இந்திய வேளாண் வரலாற்றில் முதன் முறையாக, ஒரு குறிப்பிட்ட பருவத்தில் என்ன பயிர்களை, எந்த மாவட்டத்தில், எவ்வளவு பரப்பில் சாகுபடி செய்ய வேண்டும் என்பதை இந்த ஆண்டு (2020-21) கரீஃப் பருவத்திலிருந்து அரசே முடிவுசெய்யும் என்ற அதிரடித் திட்டத்தை, தெலங்கானா மாநிலம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பரிந்துரைக்கப்படும் பயிர்களின் பரப்பளவானது சந்தை மற்றும் வானிலையின் நிலவரப்படி மாறிக்கொண்டே இருக்கும். இதைப் பின்பற்றாத விவசாயிகளுக்கு ‘ரயத்து பந்து’ நேரடிப் பண வரவுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஏக்கருக்கு வழங்கப்படும் ரூ.5,000 நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தேவைதானா? இதனால், விவசாயிகளுக்கு நன்மை கிடைக்குமா?
சமீப காலமாக விவசாயிகள் பயிர்களின் சந்தைத் தேவையைக் கணக்கில் கொள்ளாமல், முந்தைய ஆண்டு விலையைக் கருத்தில் கொண்டு, சில பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்கிறார்கள். அதனால், அப்பயிர்களுக்கு உரிய விலை கிடைக்காமல், அவற்றை விரக்தியில் சாலைகளிலும் ஆற்றிலும் கொட்டிச்செல்லும் அவலத்தைப் பார்க்கிறோம். வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, மிளகாய் போன்ற பயிர்களில் இது அடிக்கடி நடக்கிறது. இந்தச் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, தெலங்கானாவின் பயிர்த் தோ்வுத் திட்டம் பெருமளவில் உதவக்கூடும்.
ஒற்றைப் பயிருக்கு முற்றுப்புள்ளி
ஒரே பயிரைத் திரும்பத் திரும்பச் சாகுபடி செய்வதால் நிலத்தடிநீர் அதிகளவில் உறிஞ்சப்படுவது மட்டுமல்லாமல், மண்ணின் வளமும் பயிர்களின் உற்பத்தித்திறனும் குறைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. உதாரணமாக, மேற்கு மஹாராஷ்டிரத்தின் சில பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடா்ந்து கரும்பு சாகுபடி செய்வதால் உற்பத்தித்திறன் தொடா்ந்து குறைந்துவருவது மட்டுமல்லாமல், அளவுக்கு அதிகமாக நீரும் பயன்படுத்தப்படுகிறது. இதனால், மஹாராஷ்டிரத்தின் மற்ற பகுதிகளுக்கு நீா்ப்பாசனம் கொடுக்க முடியாமல் மாநில அரசு திணறுகிறது. இதேபோன்ற சூழல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நிலவிவருகிறது. இதை எப்படி அனுமதிக்க முடியும்?
ஒற்றைப் பயிர் முறையை ஒழித்து, குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு அதிக லாபம் கொடுக்கக்கூடிய பருப்பு மற்றும் எண்ணெய் வித்துகளை ஊக்குவிக்க வேண்டியுள்ளது. நிதி ஆயோக் 2017-ல் வெளியிட்டுள்ள விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பதற்கான செயல்திட்ட அறிக்கையிலும் பயிர் சாகுபடித் தேர்வு முறைகளில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவருவது மிகவும் அவசியம் எனக் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. உலக பருப்பு சாகுபடிப் பரப்பளவில் 35% கொண்டுள்ள இந்தியா, உலகத்தில் அதிகமாகப் பருப்பு உற்பத்திசெய்யும் நாடாகவும், எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் மூன்றாவது பெரிய நாடாகவும் தற்போது திகழ்கிறது. இருப்பினும், பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் இறக்குமதியில் இந்தியா உலகின் மிகப் பெரிய நாடாகவும் உள்ளது. மத்திய வர்த்தக அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரப்படி, 2018-19-ல் மட்டும் ரூ.8,034 கோடி மதிப்பிலான பருப்பு, ரூ.69,023 கோடி அளவுக்குச் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் பருப்பு, எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை நமக்குத் தேவைப்படும் அளவுக்கு உயர்த்த முடியவில்லை. இங்கேதான் தெலங்கானாவின் பயிர்த் தேர்வுத் திட்டம் முக்கியப் பங்களிக்க முடியும். தேவைக்கும் அதிகமாக சாகுபடி செய்யப்படும் நெல்-கோதுமை பயிர்ச் சுழற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, அதிக தேவையுள்ள எண்ணெய் வித்துகள், பருப்புப் பயிர்கள் ஆகியவற்றின் சாகுபடிப் பரப்பளவை அதிகரிக்கச்செய்ய முடியும். இதனால், விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதுடன், இறக்குமதிக்குச் செலவிடப்படும் கோடிக்கணக்கிலான அந்நியச் செலாவணியையும் குறைக்க முடியும்.
நீர்த் தேவை நிர்வாகம்
பருவகால மாற்றங்களால் அதிகரித்துள்ள வெப்பநிலையாலும், மழை பொழியும் நாட்கள் குறைவதாலும் பாசன நீருக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, குறைந்த நீரில் அதிக மகசூல் கொடுக்கக்கூடிய பயிர்களைச் சாகுபடி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நெல், கரும்பு ஆகிய இரு பயிர்கள் மட்டும் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் மொத்த நீரில் பாதிக்கும் மேலாகப் பயன்படுத்துவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த இரண்டு பயிர்களும் தற்போது தேவைக்கு அதிகமாக உற்பத்திசெய்யப்படுகின்றன. ஆராய்ச்சியாளர்களின் மதிப்பீட்டின்படி 2021-22-ல் இந்தியாவுக்கான மொத்த உணவுப் பயிர்களின் தேவை 253 மில்லியன் டன்கள். ஆனால், தற்போது (2019-20) இந்தியாவின் மொத்த உற்பத்தி 296 மில்லியன் டன்களைத் தாண்டிவிட்டது. இந்நிலையில், குறைந்த நீரில் அதிக விளைச்சலைத் தரக்கூடியதும், பருவகால மாற்றத்தைத் தாங்கக்கூடியதுமான கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற சத்துணவுப் பயிர்களைச் சாகுபடி செய்வதன் மூலம் 3-21% தண்ணீா்த் தேவையையும், 2-12% மின்சாரத் தேவையையும் குறைக்க முடியும். இதன் மூலம் கடைமடையிலுள்ள விவசாயிகளுக்கும் தேவையான அளவு நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்த முடியும்.
உழவர் சார்பு அணுகுமுறை
தொடர்ந்து அதிகரித்துவரும் சாகுபடிச் செலவுகள், அதன் காரணமான கடன் தொல்லைகள், வேகமாகக் குறைந்துவரும் நிலத்தடி நீா்மட்டம் உள்ளிட்ட விவசாயிகளின் பல சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தெலங்கானா அரசின் தைரியமான திட்டம் அமைந்துள்ளது. இது மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடியது. ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான மற்றும் உகந்த பயிர்களை மட்டும் சாகுபடி செய்வதால், சந்தையில் பொருட்களின் வரத்தைக் குறைத்து விவசாயிகளுக்கு உரிய விலையைக் கொடுக்க முடியும். அளவுக்கு அதிகமாகப் பயிரிடப்படும் நெல்-கோதுமை போன்ற பயிர்களின் உற்பத்தியைக் குறைத்து, இதைச் சாகுபடிசெய்யும் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கச் செய்ய முடியும். உள்நாட்டுச் சந்தை மற்றும் ஏற்றுமதிக்கு உகந்த பயிர்களைத் தேவையான அளவுக்குச் சாகுபடி செய்வதால், விவசாயிகளின் விலை பேரத்திறனை அதிகரித்து, உரிய விலை கிடைக்க இத்திட்டம் வழிவகுக்கும்.
இத்திட்டத்தை முற்றிலுமாக அமல்படுத்துவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது. ஒரு ஏக்கருக்கும் குறைவாக விளைநிலம் வைத்திருக்கும் விவசாயிகளையும் இந்தப் பயிர்த் தேர்வுத் திட்டத்தின் கீழ் கட்டாயமாகக் கொண்டுவந்ததால், அவர்களின் உணவுப் பாதுகாப்புக்குச் சிக்கல்கள் ஏற்படலாம். அதே நேரத்தில், பயிர்த் தேர்வுப் பரிந்துரைகளோடு உரிய கொள்முதல் சந்தைகளையும் உருவாக்கினால், இத்திட்டம் அரசுக்கும் விவசாயிகளுக்கும் வெற்றிகரமான திட்டமாக அமைய அதிக வாய்ப்புள்ளது.
- அ.நாராயணமூர்த்தி, விவசாயச் செலவு மற்றும் விலை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர். தொடர்புக்கு: narayana64@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago