“கலை வேலைப்பாடுமிக்க , தலைசிறந்த இயக்கமுறை உறுப்பு - மனிதனின் பாதங்களே!”-
லியோனார்டோ டாவின்சி .
பரிணாம வளர்ச்சியில் மனிதனை மற்ற விலங்கிலிருந்து பகுத்துக் காட்டுவது , மனித பாதங்களே !! இயற்கையின் பல ஆயிரம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியில் மிகச் சிறந்த படைப்பு மனிதனின் பாதங்களே!
26 எலும்புகள், 33 கணுக்கள் ( Joints ), நூற்றுக்கும் அதிகமான தசைநார்களும் , தசைநாண்களும் துல்லியமான வடிவமைப்பும் , செயல்பாடும் - கொண்டு இயங்குவது மனிதனின் பாதங்களே!! கலை ஓவியங்களையும் , கோயில் சிற்பங்களையும் எண்ணி வியந்தவர்கள் , சாலச் சிறந்த படைப்பான பாதங்களை அறியாமல் உள்ளோம்.
லியோனார்டோ டாவின்சியின் (1490) அமர ஓவியமான “மோனாலிசா”அறிந்திருப்போம். ஆனால், அவரின் மனித உடல் கட்டமைப்பையும் ( உடற்கூறியல்), செயல்பாடுகளையுமே தன் முழு முதல் காதலாகவும் , பல ஓவியங்களாகவும் வரைந்தவை , இன்றும் வாழ்கின்றன. அவர் மிகவும் ரசித்து வடித்த ஓவியங்களும் வார்த்தைகளும் - பாதத்தை வர்ணித்தே!!
இந்தக் கரோனா காலங்களில் , மிகவும் பாதிக்கப்படுவோர் வரிசையில் முதலாம் நிலையில் இருப்பவர்கள் நீரிழிவுப் பாத புண் நோயர்களும் , சிறுநீரக நோயர்களும் , முற்றிய நிலை புற்று நோயர்களுமே !!
( இவர்களைக் கவனிக்கும் வசதி -சில அரசு சிறப்பு மருத்துமனைகளிகளில் இன்றும் நடைபெறுகின்றது )
நீரிழிவு நோயினாலும் , கரோனா காலத்தினாலும் நலிந்து நிற்கும் எளிய மக்களுக்கு, தங்கள் பாதங்களில் புரையோடி புண் ஏற்பட்டால் மிகவும் தளர்ந்து , உறைந்துவிடுகின்றனர் .
உலக சுகாதார அமைப்பு நீரிழிவுப்பாதத்தை, “நோய்குறியியல் வழிமுறையில் கிருமித்தோற்று ஏற்பட்டு,புரையோடி , பாத கட்டமைப்பு வீண் அடைந்து-தசைநாண்களும் , நரம்புகளும் , எலும்புகளும் சிதையும் நிலையில் - புண்ணாக வெளிப்படுகின்றது . நீரிழிவின் வளர்சிதை மாற்றச்சிக்கலால் ( Metabolic Complications), பாதிக்கப்படும் பாதங்கள்” என்று வரையறுக்கின்றனர்.
சீனாவைப் பின்னுக்குத்தள்ளி 2035 ஆம் ஆண்டு இந்தியா , உலகின் நீரிழிவு நோயின் தலைநகரமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2016 ஆம் ஆண்டில் 20லிருந்து 70 வயதிற்குட்பட்டவர்களில் - நீரிழிவு நோயர்கள் 7 கோடி பேர் ஆகும் . இதில் 25 சதவீதத்தினர் பாதப்புண் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீரிழிவு பாதப்புண்களுக்காக 30 சதவீதம் நோயர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
நீரிழிவு நோயர்கள் , தங்கள் வருமானத்தில் 20 சதவீதத்தைப் பாதப்புண்களுக்காகவே செலவிடுகின்றனர் .இந்தியாவில் நீரிழிவு பாதங்களுக்கு சிறப்பு மருத்துவமனைகள் , வெறும் 3 சதவீதமே!! கிராமப்புறங்களில், நீரிழிவு பாதங்களுக்கு 10 சதவீத நோயர்களே மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளும் நிலை உள்ளது.
நீரிழிவுப் பாதப்புண்கள், எத்தகைய விளைவுகளை உண்டாக்கும்? கால்களை அகற்றும் நிலை உண்டாகும் காரணிகளில் நீரிழிவு பாதப்புண்களே முக்கிய இடம் பிடிக்கின்றது .விபத்து தவிர்த்து ஏனைய காரணிகளில் , 85 சதவீத கால் இழப்பிற்கு நீரிழிவு பாதப்புண்களே காரணமாக அமைந்து முதலாம் இடத்தைப்பிடிக்கின்றது. உலகெங்கிலும் வருடத்திற்கு பத்துலட்சம் நோயர்கள் இதனால் காலினை இழக்கின்றனர். நமது நாட்டில் சரியான புள்ளிவிவரங்கள் கிடைக்கப் பெறாத நிலையில் வருடத்திற்கு சுமார் 45,000 கால்களை அகற்றும் நிலை - நீரிழிவுப் பாதங்களால் ஏற்படுகின்றது . இவற்றில் 75 சதவீதம் , ஆரம்பக்கட்டத்திலேயே , சரியான அணுகுமுறையால் கால் இழப்பினைத் தவிர்க்கலாம்.
இந்தியாவில் நீரிழிவுப் பாதத்தினால் கால் அகற்றும் நிலை ஏற்படுவதற்கான காரணிகள் என்ன ? சமூக , பொருளாதார , மத நம்பிக்கைகளால் காலணி அணியாமல் - வெறும் பாதத்தில் நடந்து செல்லும் நம் மக்களை , இன்றும் நாம் பார்க்கின்றோம் .
வறுமையும், சரியான கல்வியறிவும் இல்லாமையால் - சரியான காலணிகளை அணிவதை இவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. ஆரம்ப நிலையில் -அறிவியல் சார்ந்த ஆதாரபூர்வ மருத்துவமுறைகளை( Modern Scientific evidence based Medicine ) அறியாத , மருத்துவக் கல்வியறிவு பெறாத பலரிடம் , ஆலோசித்து , காலம் தாழ்த்தி விடுகின்றனர் . பின்னர் முற்றிய நிலையில் மருத்துவமனைகளுக்கு வருவதால் - பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.
பாதத்தின் நேர்த்தியான கட்டமைப்பு , ஒரு சிறந்த கட்டிடக்கலை போன்றே , பல்வேறு அடுக்குகளைக் கொண்டது. இயக்கத்திற்கு தகுந்தாற்போல் சிறு எலும்புகளும், தசை நாண்களும், திசுப்படலமும், நுண்ணிய திசுக்களும் , பாதத்தை பல அறைகளாகப் பிரித்து அமைந்திருக்கும் .இந்த இயக்கமுறை பாதக் கட்டமைப்பை , நீரிழிவு நோய் எவ்வாறு சிதறடிக்கின்றது?
சக்கரை அளவினைக் கட்டுப்படுத்தாவிட்டால் , வளர்சிதை சிக்கலால் ( Metabolic Complications) உடலில் நரம்புகள், ரத்த நாளங்கள், கண் மற்றும் சிறுநீரகத்தில் - சார்பிட்டால் (Sorbitol) என்ற வேதிப்பொருள், படிவமாக சேர்ந்து விடும் . இவை நாளடைவில் நரம்பு இயக்கத்தடையாகவும் ( Neuropathy), நுண்ணிய மற்றும் பெரு ரத்த நாள அடைப்பாகவும்( Arteriopathy) உருவெடுக்கின்றன!
நீரிழிவுப் பாத நோயர்களில் , தன்னியக்க நரம்பு இயக்கத் தடையாகவும் ( Autonomic Neuropathy), நாளடைந்த உணர்வு மற்றும் இயக்க நரம்புத் தடையாகவும் ( Chronic Sensorimotor Polyneuropathy)நோய் முற்றுகிறது. மேலும் ரத்த நாள பாதிப்பால் , குருதி ஊட்டக்குறைபாடு ( Ischemia) உள்ள பாதங்கள்-நோய்க்கிருமி தொற்றுக்குத் தகுந்த தளமாக ,மாறிவிடுகின்றது.
நீரிழிவு நோயர்களில் ,60 சதவீதம் உணர்வு ( Sensory Neuropathy)மற்றும் இயக்க நரம்பு தடை (Motor neuropathy)ஏற்படுகின்றது. உணர்வு நரம்புகள் பாதிக்கப்படுவதால் ஏற்படும் பாத எரிச்சல் , குத்தல் ஆகியவை முற்றுகின்ற நிலையில் , உணர்வற்ற நிலை ஏற்படுகின்றது .இதன் விளைவாக , பாதத்தில் கல் , முள் போன்ற கூர்மையான பொருள் குத்தினாலும் , நோயர்கள் அதைக் கவனத்தில் கொள்வதில்லை.இதனால் எளிதாக நோய்க் கிருமிகள் ஊடேறி , ஆபத்தில் முடிகின்றது!
இயக்க நரம்பு ( Motor Nerve )தசைநார்களையும் , தசைநாண்களையும் தூண்டி செயல்பட வைக்கின்றன. தசைநாண்கள் , பாத சிறுஎலும்பில் கோத்து , இணைந்து செயல்படுகின்றது. இந்த வகை நரம்புகள் பாதிக்கப்படும்போது தசைநாண்களும், நார்களும் சுருங்கி செயல் இழந்துவிடும். அதனால் அது கோத்து நிற்கின்ற பாதசிறு எலும்புகளின் வடிவத்தையும் , செயல்திசையையும் மாற்றிவிடுகின்றன.
நாம் நடக்கும்போதும் , ஓடும்போதும் , நிற்கும்போதும்- நம் உடல் எடையினைத் தாங்கி , இயக்கமுறையில் இருக்கும் பாத எலும்புகள் , வடிவிழந்து , திசைமாறி கூர்மையான எலும்புகளாக மாற்றப்படுகின்றன. இவை பாதக் கட்டமைப்பில் சுற்றி இருக்கும் மென்மையான திசுக்களின் , அழுத்தப்புள்ளியாக மாறி - பாதத்தோல் தடித்து ‘ஆணி’ என்ற சொல்லை நாம் பயன்படுத்துகின்றோம் . பாத ஆணியும், பொருந்தா காலணிகளும் ஆபத்தின் முதல் படி என்று நாம் அறிவதில்லை.
இவற்றைவிட , காலில் ஏற்படும் ரத்தநாள அடைப்பு-குருதி ஊட்டக்குறை (Ischemia )ஏற்படுகின்றது ! ரத்த ஓட்டம் தடைப்பட்ட கால்களும் , பாதங்களும் கிட்டத்தட்ட இருதய ரத்த ஓட்டப் பாதிப்பைப் போன்றே! ஆனால் கால்களில் உள்ள தசைநார்கள் ரத்த ஓட்டமில்லை என்றால் அழுகும்நிலையும் நோய்த்தொற்றும் வேகமாகப் பரவிவிடும்.
“ சுய பாத வழிபாடே -கால்களையும் , உயிரினையும் காக்கும்”. காக்கும் வழிமுறைகளைக் காண்போம் கற்போம்!!
நீரிழிவு நோயர்கள்
1. தினமும் காலை, மாலை இருவேளையும் பாதத்தை நன்றாக கூர்ந்து நோக்குதல் - நன்று!! சிறுபுண்கள் , காயங்கள் , சேற்றுப்புண்கள் , காலணிக் காயங்கள், நகக்கண் வீக்கங்கள் - உடனடிக் கவனம் தேவை ! தம் குடும்பத்தாரிடம் பாதத்தை தினம் ஒருமுறை பார்க்கச்சொல்லுதல் மிக நன்று!!
2. வெறும் காலில் நடப்பதை அறவே தவிர்க்கவும் . சமூக , மத நம்பிக்கைக்காக வெறும் காலில் நடப்பது , நீரிழிவுப்பாதத்திற்கு உகந்தது அல்ல!!
3. நீரிழிவு பாத நோயர்கள்- தாங்கள் அணியும் காலணிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் . பொருந்தா காலணியும் , நீரிழிவுப்பாதமும் பொருந்தா காதல் போன்று முடிவு பெறும்.
4. விரல்கள் நடுவே அணிவது போன்ற காலணிகள் , பழைய நைந்த காலணிகள், கடின நெளிவற்ற ரப்பர் காலணிகள் - இவை அனைத்தையும் கண்டிப்பாக தவிர்க்கவும்.
5. பாதத்தை நன்றாகக் கழுவியபின் , சுத்தமான துணியால் காலினை துடைத்துவிட வேண்டும் . விரலிடை ஈரத்தை தவிர்த்தல் வேண்டும் .
6. விரல்களிடையே ஈரப்பசை , பூஞ்சைத் தொற்று ஏற்படவும் , அதன் வழியே கிருமித்தொற்று பாதத்தினுள் பரவும் ஆபத்து உள்ளது!!
7. நரம்பு இயக்கத்தடையில் பாதத்தோல் பகுதி காய்ந்து , வெடிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. ஆதலால் ஈரப்பசை கொண்ட களிம்பை ( Moisturising Cream) உலர்ந்த பாதத்தின் மேலிட வேண்டும் . இவை விரலிடைப் பரவாமல் கவனித்தல் அவசியம்.
8. வசதி வாய்ப்புள்ளவர்கள் , நீரிழிவுப் பாதத்திற்கான சிறப்பு தூய்மை உறையினை ( Diabetic Socks ) அணிந்து கொள்ளலாம் . வேர்வை உறையினைத் தவிர்க்கவும்
.
9. நீரிழிவு பாதநோயர்கள் , சுடுநீரில் கால்களை ஊற வைப்பது ஆபத்தில் முடியும் .
10. நாட்டு மருந்துகள் , இலைதழைகள் , வலிநிவாரணக் களிம்புகள் நீரிழிவுப்பாதத்தில் சுயச்சிகிச்சை செய்வதை , அறவே தவிர்த்தல் நலம் !! ( பலமுறை - இத்தகைய நோயர்கள் சுயசிகிச்சையினால் காலினையும் , உயிரினையும் இழக்கும் நிலை ஏற்படுகின்றது. அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையில் உடனே சிகிச்சை மேற்கொள்ளவும் )
11. நீரிழிவுபாதத்திற்கு ,சிறந்த காலணிகளாக - சுமை நீக்கப்பட்ட அழுத்தப் புள்ளிகள் நீக்கப்பட்ட காலணிகளே ( Off Loading Footwear)ஆகும். இதன் மூலம் 75 சதவீத பாதப்புண்களைத் தவிர்க்கலாம்.
12. உயிரினையும் , கால்களையும் காப்பாற்ற புகையிலை சார்ந்த அனைத்து வகையான பொருட்களையும் பயன்படுத்தலை நிறுத்த வேண்டும் . இவை போன்றவற்றை பழகாமல் இருப்பதே சாலச்சிறந்ததே!!
13. பாதத்தில் ஏற்படும் ஆணி , தோல் தடித்தல், வெடிப்பு , நிறம் மாறுதல் , புண் , காயங்கள் - உடனடி மருத்துவக் கவனிப்பு அவசியம் .
14. தகுந்த காலணிகளுடன் , நடைப்பயிற்சி , ரத்த சக்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருத்தல் அவசியம்.
15. வருடம் இருமுறை மருத்துவர்களை ஆலோசனை தேவை. தேவை இருந்தால் ஒட்டுறுப்பு அறுவைசிகிச்சை மருத்துவரையும் ( Plastic Surgeön) , ரத்தநாள அறுவைசிகிச்சை மருத்துவரையும் ( Vascular Surgeön) ஆலோசித்தல் நன்று!!
2016 அம் ஆண்டு, மத்திய அரசு நீரிழிவுப்பாதத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், “நீரிழிவுபாதநோயர்கள் , பல்வேறு மருத்துவர்களை ஆலோசித்தாலும்- மருத்துவர்களின் கூட்டமைப்பே தகுந்த சிகிச்சை அளிக்க இயலும் . ஆரம்பத் தடுப்பு நடவடிக்கையும் , பாதநோயை அறிவியல் சார்ந்த சிகிச்சை முறையால் , சரி செய்வதுமே கோட்பாடாக இருக்க வேண்டும்”
தடுப்பு நடவடிக்கை , தகுந்த சிகிச்சைமுறை , தகுந்த சுமை அழுத்தப்புள்ளி அகற்றப்பட்ட காலணிகள்- இவை அனைத்தும் எளிய மக்களுக்கு வழங்க அரசு மருத்துவமனைகளே சிறந்த இடம்.
“ அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் , காலும் தானே மிச்சம்”
என்ற ,எளிய மனிதர்களின் கால்களைக் காப்பாற்றும் கடமை நாம் அனைவருக்கும் உண்டு!!
முன்னர் குறிப்பிட்டதை போன்ற, சுய பாதவழிபாடு செய்தால் , 75 சதவீதக் கால்கள் இழப்பினை நீரிழிவு பாதநோயர்கள் தவிர்க்கலாம்.
நீரிழிவு பாதத்தால் ஒரு காலினை இழந்தவர்களில் - 50 சதவீத நோயர்கள் மறுகாலினை இரண்டு வருடங்களுக்குள் இழக்க வாய்ப்புகள் அதிகம் . நீரிழிவு நோயர்களைக்காட்டிலும் நீரிழிவுபாத நோயர்களில் 10 வருட இறப்பு விகிதம் 40 சதவீதமாக உள்ளது . ஏனெனில் பாதப் புண்களால் இவர்கள் -நடக்கத் தயங்குவதால் , இவர்களின் இருதயமும் பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை- எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்”
முன்னறிந்து, நடக்க இருக்கும் தவறினை தவிர்த்து கொள்ளாதவரின் வாழ்க்கையானது , நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும் !!
நம் பாதங்களே ,நம் வாழ்க்கையை, உலகைப் பற்றி நிற்க வைக்கின்றன. ஆரோக்கியமான பாதங்கள், மகிழ்ச்சியான வாழ்வு- பாதங்களை வழிபடுவோம்!!
மரு. சேகுரா.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago