புதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது?

By செய்திப்பிரிவு

கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு மே 31, 2019 அன்று அளித்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு தன்னுடைய புதிய கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பிலான விரிவான விவாதங்களை அடுத்து வரும் வாரத்தில் நாம் பார்ப்பதற்கு முன்பாக இந்தக் கொள்கை உண்மையில் என்னவெல்லாம் சொல்கிறது என்பதை இந்த வாரத்தில் பார்ப்போம்.

கடந்த ஆண்டு கருத்துக் கேட்புக்காக வெளியிடப்பட்ட வரைவு கல்விக் கொள்கையைப் போலவே புதிய கல்விக் கொள்கையும் நான்கு பாகங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் பகுதி பள்ளிக் கல்வி குறித்தும், இரண்டாம் பகுதி உயர் கல்வி குறித்தும், மூன்றாம் பகுதி கவனம்கொள்ள வேண்டிய மற்ற முக்கியமான விஷயங்கள் குறித்தும் விவரிக்கிறது. நான்காம் பகுதி கல்வித் துறை குறித்த மத்திய அரசின் அமைப்புகளை வலுப்படுத்துவது, அனைவருக்கும் கல்வி அளிப்பதற்கான நிதியாதாரங்கள் உள்ளிட்ட விஷயங்களைப் பற்றிப் பேசுகிறது. வரைவுக் கொள்கையில் குறிக்கோள் என்ற தலைப்பில் இடம்பெற்றிருந்த குறிப்பு விரிவான முன்னுரையாக இடம்பெற்றுள்ளது. புதிய கல்விக் கொள்கையின் நோக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக இது அமைந்துள்ளது.

‘பொருளாதார வளர்ச்சியில் உலகில் முன்னணி நாடாக இந்தியா விளங்கிடவும், சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டவும், அறிவியல் முன்னேற்றம், தேசிய முன்னேற்றம், பண்பாட்டைப் பாதுகாத்தல் ஆகியவற்றை வளர்த்தெடுக்கவும் அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்கச்செய்வது அவசியம் என்ற பாதையில் இந்தியா தொடர்ந்து பயணிக்கிறது. அனைவருக்கும் உயர்தரமான கல்வியை அளிப்பதே நமது நாட்டின் அறிவுத்திறனை மேலும் அதிகரிக்கச்செய்வதற்கான சிறந்த வழிமுறையாகும். தனிநபர்களுக்கு மட்டுமல்ல, இந்தச் சமூகத்துக்கும் நாட்டுக்கும் உலகுக்கும் அதுவே நல்லது. அடுத்த பத்தாண்டுகளில் உலகளவில் அதிக இளைஞர்கள் வாழும் நாடாக இந்தியா விளங்கும். அவர்களுக்கு உயர்தரமான கல்வி வாய்ப்புகளை வழங்குவதே எதிர்காலத்தில் நம்முடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்’ என்று புதிய கல்விக் கொள்கையின் முன்னுரை தொடங்குகிறது.

நீடித்த வளர்ச்சிக்கான 2030 செயல்திட்டத்தின் நான்காவது குறிக்கோளானது, உலகளாவிய கல்வி மேம்பாடு பற்றியது. 2015-ல் அந்தக் குறிக்கோளை ஏற்றுக்கொண்ட இந்தியா, 2030-க்குள் அனைவருக்கும் தரமான கல்வியை வழங்கவும், வாழ்நாள் முழுவதற்குமான கல்வி வாய்ப்புகளை வழங்கவும் உறுதி மேற்கொண்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்குக் கல்வி அமைப்பு முழுவதையுமே சீர்திருத்த வேண்டியிருப்பதாக இந்த முன்னுரை விளக்கம் அளிக்கிறது.

பொருளாதாரச் சூழலோடு சுற்றுச்சூழலும் வேகமாக மாறிவரும் நிலையில், குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்பதைவிடவும் அவர்கள் எவ்வாறு படிக்கிறார்கள் என்பது முக்கியத்துவம் பெறுகிறது. படிக்க வேண்டிய பாடத்திட்டங்களைக் குறைக்கவும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறனை அதிகரிக்கச் செய்யவும் வேண்டியிருக்கிறது. படைப்பூக்கம் கொண்டதாகவும், பல்வேறு துறைகளை உள்ளடக்கிய படிப்பாகவும் கல்வியை வளர்த்தெடுக்க வேண்டியிருக்கிறது. புதுமைகளைப் புகுத்த வேண்டியிருக்கிறது. குழந்தைக் கல்வியைப் பரிசோதனைகள் நிறைந்ததாகவும் ஒருங்கிணைந்ததாகவும் படிக்கும் மாணவரை மையப்படுத்தியதாகவும் விவாதிக்கும் முறையில் அமைந்ததாகவும் நெகிழ்வானதாகவும் அனைத்துக்கும் மேலாக அதை மகிழ்ச்சியானதாகவும் மாற்றியாக வேண்டியிருக்கிறது. புதிய கல்விக் கொள்கை தீர்மானித்துக்கொண்டுள்ள இந்த இலக்குகளை எட்டுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளையும் தீவிரமாக ஆலோசிக்கிறது.

முக்கியமாக, பாடத்திட்டத்தில் அடிப்படைக் கலைகள், கைவினைப் பயிற்சிகள், விளையாட்டு, உடல் திறன், மொழி, இலக்கியம், பண்பாடு, சமூக மதிப்பீடுகள் ஆகியவற்றுடன் அறிவியலும் கணிதமும் கற்றுக்கொடுக்கப்பட்டு, மாணவர்களை அனைத்துத் துறைகளிலும் தகுதிபெற்றவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று இந்தக் கல்விக் கொள்கை தீர்மானித்துக்கொள்கிறது. கல்வி என்பது பயிலும் மாணவர்களுக்குப் பயனளிக்க வேண்டும் என்பதோடு அவர்களது ஆளுமையைச் செதுக்கக்கூடியதாகவும் அவர்களை அற விழுமியங்களைக் கடைப்பிடிப்பவர்களாகவும் அறிவுபூர்வமாகச் சிந்திப்பவர்களாகவும் அதே நேரத்தில் வேலைவாய்ப்புகளைப் பெறக்கூடிய தகுதிபெற்றவர்களாகவும் உருவாக்க வேண்டும் என்பதே இந்தப் புதிய கல்விக் கொள்கையின் லட்சியம். தற்போதைய கல்வி முறையில் உள்ள இடைவெளிகளைக் களைந்து உயர்தரமும் சமத்துவமும் ஒருங்கிணைந்த தன்மையும் கூடிய கல்வியைத் தொடக்கக் கல்வியிலிருந்து உயர் கல்வி வரையில் கொடுக்கச்செய்வதற்கு இந்தப் புதிய கொள்கை முயல்கிறது.

அடுத்த இருபதாண்டுகளில் இந்தியாவின் கல்வி அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதே இலக்காக இருக்க வேண்டும். சமூக, பொருளாதாரப் பின்னணியைப் புறந்தள்ளி அனைவருக்கும் உயர்தரத்திலான கல்வி வாய்ப்பைப் பெறும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். 21-ம் நூற்றாண்டின் முதலாவது கல்விக் கொள்கையான 2020-ன் கல்விக் கொள்கையானது உடனடியாகச் சரிசெய்யப்பட வேண்டிய நாட்டின் கல்வித் தேவைகளை மனதில் கொண்டே உருவாகியுள்ளது. கல்வித் துறையில் அமைப்பு, நெறிமுறைகள், நிர்வாகம் உள்ளிட்ட அனைத்துக் கூறுகளையும் மறுபரிசீலித்து, அவற்றை முழுமையாக மறுகட்டமைக்க வேண்டும் என்று இக்கொள்கை பரிந்துரைக்கிறது. 21-ம் நூற்றாண்டின் தேவைகளையும் உலகளாவிய கல்வி இலக்குகளையும் கருத்தில் கொள்கிற அதே சமயம், இந்தியாவுக்கென்றே பிரத்யேகமாக மரபுகளையும் விழுமியங்களையும் ஒருசேரக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் இது உறுதியெடுத்துக்கொண்டிருக்கிறது.

இந்திய மரபில் கல்வி என்பது அறிவைப் பெறுவது அல்ல; சுயத்தை அறிதல், அதிலிருந்து விடுபடுதல். இந்தியாவின் கல்வி மரபு உலகம் முழுவதும் தாக்கம் செலுத்தியிருக்கிறது. நமது புதிய கல்வி முறையில் மீண்டும் அவற்றைப் பயன்படுத்திக்கொள்வதைப் பற்றியும் யோசிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது இந்தக் கல்விக் கொள்கை. ஆசிரியர்களே கல்விச் சீர்திருத்தங்களின் மையம் என்பதால் ஆசிரியர்களுக்கான தகுதியும் புதிய வரையறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என இந்தப் புதிய கொள்கை வலியுறுத்துகிறது. சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்குக் கல்வியே சிறந்த கருவி. வரலாற்றுரீதியாக விளிம்புநிலையில் உள்ள, பின்தங்கிய பிரிவினருக்கும் தரமான கல்வி கிடைக்க இந்தப் புதியக் கல்விக் கொள்கை வகைசெய்யும் என்று இந்தக் கொள்கை உறுதியளிக்கிறது.

முன்னுரையின் சாராம்சம் இதுதான். இந்த லட்சியத்தை அடைவதற்காகப் பள்ளிக் கல்வியிலும் உயர் கல்வியிலும் என்னென்ன சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்