தன் பாதையை விட்டு விலகியவர்போல் திடீர் திடீரென்று ராகுல் காந்தி அரசியலுக்குள் பயணிப்பது அவரது எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் ஒரு மனக் கிளர்ச்சியைத் தொடர்ந்து கொடுத்துவருகிறது. நாம் எதிர்பார்ப்பதுபோலவே இதனைத் தொடர்ந்து அந்த வம்சாவளியின் அரசியல் அஸ்தமனம் பற்றி முன்பு எழுதப்பட்டவை தற்போது மீண்டும் தலை தூக்குகின்றன. கட்சித் தலைவராக அவர் திரும்பி வர வேண்டும் என்று மீண்டும் ஒரே குரலில் எல்லோரும் பாட்டாகப் பாடுகிறார்கள். ஆனால், கிளர்ச்சியாளராகும் விருப்பம் கொண்ட ஒருவர், ஒரு வம்சத்தின் சிமிழுக்குள் அடைபட்டவர் இந்த இரு அம்சங்களும் கொண்டவர்தான் ராகுல் காந்தி. பிறரையும் தொற்றிக்கொள்ளக்கூடிய அவரது குழப்பங்களெல்லாம் அவரது எதிரிகள், ஆதரவாளர்கள், பார்வையாளர்கள் அனைவரையுமே குழப்பமடையச் செய்கின்றன.
எங்கெங்கும் வம்சங்கள்
நேரு வம்சத்தின் எதிரிகளும் அதை இயக்குபவர்களும் கூறும் கருத்துகளை மன்னித்துவிடலாம். ஆனால், பாஜக அல்லாத ஒரு அரசியல் இல்லாமல் போனதற்கு நேரு வம்சத்தின் இன்றைய தலைமுறையினர் மட்டுமே காரணம் என்று ஒரு வல்லுநர் கருத்துக் கூறினால், அது முட்டாள்தனமானது என்றே தோன்றுகிறது. ஏனென்றால், அந்த வம்சம் மிகவும் சித்தாந்த வறட்சி உடையதாகிவிட்டது என்றால், பின் அது எப்படி எவரையும் உள்ளடக்கும்? பாஜகவையும் அதன் சக்திவாய்ந்த தலைவர் மோடியையும் எதிர்கொண்டு சமாளிக்க வேண்டிய காங்கிரஸார், காய்ந்து சருகாகிப்போன ஒரு பரம்பரையை இன்னமும் தாண்டிச் செல்ல முடியவில்லை என்றால், அவர்கள் எதற்குத்தான் தகுதியானவர்கள்? இன்றைய சூழலை விடுங்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதே அர்விந்த் கேஜ்ரிவாலின் எழுச்சியையே அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லையே? நேரு பரம்பரையினரை அவர்களின் போதாமைகளுக்காக விமர்சிக்கலாம். ஆனால், மோடி என்ற சவாலை எதிர்கொள்வதில் தங்கள் அளவில் இயலாமை கொண்டிருந்தவர்களின் தோல்விகளுக்கெல்லாம் நேரு பரம்பரை பொறுப்பாக முடியாது.
நேரு பரம்பரை மிக மோசமான வீழ்ச்சியை அடைந்திருப்பது மிகவும் வெளிப்படையானது. ஆனால், அதற்கான காரணங்கள் அந்த அளவுக்கு வெளிப்படை இல்லை. உயர் வர்க்கத்தினர் மீதான ஆழ்ந்த வெறுப்பு என்பது இந்தியச் சூழலில் மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை வம்சங்கள் இருப்பது மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலும் தழைத்தோங்கியிருக்கின்றன. பாஜகவையே எடுத்துக்கொண்டால் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் இரு மாநிலங்களை சிந்தியா பரம்பரை இரண்டு தலைமுறைகளாக ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறதே!
பொதுவாக, வம்சங்கள் நான்காவது தலைமுறையில் தடுமாறுகின்றன என்று அரபு அறிஞர் இபின் கால்துன் கூறுகிறார். ராகுல் காந்தி நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர் அல்லது ஐந்தாவதாகக்கூட இருக்கலாம். ஆகவே வெறுக்கப்படுகிறார் என்று சொல்லலாமா? சிந்தியா, பட்நாயக், ரெட்டி, கவுடா, கருணாநிதி குடும்பங்கள் எல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றனவே! தனது குடும்ப முன்னோடிகளுக்கு இருந்த தனித்தன்மைகள் ஏதும் ராகுலிடம் இல்லை என்பது உண்மைதான். ஆனால், அவரால் வெற்றி பெற முடியாமல் போவதற்கான காரணங்களுள் ஒன்றுதான் அது; ஒருவேளை சிறிய காரணமாகக்கூட அது இருக்கலாம்.
மோடி எதிர் ராகுல்
ராகுலின் பிரபல்யமின்மையை மோடியின் பிரபல்யத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துதான் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், இரண்டுமே நாடு முழுக்க ஒரே மாதிரியாக இல்லை. மோடி மிகவும் புகழ்பெற்றிருக்கும் இடங்களில் ராகுல் பெரிய அவப் பெயரைச் சம்பாதித்திருக்கிறார். குறிப்பாக, வடக்கிலும் மேற்கிலும் உயர் சாதியினரிடையேயும் புதிய நடுத்தர வர்க்கத்தினரிடையேயும் ராகுல் மிகவும் கேலிக்கு உள்ளாக்கப்படுகிறார். ராகுலின் எஞ்சியுள்ள புகழானது தெற்கிலிருந்தும், பாஜக வலுவாக உள்ள இடங்களின் ஏழை எளிய தரப்புகளிடமிருந்தும், மதச் சிறுபான்மையினரிடமிருந்தும் வருகிறது.
நம்பிக்கையையும் கடின உழைப்பையும் மோடி பிரதிநிதித்துவப்படுத்தினார் என்றும், அவரது ஆட்சித் திறமைகள் நிரூபிக்கப்பட்டிருந்தன என்றும் 2014-ல் அவரது பிரபலத்துக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. மாறாக, ராகுல் வாரிசுரிமையையும் அனுபவமின்மையையுமே பிரதிநிதித்துவப்படுத்தினார் என்றார்கள். ஆனால், பிராந்திய அளவிலும் வர்க்க அளவிலும் ஏற்பட்ட வேறுபாடுகளை இது விளக்கவில்லை. அனேகமாக 2020-க்குள் மோடி என்ற பொதி ஒவ்வொரு அடுக்காக உரிக்கப்பட்டுவிட்டது, எஞ்சியிருப்பதெல்லாம் உறை மட்டும்தான்; அதாவது, இந்துத்துவம்தான். பரிசோதிக்கப்படாதவர் என்பதால் ராகுல் காந்தி நம்பகமானவர் இல்லை என்றால், ஆட்சி நிர்வாகம் என்ற பரீட்சையில் மோடி மட்டும் தேறிவிட்டாரா என்ன? 2014 போன்றோ அல்லது அதைவிடவோ மோடி தற்போது பிரபலமாக இருக்கிறார் என்றால், அவர் அரங்கேற்றியுள்ள கலாச்சாரச் செயல்திட்டம்தான் அதற்கான ஒரே காரணமாக இருக்க முடியும். எல்லா அலங்காரங்களையும் கலைத்துவிட்டுப் பார்த்தால், இந்த இருவரிடையே மிகவும் வெளிப்படையான அம்சமாக இருப்பது இந்துத்துவம்தான்; மோடி அதன் பிரச்சாரகர்த்தா என்றால், ராகுல் காந்தி அதன் எதிர்ப்பாளர்.
தனது நம்பிக்கைகளின் சக்தி மிகவும் வலுவானது என்பதால், வேறெதுவும் செய்யத் தேவையில்லை என்று ராகுல் நம்புகிறாரோ என்று தோன்றுகிறது. காலத்துக்கு ஒவ்வாத அந்த நம்பிக்கைகளுக்கான விலையை அவர் தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருக்கும்போதுகூட! அவருடைய குடும்ப முன்னோடிகள் செய்த எல்லாப் பாவங்களுக்கான சிலுவையையும் ராகுல் சுமக்கிறார்; ஆனால், அவர்களின் பங்களிப்புகளுக்காக எந்தப் புகழ் மாலைகளும் அவருக்குக் கிடைக்கவில்லை. ஆக, மாற்றமானது அவரிடம் முதலில் நிகழ வேண்டும். அதுதான் சூழ்நிலையை மாற்றும் அளவுக்கு அவரது திறனை மேம்படுத்தும். ஆனால், அர்விந்த் கேஜ்ரிவால் தன்னை ஆக்கிக்கொண்டதைப் போல பெரும்பான்மைவாதத்தின் இன்னொரு மாற்று வீரராக ஆவதற்கு ராகுல் விரும்பவில்லை என்றால், அவரால் என்னதான் செய்ய முடியும்?
உழைப்புதான் ஒரே வழி
ராகுல் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற தன் அனுபவத்தை வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால், காங்கிரஸை ஜனநாயகப்படுத்துவதற்கான அற்பமான பரிசோதனைகளில் அப்போது ஈடுபட்டு, தனது பாதி வாழ்நாளை வீணாக்கினார். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ராகுலுக்கு வாக்களிப்பவர்கள் சில ஆயிரம் பேர் இருந்தால் மட்டுமே அவரால் காங்கிரஸில் செல்வாக்கு பெற முடியும். கட்சிக்குள் இருக்கும் பழைய ஆசாமிகளைப் பற்றிப் புலம்புவதன் மூலம் அல்ல; இந்த பலத்தைப் பெறுவதன் மூலம் மட்டுமே கட்சிக்குள் அவரது அதிகாரத்துக்கு இருக்கும் சவாலைச் சமாளிக்க முடியும்.
காங்கிரஸின் தார்மீக சக்தியாக இருக்க ராகுல் விரும்புகிறார் – மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியைப் போல அல்லது சில காலம் அவருடைய தாய் சோனியா காந்தி இருந்ததுபோல. ஆனால், இந்திய அரசியலின் தார்மீக இருக்கையானது ராகுலின் எதிராளியான மோடியால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர் உணர வேண்டும். காங்கிரஸின் முன்னாள் வாக்காளர்களில் கணிசமானவர்களால் பாதிக் கடவுளாகக் கருதப்படுகிறார் மோடி. ஆகவே, ராகுலின் முன்னே இருக்கும் ஒரே வழி சலிப்பேற்படுத்தும் கடுமையான உழைப்பு மட்டும்தான். உத்தர பிரதேசத்திலும் பிஹாரிலும் உள்ள சாதாரண தொண்டர் என்ன நினைக்கிறார் என்பதை ராகுல் அறிந்துகொள்ள வேண்டும். ஒரு சாதாரண காங்கிரஸ் மக்களவை உறுப்பினராக அவர் இருக்க முடியாது. ஒன்று, அவர் தலைமை ஏற்க வேண்டும் இல்லையென்றால் கட்சியை விட்டு வெளியேற வேண்டும்.
ஒரு வம்சத்தின் பிரதிநிதிக்கு இடைப்பட்ட வழி என்று ஏதுமில்லை. வம்சத்தைச் சேர்ந்த ஒருவர் சுமப்பதற்கு ஒரு பொதி இருந்துதான் ஆகும்; கூடவே, அவருக்கு அனுகூலங்களும் உண்டு. எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட மதம், சாதி, பிராந்தியம், பிரிவுடன் அடையாளப்படுத்தப்படாத ஒரே அரசியல் குடும்பம் இன்று நேரு குடும்பம்தான். தற்போதைய கொந்தளிப்புக்குப் பிறகு, அந்தக் குடும்பத்துக்கு மறுபடியும் செல்வாக்கு வரக்கூடச் செய்யலாம். ராகுலுக்கு அவருக்கான தருணம் வரக்கூடும். தொடர்ந்து கடினமாக உழைக்கும் ஒருவராக அவர் மாறினால் வெற்றி அப்போது அவருக்குக் கிடைக்கலாம்.
© தி இந்து, சுருக்கமாக தமிழில்: ஆசை
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago