மம்தாவுக்குச் சவாலாக உருவெடுக்கும் பாஜக!- வங்கத்தை வளைத்தடிக்கும் அரசியல் புயல்

By வெ.சந்திரமோகன்

2021 மே மாதத்தில் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்போதே அரசியல் காய்நகர்த்தல்களில் திரிணமூல் காங்கிரஸும் பாஜகவும் இறங்கியிருக்கின்றன. அதிரடி செயல்பாடுகளுக்குப் பெயர் பெற்ற மம்தா பேனர்ஜி, அதிகரித்து வரும் பாஜகவின் செல்வாக்கை எதிர்கொள்ள பல்வேறு வியூகங்களை வகுத்துவருகிறார்.

தியாகிகள் தின உரை
மேற்கு வங்கத்தில் அரசியல் யுத்தம் கூர்மையடைந்து வரும் நிலையில், ஜூலை 21-ல் மம்தா நடத்திய இணையவழிப் பொதுக்கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. 1993 ஜூலை 21-ல், கொல்கத்தாவில் மம்தாவின் தலைமையில் இளைஞர் காங்கிரஸ் நடத்திய பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த நாளைத் தியாகிகள் தினமாக மம்தா அனுசரித்து வந்தார். 1997-ல் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய பின்னரும் ஒவ்வொரு ஆண்டும் இதைக் கடைப்பிடிக்கிறார். அந்த அடிப்படையில் ஜூலை 21-ல், இணைய வழிப் பொதுக்கூட்டத்தை நடத்தினார்.

அதில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையில் உரையாற்றினார். குறிப்பாக, ‘வங்காளிகள்தான் வங்கத்தை ஆள்வார்கள்’ என்று சூளுரைத்திருப்பதன் மூலம் பாஜகவுக்குப் பகிரங்கமாகச் சவால் விடுத்திருக்கிறார். 2021 ஜூலை 21-ம் தேதியை வெற்றி விழாவாகக் கொண்டாடலாம் என்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரை உற்சாகப்படுத்தி வருகிறார்.

ஆனால், “அடுத்த ஆண்டு மம்தா இதே தேதியில் உரையாற்றும்போது முதல்வராக இருக்க மாட்டார். 21 பேர் கூட அந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள்” என்று மேற்கு வங்கப் பாஜக தலைவர் திலீப் கோஷ் கிண்டலடித்திருக்கிறார். அவரது வார்த்தைகள் வெறும் வாய்ச் சவடால் அல்ல; மம்தா அரசுக்கு முடிவுகட்ட ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது பாஜக. அவற்றையெல்லாம் தாண்டி மம்தா வெற்றி பெறுவாரா என்பதுதான் மேற்கு வங்க அரசியல் களத்தில் விவாதிக்கப்படும் விஷயம்.

அடுக்கடுக்கான புகார்கள்
வடக்கு தினஜ்பூர் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ தேவேந்திரநாத் ராய் மர்ம மரணம், அதே மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியின் தங்கை பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட நிகழ்வுகளை முன்வைத்து திரிணமூல் காங்கிரஸ் மீது கடும் குற்றச்சாட்டுகளை பாஜக முன்வைக்கிறது. சந்தேகத்துக்குரிய மரணங்கள் தொடர்பான படங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு, ‘இவர்களும் தியாகிகள்தானா தீதி?’ என்று பாஜகவினர் கேள்வி எழுப்பிவருகிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகவும் குற்றம்சாட்டுகிறது பாஜக.

இதற்கிடையே, மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தங்கர் அறிக்கை அளித்திருக்கிறார். கரோனா பரவலைத் தடுப்பதில் மம்தா அரசின் நடவடிக்கைகள், உயர் கல்வித்துறையில் முறைகேடுகள் ஆகியவை தொடர்பாகவும் அமித் ஷாவிடம் தெரிவித்ததாக ஆளுநர் கூறியிருக்கிறார். மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியினரும் விமர்சித்து வருகிறார்கள்.

மேலும், புயல் நிவாரணத் தொகையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் முறைகேடு செய்ததாக எழுந்த புகார்களும் மம்தாவை நிலைகுலைய வைத்திருக்கின்றன. திரிணமூல் காங்கிரஸ் செல்வாக்குடன் உள்ள தெற்கு 24 பர்கானா, வடக்கு 24 பர்கானா, ஹெளரா போன்ற மாவட்டங்களில் இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்தது அவரைத் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியது. இதையடுத்து, முறைகேடுகளில் ஈடுபடும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்திருக்கிறார் மம்தா.

கடும் சவால்
இன்றைய தேதிக்குத் தனது முக்கிய எதிரி பாஜகதான் என்பதில் தெளிவாக இருக்கிறார் மம்தா. ‘வங்காளிகள்தான் வங்கத்தை ஆள்வார்கள்’ எனும் கோஷத்தை முன்னெடுத்திருப்பது பாஜகவினரை வெளியாட்களாகச் சித்தரிக்கும் முயற்சிதான். ஒருகாலத்தில் மார்க்சிஸ்ட் கட்சியுடன் மோதி வந்த திரிணமூல் காங்கிரஸ், தற்போது பலம் பொருந்திய பாஜகவை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

2014 மக்களவைத் தேர்தலில் மோடி அலையைத் தாக்குப்பிடித்து, மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 34 இடங்களில் வென்றது திரிணமூல் காங்கிரஸ். ஆனால், 2018-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்துக்கு வந்து அதிர்ச்சி கொடுத்தது பாஜக.

2019 மக்களவைத் தேர்தலில் 40.64 சதவீத வாக்குகளுடன் 18 இடங்களில் பாஜக வென்றது. 22 இடங்களை வென்ற திரிணமூல் காங்கிரஸுக்கு 43.69 சதவீத வாக்குகள் கிடைத்தன. குறிப்பாக, இளம் வாக்காளர்களில் பெரும்பான்மையானோர் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கிடைத்த தகவல் மம்தாவை உற்சாகமிழக்க வைத்தது.

பதில் நடவடிக்கைகள்
மேற்கு வங்கத்தில் பாஜகவின் பலம் அதிகரித்துவரும் நிலையில், தற்காப்பு உத்திகளையும், பதில் தாக்குதல்களையும் முன்னெடுத்து வருகிறார் மம்தா. பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களைப் பட்டியலிடுகிறார். குடியுரிமைத் திருத்தச் சட்டம், டெல்லி கலவரம், பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குதிரை பேரம் நடத்தி ஆட்சியைப் பிடிப்பது உள்ளிட்ட விவகாரங்களை வைத்து பாஜகவைக் கடுமையாகச் சாடுகிறார் மம்தா. பாஜகவினரால் திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டுகிறார்.

மறுபுறம், மக்களிடம் நற்பெயரைத் தக்கவைத்துக் கொள்ளவும் மம்தா போராடுகிறார். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலவச ரேஷன் பொருட்கள், இலவசக் கல்வி, இலவச மருத்துவம் ஆகியவற்றை வழங்கப் போவதாகவும் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்.

கட்சிக்குள் மாற்றங்கள்
இன்னொரு புறம், கட்சிக்குள் பல்வேறு மாற்றங்களையும் செய்யத் தொடங்கியிருக்கிறார். மேலிடப் பார்வையாளர்கள் என யாரும் இனி நியமிக்கப்பட மாட்டார்கள் என்று கூறியிருக்கும் அவர், அதற்கு மாற்று ஏற்பாடுகளை உருவாக்கியிருக்கிறார். மாவட்ட அளவிலான குழு, 58 பேரைக் கொண்ட மாநிலக் குழு, 21 பேரைக் கொண்ட மாநில ஒருங்கிணைப்புக் குழு, 7 பேரைக் கொண்ட வழிகாட்டும் குழு ஆகியவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் கட்சிக்குள் ‘மேலிருந்து கீழே’ பார்க்கும் அணுகுமுறை குறையும் என்றும், கீழ்மட்டத்தில் இருக்கும் தொண்டர்களுக்கு இது உற்சாகமளிக்கும் என்றும் கருதப்படுகிறது.

மாநிலக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் சத்ரதார் மகதோ, ஒருகாலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்தவர். தற்போது திரிணமூல் காங்கிரஸில் இருக்கும் அவருக்கு அந்தப் பொறுப்பை வழங்கியதன் பின்னணியில் மம்தாவின் அரசியல் கணக்கு இருக்கிறது என்கிறார்கள். பழங்குடியின தலைவரான சத்ரதார் மகதோ பீர்பூம், புருலியா, மேற்கு மேதினிபூர் போன்ற மாவட்டங்களில் செல்வாக்கு மிக்கவர். இந்த மாவட்டங்களில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்திருப்பதை உணர்ந்துதான் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் மம்தா. மேலும், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய மூத்த தலைவர்களுக்குப் பதிலாக இளம் தலைவர்களுக்குப் பொறுப்புகளை அளித்திருக்கிறார்.

விடாக்கண்டன் பாஜக
ஆனால், இதெல்லாம் கண் துடைப்பு நாடகம் என்று விமர்சிக்கும் பாஜக, தனது வியூக வலையை மேலும் இறுக்கும் வேலைகளையும் தொடங்கியிருக்கிறது. மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், தேசியச் செயலர் ராகுல் சின்ஹா போன்றோர் டெல்லியில் முகாமிட்டு, கட்சியின் மேலிடத் தலைவர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். திரிணமூல் காங்கிரஸிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தவரும் கட்சியின் தேசியச் செயற்குழு உறுப்பினருமான முகுல் ராயும் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்.

ஓரிரு தினங்களில் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்துப் பேசவிருக்கிறார்கள் மேற்கு வங்க பாஜக தலைவர்கள். பாஜகவின் செல்வாக்கு அதிகரித்திருக்கும் பகுதிகளை மீட்பதற்குத் திரிணமூல் காங்கிரஸ் வியூகம் வகுத்துவரும் நிலையில், அதைத் தகர்க்கவும் பாஜக திட்டமிடுகிறது.

காயமடைந்த பெண் புலி?
கர்நாடகம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயன்படுத்திய உத்தியை மேற்கு வங்கத்திலும் பாஜக பயன்படுத்தி தனது ஆட்சியைக் கவிழ்க்க முயல்வதாக மம்தா குற்றம்சாட்டுகிறார். மாற்றுக்கட்சியைச் சேர்ந்த தலைவர்களை வளைப்பதில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் பாஜகவின் பாசவலையை அறுப்பதிலும் கவனம் செலுத்துகிறார். தனது கட்சியினர் பாஜகவினரால் இழுக்கப்படுவதைத் தடுக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறார் மம்தா.

எல்லாவற்றையும் தாண்டி, மம்தாவுக்கு நிகரான ஓர் ஆளுமை பாஜகவில் இல்லை என்பது திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களுக்குத் தெம்பளிக்கும் விஷயம். இதுவரை முதல்வர் வேட்பாளராக யாரையும் பாஜக முன்னிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், மம்தா மீதான பிம்பத்தைச் சிதைப்பதன் மூலம் மேற்கு வங்கத்தைக் கைப்பற்றி விடலாம் என்று பாஜக கணக்குப் போடுகிறது.

“காயமடைந்த பெண் புலி மிகவும் ஆபத்தானது” என்று பாஜகவுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்திருக்கும் மம்தா, தனது வார்த்தைகளை நிரூபித்துக் காட்டுவாரா என்பது முக்கியமான கேள்வி. ஏனெனில், தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான, பலம் வாய்ந்த மிகச் சில தலைவர்களில் ஒருவரான மம்தாவின் வெற்றியும் தோல்வியும் மேற்கு வங்க எல்லையையும் கடந்து முக்கியத்துவம் கொண்டவை!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்