டார்வின் கருத்துகள் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சிபற்றி விவாதித்ததைப் போல மார்க்ஸியக் கருத்துகள் மனிதச் சமூகத்தின் வளர்ச்சிப்போக்கு பற்றிய விதிகளை நம்மிடம் முன்மொழிந்துள்ளன.
மார்க்ஸிய போதனை
மார்க்ஸிய போதனை 49 தொகுதிகளாக விரிந்தி ருக்கிறது. (மூலதனம் நூலின் நான்காம் தொகுதியையும் சேர்த்தால் 50 தொகுதிகள்). கடிதங்கள் மட்டுமே 12 தொகுதிகள். அவற்றில் மூன்று தொகுதிகள் எங்கல்ஸ் மட்டுமே எழுதியவை; ஒன்பது தொகுதிகள் மார்க்ஸும், எங்கல்ஸும் சேர்ந்து எழுதிய கடிதங்கள். மார்க்ஸும் எங்கல்ஸும் இணைந்து எழுதிய நூல்களும் கட்டுரைகளும் கொண்ட தொகுதிகள் 21, அதில் மார்க்ஸ் மட்டுமே தனித்து எழுதிய நூல்களின் தொகுதிகள் 12. எங்கல்ஸ் மட்டுமே தனித்து எழுதிய தொகுதிகள் நான்கு.
மார்க்ஸியத்தின் மிக முக்கியமான பகுதி ‘மூலதனம்'. அதன் அரசியல் பொருளாதாரக் கருத்துகள் முதலாளித் துவ உற்பத்தி முறையின் இதயத்தைக் கிழித்துள்ளன. மனித இனம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு எது வேர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன. இதுதான் மார்க்ஸிய போதனையின் பிரம்மாண்டம்.
தீர்க்கதரிசனம்
இன்று பொருளாதார மந்தம் என்று நம்மால் அழைக்கப்படுவதை மார்க்ஸ் அன்று நெருக்கடி என்று அழைத்தார். சமீபத்தில் 2007-2008-ல் தொடங்கிய மந்தநிலையைக் கூட எடுத்துக்கொள்ளுங்கள். அதன் தீவிரத்தையும், அது நீடிக்கும் கால அளவையும், உலக அளவில் அது ஏற்படுத்திய பாதிப்பையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் மந்தநிலை என்ற பெயரை விட மார்க்ஸ் அழைத்த நெருக்கடி என்ற பெயர்தான் மிகவும் பொருத்தமாக இருக்கும். பொருளாதார நெருக்கடிகள் திரும்பத் திரும்ப நிகழ்வது பற்றி ‘மூலதனம்' புத்தகத்தில் மார்க்ஸ் நிறைய விளக்கங்களை அளிக்கிறார். அவர் ‘நியூயார்க் டிரிப்யூன்' பத்திரிகையின் பொருளாதாரச் செய்தியாளராக 1850-களில் இருந்தபோது தந்த விளக்கம் மிகவும் ஆச்சரியமானது.
உலகின் முதல் பொருளாதார நெருக்கடியாகக் கருதப்படுகிற 1857- பொருளாதார நெருக்கடியைப் பற்றி அவர் விவாதிக்கிறார். ‘கிரெடிட் மொபைலைர்' என்ற வங்கிதான் உலகின் முதல் ‘முதலீட்டு வங்கி'. அந்த வங்கியை மையப்படுத்தியே மார்க்ஸ் விவாதிக்கிறார். அந்த வங்கி தனது முதலீட்டை விட 10 மடங்கு கடன்பெறுவதற்கு அந்த வங்கியின் சட்டதிட்டங்கள் அனுமதித்ததைக் கண்டு மார்க்ஸ் அதிர்ந்துபோகிறார். அந்த வங்கி தனது நிதியாதாரத்தையெல்லாம் பங்குகள் வாங்குவதற்கும் பிரான்சின் ரயில் பாதைத் திட்டங்கள், பெரும் தொழிற்சாலைகள் போன்ற பெரும் திட்டங்களுக்கு நிதியுதவி செய்து உற்பத்தியைப் பெருக்குவதற்கும் பயன்படுத்தியது. கடைசியில் மிதமிஞ்சிய உற்பத்தி கிடைத்தது. ஆனால், அந்த உற்பத்தியைக் கொள்வாரில்லை. விளைவு அந்த வங்கியின் பங்குகள் அதலபாதாளத்துக்கு வீழ்ந்தன. கடனையும் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு அந்த வங்கி ஆளானது. அந்த வங்கியை அப்படியே தற்போதைய பொருளாதார நெருக்கடியில் முதலில் பலியான ‘லேமன் பிரதர்ஸ்’ உள்ளிட்ட வங்கிகளுடன் பொருத்திப் பாருங்கள். மார்க்ஸ் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பது புரியும்.
மார்க்ஸியத்தின் தனித்தன்மை
முதலாளித்துவ உற்பத்தி முறையை இயக்கும் விதிகளை இத்தகைய அசாதாரண ஆற்றலோடு மார்க்ஸ் அம்பலப்படுத்தினார். அதோடு மனித இனத்தின் வளர்ச்சிப் போக்கையும் தெளிவாக்கினார். மனிதச் சமூகம் எங்கிருந்து துவங்கி, எங்கே போய்க்கொண்டிருக்கிறது எனும் விவாதத்தை மார்க்ஸ் மனித இனத்தின் முன் வைத்தார்.
இதனால் மனிதச் சமூக வளர்ச்சியின் எந்தக் கட்டத்தில் நிற்கிறோம் என்பதை அந்தந்த தேசங்களின் உழைக்கும் மக்கள் புரிந்துகொள்ளும் வாய்ப்புகள் பிறந்தன.
முதலாளித்துவ உற்பத்தி முறை வளராத நாடுகளின் மக்களையும்கூட மார்க்ஸின் விஞ்ஞான சோஷலிஸம் மற்றும் அரசியல் பொருளாதாரக் கருத்துகள் கவர்ந்தன. மார்க்ஸியம் எனும் விமானம் கிடைத்த பிறகு, பிற தத்துவங்கள் எனும் மாட்டு வண்டிகளில் பயணம் செய்ய நிலபிரபுத்துவ சமூக மக்களும் மறுத்தனர். தனியொரு நாட்டில் சோஷலிஸப் புரட்சி வராது என்றும், முதலாளித்துவம் பழுத்துக் கனிந்த இங்கிலாந்து போன்ற நாடுகளில்தான் சோஷலிஸம் ஏற்படும் என்றும் இருந்த தர்க்கரீதியான எதிர்பார்ப்புகளையெல்லாம் மக்கள் தகர்த்தெறிந்தனர். குருவுக்கு மிஞ்சிய சிஷ்யர்களாக ரஷ்ய மக்கள் மாறினார்கள். உலக சாதனை புரிந்த விளையாட்டு வீரன் தன் சாதனையைத் தானே முறியடித்துக்கொள்வதுபோல மார்க்ஸியம் தன்னைத் தானே முறியடித்துக்கொண்டு முன்னேறியது.
மார்க்ஸியத்தைக் கைக்கொண்டு வேகமாக முன்னேறு வதற்கான மக்களின் முன்முயற்சிகளும், அவற்றைத் தடுப்பதற்கான ஆளும் வர்க்கத்தின் எதிர்ப்புகளுமாக உலகம் மார்க்ஸுக்குப் பிறகு பரபரப்பாக மாறியது. மனித இனத்தைப் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறும்படி உந்தித்தள்ளியதுதான் மார்க்ஸியத்தின் மாபெரும் தனித்தன்மையாக இருக்கிறது.
மூலதனம் தவிர்த்த மார்க்ஸியத்தின் மற்ற படைப்புகள் பழங்காலத் தத்துவங்களை விமர்சிக்கின்றன. அவர்கள் வாழ்ந்த காலத்தின் உழைக்கும் மக்களின் வாழ்நிலை பற்றிய அக்கறையுடன் கூடிய ஆய்வுகள், கம்யூனிஸ விஞ்ஞானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டங்கள் மற்றும் அமைப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகள், மனிதத் துன்பங்களுக்கெல்லாம் நிரந்தரமான தீர்வை உருவாக்குவதற்கான கோட்பாடுகள், பெண்ணுரிமை கருத்துகள், இயற்கையின் இயங்கியல் தன்மையை நிலைநாட்டல், பல நாடுகளில் நடந்த மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு ஆகியவையும் உள்ளன.
மார்க்ஸியத்தின் ஆற்றல் மிக்க தலையீடு மனித குலம் இனி செல்ல வேண்டிய திசையைத் தீர்மானித்துள்ளது. எங்கல்ஸ் ஒருமுறை இப்படிச் சொன்னார்: “மார்க்ஸ் பிறக்காவிட்டால்கூட மார்க்ஸ் வெளிப்படுத்திய கருத்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். ஆனால் நீண்ட காலம் ஆகியிருக்கும். கடின உழைப்பால் தனது கருத்தை முழுமைத் தன்மையோடு கட்டி எழுப்பும் தகுதி மார்க்ஸுக்குத்தான் இருந்தது.”
மறுபிறவி முத்தம்
மார்க்ஸ் தனது மனைவிக்கு எழுதிய காதல் கடிதங்களில், ஜென்னியை முத்தமிடும்போது தான் மறுபடி மறுபடி பிறப்பெடுத்து பிராமணர்களின் மறுபிறவிக் கொள்கையை உணர்வதாகக் கூறுகிறார். இதைத் தவிர இந்தியச் சமூகத்தின் சாதியத் தனித்தன்மையைக் கூர்ந்து உற்றுநோக்கக் காலம் அவருக்கு உரிய நேரம் அளிக்கவில்லை. சாதியும் வர்க்கமும் இணைந்த இந்தியச் சமூக அமைப்பு பலவிதமான மார்க்ஸிய முன்முயற்சிகளுக்கான ஆய்வகமாக இருக்கிறது. சாதியத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் வர்க்க உணர்வுக்குள் வழுக்கிக்கொண்டு போய்விடலாம் என்ற முயற்சிகளுக்கு அது இடம்தர மறுக்கிறது.
நிலபிரபுத்துவச் சமூகத்தை அழித்து அதன் சாம்பலில் முதலாளித்துவச் சமூகம் உருவாகும் என்ற பொதுவான மார்க்ஸிய தீர்க்கதரிசனத்தை இந்தியச் சமூகம் பொய்யாக்கியுள்ளது.
ஆப்பிரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகமான பழங்குடிகள் வாழும் இந்தியாவில், தலித் மக்களும் நாடோடி மக்களும் கோடிக் கணக்கில் வாழும் இந்தியாவில், அவர்களின் இதயங்களுக்கு உள்ளே இன்னமும் போதுமான அளவு மார்க்சியம் போகவில்லை என்பது இந்திய மக்களின் ஒட்டுமொத்த விடுதலையைத் தள்ளிப்போடுகிறது.
மார்க்ஸியம் என்றால் மக்கள் மீதான நிபந்தனையற்ற நேசம். துன்பங்களிலிருந்து கடைசி மனிதனையும் விடுவிப்பதற்கான உயர்ந்தபட்ச வீரம். மக்களுக்காக அனைத்தையும் இழக்கும் தியாகம். இவை ஏற்கெனவே பெருமளவில் மார்க்ஸியத்தின் பெயரால் செய்யப் பட்டிருந்தாலும் மக்களின் தேவையோ எங்கோ இருக்கிறது.
சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள், அடிமைத்தனம், பிற்போக்குத் தன்மைகள் போன்றவை இருக்கும்வரை மார்க்ஸ் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்.
- த. நீதிராஜன், தொடர்புக்கு: neethirajan.t@kslmedia.in
இன்று காரல் மார்க்ஸின் 196-வது பிறந்த நாள்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago