நகர்த்தக்கூடிய தேக்கநிலைதான்!

By பால் க்ரூக்மேன்

கருப்பு வெள்ளிக்கிழமையில் பங்குச்சந்தை ஒரேயடியாகச் சரியக் காரணம் என்ன? எதிர்காலம் எப்படி இருக்கும்? யாருக்கும் தெரியாது, விவரங்களும் இல்லை. பங்குச் சந்தையில் தினசரி இடம்பெறும் ஏற்ற இறக்கங்களுக் கெல்லாம் விளக்கம் அளிப்பது முட்டாள்தனமாகவே இருக் கும். 1987-ல் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு தொடர்பாக ஆய்வு நடத்தியபோது பொருளாதார அறிஞர்களும் பத்திரிகையாளர்களும் அளித்த விளக்கங்களுக்கும் உண்மை நிலவரத்துக்கும் தொடர்பே இல்லை என்பது புரிந்தது. அப்படியானால் முதலீட்டாளர்கள் பங்குகளை ஏன் விற்றார்கள் என்றால், விலை குறைந்துகொண்டே வந்தது, அதனால் விற்றார்கள்!

நம்முடைய பொருளாதார எதிர்காலத்தை முடிவு செய்ய பங்குச் சந்தையை வழிகாட்டியாக வைத்துக்கொண்டால் வேறு வினையே வேண்டாம். பால் சாமுவேல்சன் வேடிக்கை யாகச் சொல்வார், “கடைசியாக நாம் சந்தித்த 5 பொருளா தாரச் சரிவுகளை, 9 முறை முன்கூட்டியே ஊகித்தது பங்குச்சந்தைதான்” என்று! எனினும், முதலீட்டாளர்கள் இன்னமும் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள், அதற்குத் தகுந்த காரணங்கள் உண்டு. அமெரிக்கப் பொருளாதார நிலையைப் பிரமாதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் நன்றாகவே இருக்கிறது. ஆனால் உலகப் பொருளாதார நிலைமையோ ஏதாவது ஒரு விபத்தில் சிக்கிக்கொள்ளும் விதத்திலேயே தொடர்கிறது.

கடந்த 7 ஆண்டுகளாகவே நாம் ஒரு நெருக்கடியி லிருந்து இன்னொரு நெருக்கடிக்கு மாறிக்கொண்டே யிருக்கிறோம். உலகின் ஏதாவது ஒரு நாடு சுதாரித்து காலை ஊன்றி நின்றால், இன்னொரு பகுதியில் இன் னொரு நாடு காலை இழுத்துக்கொண்டு விழுந்துவிடு கிறது. இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தன்னைப் பாதிக்காத வகையில் அமெரிக்காவால் கவசம் போர்த்திக் கொண்டுவிட முடியாது.

உலகப் பொருளாதாரம் தடுமாறுவது ஏன்?

மேலோட்டமாகப் பார்க்கும்போது அமெரிக்காவுக்கு தொடர்ந்து துரதிருஷ்டங்களே வாய்க்கும் காலகட்டத்தில் இருக்கிறோம். முதலில் வீட்டுக்கடன் வழங்கிய நிறுவனங்கள் நொடித்தன. பிறகு வங்கிகள் நெருக்கடியில் சிக்கத் தொடங்கின. அப்பாடா எல்லாம் ஓய்ந்தது என்று நினைக்கும் நேரத்தில் ஐரோப்பிய நாடுகள் கடனில் சிக்கின, போதாத குறைக்கு பொருளாதார வீழ்ச்சியும் பிடித்துக்கொண்டது. ஐரோப்பா எப்படியோ மீண்டும் தட்டுத்தடுமாறி எழுந்து நிற்கப் பார்க்கிறது. இதுவரை உலகப் பொருளாதார வளர்ச்சிக்கே உதாரணமாக இருந்த சீனாவும் சில வளரும் நாடுகளும் இப்போது சரியத் தொடங்கியிருக்கின்றன.

இவையெல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் நடப்பவை அல்ல; ‘பணமோ ஏராளம், முதலீட்டு வாய்ப்புகளோ மிகச் சில’ என்ற உலக நிலைமையால்தான் இப்படி நேர்கின்றன.

அன்றே சொன்னார் பெர்னான்கி

பத்தாண்டுகளுக்கு முன்னால் பென் பெர்னான்கி என்ற நிதி நிபுணர் கூறினார், “அமெரிக்காவின் வர்த்தகப் பற்றுவரவில் பற்றாக்குறை அதிகம் இருக்கிறது என்றால் (ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகம்) அதற்குக் காரணம் உள்நாட்டுப் பொருளாதாரம் அல்ல உலக அளவில் சேமிப்புகளால் ஏற்பட்ட தேக்கநிலைதான்” என்றார். சீனா விலும் பல வளரும் நாடுகளிலும் முதலீடுகளைவிட சேமிப்பு கள் அதிகரித்துவிட்டதால் அப்படி நேர்ந்தது. 1990-களில் ஆசிய நெருக்கடியின்போது ஆசியாவிலிருந்து கோடிக்கணக்கான முதலீடுகள், நல்ல லாபம் கிடைக்கும் என்று அமெரிக்காவை நோக்கிப் பாய்ந்தன.

அந்தப் பணம் தொழில்துறைக்குச் செல்லாமல் வீடு கட்ட கடன்தரும் நிறுவனங்களில் போய் அடைக்கலம் புகுந்தன. அமெரிக்காவில் வீடமைப்புத் துறையில் ஏற்பட்ட எழுச்சியும் பிறகு வீழ்ச்சியும் வெளிநாடுகளின் பொருளாதார பலவீனங்களால்தான் என்று அப்போது பெர்னான்கி சொன்னது, பொருத்தமான விளக்கம் போலத்தான் இப்போது தெரிகிறது. ‘பேரலை’யாக உருவாகும் என்று எதிர்பார்த்தது வெறும் ‘நீர்க்கொப்புளமாக’ மாறியது, அதுவும் உடைந்தபோது பெரும் பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்திவிட்டது. அத்தோடு கதை முடிய வில்லை. ஜெர்மனியிலிருந்தும் இதர வட ஐரோப் பிய நாடுகளிலிருந்தும் ஸ்பெயின், போர்ச்சுகல், கிரீஸ் போன்ற நாடுகளை நோக்கி முதலீடுகள் பாய்ந்தன. இவையும் அதே போன்ற கொப்புளங் களாகிவிட்டன. 2009-10-ல் அவை உடைந்த போதுதான் ஐரோப்பிய நெருக்கடி பெரிதானது.

இப்போதும் அந்தக் கதை முடியவில்லை. அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் நோக்கி புதிய முதலீடுகள் செல்ல முடியாததால், உலகின் வேறு எந்தப் பகுதியில் முதலீடுக்கு வாய்ப்பு இருக்கிறது என்ற தேடல் தொடர்கிறது. வளர்ந்துவரும் சந்தைகளில் வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டது. எனவே பிரேசிலின் செலாவணி தொடர்ந்து நிலைத்திருக்க முடியாத உச்சத்துக்கு சென்றது. அங்கேயே தொடர முடியாமல் அது சரிந்துவிட்டது. இப்போது நாம் சந்தைகளில் புதிய நெருக்கடியைப் பார்க்கிறோம். 1990-களில் ஆசியாவில் ஏற்பட்ட நெருக்கடியை நேரில் பார்த்தவர்கள், அது எங்கே ஆரம்பமாயிற்று என்பதை இப்போதும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.

தேக்கம் ஏன்?

அப்படியானால் தேக்க நிலையைச் சுட்டும் விரல்கள் எந்தப் பக்கம் திரும்பப் போகின்றன? அன்னியச் செலாவணிகள் புதிதாக படையெடுப்பதால் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது; இது நம்முடைய தொழில்துறையை மிகவும் பாதிக்கும், பிற நாடுகளுடன் போட்டியிட முடியாமல் தடுத்துவிடும். எதனால் இந்த உலகளாவிய தேக்க நிலை? பல காரணங் களின் கூட்டுக் கலவையால்தான் இந்நிலை. உலகம் முழுக்க மக்கள் தொகைப் பெருக்கம் மந்தகதியை அடைந்து விட்டது. (நுகர்வோர் எண்ணிக்கை குறைகிறது). புதிய தொழில்நுட்பங்கள் குறித்து எவ்வளவு பீற்றிக்கொண்டாலும் அவற்றால் உற்பத்தித் திறனும் உயரவில்லை, பொருள்களுக்கான தேவையும் அதிகமாகவில்லை. எனவே தொழில்துறைக்கு முதலீடுகள் பெருகவில்லை. அரசு செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும், சிக்கனமாக இருக்க வேண்டும் என்ற தவறான ஆலோசனையால் அராசங்கங்கள் அனைத்துமே பலவீனமாகிவிட்டன. செலவு செய்ய அஞ்சுகின்றன.

அரசு செலவு செய்யாமல் பண சுழற்சி ஏற்படாது. கேட்பு (demand) இல்லாததால் பணவீக்க விகிதம் குறைவாக இருக்கிறது. பணவீக்க விகிதம் குறைவாக இருப்பதால் வங்கிகளின் வட்டி வீதமும் குறைவாகவே இருக்கிறது. வட்டி வீதம் குறைவாக இருப்பதால் பொருளாதாரம் சீறிப் பாய்ந்தால்கூட வட்டியைக் குறைப்பது சாத்தியமில்லை. எனவே ஊக்குவிப்பாக எதையும் செய்ய முடியவில்லை. முதலீடு செய்யாமல் வீணாக, பணத்தைச் சேமித்துக்கொண்டிருக்கிறார்கள் மக்கள்; உலக அளவில் பொருளாதாரம் முடுக்கிவிடப்படாமல் சுணங்கிக் கிடக்கிறது என்பதை ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் இப்போதுகூட உணராமல் மெத்தனமாகச் செயல்படுகின்றனர். இதெல்லாம் வழக்கம்தான் என்றே நினைக்கிறார்கள். அதிகாரிகள் இதை ஒப்புக்கொள்ளக்கூடத் தயங்குகின்றனர். இதற்குக் காரணம் ஒவ்வொரு வர்க்கமும் தன்னுடைய சுயநலத்தில் மட்டுமே அக்கறை காட்டுகிறது.

பொருளாதார நிலை ஸ்திரமற்று இருக்கும்போது நிதிக் கட்டுப்பாடுகள் அவசியம் என்பதை ‘வால் ஸ்ட்ரீட்’ (அமெரிக்க பங்குச் சந்தை) கேட்கவே விரும்பவில்லை. மக்கள் நல அரசு என்ற கொள்கையையே குழிதோண்டிப் புதைத்துவிட வேண்டும் என்று நினைக்கும் அரசியல் தலைவர்கள், அரசாங்கம் அதிகம் செலவு செய்ய வேண் டும், அதிலும் கல்வி, சுகாதாரம், சமூக நலம் ஆகியவற் றுக்கு அதிகம் செலவிட வேண்டும் என்பதையே கேட்க மறுக்கின்றனர். அரசாங்கம் செலவு செய்யாமல் இருப்பதும், கடன் சுமையும் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.

உலக அளவிலான பொருளாதாரத் தேக்க நிலை தொடர் பாக அரசியல்வாதிகளுக்கும் பொருளாதார நிபுணர்களுக் கும்கூட ஒருதலைப்பட்சமான கருத்துகள் இருக்கின்றன. இப்போதைய பிரச்சினைகளுக்குத் தாங்கள் அமல்படுத்த நினைக்கும் நடவடிக்கைகள்தான் சரியானவை என்பதே அது. அவர்களுடைய நடவடிக்கைகள் எல்லாம் அரசின் செலவுகளை வெட்டுவது, கடன்கள் மீதான வட்டி வீதத்தை அதிகப்படுத்துவது போன்றவைதான். இப்படியெல்லாம் கடுமையாக நடந்துகொண்டால்தான் பொருளாதாரம் மீட்சி அடையும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அதைவிட முக்கியம், பொருளாதாரத்தை மீட்க தங்களைத் தவிர வேறு யாருக்கும் அக்கறையும் இல்லை, வேறு யாரிடமும் சிறந்த திட்டங்களும் இல்லை என்ற அவர்களுடைய மமதையும்தான்!

தமிழில்: சாரி, © தி நியூயார்க் டைம்ஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

55 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்