இந்தியா தற்போது பாஜக அரசின் தசாப்தத்தைக் கண்டுகொண்டிருக்கிறது. இதற்கு முன்பு, ஒரு கட்சி ஒரு தசாப்தத்துக்கு ஆதிக்கம் செலுத்தி, கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்கள் ஆகின்றன. 1980-1989-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி வலுவான பெரும்பான்மை கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் மாநிலங்களின் உரிமைகளுக்கான போராட்டம் என்பது சட்டப் பிரிவு 356-ஐ மையம் கொண்டிருந்தது. தாங்கள் சொல்லும்படி ஆடும் ஆளுநர்களைக் கொண்டு, பிராந்தியக் கட்சிகளின் ஆட்சிகளை காங்கிரஸ் கட்சி கலைத்தது. ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இருக்க வேண்டிய உறவு குறித்து ஆர்.எஸ்.சர்க்காரியா குழு அளித்த அறிக்கையின் பரிந்துரைகள் பின்பற்றப்படவில்லை.
வரலாறு தன்னைத் தானே மறுபடியும், ஆனால் மேலும் மோசமாக நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. மாநில அரசுகளை ஆட்டிவைப்பதற்கான பிரதானமான ஆயுதமாகச் சட்டப் பிரிவு 356 தற்போது இல்லை. ஆனால், ஏனைய பல விஷயங்கள் அப்படி ஆயுதமாக மாற்றப்படுகின்றன. ஒரு உதாரணமாக, 14-வது நிதிக் குழுவின் அறிக்கையை தற்போது சுட்டிக்காட்டுகிறேன். அந்த அறிக்கையின் பரிந்துரைகளும் படிப்படியாக நாசமாக்கப்பட்டுவருகின்றன. ‘கூட்டுறவுக் கூட்டாட்சித்துவ’த்தை உயர்த்திப் பிடிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே இதெல்லாம் செய்யப்படுகிறது. இது கரோனா பெருந்தொற்றுக்கு முன்பே தொடங்கிவிட்டது. ஆனால், இந்தப் பெருந்தொற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதாரச் சேதமும் இந்த விவகாரத்தை ஒரு எல்லைக்கே கொண்டுசென்றுவிட்டன.
தாமதமாக வழங்கப்படும் நிதி
மாநிலங்களுக்கு மேலதிக நிதி வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் பேரில் 2015-ல் 14-வது நிதிக் குழு அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நடைமுறையின் ஒரு அங்கமாக மாநிலங்கள் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. குறிப்பாக, சமூகப் பொறுப்புகள் அளவில். அதற்கும் இரண்டு ஆண்டுகள் கழித்து கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டியும்கூட மாநிலங்களின் நிதிநிலைமையை வலுப்படுத்தும் என்று நியாயப்படுத்தப்பட்டது.
நடைமுறையிலோ மாநிலங்களுக்கான வரி அதிகாரம் 14-வது நிதிக் குழுவின் பரிந்துரைகளைவிடக் குறைவாகவே தொடர்ந்து இருந்துவருகிறது. இதற்கு ஒரு காரணம் பொருளாதார மந்தநிலை. அதற்கும் ஒன்றிய அரசே பிரதானக் காரணம். எதிர்பார்க்கப்பட்டதைவிடக் குறைவான ஜிஎஸ்டி வசூல் மற்றுமொரு காரணம். எதிர்பார்க்கப்பட்டதைவிட 2018-2019-ல் ஜிஎஸ்டி வசூல் 22% குறைவு.
மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்குவதில் மிகுந்த தாமதம் நீடிக்கிறது. எடுத்துக்காட்டாக, டிசம்பர் 2019, ஜனவரி 2020 ஆகிய மாதங்களில் ஜிஎஸ்டி நிவாரணமாக மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு ரூ.35 ஆயிரம் கோடி கொடுக்க வேண்டியிருந்தது. அந்தத் தொகை ஐந்து மாதங்கள் கழித்து ஜூன் 2020-ல்தான் வழங்கப்பட்டது.
ஒன்றிய அரசு கூடுதல் தீர்வைகள் பலவற்றை விதித்திருக்கிறது. அவை ஒன்றிய-மாநில அரசுகள் பகிர்ந்துகொள்ளக்கூடிய வரிவருவாய் இனங்களில் இல்லை. ‘கோவிட்-19’-க்கான கூடுதல் தீர்வையும் விதிக்கப்போகிறார்கள் என்ற வதந்தியும் பரவிக்கொண்டிருக்கிறது. 14-வது நிதிக் குழு மாநிலங்களுக்கு வாக்குறுதி அளித்த நிதிக்கும், மாநிலங்கள் பெற்ற நிதிக்கும் இடையே ரூ.6.84 லட்சம் கோடி இடைவெளி இருப்பதாக ‘கொள்கை ஆய்வுக்கான மையம்’ நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இது நடந்துகொண்டிருக்கும்போதே பொதுச் செலவினங்களில் இந்தியாவில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 2014-2015 ஆண்டுகளில் திட்டப்பணிகளுக்கு ஒன்றிய அரசைவிட மாநில அரசுகள் 46% அதிகமாகச் செலவிட்டன; தற்போது அது 64%-ஆக இருக்கிறது. இப்படி இருந்தும் ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறையானது மாநிலங்கள் அனைத்தின் நிதிப் பற்றாக்குறையின் மொத்தத்தைவிட 14% அதிகமாக இருக்கிறது. ஊதாரியான ஒரு ஒன்றிய அரசுக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் விலை கொடுத்துக்கொண்டிருக்கிறது.
வங்க உதாரணம்
கரோனா பெருந்தொற்று இந்த நிலையை மேலும் மோசமாக ஆக்கியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் அறிக்கையின்படி பெருந்தொற்றால் ஒட்டுமொத்த ஜிஎஸ்டிபிக்கும் (மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி) ரூ.30.3 லட்சம் கோடி அல்லது ஜிஎஸ்டிபியில் 13.5% இழப்பு ஏற்பட்டுள்ளது. பொது மக்களுக்கு உதவவும் மக்களின் வாழ்வாதாரங்களைக் காக்கவும் மாநில அரசுகள் நிறைய செலவிட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதில் ஒன்றிய அரசு அளிக்கும் ஆதரவு கிட்டத்தட்ட ஒன்றுமே இல்லை. வங்கத்தை எடுத்துக்கொண்டால் அங்கே, ஜூன் 30 வரையிலும் கரோனாவை எதிர்த்துப் போரிட மாநில அரசு ரூ.1,200 கோடி செலவிட்டிருக்கிறது. வங்க வரலாற்றிலேயே மிக மோசமான புயலான உம்பன் புயல் 28 லட்சம் வீடுகளையும், 17 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்களையும் சேதப்படுத்தியது. மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு உடனே ரூ.6,250 கோடி நிதியை விடுவித்தது; ஒன்றிய அரசு வெறும் ரூ.1,000 கோடி மட்டுமே வழங்கியது.
ஒன்றிய அரசின் உதவியோடு நடக்கும் திட்டங்களுக்கு வர வேண்டிய நிதி (ரூ.36,000 கோடி); நிதி அதிகாரங்கள் மூலம் கிடைக்க வேண்டிய பங்கு (ரூ.11,000 கோடி); ஜிஎஸ்டி மூலம் வர வேண்டிய நிதி (ரூ.3,000 கோடி); உணவு உள்ளிட்டவற்றுக்கான மானியங்கள் (ரூ.3,000 கோடி) என்று ஒட்டுமொத்தமாக ரூ.53,000 கோடி நிதியை ஒன்றிய அரசு வங்கத்துக்குத் தர வேண்டும். வங்கத்தைப் பொறுத்தவரை கரோனா, உம்பன் புயல் என்று பேரிடர்கள் தாக்கியிருக்கும் ஒரு ஆண்டாக 2020 இருக்கும்போது, இது நிச்சயம் பெரும் சுமைதான்.
உலகெங்கும் உள்ள நாடுகளின் அரசுகள் மக்களின் கையில் பணத்தைக் கொடுத்திருப்பதால் இந்த ஆண்டின் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்குத் திணறிக்கொண்டிருக்கின்றன. இந்தியாவில், இதுவரை நிதி ஒழுங்கைப் பராமரித்துவந்த மாநிலங்கள்கூட தங்கள் மாநில மக்களின் துயரங்களைக் களைதல், அடிப்படையான பொதுத் துறைகளுக்குச் செலவிடுதல் போன்றவற்றை எதிர்கொள்வதில் திணறிப்போயிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக, மாநிலங்களுக்கான நிதிப் பற்றாக்குறை எதிர்பார்க்கப்பட்ட 2.0%-ஐ நிச்சயம் தாண்டத்தான் போகிறது.
இடறி விழும் மாநிலங்கள்
‘வரிவருவாய் பொறுப்பு மற்றும் பட்ஜெட் நிர்வாகம் (எஃப்ஆர்பிஎம்) சட்டத்தின் கீழ் ஜிஎஸ்டிபியானது 3% நிதிப் பற்றாக்குறையைக்கூடச் சமாளிக்க முடியும். மாநிலங்கள் இந்த வரைமுறையைப் பல ஆண்டுகளாக மதித்தே வந்திருக்கின்றன, 2020-21-க்கான கணிப்பும் இதையே பிரதிபலிக்கிறது. தற்போது, பெருந்தொற்றுக்குப் பிறகான காலத்தில் இந்த மேல் எல்லை நிச்சயம் மீறப்படும். இதிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு பிரிவை ‘எஃப்ஆர்பிஎம்’ கொண்டிருக்கிறது. அவசர காலத்தில் நிதிப் பற்றாக்குறையில் ஒரே ஒரு முறை தளர்வை அது அனுமதிக்கிறது. இதன் மேல் எல்லை 0.5% ஆகும். இந்தப் பிரிவை ஒன்றிய அரசு பயன்படுத்திவிட்டிருக்கிறது. ஆனால், தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க இது கொஞ்சம்கூடப் போதுமானதாக இல்லை என்பது தெரிந்துவிட்டது. ‘எஃப்ஆர்பிஎம்’மின் கடுமை குறித்து மறுபரிசீலிக்கப்பட வேண்டும் என்பதைக் கொள்கை வகுப்பாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இது பெரிய அளவிலான நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்க வேண்டும்.
கோட்பாட்டு அளவில், எஃப்ஆர்பிஎம்மின் கீழ் மாநிலங்களுக்கான நிதிப் பற்றாக்குறை அளவை ஒன்றிய அரசு 3%-லிருந்து 5%-க்கு உயர்த்தியிருக்கிறது. ஆனால், இந்த உயர்வில் 0.5% மட்டுமே நிபந்தனையற்றது. மீதமுள்ள 1.5% நடைமுறைச் சாத்தியமற்ற சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது. அதாவது தனியார்மயமாக்கல், நகர்ப்புற உள்ளாட்சியின் வருமானத்தை அதிகப்படுத்தல் போன்றவை. ஆக, மாநிலங்கள் இடறி விழுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன. இதுதான் பாஜகவின் ‘கூட்டுறவுக் கூட்டாட்சித்துவ’த்தின் உண்மையான பிம்பம்.
- டெரெக் ஓ’பிரையன், திரிணமூல் காங்கிரஸின் மாநிலங்களவை உறுப்பினர்.
‘தி இந்து', தமிழில் சுருக்கமாக: ஆசை
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago