புதிய கல்விக் கொள்கை முன்வரைவு வந்தபோது, தமிழகத்தில் அதற்குப் பெரும் எதிர்ப்பு இருந்தது. இப்போதும் இருக்கிறது. அந்த எதிர்ப்புகளை இப்படி சாராம்சப்படுத்தலாம்: (1) கல்வி என்பது மத்தியப் பட்டியலில்தான் இருக்க வேண்டும். அது பொதுப்பட்டியலுக்கு வந்தது மட்டுமல்ல; இன்று பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, அதன் முழுக் கட்டுப்பாட்டையும் தன் கையில் எடுத்துக்கொள்ளப் பார்க்கிறது. (2) இந்தியாவிலேயே தமிழகம்தான் கல்வியில் அதீத உயரங்களை எட்டியுள்ளது. ‘ஜிஇஆர்’ எனப்படும் ‘எத்தனை சதவீதம் பேர் உயர் கல்வி படிக்கிறார்கள்’ என்ற கணக்கில் இந்திய சராசரியைப் போல் கிட்டத்தட்ட இரு மடங்கில் தமிழகம் இருக்கிறது. இந்தியா தற்போதைய சராசரியை 26 என்பதிலிருந்து 50 ஆக உயர்த்த வேண்டும் என்பதை இலக்காக வைத்திருக்க, தமிழகம் ஏற்கெனவே 49-ல் இருக்கிறது. (3) தமிழை அழித்து, இந்தியையும் சம்ஸ்கிருதத்தையும் உள்ளே நுழைக்க முனையும் ஒரு திட்டம்தான் இது. (4) ‘தொழிற்கல்வி’ என்று சொல்லி, குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவரும் முயற்சி. (5) உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை அழிப்பதற்கான திட்டம். (6) மூன்றாவது, ஐந்தாவது, எட்டாவது வகுப்புகளில் பொதுத்தேர்வு நடத்தி, பிஞ்சுகளை நஞ்சு கொடுத்துக் கொல்லப் பார்க்கிறார்கள்.
ஐசியூவில் சமச்சீர் கல்வி
எதிர்ப்பது என்று முடிவுசெய்துவிட்டால், இங்கே காற்புள்ளி இல்லை, அங்கே முற்றுப்புள்ளி இல்லை என்று என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். இந்திய அரசு ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியாகக் கல்விக் கொள்கைகளை உருவாக்க முடியாது. நாட்டின் சராசரி என்னவோ அதற்காகத்தான் உருவாக்க முடியும். தமிழகம் நிச்சயமாகப் பல மாநிலங்களைவிட, ஏன் ஒரு பேச்சுக்கு, இந்தியாவிலேயே மிகச் சிறந்த கல்வி வழங்கும் மாநிலம் என்றே வைத்துக்கொள்வோம். அதன் இன்றைய நிலை என்ன? நீட் வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்கட்டும், அந்தப் பரீட்சை கொண்டுவரப்பட்டபோது என்ன பதற்றம் மாநிலத்தில் இருந்தது? எங்கள் பிள்ளைகளுக்கு மைய நீரோட்டத்துக்கு வருவதற்கு அவகாசம் கொடுங்கள் என்று இறைஞ்ச வேண்டியிருந்தது அல்லவா? ஏன் அந்த நிலை? நம் ‘சமச்சீர் கல்வி’ ஐசியூவில் இருந்தது என்பதால்தானே கல்வித் துறை தடாரென விழித்தெழுந்து பாடப் புத்தகங்களை மாற்றியமைத்தது? ஆனால், அந்த மாற்றியமைக்கப்பட்ட பாடப்புத்தகங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப்போகவும் செய்துகொண்டிருக்கிறதே?
92%-க்குக் குறைவில்லாமல் ‘அனைவரும் பாஸ்’ என்ற திட்டத்தைத்தான் நம் மாநில அரசு தொடர்ந்து செய்துவருகிறது. பணவீக்கம்போல் ‘மதிப்பெண் வீக்கம்’ மட்டுமே நம் ஒற்றைச் செயல்திட்டமாக இருந்துவருகிறது. பல்கிப் பெருகியிருக்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களைத் தயாரித்து அனுப்பும் இயந்திரங்களாகவே நம் கல்விக்கூடங்கள் மாறியுள்ளன. அங்கே செல்லும் மாணவர்களில் மூன்றில் இருவர் முதலாமாண்டுக் கணிதத் தேர்வில் தோல்வியடைகிறார்கள் என்கிறது புள்ளிவிவரம்.
சம்ஸ்கிருதம் தேவையில்லை
புதிய கல்விக் கொள்கையில் குறைகளும் உண்டு. அதன் மொழிக் கொள்கை அதீதமானது. தேவையற்றது. சம்ஸ்கிருதத்துக்குப் பள்ளிக்கூட அளவில் இடம் தேவையில்லை. அது ஒரு செம்மொழி என்பதைத் தாண்டி, அதில் ஆராய்ச்சிக்குரிய பல நூல்கள் உள்ளன. காப்பியங்கள், இலக்கணம், அறிவியல், கணிதம், கட்டிடக் கலை, ஓவியம், சிற்பம், நாட்டியம் போன்றவற்றுடன் தத்துவம், மதம் என்று கணக்கற்ற நூல்கள் உள்ளன. ஆம், தமிழைவிடப் பல மடங்கு அதிகமான சிந்தனைகளைத் தன்னகத்தே கொண்ட மொழி சம்ஸ்கிருதம். இந்திய மரபு என்ற ஒன்று உண்டு என்றால் அது சம்ஸ்கிருதத்தால்தான் பாதுகாக்கப்படுகிறது. விரும்புபவர்கள் அதைக் கற்கலாம், அம்மொழியில் உள்ள நூல்களை ஆராயலாம். இந்தியாவில், தமிழ் தவிர அனைத்து மொழிகளும் சம்ஸ்கிருதத்துக்கு நன்றிக்கடன் பட்டுள்ளன. தமிழர் தவிர, வேறு எந்த மாநிலத்தவர்க்கும் சம்ஸ்கிருதம் படிப்பதில் ஒவ்வாமை இல்லை. ஆனால், அதையும் கல்லூரியில், ஆராய்ச்சிக்காகப் படித்தால் போதும்.
மூன்றாவது மொழி வேண்டுமா, எட்டாவது மொழி வேண்டுமா என்ற ஆராய்ச்சிகள் தேவையில்லை. பள்ளிக்கூடத்துக்கு அதிகாரம் கொடுத்துவிடலாம். அந்தந்தப் பகுதி மக்கள் எதைப் படிக்க விருப்பம் தெரிவிக்கிறார்களோ அதைப் படிக்க வேண்டிய ஏற்பாடுகளை அவர்களே செய்துகொள்ளட்டும். என்னைப் பொறுத்தமட்டில் 10, 12 வகுப்புகளில் தேர்ச்சி பெற தாய்மொழி தவிர, ஆங்கிலம்கூடத் தேவையில்லை என்பேன். இன்றே இதை ‘என்ஐஓஎஸ்’ எனப்படும் மத்திய அரசின் கல்வித் திட்டத்தின்கீழ் விரும்பும் எவரும் செயல்படுத்திக்கொள்ளலாம்.
ஊழல்மயமான கல்வித் துறை
புதிய கல்விக் கொள்கை, 10 2 என்பதிலிருந்து 3 5 3 4 என்ற மாற்றத்தைச் சொல்கிறது. 3-5 வயதில் குழந்தைகளுக்கு இளம் பருவக் கல்வி என்பதை முன்வைக்கிறது. பல ஐரோப்பிய நாடுகளில் 6-7 வயதுகளில்தான் குழந்தைகளை முதன்முதலில் பள்ளிக்கே அனுப்புகிறார்கள். ஆனால், இந்தியாவில் தத்தம் குழந்தைகளுக்குப் பெற்றோர்களால் சரியான முறையில் அந்த இளம் வயதில் கற்பிக்கவும் முடியாது, சத்தான உணவும் கொடுக்க முடியாது என்ற பயத்தில், இந்திய அரசு அவர்களை ‘பள்ளி அல்லாத கல்வி நிலையத்துக்குள்’ கொண்டுவரப் பார்க்கிறது. இதை ஒரு குறுகியகாலத் திட்டமாகவே பார்க்க வேண்டும். 20-30 ஆண்டுகளுக்குள் இதிலிருந்து விடுபடுவதே நல்லது. பெற்றோர்தான் குழந்தைகளின் அந்த வயதில் சரியான ஆசிரியராக இருக்க முடியும்.
இந்த கல்விக் கொள்கையில் அடிப்படையாக நாம் பாராட்ட வேண்டியது, மாநில அளவில் பள்ளிக் கல்வியைக் கட்டுப்படுத்த முன்வைக்கப்பட்டிருக்கும் அமைப்புகள் அனைத்துமே தமிழக அரசின் கல்வித் துறையின் கீழ் வருகின்றன. ஊழலும் செயலின்மையும் காலம் காலமாகப் புரையோடிப்போன அமைப்பு இது. பணியிட மாறுதல் தொடங்கி, பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியைக் கையாடல் செய்வதற்கென்றே உருவாக்கப்பட்ட ஊழல் மலிந்த ஒரு துறை இது. தனியார் கல்வி நிறுவனங்களிடம் பைசா வசூல் செய்வதற்கென்றே உருவாக்கப்பட்ட துறை. அரசின் நேரடித் துறையாக, வெளிப்படைத்தன்மை அற்றதாக இல்லாமல், தனித்த அதிகாரம் கொண்ட ஓர் அமைப்பாக, வெளிப்படைத்தன்மை கொண்ட ஒன்றாக, பல்வேறு அமைப்புகளாகக் கல்வித் துறையின் பல்வேறு அங்கங்கள் மாறுவது கல்வித் துறைக்கு நாம் செய்யும் மிகப் பெரிய பேறாக இருக்கும். தனியார் பள்ளிகளையும், அரசுப் பள்ளிகளையும் ஒருசேர, ஒரே மாதிரியாகக் கட்டுப்படுத்துவது என்பதுதான் சரியானதாக இருக்கும். அதை நாம் அனைவருமே வரவேற்க வேண்டும்.
உயர் கல்வியைப் பொறுத்தமட்டில், பல்கலைக்கழகங்களின் நோக்கம் மாற்றியமைக்கப்படுகிறது. அனைத்துக் கல்லூரிகளும் தன்னாட்சி பெற்ற கல்லூரிகளாக மாற வேண்டும். பல்கலைக்கழகம் என்பது ஆராய்ச்சியையும் கல்வியையும் நோக்கமாகக் கொண்டதாக ஆக வேண்டும். இதுவும் மிக அடிப்படையான, வரவேற்கப்பட வேண்டிய மாற்றம். ஆனால், மத்தியில் ஒரேயொரு கட்டுப்பாட்டு நிறுவனம்தான் நாட்டின் உயர் கல்வியை முழுமையாகக் கட்டுப்படுத்தும் என்பது சரியானதாக இல்லை. அந்த அளவுக்கு மையப்படுத்துதல் என்பது மிகவும் கெடுதலாகக்கூட முடியலாம். எந்த அளவுக்குத் தன்னாட்சி அதிகாரம், எந்த அளவுக்குக் கட்டுப்பாடு என்பதில்தான் இதன் வெற்றி இருக்கப்போகிறது.
- பத்ரி சேஷாத்ரி, வலதுசாரிச் சிந்தனையாளர் இயக்குநர், ஆர்ஜீ ஸ்டாஃப்பிங் சர்வீஸஸ்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago