில் பல காட்சிகள் கனு காந்தி எடுத்த ஒளிப்படங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டன. சிறுமி இந்திரா காந்தி அண்ணலின் படுக்கை ஓரத்தில் அமர்ந்திருப்பது போன்ற காட்சி ஒரு எடுத்துக்காட்டு.
ஒளிப்படம் எடுக்க முறையான பயிற்சி எதுவும் கனு பெற்றிருக்கவில்லை. தானாகவே படிப்படியாகக் கற்றுக்கொண்டார். ஆகவே, அவரது ஆரம்ப காலப் படங்கள் அவ்வளவு தெளிவாக இல்லாதிருப்பதைக் கவனிக்கலாம். போகப்போக கேமராவைத் திறமையாகக் கையாளக் கற்றுக்கொண்டார். கட்டிலில் படுத்திருக்கும் ஒரு தொழுநோயாளியை காந்தி குனிந்து கவனிப்பது போன்ற படங்கள் இவருடைய திறமைக்குச் சான்று. ஆனால், அவர் படங்களின் சிறப்பு அவற்றின் உள்ளடக்கம்தான். காந்தியினுடைய வாழ்வின் சில அரிய கணங்களைப் பதிவுசெய்த படங்களாயிற்றே. காந்தியைக் காட்டும் படங்கள் எல்லாமே இயல்பாக எடுக்கப்பட்டவை. ஏனென்றால், படமெடுக்க அவ்வளவாக போஸ் கொடுக்கவே மாட்டார். லண்டனில் வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பும் வழியில் காந்தி பாரீஸுக்குப் போனார். பிரெஞ்சுப் புகைப்படக்காரர்கள் கெஞ்சிக் கேட்டும் போஸ் கொடுக்க மறுத்துவிட்டார். அறைக்கு வெளியே அவர் நடக்கும்போதும்கூட அவர்களால் அந்தப் பழைய கால கேமராக்களை வைத்துப் படம் எடுக்க இயலவில்லை.
விதிவிலக்காகச் சில அரிய தருணங்களில் காந்தி படமெடுத்துக்கொள்ள விரும்பினார். தண்டி யாத்திரையின்போது ஒளிப்படக்காரர்களைக் கூப்பிட்டு, தான் குனிந்து ஒரு பிடி உப்பெடுக்கும் காட்சியைப் படம் பிடிக்கச்சொல்லிக் கேட்டுக்கொண்டார். அதுமட்டுமல்ல, ‘அசோசியேட்டட் பிரஸ் போட்டோகிராபர்’ இருக்கிறாரா என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டார். யரவதா சிறையில் இருந்தபோது, ‘லைஃப்’ பத்திரிகைக்காக உலகப் புகழ்பெற்ற ஒளிப்படக் கலைஞர் மார்கரெட் பார்க் வைட் வந்து காந்தியைப் படமெடுத்தார். அதற்கு காந்தி ஒப்புக்கொண்டார். ‘காந்தி’ திரைப்படத்தில் காக்கிச் சட்டை, கால்சராய் போட்டுக்கொண்டு நடிகை கான்டிஸ் பெர்க்மன் இந்தப் பாத்திரத்தில் நடித்திருப்பார். நினைவிருக்கிறதா?
- தியடோர் பாஸ்கரன், ‘கையிலிருக்கும் பூமி’ நூலின் ஆசிரியர்.
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago